- கிருபையும் அழைப்பும்
தேவன் தனது மக்களை பாவ மனுக்குலத்திலிருந்து தெரிந்துகொண்டதை அவர்கள் முதலில் அறிவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் இதனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் அம்மக்களைத் தனித்தனியே அழைக்கவேண்டும். இல்லாவிடில் அவர்கள் தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என அறியமுடியாது. இந்தத் திவ்ய அநுபவத்தையே தேவனால் அழைக்கப்படுதல் எனவும் (1.கொரி.1:9), கிருபையினால் அழைக்கப்படுதல் எனவும் (கலா.1:15), சுவிசேஷத்தினால் அழைக்கப்படுதல் எனவும் (2.தெச.2:14) திருமறை குறிப்பிடுகிறது. பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷத்தினாலேயே இவ்வழைப்பை விடுத்து சித்திபெறச் செய்கிறார்.
பாவிகள் ஆவியில் மரித்திருக்கினறனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை உயிர்ப்பித்த பின்னரே அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தை ஆவலோடு ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ‘மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்” (யோவான் 5:25). புதிதாக உயிர்ப்பிக்கப்பட்ட பாவிதான் தேவனுக்குத் தூரமாக இருப்பதாக உணருவான். ஆனால் ‘என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என ஆண்டவர் அபயமொழி அருளியுள்ளாரன்றோ? (யோவான் 6:37). எனவே ஆவியின் உயிர்ப்பிக்கப்பட்ட பாவியே நற்செய்தியின் சத்தியத்தில் விசுவாசம் வைத்து இயேசுவண்டை வருகிறான். இந்தத் திவ்ய அநுபவத்தைத்தான் கிருபையினால் அழைக்கப்படுதல் எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு எந்தப் பாவியும் அவருடைய கிருபையினாலேயே திட்டமாக அழைக்கப்படுகிறான். ‘கிருபையினாலே கடவுள் என்னை அழைத்தார்” என்று பவுலும் கூறுகிறார் அன்றோ? எல்லா பரிசுத்தவான்களுடைய அநுபவமும் இதுவே.
பொதுவாக பாவிகள் கடவுளுக்கு விரோதமாக தாங்கள் புரியும் செயல்களைக் குற்றங்கள் எனக் கருதாமல் தங்களது பலவீனம் என எண்ணுகின்றனர். கடவுள் தங்கள்பேரில் பொதுவான இரக்கம் காட்டுவார் எனக் கனாக்கண்டு தங்கள் பாவங்களிலேயே உழல்கின்றனர். அந்தோ! உறங்கிக்கிடக்கும் இவர்கள் தங்களுக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை உணரார். தேவ ஆவியானவரே அவர்களைத் தொட்டு அவர்களுடைய பாவங்களைக் குறித்து உணர்த்தமுடியும். தமது ஆவிக்குரிய மரணத்திலிருந்து தேவனுடைய ஆவியினால் அவர்கள் தட்டி எழுப்பப்படும்போதுதான் அவர்களுடைய ஒவ்வொரு பாவமும் தங்களைத் தேவ சாபத்துக்குள்ளாக்குகிறது என்ற திடுக்கிடும் உண்மையை உணர்ந்துகொள்ளுகின்றனர். தமது கடமைகளைப் புறக்கணித்ததும், தேவனுடைய நல் ஈவுகளை நன்றியற்று முறையில் பயன்படுத்தியதும், கர்த்தருக்கு விரோதமான கலகம் செய்ததும் புதிதாக உயிர்ப்பிக்கப்பட்ட மனதை நொறுக்கி ஆத்துமாவைக் கலங்கடிக்கின்றன. மனச்சாட்சி கூர்மைபெற்று அவர்களைக் குத்தும்போது அவர்களது குற்ற உணர்ச்சியானது அவர்களைப் பெருஞ் சுமையாய் அழுத்துகிறது. கடவுளின் பரிசுத்த சட்டங்கள் நீதியுள்ளவைகளாய்த் தெரிகின்றன. தேவனது மன்னிப்பைப் பெறாவிட்டால் தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பதை அவர்கள் உணர்கின்றனர்.
ஆவியினாலும் சத்திய வசனத்தினாலும் உணர்வடைந்த பாவிகள் கடவுளின் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களதுச் சொந்த முயற்சியினால் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாதென அறிகின்றனர். இந்த அறிவுறுத்தலை அடைந்தவர் தங்களது முந்தின அறியாமையையும், அலட்சியத்தையும் குறித்து திகைப்படைகின்றனர். மனித இயல்பைப்பற்றி ‘நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்புட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பும்” (2பேதுரு 2:22). திறக்கப்பட்ட பிரேத குழி (சங்.5:9) ஆகிய வேத கூற்றுகள் உண்மையே என ஒப்புக்கொள்ளுகின்றன. இடைவிடாமல் ஆண்டவரில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனையின்படி ஒவ்வொரு கணமும் வாழாமல் சுயத்தையும் பாவத்தையும் நேசித்து வாழ்க்கையைப் பாழாக்கினார்களே. ஐயோ! வெட்கக்கேடு! எத்துணை பயங்கரம்! மெய்யாகவே தேவனுடைய நியாயத்தீர்ப்பானது நீதியுள்ளது. நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் (கலா.3:10). ஆம் அவர்கள் அவ்வாறு நிலைத்திராதபடியால் சபிக்கப்பட்டவர்களே.
பாவிகள் பரிசுத்த ஆவயினாவரால் உயிர்ப்பிக்கப்பட்டு தங்களது ஆத்தும தேவைகளை உணர்ந்துகொள்ளும் விதம் மேலே நான் கூறியது மட்டுமே எனக்கருதலாகாது. ஆயினும் ஒவ்வொரு பாவியும் தனது தேவையை உணர்ந்தால் மட்டுமே கிருபைக்காக இறைஞ்சுவான். ஆனால் கடவுள் தமது மக்களைத் தம்மிடம் ஈர்த்து இணங்கவைப்புதற்கு வெவ்வேறு முறைகளைக் கையாளுகிறார். எத்துணை அளவு பாவ உணர்ச்சி நான் பெற்றுள்ளேன் என்பது முக்கிய வினா அல்ல. ஆனால் நான் உண்மையில் பாவி என்றும் அழிவுக்குப்பாத்திரமானவன் என்றும் மெய்யாகவே உணருகிறேனா என்பதுதான் முக்கியமானது.
இத்தகைய மக்கள் தேவன் இரக்கமுள்ளவராக இருந்தால் மட்டுமே தங்களுக்கு விமோசனம் உண்டு என ஒத்துக்கொள்ளுவர் என்பது திண்ணம். தேவனுடைய பார்வையில் தனது தகுதியின்மையை உணர்ந்து எவனும் இரட்சிப்பைப் பெறுவதற்கு கிருபை ஒன்றே வழி என்பதனை வரவேற்கத் தயங்கான்.
பாவி ஒருவன் தனது ஆத்தும தேவைகளை உணர்ந்து கொள்ளமாறு தட்டி எழுப்பப்படும்போது கிருபையின் மூலமாகக் கிடைக்கும் இரட்சிப்பைப் பெற விரைந்தோடுவான் இல்லையா? ஆ! இது எத்தனை அதிசயமான உண்மை! தேவ கிருபை எத்தனை பெரியது! இதைவிட நாம் வேண்டுவது யாது? என்றெல்லாம் நாம் வியக்கக்கூடும். ஆனால் உயிர்ப்பிக்கப்பட்ட பாவிகள் இந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தாமதிப்பதை நாம் காண்கிறோம். தேவ கிருபையின் வலுவின்மையோ, இரட்சிப்பில் ஏதோ குறைவோ, இதற்குக் காரணம் என்று நாம் கருதவேண்டியதில்லை. ஆனால் பாவிக்கு அவனுடைய பாவ உணர்ச்சியானது போதுமான அளவு இல்லாததாலோ அல்லது அவன் கிறிஸ்துவின் அவசியத்தை முழுமையாக உணராததாலேயே அவன் அவ்வாறு தாமதிக்கிறான். இப்படிக் கூறுவதும்கூட கிருபையின் மூலமாக வரும் இரட்சிப்பின் மாட்சிமையை மிகக்குறைப்பதாகும்.
நாம் பாவ உணர்வைப் பெறுதலோ அல்லது கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ள ஆசித்தலோ தேவன் நம்மீது தம் கிருபையைப் பொழிய காரணமாக அமையாது. மேற்கூறிய அநுபவங்கள் தேவ கிருபையைப் பெற நாம் ஆயத்தப்படுவதற்கு அவசியமானவைகளே. ஆனால் இவை தேவன் நம்மீது தமது கிருபையப் பொழிவதற்கு இன்றியமையாதன என்று கூற இயலாது. தேவனுடைய அழைப்பைப் பெறுவதற்கு அவருடைய கிருபையே காரணமாவதன்றி, நாம் நமது பாவத்தைக் குறித்து அலறி அங்கலாய்ப்பதோ, அல்லது நாம் இரட்சிப்படைய விரும்புவதோ அல்ல.
எவ்வித ஆதரவும், நம்பிக்கையுமற்று வருந்தும் பாவிகளுக்கே நற்செய்தியின் அழைப்பு அருளப்படுகிறது. கிறிஸ்து இயேசுவை மெய்யாகவே விசுவாசிக்கிற ஒருவன் ‘பாவியை நீதிமானாக்குகிறவராகிய” அவரையே பற்றிக்கொள்ள வேண்டும் (ரோமர் 4:5). கடவுள் பக்தியற்ற ஒருவனைவிட தான் மேலானவன் என்று எண்ணும் பாவி எவனும் கிறிஸ்துவிடம் வரமாட்டான். எல்லாரையும்விட தான்தான் மிக மோசமானவன் என உணரும் பாவியே அவரிடம் வந்து சேருவான். ‘நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்” என நமது இரட்சகர் கூறினார் அன்றோ? (மத்.9:13).
விசுவாசியின் நம்பிக்கைக்கும் ஆன்மீக மகிழ்ச்சிக்கும் அடிப்படை, இரட்சிப்பைச் சம்பாதிக்கத்தான் புண்ணியம் செய்வதாக எண்ணிக்கொள்வதல்ல (அதாவது நான் நம்பினேன் அல்லது சித்தம் கொண்டேன் என்பன….) ஆனால் கிருபையின் மூலமாக இரட்சிப்பு அருளப்படுகிறது என்ற பேருண்மையிலும் காணாமற்போனதை இரட்சிக்கவே இயேசு இரட்சகர் வந்தார் என்ற சத்தியத்திலுமே விசுவாசியின் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது. எத்தகுதியையும் ஏற்காத கிருபையின்மீதும், எல்லா நீதியையும் அருளுகிற இரட்சகர்மீதுமே ஒரு விசுவாசி முற்றிலும் சார்ந்திருக்கிறான்.
தான் எல்லாரையும்போலவே துன்மார்க்கனும் குற்றவாளியாகவும் இருப்பினும் ஆண்டவர் தன்னை அழைத்ததும் அவருடைய அளவற்ற கிருபையினாலேயே என்று உயிர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு பாவியும் உணர்கிறான். இதற்கான வேறு எந்தக் காரணமும் அவனுக்குப் பலப்படுவதில்லை. கடவுளே இரட்சிப்பில் முதலில் கிரியை புரிந்தார் என்று அவன் நிச்சயித்திருக்கிறான். அவன் தனது ஆன்மீக தேவையை உணருவதற்கென உயிர்ப்பிக்கப்பட்ட அநுபவத்தை எண்ணிப் பார்க்கையில் ‘நான் இதுகாறும் தேடாதவரும், நேசிக்காத வருமான ஒருவர் தாமே என்னைக் கண்டுகொண்டார்” என உணர்ந்து பரவசமடைகிறான்.
நண்பனே! தேவனால் அழைக்கப்படுதல் அவருடைய கிருபையின் கிரியையேயாம். நீ வேறெந்தப் பாவியையும் விட வேறுபட்டவன் அல்ல என்றபோதிலும் தேவனுடைய பரித்தெடுக்கும் கிருபையானது உன்னை அழைத்திருப்பதைக் குறித்து உன் இதயமானது நன்றியால் பொங்கித் ததும்ப வேண்டாமா? இத்தகைய நன்றி உணர்ச்சியல்லவா உன்னைக் கீழ்ப்படிதலுள்ள சீடனாக கிறிஸ்துவின் சேவையில் ஈடுபடுத்தும்.
இயேசுவின் அழைப்பை இன்னும் பெற்றிராத அன்பனே! உனக்கு நான் யாது கூறுவேன்? இந்த நிலையிலே நீ இவ்வுலகத்தை நீத்தால், நீ எங்கே போவாய்? நீ அழிவது நிச்சயம் அன்றோ? இவ்வுலகில் அழைப்பைப் பெற்றுவர்களே மறுவுலகில் மகிமையடைவர். உன் இதயமானது அனலற்றுப்போய் தேவன்பேரில் அன்பு செலுத்தாதிருக்கும்போது சுவிசேஷத்தின் சத்தியங்களைப்பற்றி அறிவுமட்டுமே உன்னை இரட்சிக்கும் என்று இறுமாந்திருக்காதே. அந்தோ! நீ நித்திய அழிவுக்குப் பாத்திரமானவனாக இருக்கையில், மற்றவர் பார்வைக்கு நீ கண்ணியமானவன் என உனது நண்பர்கள் மத்தியில் புகழ்பெற்றிருப்பதால் யாது பயன்? இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் கைவிடப்பட்டு போகாதிருக்க கடவுளை வேண்டுகிறேன்.
‘வா, பாவி, மலைத்து நில்லாதே, வா
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்றெண்ணித்திகையாதே,
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே உள்ளபடி வாவேன்!”











