- கிருபை அருளும் பாதுகாப்பு
விசுவாசிகளுக்கு கடவுள் அருளும் ஒப்பற்ற சிலாக்கியங்களைக் குறித்து நாம் கண்டறிந்தோம். பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், புத்திர சுவிகாரம் பெறுதல், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய திவ்ய நன்மைகள் கடவுளின் அருள்கொடைகளாம். ஆனால் தன்னுடைய விசுவாசத்தின் பலவீனத்தையும், தனது ஆன்மீக எதிரிகளினது பலத்தையும் உணர்ந்த எந்த விசுவாசியும் ‘நான்; பெற்ற இப்பெரும்பேறுகளை இழந்துவிடமாட்டேன் என்பதனை எங்ஙனம் அறிவேன்?” என வினவுதல் இயல்பு.’தேவ கிருபையினால் நான் இந்த ஈவுகளைப் பெற்றேன். ஆனால் தொடர்ந்து இவைகளை என்னுள் நிலைத்திருக்கச் செய்வது எங்ஙனம்? என அவன் மருளலாம். ‘உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஓருக்காலும் இடறலடையேன்.. நாம் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன்” (மத் 26:33,35) என மன உறுதியுடன் கூறின பேதுரு பரிதாபமாக தோல்வியுற்றான். விசுவாசிகளாகிய நாம் விடாமுயற்சியுடன் நிலைத்திருப்பது எங்ஙனம்?
நண்பனே! வேதத்தின் வாக்குமாறா கடவுள் நம்மோடிருக்கிறார். ‘யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே. நான் உனக்குத் துணை நிற்கிறேன்…. நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” (ஏசா.41:14-15) என்று தேவனே நம்மைப் பலப்படுத்தி வெற்றிக்கொள்ளச் செய்கிறார். கடவுளின் விடா பாதுகாப்பினாலே விசுவாசிகள் விடாமுயற்சியில் வெற்றிக்கொள்வர் (2.கொரி 2:14). ஏனெனில் திரியேக கடவுள் தமது பிள்ளைகளை வழுவாது காத்துக்கொள்ள திருவுளசித்தம் கொண்டிருக்கிறார் (யோவான் 10:28.29, யூதா 24).
நமது பாதுகாப்பிற்காக கடவுளின் ஏற்பாடுகளில் சிலவற்றைக் காண்போம்:
- கடவுளின் ஒப்பற்ற அன்பு விசுவாசிகளைக் காத்துக் கொள்ளுகிறது. தமது கிருபை நிறைந்த நித்திய அன்பினால் அவர்களைத் தெரிந்துகொண்டவர் அவர்களை அழிந்துபோவிடுவாரோ? விசுவாசிகள் அழிவதற்கு முன்னர் ஒன்று கடவுளின் அன்பு சாகவேண்டும். கடவுளின் அன்பு ஒருபோதும் மாறாதது. சர்வ வல்லமையுள்ளவரின் நோக்கம் நிறைவேறுதலை எந்தச் சக்தியும் தடுக்க முடியாது அன்றோ!
- கடவுளின் வல்லமையானது விசுவாசிகளைக் காத்துக் கொள்ளும். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளில் ஒருவர் அழிந்தாலும் அது அவர் எல்லாம் வல்ல கடவுளா என்று சந்தேகிக்க நேரிடும். மேலும் அது அவர் மகிமைக்கு இழுக்கு ஏற்படுத்தும். அவருடைய ஞானம் பூரணமற்றதாகக் காணப்படும் (1.தீமோ 6:15-16).
- கடவுளின் வாக்குத்தத்தங்கள் விசுவாசிகளை விடாமல் பாதுகாக்கும். ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபி.13:5) என்பது போன்ற ஏராளமான வாக்குத்தத்தங்களைத் தேவன் தமது பிள்ளைகளுக்கு அருளியுள்ளார். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் (எபி.5:18). இந்த வாக்குத்தத்தங்களை அருளியிருப்பதால் நாம் பயப்பட வேண்டியதில்லை.
- கடவுளின் விடா பாதுகாப்பை அவரது உடன்படிக்கை உறுதிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய கிருபையின் உடன்படிக்கைக்கு ஒவ்வொரு விசுவாசியும் உட்பட்டவன். ஆதாமோடு செய்யப்பட்ட பழைய உடன்படிக்கையைவிட மிகவும் மேன்மையானது. இது அதில் அவனது பூரண கீழ்ப்படிதல் என்ற நிபந்தனையின் பேரிலேதான் வாழ்வு அளிக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்துவோடு ஏற்பட்ட புதிய உடன்படிக்கையோ நித்தியமானது. ‘அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களைவிட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்தேன்” (எரேமி. 32:40). இத்தகைய ஒப்பற்ற பாதுகாப்பு அருளும் உடன்படிக்கையைவிட மேலானது வேறு உண்டோ?
- கடவுளின் உண்மை விசுவாசிகளை முற்றுமுடிய காக்கும். ‘என் கிருபை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பசகாமலும் இருப்பேன்” என தேவன் அமுத வாக்கு அருளுகிறார் (சங் 89:33). எனவே விசுவாசியே! நீ மகிழ்ச்சியாயிரு. உன் நலிந்த இதயத்தைத் திடப்படுத்துவாயாக. உனது நம்பிக்கையின் அடிப்படையானது வாழ்க்கையின் போராட்டங்களைவிட அதிக பலமுள்ளது. மரண பயத்தைவிட வலுவானது. நியாயத்தீர்ப்பின் பயங்கரங்களைவிட அதிக உறுதியானது. வல்லமையும் சத்தியமும் கிருபையும் நிறைந்த ஆண்டவர் தலைமாறா உண்மையுள்ளவராமே.
- இயேசு கிறிஸ்துவினது தியாகபலியின் வல்லமையும், அவர் தமது மக்களுக்காகப் பரிந்து பேசுதலும் தம் பிள்ளைகளோடு அவர் கொள்ளும் ஐக்கியமும் விசுவாசியின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. தாம் மீட்டுக்கொண்ட மக்கள் இழந்துபோவதற்காக அவர் அத்தனைப் பாடுகளை அநுபவித்திருப்பாரா? இல்லவே இல்லை (ஏசா 53:11) ‘அவர் (பிதா) எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல்….” இருப்பதே எனது பொறுப்பாகும் என்று கூறிய ஆண்டவர் நம்மைக் கைவிடுவாரோ? (யோவா 6:39). ‘அவரில் பிரியமாயிருக்கிற” பிதாவானவர் அவர் மன்றாட்டுகளைப் புறக்கணிப்பாரோ? தலையாகிய கிறிஸ்துவுடன் ஒன்றிக்கப்பட்ட விசுவாசிகள் அழிவுறக் கூடுமோ?
- விசுவாசிகளின் உள்ளங்களில் உறையும் பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பாதுகாக்கிறார். அவரே அவர்களுக்கு வழிகாட்டி. அவர்களைத் தெய்வீக ஆற்றலால் இடைகட்டுகிறார். அவர்களுள் ஆவியானவர் உறைவதன் நோக்கமே அவர்களை மறுமையின் மகிமைக்குக் கொண்டுசெல்வதே. ‘அவருக்கு உரியவர்கள் மீட்டுக்கொள்ளப்படும்வரையில் ஆவியானவர்தானே, நாம் உரிமைச் சொத்தாகப் பெறவிருக்கும் அந்த நற்பேறு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறார்” (எபேசி.1:14) இத்தகைய உத்தரவாதமானது விசுவாசிகள் தங்களுடைய அழியா சுதந்திரத்தை அடைவதை நிச்சயப்படுத்துகிறது.
- திருமறையும், திருச்சபையின் நியமனங்களாகிய திருமுழுக்கும், திருவிருந்தும் ஆகிய இவை விசுவாசிகளைக் காப்பதற்காக அருளப்பட்டுள்ளன. திருமறையின் வாக்கத்தத்தங்கள், அறிவுரைகள், எடுத்துக்காட்டுகள், எச்சரிப்புகள் ஆகிய யாவும் ஒருங்கிணைந்து விசுவாசியை வழிநடத்துகின்றன. திருச்சபையினுடைய நியமங்களால் விசுவாசிகளுடைய விசுவாசம் நிலைநாட்டப்பட்டு அவர்களின் பரிசுத்தம் மேன்பாடமைகின்றது. மேலும் அவர்களுடைய ஆன்மீக அறிவு உயர்நிலையை எய்துகிறது. ‘உங்கள் உள்ளங்களில் இந்த நல்ல வேலையைத் தொடங்கினவர் இயேசு கிறிஸ்துவின் நாள் வரையிலும் அதைத் தொடர்ந்து செய்து அது நிறைவு பெறும்படி செய்வார்” என பவுல் அப்போஸ்தலன் கூறுவது எத்தனை உண்மையானது! (பிலி.1:6). மெய்த் திராட்சச்செடியின் வாடாத கொடிகளே விசுவாசிகள். சாவற்ற தலையாகிய கிறிஸ்துவின் உடல் உறுப்புகள் அவர்கள். தங்கள் சொந்த உயிரினால் அல்ல, கிறிஸ்துவின் உயிரால் வாழ்பவர்களே விசுவாசிகள்.
விசுவாசிகளின் பாதுகாப்பு இவ்வண்ணமாக கடவுளையே பெரிதும் சார்ந்திருந்தால் அவர்கள் எதற்காக தங்கள் வாழ்க்கையைச் சீராக நடத்த அக்கறைகொள்ளவேண்டும். அவர்களுடைய முடிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதே: பின் ஏன் அவர்கள் பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து கவலைப்படவேண்டும் என சிலர் மறுப்பு கூறலாம். இதே வண்ணமாகத்தான் நமதாண்டவரையும் சாத்தான் சோதித்தான். ‘நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக் குதியும்: ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்……” (மத்.4:6) என கடவுளைக் பரீட்சைப் பார்க்கத் தூண்டினான். இயேசுவானவருக்கோ தமது பிதா தம்மைக் காத்துக்கொள்ளுவார் என்பதில் அணுவளவேனும் ஐயமில்லை. ஆனால் அவர் சாத்தானுடைய தூண்டுதலைக் கடுமையாக எதிர்த்து கண்டித்தார். ஏனெனில் அவர் வேத வசனத்தைத் தவறாகக் கடவுளுக்கு எதிராக பயன்படுத்தி சோதித்தான். விசுவாசியும் அவ்விதமே அவனை எதிர்த்து நிர்விசார வாழ்க்கை வாழத் துணியான். கவனம்! நாம் பாவத்தில் நிலைத்திருக்க கடவுள் தம்வாக்கத்தத்தங்களை அருளவில்லை. பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேற அயராது பாடுபடவோம் (பிலி.2:12.13). விசுவாசிகள் தங்களைப் பாதுகாக்கும்படி தொடர்ந்து ஜெபிக்குமாறு ஏவப்படுவதால் அவர்கள் தங்கள் முடிவைக் குறித்து நிச்சயமற்றிருக்கிறார்கள என சொல்வது தவறு. இயேசுவானவரும் தமது பிதாவை நோக்கி மிகுந்த ஊக்கத்துடனும் இடைவிடாமல் ஜெபித்தார். எனவே அவருடைய எதிர்காலத்தைக் குறித்து அவர் நிச்சயமற்றிருந்தார் எனக் கூறலாமா? அல்லவே. விசுவாசிகளே! கடவுள் நமக்குத் துணைபுரிய வேண்டுமென ஜெபிப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் கவலையற்றும் கீழ்ப்படியாமலும் வாழ்ந்தால் கடவுள் அவர்களைச் சிட்சிப்பார் அல்லவா? தங்களது ‘பின்வாங்குதல்” ஆவியானவரைத் துக்கப்படுத்தி கடவுளுக்கும், சுவிசேஷத்திற்கும் நிந்தையை உண்டுபண்ணுகிறது என உணரும்பொழுது அவர்கள் ஊக்கத்துடன் ஆண்டவரை நோக்கி ஜெபிக்க ஏவப்படுகிறன்றனர். நித்திய ஜீவனுக்கான விடா பாதுகாப்பு உறுதியாயினும், இவ்வுலகில் வெற்றிகரமான ஆன்மீக வாழ்க்கைக்கு ஜெபம் இன்றியமையாதது. பலத்த ஆன்மீக எதிரிகள் அவர்களை அழிக்க அயராது முயற்சிக்கையில் மெய் விசுவாசிகள் ஒருபோதும் கவலையீனமாகவோ, அலட்சியமாகவோ வாழ முடியாது.
ஆனால் தேவ கிருபையினால் விசுவாசிகள் ஆறுதலைப் பெறுகின்றனர். தேவ கிருபையே அவர்களை இரட்சிக்கத் துவங்கியுள்ளது. தேவ கிருபையின் மூலமாகவே அவர்கள் அனைத்து ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெற்று பரிபூரணப்படுத்தப்பட ஆண்டவர் வழி வகுத்துள்ளார் (எபேசி.1:3, 4:11, ரோம 8:29.30). கடவுளது கிருபையின் இராஜ்யத்தில் வாழ்பவர்கள் எத்துணை நற்பேறும் ஆனந்தமுள்ளவர்கள்! ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது.
‘காக்கும் கரங்கள் உண்டவர்க்கு
காத்திடுவார் கிருபையாலே.”










