- தெரிந்துகொள்ளுதல்
முதற் பகுதி – பிரித்தறியும் கிருபை
கடவுள் பூரணராய் இருக்கிறபடியால் ஒப்பற்ற மகிமையாய் விளங்குகிறார். அவர் செய்வதெல்லாம் பூரணமானது. எனவே நாம் வாழும் இப்பூவுலகமும் அதிலுள்ள மக்களும் பாவத்தினால் சபிக்கப்பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடவுளின் மகிமை அதில் நிலைநாட்டப்படவேண்டுமன்றோ? பாவம் நிறைந்த உலகில் கடவுள் மகிமைப்பட முடியாது எனக்கூறுவோமாயின் கடவுள் செயலின் பூரணத்துவத்தை நாம் மறுக்கிறவர்களாகவும், இவ்வுலகம் தீமையின் பெருகிவருவதை அவரால் தடுக்க இயலாது எனத் தீர்க்கிறவர்களாகவும் இருப்போம்.
கடவுள் ஆதாமை உருவாக்கித் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தையும் அவனுக்கு அளித்தார். அவன் இச்சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் பாவத்தினால் மனுகுலம் முழுவதையுமே தேவ சாபத்திற்குள்ளாக்குவான் என்பதனை அறிந்திருந்தும் அவ்விதமே அவர் செய்தார். தேவசெயல்கள் யாவுமே பூரணத்துவம் வாய்ந்ததென்றால் இம்மாபெரும் பாவ வீழ்ச்சியை அனுமதித்ததும்கூட அவருடைய பூரணத்துவத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தும்படிதானா? ஆதாமின் விழுந்துபோன சந்ததியிலிருந்து மாபெரும் குடும்பமொன்றை இரட்சிக்கக் கிருபைகூர்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டதினால் கடவுள் தமது எல்லையற்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துகிறார் என திருமறை கூறுகிறது. கடவுளது இக்கிருபையின் செயலே தெரிந்துகொள்ளுதல் அல்லது பிரித்தெடுக்கும் கிருபை என்றழைக்கப்படுகிறது.
தெரிந்துகொள்ளுதல் சத்தியம் இக்காலத்தில் பலமாக எதிர்க்கப்படுகிறது. ஆனால் பழங்காலத்தில் சிறப்பாக சீர்திருத்த காலத்தில் சீர்திருத்தத் தலைவர்களால் இது போற்றப்பட்டு வலியுறுத்தப்பட்ட சத்தியமாகும். ஆனால் இப்பொழுதோ (இந்நூலாசிரியர் ஆபிரகாம் பூத் அவர்களது காலத்தை இது குறிப்பிடுகிறது) இது பகுத்தறிவிற்கு முரண்பட்டதாகவும் கிறிஸ்தவ ஒழுக்கத்தையும் மெய்ப்பக்தியையும் ஊறுபடுத்துவதாகவும் மனுகுலமனைத்திற்கும் பாதகமாகவும் தவறாக கருதப்பட்டு வருகிறது. எனவே இம்மேன்மையான இச்சத்தியம் பொதுவாக புறக்கணிக்கப்படுவதில் வியப்பில்லை.
இச்சத்தியம் தொடர்ந்து தாக்கப்படுவதின் காரணம் யாது? இது மனிதனுடைய பெருமையை முற்றிலும் அழிப்பதாலேயே என நான் கருதுகிறேன். கடவுளின் கிருபை மிகுந்த தீர்தானத்தினாலேயே இரட்சிப்பு ஏற்படுகிறது. எனவே தெரிந்துகொள்ளுதல் மனிதரில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. ஒருவர் இரட்சிக்கப்படுவதும், மற்றவர் இரட்சிக்கப்படாததும் அத்தீர்மானத்தைப் பொறுத்ததே ஆகும். மனிதர்கள் இரட்சிக்கப்படுவதினால் தேவனே மகிமையடைகிறார். இவ்வுண்மையை மனித தற்பெருமையின் சுதந்திரம் இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆயினும் இச்சத்தியம் என்ன என்பதையும் அது நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் சுருக்கமாய்க் காண்போம். வேதம் ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” எனக் கூறும்போது மனுக்குலம் முழுவதையும் இச்சொல் குறிப்பிடவில்லை என அறியலாம். எங்கும் சிலர் தெரிந்துகொள்ளப்படும்போது மற்றவர்கள் விட்டுவிடப்படுவது இயற்கையே. ‘தெரிந்துகொள்ளுதல்”, ‘பிரித்தெடுத்தல்” என்ற சொற்கள் இந்த உட்கருத்தையே கொண்டுள்ளன அல்லவா?
வேதத்தில் ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற சொல் பொதுவாக ஒரு நாட்டினத்தையோ அல்லது சமுதாயத்தையோ குறிப்பிடாமல், தனிப்பட்ட ஆள்களையே குறிக்கிறது. இவ்வாறு தெரிந்துகொள்ளப்பட்டவர்களது பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதாகவும் (லூக்கா 10:20), ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாகவும் (வெளி 20:15) வேதத்தில் காண்கிறோம். அவர்களே ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்” என்றழைக்கப்படுகின்றனர் (அப். 13:48). ஆகவே குறிப்பிடப்பட்ட நபர்களே ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மை இப்பாவிகளின் பதிலாளாக நாம் மரித்து, பரிந்துரைப்பவராக இருக்கிறபடியினாலேயே அவர்களது இரட்சிப்பை அவர் சம்பாதித்தார் என்பதில் உறுதிப்படுத்தப்படுகிறது. தாம் அறியாத ஒருவருக்காக மற்றொருவர் பாடுபடுவதோ அல்லது அவர் பொருட்டாகப் பரிந்துரைப்பதோ முடியாதல்லவா? பிறருடைய கடனுக்காகச் சட்டபிரகாரமாக உத்திரவாதம் எடுக்கும் ஒருவர் அந்நபரைப்பற்றிய துல்லியமான அறிவைப் பெற்றிருப்பார் அல்லவா? அவ்விதமே கடவுளால் முழுமையாக அறியப்பட்ட நபருக்கே இரட்சிப்பு உறுதியானது. மனிதர் (தாங்களாகவே) இயேசுவில் இரட்சிப்பு வைக்கவேண்டும். இந்நிலையில் (கடவுள் பாவ மனிதனில் விசுவாசத்தைக் காண்பதுமில்லை. எதிர்ப்பார்ப்பதுமில் இல்லை. விசுவாசத்தை இரட்சிப்புக்கு நிபந்தனையாக கடவுள் வைக்கவில்லை. அவரால் இரட்சிக்கப்படுபவர்களுக்கு விசுவாசத்தை ஈவாக அளிக்கிறார்.
சிலராவது நிச்சயமாக விசுவாசிப்பார்கள் எனக்கூற நீர் முற்படுவீரானால் அந்த நிச்சயம் கடவுளின் மாறாத நோக்கத்திலிருந்தே பிறக்கவேண்டும் என்பது உறுதியன்றோ? தேவ சித்தத்தின்படியே நமது எதிர்காலம் அமைகிறது. விசுவாசிப்பவர்கள் யாவர் என்பதை அவர் திட்டம் செய்துள்ளார். அவர்களை அவர் அறிவார். அவரே விசுவாசத்தை அவர்களுக்கு அளித்தார். ஏனெனில் ‘விசுவாசம் என்பது தேவனுடைய ஈவு” (எபேசி.2:8). மேலும் எவர் இரட்சிக்கப்படுவர் என்பதையும் கடவுள் எப்பொழுதும் அறிந்திருக்கிறார் . ஏனெனில் விசுவாசிகள் ‘உலகத்தோற்றத்திற்கு முன்பே தெரிந்துகொள்ளப்பட்டார்கள்” (எபேசி.1:4) என்று பல வசனங்கள் குறிப்பிடுகின்றது.
ஒரு கூட்டத்தினர் தெரிந்துகொள்ளப்படுவதற்கும் ஏனையோர் விடப்படுவதற்கும் காரணம் காண இயலுமா? தனிப்பட்டவர்களிடையே காரணம் காண இயலா. ஏனெனில் மனுக்குலம் அனைத்துமே தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறத் தகுதியற்றதாய் விளங்குகிறது! மக்களிடையே பிரித்தெடுப்பதற்கு திருமறை தரும் காரணம் யாதெனில் ‘எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்குமாயிருப்பேன்” என கடவுளே கூறியுள்ளார் (ரோமர் 9:15).
ஆதியிலே மக்களிடையே யாதொரு வேறுபாடும் இல்லாதிருந்தும் விசுவாசிப்பவர் எவர் என கடவுள் அறிந்ததினால் அவர்களையே தேவன் தெரிந்தெடுத்தார் என நாம் கூறலாமா? அல்லவே அல்ல! அவ்வாறாயில் கிருபையானது மக்களுடைய விசுவாசத்தைச் சார்ந்திருக்குமானால் அது ஆட்சிபுரிய இலயாதிருக்குமே. ஒருவர் விசுவாசிப்பதானால் அவர் தெரிந்துகொள்ளுப்படுவதில்லை. அவர் தெரிந்துகொள்ளப்பட்டதின் விளைவாகவே விசுவாசிக்கிறார் என திருமறை கூறுகிறது. ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்” (ரோமர் 13:48). ‘நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்” (எபேசி.1:4). ‘எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்” (ரோமர் 8:30). ‘நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்” (யோவான் 10:26). ‘தேவன் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகால முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2.தீமோ.1:9).
விசுவாசமும், பரிசுத்தமும் ஒரு செடியின் கிளைகளுக்கும் கொப்புகளுக்கும் ஒப்பானவை. அவை அச்செடியின் வேர்களுமல்ல, கனிகளுமல்ல, அடியுமல்ல, நுனியுமல்ல. அவை வேர்களின் வளர்ச்சியினால் உண்டானவைகளும், கனிகள் உருவாவதற்குக் காரணமாயும் இருப்பவை. அதுபோலவே விசுவாசமும் பரிசுத்தமும் கிருபையின் விளைகளாகவும் மகிமையடைவதற்குக் காரணமாகவும் அமைகின்றது. ‘கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என பவுல் அப்போஸ்தலனும் கூறுகிறாரல்லவா? தெரிந்துகொள்ளுப்படுவதற்கு விசுவாசம் காரணமாய் இராமல் அதன் விளைவாக அமைந்துள்ளது!
மேலும் விசுவாசிப்பவர்கள் இன்னாரென தேவன் அறிந்து அவர்களைத் தெரிந்துகொண்டிருப்பாரென்றால் பின் அப்படித் தெரிந்துகொள்வதின் இரட்சிக்கப்படுவர் அல்லவா? விசுவாசம் ஏற்கெனவே அவர்களில் இருப்பில், தெரிந்துகொள்ளுதல் அவசியம் இல்லையே! ஆனால் தேவன் அநேக இடங்களில் தெரிந்துகொள்ளும் சத்தியத்தைத் தெளிவாகக் கூறுகிறது. இதைக் குறித்து பவுல், ரோமர் 9:10-23 இல் மிகத் தெளிவாக விவரித்துள்ளார். மேலும் தெரிந்து கொள்ளுதல் என்னும் சத்தியத்திற்கு விரோதமாக எழுப்பப்படும் பொய்யான எதிர்ப்புகளுக்கு அவர் பதிலளிக்கையில் கடவுள் சர்வ வல்லவராதலால் அவர் தமது சித்தத்திற்கிணங்க செயல்பட பூர்வ அதிகாரம் உண்டு என்றே எடுத்துரைத்துள்ளார். இப்பூமியில் ஆளும் அரசர்கள் தம் சித்தம் போல் செயல்படும் வேளையில் அனைத்துலகங்களையும் ஆளுகிற தேவாதி தேவனுக்குத் தமது விருப்பம்போல் செயல்படும் உரிமை பறிக்கப்படலாமா?
கடவுளின் மாசற்ற பூரணத்துவம் வாய்ந்தவராதலால் அவர் ஞானமற்ற தீர்மானங்களைச் செய்யமாட்டார். அநீதியாக அரசுபுரியவுமாட்டார். எனவே கடவுளின் சர்வ ஏகாதிபத்தியத்தின் மாட்சிமையை உய்த்துணர்ந்த பவுல், ‘;ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” என வியந்துரைக்கிறார். எல்லோருமே தகுதியற்றவர்களாக இருக்கும்பொழுது ஓரு கூட்டத்தினரை மட்டும் இரட்சிக்கத் தெரிந்துகொண்டது ஏன்? நம்மை உருவாக்கினவர் மிகுந்த இரக்கம் உள்ளவராய் இருப்பதால் அன்றோ? அவர் சிலரை மட்டும் தெரிந்துகொண்டு மற்றவர்களை விட்டுவிடுவது ஏன்? தம்மால் படைக்கப்பட்டவர்களுக்குத் தமது திருவுளச்சித்தம்போல் செய்யப்படைத்தவருக்குப் பூரண அதிகாரம் இருப்பதால் அல்லவா?
‘பிரித்தெடுக்கும் கிருபையின்” மூலமாக கடவுள் எதனை நிறைவேற்ற விரும்பினால் என்பதைக் குறித்து ஈண்டுச் சற்று ஆராய்வோம். தம்மால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களது ஒப்புற்ற மகிழ்ச்சியையும், பாவிகளது முடிவற்ற வேதனையையும் குறித்தே கடவுள் அக்கறைகொண்டுள்ளார் என்று நாம் அவசரப்பட்டு முடிவுசெய்யத் துணிகிறோம். இது மாபெரும் தவறாகும். அன்பே ஒருவான ஆண்டவர் பாவிகளது துன்பத்திலும் வேதனையிலும் களிகூருகிறார் என கூறுவது அவரைப் பழித்து நிந்திப்பதாகும்.
கிருபையின்மூலமாக அவர் செயல்படுவது தாம் மகிமைப் படும் பொருட்டே என திருமறை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தேவன் ஒரு பாவியைத் தண்டிக்கும்போது தமது பரிசுத்தம் பாவத்திற்கு எத்தனை எதிரானது என்பதையே வெளிப்படுத்துகிறார். பாவிகளின் நித்திய தண்டனையிலிருந்து தேவன் அவர்களை இரட்சிக்கும்பொழுது தமது வியத்தகு கிருபையுள்ள இரக்கத்தையே எடுத்துக்காட்டுகிறார். கடவுளின் ஒவ்வொரு செயலுமே அவருடைய மகிமையின் ஓர் அம்சமாகத் திகழ்கிறது. ‘தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவே” தேவன் கிரியை செய்கிறார் (ரோமர் 9:23).
கடவுள் தாம் கிரியை புரிவதும் அவர் எத்தனை மகத்துவம் பொருந்தியவர் என்பதை வெளிப்படுத்தவே ஆகும். அதுமட்டுமல்ல, அவர் செயலாற்றும் வழிமுறைகளும் அவர் எத்துணை மாட்சிமையானவர் என்பதையுமே காட்டுகின்றது. நித்திய குமாரனும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மூலமாகவும் மற்றும் விசுவாசிகளில் பரிசுத்த ஆவியானவர் கிரியையினால் அவர்கள் பரிசுத்தம் அடைவதாலும் பாவிகளின் இரட்சிப்பு ஏதுவாகிறது. ஆ! தேவனுடைய இக்கிரியைகள் யாவும் எத்தனை மகத்துவம் வாய்ந்தவை!
தேவனுடைய கிரியைகள் யாவும் மாறாதவை. இதுவும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. எப்படி? அவரது மனமாற்றம் ஒன்று சிறப்பிக்க ஏதுவானால், அது முன்னர் அவர் பூரண ஞானமுள்ளவராக இல்லை என்றும், சீரழிக்குமானால் இப்போது அவர் ஞானமற்றவராக இருக்கிறார் என்பதையுமே காட்டுகிறது. ஆகவே கடவுள் தமது சித்தத்தில் எப்பொழுதும் நிலைமாறாதிருப்பது அவரது ஒப்பற்ற பூரணத்துவத்தின் மகிமைக்கு மற்றுமொரு சான்றாகும். அவர் எப்பொழுதும் நீதியும் நேர்நிலையானவர். மாறாதவர், மாற்றப்படக்கூடாதவர். அவர் ‘எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:30). கடவுள் மாறக்கூடுமானால் பவுல் இவ்வளவு உறுதியாக கூறியிருக்க முடியாது! கடவுள் தாம் இரட்சிக்கும்படி மக்களைத் தெரிந்துகொண்டார் என்கிற சத்தியம் வேதத்தால் மாறாதது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையினால் இச்சத்தியமும் மாட்சிமை மிக்க நேர்மையானது என நாம் அறிகிறோம்.
இரண்டாம் பகுதி
தெரிந்துகொள்ளுதலே பரிசுத்தத்தை வளர்ப்பிக்கும்
திருமறை கடவுள் தமக்கென மக்களைத் தெரிந்துகொள்ளுகிறார் எனப் போதிப்பதால் இந்தத் தெரிந்துகொள்ளுதலானது விசுவாசியின் பரிசுத்தத்திற்கும் துணை புரிந்து வளரச் செய்யும் என நம்புகிறோம். தாழ்மையும், அன்பும், நன்றி, உணர்வுமே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை பண்புகளாகும். திருமறை போதிக்கும் இத்தெரிந்தெடுத்தலானது இம்மூன்றினையுமே மேம்பாடடையச் செய்கிறது.
பிரித்தெடுக்கும் கிருபையே உண்மையில் தாழ்மையை வளரச் செய்கிறது. எல்லா மக்களும் அழிவுக்குட்பட்டவர்களே. பாவிகள் தங்களுடைய தகுதியினால் இரட்சிக்கப்படுவதில்லை. கடவுள் சுத்தக் கிருபையினால் அவர்களைத் தெரிந்துகொண்டதின் நிமித்தமே இரட்சிக்கிறார். எனவே ஒருவரும் பெருமைபாராட்ட இடமில்லை. ‘ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது (இரட்சிப்பு) கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசி.2:9). பிரித்தெடுக்கும் கிருபையானது விசுவாசிகளைத் தாழ்மையுள்ளவர்களாக மாற்றுகிறது. ஏற்கெனவே நரகத்திலுள்ள கொடுர பாவியைக் காட்டிலும் இரட்சிக்கப்படத் தங்களுக்கு எவ்வித உரிமையும் அருகதையும் இல்லை என்பதை இவர்கள் ஒப்புக்கொள்ள ‘அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக் கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” என பவுல் கூறுகிறாரல்லவா? (1.கொரி.4:7).
கடவுள் தமது பிள்ளைகளைத் தெரிந்துகொள்ளுவது அவர்களில் அவர் பேரிலான அன்பை உருவாக்குகிறது. முற்றும் அபாத்திர நிலையில் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை விசுவாசிகள் கிருபையாய்ப் பெற்று அநுபவிக்கும் அவர்கள் இதயம் அன்பால் பொங்காமலிருக்க முடியாது. நியாயமாக நரகத்திற்கு அனுப்பவேண்டிய அவர்களை கடவுள் பரலோகத்திற்கு உயர்த்தினார் அல்லவா? அதனிமித்தம் அவர்கள் அவர்பேரில் மிகுந்த அன்பு செலுத்துவார்கள் அன்றோ?
அந்த அன்பு அவர்களில் நன்றியுணர்வாக வெளிப்படும். நாம் தகுதியற்றவர்களாக இருக்கும்போதே ஆண்டவர் நம் மீது இவ்வளவாய் அன்புகூரும்போது நன்றியுள்ள சேவையின்மூலம் நம்மை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணிக்கவேண்டாமா? பவுலுடன் சேர்ந்து நாமும் ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பின் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபேசி.1:3-4).
பிரித்தெடுக்கும் கிருபையை நாம் ஆழமாக உணர்வதால் வரும் பலன்களே பிறரிடத்தில் தாழ்மையும், கடவுளிடமான அன்பும், நன்றி கடன்பட்ட நடத்தையுமாகும். ஆகையினால் தெரிந்துகொள்ளும் கிருபை சிறந்த விசுவாசிகளாக முன்னேற உதவுகிறதன்றோ? ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இச்சத்தியம் எவ்வளவு பயனுள்ளதாயிருப்பினும் கிறிஸ்துவைத் தேடிவரும் புதியவர்களைத் ‘தெரிந்துகொள்ளும் சத்தியம்” சோர்வடையச் செய்யுமா? கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக நான் இல்லாவிடில் நான் இரட்சிப்படைய எவ்வளவு விரும்பினாலும் அதை அடைய முடியாதே” என அவர்கள் விவாதிக்கலாம்.
மேலோட்டமாக இந்தக் தர்க்கம் சரியாகத் தோன்றினாலும் இது முற்றிலும் தவறாகும். இதனை ஓர் எடுது;துக் காட்டினால் விளக்கலாம். மிகுந்த பசியினால் வாடும் ஒருவன் எதிரில் சடுதியாக நல்லுணவு படைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவன் ‘இந்த உணவினாலே நான் பலமடைய வேண்டுமென கடவுள் விரும்புகிறாரோ அல்லவா? இதனையான் அறியேன் என விவாதிப்பது சரியா? மேலும் எனக்கு உணவு எவ்வளவு தேவையாக இருப்பினும் இதனை உண்ணப்போவதில்லை” எனக்கூறுவானாயின் அது அறிவுடைமை ஆகுமா? அதற்கு மாறாக அவன் ‘ஆ! எனக்கு ஆரோக்கியமான நல்ல பசி உள்ளது. அப்பசியைத் தீர்க்க நான் உண்ணுவதே ஏற்றது. ஆகவே இவ்வுணவை நான் சாப்பிடுவேன்” என்று கூறுவது அறிவுடையதாகுமல்லவா?
ஜீவ அப்பம் நானே, என கிறிஸ்துவானவர் அமுத வாக்கு அருளினார். அவரே நமது ஆன்மீக உணவு ஆவார். இத்தெய்வீக உணவானது தேவ கிருபையினால் நமக்கு அருளப்படுகிறது. ஆன்மீகப் பசியுள்ளவர்கள் எவருக்குமே யாதொரு வேறுபாடுமின்றி இலவசமாய் சுவிசேஷத்தின் மூலம் அருளப்படுகிறது. ஆவியின் தூண்டப்பட்ட பாவியொருவன் அவரது அருளால் இத்தொய்வின் உணவை உட்கொண்டு நித்திய வாழ்வு பெறலாமன்றோ? பாவிகள் தாங்கள் தெரிந்துகொள்ளப்பட்டத்தை அறிந்ததின் காரணமாக இயேசுவானவர்பேரில் விசுவாசம் வைக்கத் தூண்டப்படுவதில்லை. தாங்கள் அழிவுக்குத் தகுதியானவர்கள் என்று உணர்ந்து நடுங்குகிற பாவிகளுக்கே இரக்கத்தின் நற்செய்தி அருளப்படுகிறது. வர இருக்கும் கடவுளின் ஆக்கினையையும் ஆன்மீகத் தேவையையும் உணர்ந்த எவருமே தாங்கள் தெரிந்துகொள்ளப்பட்டதைக் குறித்து அறியுமுன்னரே ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெற அழைக்கப்படுகின்றனர். எனவே, தெரிந்துகொள்ளுதலைப்பற்றிய இச்சத்தியம் தனது பாவங்களை உணர்ந்து தேடிவரும் எப்பாவியையும் பயமுறுத்தவோ தடுக்கவோ செய்யாது. தனது ஆன்ம மீட்பைக் குறித்து கவலையற்றவரும் அல்லது தனது சுய நீதியைக் குறித்து பெருமை பாராட்டுவோரும் இத்தெரிந்துகொள்ளுதலை அசட்டை செய்வர்.
நான் தெரிந்துகொள்ளப்பட்டிருப்பின் எனது நடத்தை எவ்வாறிருந்தாலும் நான் இரட்சிக்கப்படுவது நிச்சயம், என விவாதிப்பது தவறே. ஏனெனில் இது பிரித்தெடுக்கும் கிருபையின் போதனை விசுவாசியைக் கவலையற்று வாழத் தூண்டும் என்ற குற்றச்சாட்டிற்கு இடமளிக்கும். தெரிந்தெடுத்தலை நம்புவதாகக் கூறும் சிலரது வாழ்க்கை பரிசுத்தமில்லாதிருப்பதை நீர் காணலாம். அத்தகைய மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகின்றனர். தெரிந்தெடுக்கும் சத்தியம் ஒரு கூட்ட மக்கள் பரலோகத்தை அடைவர் என்பதை மட்டும் கூறவில்லை. தெரிந்தெடுத்தலின் நோக்கமானது தேவனுடைய மக்கள் ‘தேவனுக்கு முன்பாக பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருக்க” வேண்டுமென்பதே (எபேசி.1:4). ஆகவே தெரிந்தெடுத்தலானது பரிசுத்த கூட்டத்தினரே பரலோகத்தை அடைவர் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் அடையவிருக்கும் முடிவை (பரலோகத்தை) மட்டுமல்ல, அவர்கள் அதனை வந்தடையும் வழியையும் கடவுள் நிர்ணயித்துள்ளார். ‘ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு ஆதிமுதல் தேவன் (நம்மை) தெரிந்துகொண்டார்” (2.தெச.2:13) என்றே பவுல் எழுதியுள்ளார். எனவே பரிசுத்தமாக்கப்படுதலும் சத்தியத்தை விசுவாசித்தலுமே தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய முக்கிய ஆவிக்குரிய அம்சங்களாகும். இவை இல்லாவிடில் தெரிந்துகொள்ளப்பட்டதற்குச் சான்றுகளே கிடையாது.
தெரிந்துகொள்ளுதல் என்ற சத்தியத்திற்கு எதிராக மாற்றொரு வாதத்தையும் சிலர் எழுப்பலாம். அதாவது, ஜெபம், சுயவெறுப்பு, நற்செய்தி ஊழியம் இவைகளின் பயன் என்ன? அல்லது அவசியம் என்ன? இரட்சிக்கப்படுபவர்கள் ஏற்கெனவே தெரிந்துகொள்ளப்பட்டிருந்தால் இவை ஒன்றும் தேவையில்லையே என்று சிலர் வாதிடலாம். முந்திய வாதத்திற்குரிய பதில் இதற்கும் பதிலாகும். அதாவது மீட்கப்படுபவர்களின் முடிவை மட்டுமல்ல, மீட்கப்படும் வழிமுறைகளையும் கடவுளே திட்டமிட்டு செயல்படுத்துகிறார். கடவுளே ஜெபங்களையும் தியாக செயல்களையும் சுவிசேஷ பிரபல்லியத்தையும் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் பரிசுத்த வாழ்வினைப் பெறுமாறு பயன்படுத்துகிறார் என்பதே இதற்குரிய விடையாகும். மேற்படி வாதத்தின் அறிவீனத்தை உதாரணத்தின்மூலம் விளக்க விழைகிறேன்.
தமது தெய்வீக செயலால் சகல மனித காரியங்களையும் ஆளுகிற கடவுள் ஒருவர் உண்டு என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை அணுகுவோம். மனித வாழ்வின் சகலவற்றையும் கடவுள் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பதால் தெரிந்துகொள்ளப்பட்டவர் பரிசுத்தமாக வாழ அவசியமில்லை என்ற வாதம் எழுமானால் அதில் அனுதின வாழ்வின் எல்லா அம்சங்களும் உள்ளடங்கும் அல்லவா? உண்மையில் கடவுள் மனித வாழ்வின் நுண்ணிய காரியங்களையும் துல்லியமாக வகுத்திருப்பதால் நமது சுகமோ சுகவீனமோ வாணிகத்தில் வெற்றியோ தோல்வியோ, தொழில் செய்யத்திறமையோ திறமையின்மையோ அனைத்துமே அவரது செயலால் கட்டுப்பட்டு ஆளப்படுகிறது. இந்நிலையில் நான் உண்ணுவதோ, உறங்குவதோ, படிப்பதோ, உழைப்பதோ, வாழ்வின் நலனுக்கும், மேன்பாட்டிற்கும் காரணமோ அவசியமோ இல்லை என எவராவது வாதிட முன்வருவாரா? இம்மையின் வாழ்வோடு கடவுளின் தீர்மானத்தை இவ்விதம் ஒப்பிட்டு வாழமறுக்கும் நாம் ஏன் ஆன்மீக பரத்தின் வாழ்வோடு மட்டும் ஒப்பிட்டு அழிவுற வேண்டும்?
மனித வாழ்வில் நிகழும் அனைத்தையும் கடவுள் பூரணமாக அறிவார். அதுமட்டுமல்ல, மனிதனுடைய இறுதி முடிவையும் அவர் அறிவார். இம்முடிவிலிருந்து மனித வாழ்வின் பிற காரியங்களைப் பிரிக்க முடியாதன்றோ? ஆவிக்குரிய விடாமுயற்சியினால் எவரெவர் பரிசுத்தமாக்கப்படுகிறார்களோ அவர்களையே தேவன் பரலோகத்தில் முன் அறிகிறார். அதேபோல தம்முடைய சத்தியத்தை அனுதினமும் விடாமல் புறக்கணிக்கிற பாவிகளையே நரகத்தில் காண்கிறார்.
மேலும் சிலர், தெரிந்தெடுத்தல் என்கிற இப்போதனை கடவுளை நியாயமற்றவராகக் காட்டுகிறதே என முறையிடுகின்றனர். ஏனெனில் மற்றவரை விட்டுவிடுவது நியாயமற்றது அல்லவா? கடவுள் அநீதியுள்ளவர் ஆக்கப்படுகிறாரே என்று அவர்கள் வாதிடலாம். ஆனால் எனது பதில். பரிசைப்பெற ஒருவர் தகுதியுடையவராயிருந்தும் அது அவருக்கு மறுக்கப்படுவதே அநீதியாகும். ஒரு நீதிபதி ஏழைகளிடம் சட்டத்தைக் கடுமையாகப் பயன்படுத்திவிட்டு செல்வந்தர்களிடம் அதே சட்டத்தைத் தளர்த்தினால் அது அநீதி. தம்மை அண்டியுள்ள ஏழைகளுக்கு உதவுகிற கொடைவள்ளல் ஒருவரே உலகிலுள்ள எல்லா ஏழைகளுக்கும் அவர் உதவ கடமைப்பட்டவர் எனக் கூறமுடியுமா? அல்லவே. அவ்விதம் நாம் கூறுவோமாயின் அது முறையற்றதாகும். ஒருவர் கருணைகூர்ந்து புரியும் உதவி எல்லாருக்குமே கிட்டாவிடினும் நாம் அதில் அநியாயத்தைக் காண முடியாது. அவ்விதமே படைத்தவராகிய கடவுள் தம் மக்களை ஆண்டு நடத்துவதில் அவருக்குப் பூரண அதிகாரமும் உரிமையும் உண்டு. அவர் பூரண சற்குணராக இருப்பதால் அவர் செய்வது எதுவும் தவறாகாது.
மனிதர் எல்லாருமே பாவம் செய்தவர்களா இல்லையா? அனைவரும் பாவம் செய்திருப்பார்களானால் ஒவ்வொருவரும் கடவுள் முன்னர் குற்றவாளிகளே. இந்நிலையில் அனைவரையுமே கடவுள் அழித்தாலும் அவர் நீதியுள்ளராகவே இருப்பார். ஆனவே இரட்சிக்கப்படும்படி சிலர் தெரிந்துகொள்ளப்படல் எவ்விதத்திலும் தெரிந்துகொள்ளப்படாதவரைப் பாதிப்பதில்லை. மேலும் தெரிந்துகொள்ளப்படாமையும் அநீதியான தண்டனையாகாது. ஒருவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் கடவுள் இரட்சிக்கத்தான் வேண்டும் என்று கூறுவுது இரட்சிப்பும் அனைவரது உரிமை பங்கு என்பதை உள்ளடக்கும். ஆனால் உண்மையில் ஒருவருக்கும் அப்படிப்பட்ட உரிமையில்லையே! இரட்சிப்பானது முற்றிலும் கிருபையின் ஈவேயாகும்.
‘சிலரை மட்டும் தெரிந்துகொள்ளுதலினால் கடவுள் அநீதியுள்ளவர்” என்ற தர்க்கம் எழும்ப காரணமே நம்மைப் பற்றிய மிக உயரிய எண்ணத்தையும் கடவுளைப்பற்றிய மிகத்தாழ்வான கருத்தினையும் நாம் தவறாக கொண்டிருப்பதினாலேயே. மாட்சிமையும், சர்வ ஏகாதிபத்தியமும் உள்ள கடவுளுக்குத் தம் திருவுளசித்தப்படி செய்ய உரிமையில்லையா? தெரிந்துகொள்ளுதல் நம் நடைமுறை வாழ்வில் செய்படுவதையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
முதலாவது, தன் பாவத்தைக் குறித்து கவலையின்றி அலட்சியமாக வாழும் பாவிக்கு இச்சத்தியம் ஓர் எச்சரிப்பு ஆகும். எவ்வாறெனில் எல்லாருமே தேவனுடைய பார்வையில் பாவிகளாயிருக்கையில் அவர் ஒரு கூட்டத்தினரை மட்டும் இரட்சிக்கத் தெரிந்துகொண்டு மற்றவர்களை அவர்களது பாவத்தின் நியாயமான விளைவுகளை அநுபவிக்க விட்டுவிடுகிறார். நீரும் கைவிடப்பட்ட கூட்டத்தில் ஒருவனாக இருக்கலாமன்றோ? இப்படிப் புறக்கணிக்கப்படுவது நித்தியமாக அழிவுறுவதாகும். இந்நிலையில் நீ இன்னும் உன் பாவத்தைக் குறித்து கவலையற்று இருக்கிறாயா? கோபமூட்டிய கடவுளுக்கு முன்னர் விலங்கிடப்பட்ட குற்றவாளியாகவே நீ நிற்கிறாய். உன் மீதான தீர்ப்பு என்னவாயிருக்கும் என்று நீ அறியாதிருக்கிறாய். நரக ஆக்கினையைக் குறித்து அஞ்சி நடுங்குகிறாய். ஏனெனில் அதுவே உனக்கு உரித்தான தண்டனை. நீ பயந்து அங்கலாய்க்க காரணமுண்டு. இவ்வுண்மைகளை ஆழமாக சிந்தனை செய்! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள (மத்.3:7) ஆண்டவர் உனக்கு அருள்புரிவாராக. எல்லாரையுமே தேவன் பொதுவாக நேசிக்கிறார் என்றும் அனைத்து மக்களுக்காகவுமே கிறிஸ்து மரித்தார் என்றும் போதிப்பது மக்களது மாட்சியைத் தாலாட்டி உறங்க வைத்துவிடும். எவ்வாறெனில் எல்லாருமே சமமாக நேசிக்கப்பட்டு இரட்சிப்புடைவார்களெனில் நான் ஏன் கவலைப்படவேண்டும் என இருக்கலாம் அல்லவா? ஆகவே பிரித்தெடுக்கும் கிருபை மற்றும் கிறிஸ்து தமது மக்களுக்காக மட்டுமே மரித்தார் என்ற வேதசத்தியமே நிர்விசாரப்பாவியை விழித்தெழச் செய்யும்.
இரண்டாவதாக, பிரித்தெடுக்கும் கிருபை என்னும் சத்தியம் விசுவாசிக்குச் சிறப்பான செய்தியைக் கொண்டிருக்கிறது. நீ உண்மையான விசுவாசியா? நீ விசுவாசியானதற்குக் காரணத்தையும், அதனிமித்தம் துதிக்கப்பட வேண்டியவர் யார் என்றும் இச்சத்தியம் காட்டுகிறது. இதுவே கடவுள் முன்னிலையில் உன்னைத் தாழ்த்தும். மேலும் தேவ கிருபையைப் பெற்ற அனைவருமே நித்திய வாழ்வுக்குள் பிரவேசிக்கிறார்கள் என்ற நிச்சயத்தையும் அது தருகிறது. ஏனெனில் அது ஆட்சிபுரிகிறது! எனவே ‘(நமது) அழைப்பபையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாக இருப்பது” எத்தனை அவசியம்! (2.பேதுரு 1:10).
தெரிந்துகொள்ளும் கோட்பாடு வேதத்தின் அடிப்படை சத்தியம் என்று அறிவீரா? இச்சத்தியத்தின் தெளிவாக மட்டுமல்ல. அதன் நற்பயன்களையும் அநுபவித்து மகிழத் தவறாதே. தேவனுடைய மக்களுக்கு வேதத்தில் சூட்டப்படும் நாமங்களில் ‘தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற நாமமே மிகச் சிறந்ததாகும். அது கிருபையினால் வரும் அளவற்ற ஆசீர்வாதங்களுக்குச் சுதந்திரவாளி என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1.பேதுரு 2:9).
மூன்றாவதாக, பிரித்தெடுக்கும் கிருபையின் சத்தியம் பெயர் கிறிஸ்தவனுக்கு (பரம்பரை, பாரம்பரிய கிறிஸ்தவன்) எச்சரிக்கை விடுக்கிறது. அவன் வேதத்தைக் குறித்தும் கொள்கைகளைப்பற்றியும் விரிவான அறிவு இருந்தும் சாட்சியற்ற வாழ்க்கை வாழ்பவன். அவன் இருதயத்தில் அவபக்தியும், பெருமையும், பகைமையுமே குடிகொண்டிருக்கின்றன. நீயும் அப்படிப்பட்டவனா? கோட்பாடுகளைப்பற்றி எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அது உனக்குப் பயன் அளிக்காது. உனது வாழ்க்கை தேவ கிருபைக்கு எதிரானவன் என்பதையே வெளிப்படுத்துகிறது. உன் பாவ இச்சைகளுக்கே நீ அடிமையாய் இருக்கிறாய். கடவுளை உண்மையாக நீ நேசிப்பதில்லை. அநுபவத்தில் அறியாமல் வெறும் வார்த்தைகளினால் பேசுகிற அத் தேவகிருபை உன்னை விடுவிக்கட்டும். தன் வாழ்வில் கிருபை ருசியாமல் அதனை அறிந்தவன்போல் பாவனை செய்யும் உனது நிலைமை மிகப் பரிதாபமானது.
‘நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
நினைத்தென்னை அழைத்தீரே எனதேசையா
உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
உமதாவி என்னிலீந்து பலமளித்தீர்.”












