- கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்
எவ்விதம் நமது இரட்சகரின் ஒப்பற்ற தன்மை ஒப்பற்ற மீட்பை நமக்குச் சாத்தியமாக்குகிறது எனக் கண்டோம். இரட்சகரின் மீட்பின் கிரியை எத்தனை உன்னதமானது என ஈண்டு காண்போம். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது போல் ‘கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது” (ரோ.5:21). நாம் கடவுளின் பரிசுத்த சட்டத்தை மீறுவதை அவர் பொருட்படுத்தாமல் கண்சாடையாக விடுவதினால் தேவ கிருபை நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நமது பொருட்டாக இயேசு கிறி ஸ்துவினது நீதியின் கிரியைகளை கடவுள் அங்கீகரித்து திருப்தி அடைந்ததாலேயே கிருபை நமக்கு அருளப்படுகிறது. இந்த விதமாக கடவுள் தமது பரிசுத்தச் சட்டத்தைக் காத்துக்கொள்ளுவது மட்டுமல்ல, எவர்களுக்காக இயேசு கிறிஸ்து தியாக பலிசெலுத்தினாரோ, அப்பாவிகளுக்குத் தமது கிருபையை அருளவும் செய்கிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆற்றின அளப்பெரிய கிரியையின் மேன்மைகளைச் சற்று ஆராய்வோம். அவருடைய கீழ்ப்படிதலானது பூரணத்துவம் வாய்ந்தது. கடவுளின் நீதிச்சட்டத்தை அவர் முற்றிலுமாகக் கைக்கொண்டார். அவருடைய செய்கைகளின் நோக்கமும், செயல்முறையும் குறிக்கோளும் எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துவதாகவும் நேர்மையாகவும் இருந்தன. கடவுளின் நீதிச் சட்டத்திற்கிணங்க நமது பாவங்களுக்குரிய தண்டனையை அவர் முற்றிலுமாகக் கொடுத்துத் தீர்த்தார். தெய்வத்தன்மையும் மனிதத் தன்மையும் ஒருங்கிணைந்த அவருடைய ஒப்பற்ற நிலையானது தேவ நீதியின் உக்கிர கோபத்தைத் தீர்க்கவல்லதால் இருந்தது. தேவ ஞானம் உருவாக்கிய மிக உன்னதமான காரியம் கிறிஸ்துவின் நீதியே ஆகும்.
கிறிஸ்துவினது நீதிதான் எத்தனை அழகுற திருமறையில் சித்திகரிக்கப்பட்டுள்ளது. அது நேர்த்தியும், தூய்மையும், வெண்மையுமான மெல்லிய வஸ்திரம் எனவும், சித்திர வேலைப்பாடு நிறைந்த பொன் சரிகை மிளிரும் ஆடை எனவும், மேன்மை பொருந்திய சால்வை எனவும் வர்ணிக்கப்படுகிறது. அது முழுவதும் கடவுளின் நீதியும் நித்தியமாக நிலைத்திருக்கும் நீதியுமாகும். கிறிஸ்து அருளும் நீதி பூரணமானதால் நாம் நமது புண்ணிய கிரியைகளை அத்துடன் சேர்க்க அவசியமில்லை. இவ்வுன்னத பண்புகளினால் கிறிஸ்துவின் நீதி ஒப்பற்றது என நீரும் ஒப்புக்கொள்வீர்.
ஆனால் இந்த தேவ நீதியானது நற்கிரியைகள் புரியும் நன்மக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதா, அல்லது பாவிகளுக்கும் கிட்டுமா என சிலர் வினவலாம். இதற்குப் பதிலாக திருமறை கூறுவது, கிறிஸ்துவின் நீதி உன்னதமானதும், பூரணமானதும், நித்தியமானதுமாக இருப்பது மட்டுமல்ல, அது இலவசமானது! எனவே நிர்ப்பந்த பாவிகளுக்கே ஏற்றதும் உரியதுமாகும் என வேதம் உறுதி கூறுகிறது. நாம் கிறிஸ்துவைக் கண்டடையும் பொருட்டு வானத்துக்கு ஏறவும் வேண்டியதில்லை. பாதாளத்திற்கு இறங்கவும் அவசியமில்லை. தேவனுடைய கிருபையானது நம்பிக்கையின் நற்செய்தியை நமக்குக் கொண்டு வருகிறது (ரோ.10:5-9). இந்த அற்புதமான நீதியைப் பெறுவதற்கு மனிதராக எச்சாதனையும் புர்pய அவசியமில்லை. கிருபையே அந்நீதியை நமக்கு இலவசமாக கிடைக்கச்செய்கிறது.
யுகயுகமாய் கிறிஸ்தவர்கள் இம்மகத்துவ நீதியில் பூரிப்படைந்து பறைசாற்றி வருகின்றனர். இதுவே அவர்களது நம்பிக்கையின் ஒரே அடிப்படையாகும். யார் இதனை முழுமையாக வர்ணிக்கமுடியும்? அதன் மகிமை எல்லைகடந்தது. கடவுள் எவ்விதம் மனிதனைக் காட்டிலும் மாட்சிமையுள்ளரோ அவ்விதம் தேவ நீதி மனித வர்ணனைக்கும் மிதிப்பீட்டிற்கும் அப்பாற்பட்டது. தமது உன்னத நீதிச் சட்டத்தை கிறிஸ்துவானவர் நம் பொருட்டாக பூரணமாகக் கைக்கொண்டதால் பேரன்பரான கடவுள் தமது கிருபையை நமக்கு அருளுவதில் பெருமகிழ்வுகொள்ளுகிறார். ஆ! இதனைவிட பெரும்பேறு பாவிகளாகிய நமக்கு வேறுள்ளதோ?
‘கிருபை பெருகுதே
கல்வாரியினின்று பாய்ந்திடுமே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே.”













