- இரண்டாம் பேறு ‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்” மக்களியல்புக்குத் துயரமானது அருவருப்பும் தொந்தரவுமாயிருக்கிறது. நம்முடைய ஆவி துயரங்கள் துக்கங்களாகியவைகளைக் காணும்போது இயல்பாகவே வெறுப்பினால் பின்வாங்குகிறது. அகத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் மலர்ச்சியுமுடைய மக்களின் சமுதாயத்தையே நாம் பொதுவாக நாடித்தேடுகிறோம். மறுபிறப்பின் அனுபவமில்லாத மக்களுக்கு இந்த வேத வாக்கியமானது ஒரு முரண்பாட்டினை அளிக்கிறது. ஆயினும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் காதுக்கு இன்னிசையமுதாயிருக்கிறது. அவர்கள் பாக்கியவான்களாயின் ஏன் துயரப்படுகிறார்கள்? துயுரப்படுவார்களாயின், அவர்கள் பாக்கியவான்களாயிருப்பது எப்படி? இந்த முரண்பாடு மெய்ந்நிலையின் திறவுகோல் தேவனுடைய பிள்ளைகளிடமே இருக்கிறது. இவ்வேத வாக்கியமோ அவ்வளவாக, ‘இந்த மனிதன் பேசினதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று வியந்துரைக்குமாறு நாமும் நெருக்கப்படுகிறோம். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்பது இவ்வுலக மக்களின் பகுத்தறிவுக்கு முற்றிலும் முரண்படுகிற ஒரு மூதுரையாயிருக்கிறது. எல்லாவிடங்களிலும் எல்லாக் காலங்களிலும் செல்வச் செழிப்பும் மகிழ்சியுமுடையவர்களையே தேவனுடைய திருவருட்பேறுடைய மக்களால் மதிக்கிறது இவ்வுலகம். ஆயினும் கிறிஸ்துவானவரோ ஆவியில் எளிமையுள்ளவர்களையும் துயரப்படுகிறவர்களையும் தேவனுடைய அருட்பேறுடைய மக்களாக அறிவிக்கிறார். எல்லா வகையான துயரங்களும் ஈண்டுக் குறிப்பிடப்படவில்லை என்பது வெளிப்படை. மரணத்திற்கேதுவான இவ்வுலகின் துயரங்கள் உண்டு (2.கொரி.7:10). கிறிஸ்துவானவர் வாக்களித்துள்ள ஆறுதலை தருகிற துயரமோ ஓர் ஆவிக்குரிய துயரமாய் கொள்ளப்படவேண்டும். நம்முடைய சுபாவத்தின் உள்ளார்ந்த சீரழிவையும் நடக்கையிலுள்ள மாபெருங்குற்றத்தையும் வெளிப்படுத்துகிற தேவனுடைய பரிசுத்தமும் அவருடைய தயவும் பற்றிய தெளிவுணர்வின் விளைவுதான் இத்துயரமாகும். தேவனுக்கேற்ற துக்கத்தோடே நம்முடைய பாவங்களைக்குறித்துத் துயரப்படுவதுதான் கிறிஸ்துவானவர் வாக்குப்பண்ணியுள்ள தெய்வீகமான ஆறுதலைத் தருகிற துயரமாயிருக்கிறது.
அருட்பேறுகள் எட்டும் நான்கு இணை துணைக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பாடத்தைத் தொடர்ந்து தியானிக்கும்போது அதன் மெய்ந்நிலையானது தெளிவுபடுத்தப்படும். ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குக் கிறிஸ்துவானவர் அறிவிக்கிற பேறுதான் இவ்வரிசையில் முதலாவது பேறாயிருக்கிறது. தங்களுடைய வறுமையையும் வெறுமையையும் உணருமாறுள்ள விழிப்புணர்வினைப் பெற்ற மக்களைச் சுட்டிக் காண்பிக்கிற ஒரு விளக்கமாகவே நாம் ஆவியின் எளிமையைக் கொள்ள வேண்டும். இத்தகை ஆவிக்குரிய ஏழ்மை நிலையிலிருந்து துயர நிலைக்குக் கடந்து செல்கிற இடப்பெயர்வைப் பின்தொடர்வது இப்பொழுது எளிதாகும். துயரப்படுதலானது ஆவியின் எளிமைக்கு உற்ற துணையாயிருக்கிறபடியால், அது மெய்யாகவே ஆவியின் எளிமையை மிகவும் நெருக்கமாய்ப் பின்தொடர்கிறது. இங்குக் குறிப்பிடப்படுகிற துயரமானது, நம்முடைய உற்றார் உறவினர்களின் மறைவினால் நேரிடும் இழப்புகள், இன்னல்கள், பொருள் நட்டங்கள் ஆகியவைகளினால் உண்டாகும் துயரத்திற்கும் மேம்பட்ட ஒரு துயரமாகும். நம்முடைய பாவத்திற்காகத் துயருறுகிற துயரமே இது.
இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நேரிடுகிற கைவிடப்பட்டுத் தவிக்கிற தனிமைநிலை குறித்தும், தேவனுக்கும் நமக்குமிடையே பிரிவினையை உண்டாக்குகிற அக்கிரமங்களைக் குறித்துமுள்ள துயரமாகும். பெருமை பாராட்டுகிற நம்முடைய நல்லொழுக்கம், நம்பிக்கொண்டிருக்கிற சுய நீதியாகியவைகளைக் குறித்துமுள்ள துயரமுமாம். தேவனுக்கு விரோதமான பகைமையும், அவருடைய சித்தத்திற்கு எதிரிடையான எதிர்ப்புணர்வுங்குறித்துள்ள துயரமுமாம். இத்தகைய துயரமானது, உணரத்தக்க நிலையிலுள்ள நம்முடைய ஆவியின் எளிமையுடன் எப்பொழுதும் இணைந்தே செல்லுகிறது.
நம்முடைய இரட்சகர் தம்முடைய ஆசீர்வாதங்களை அறிவிப்பதற்கேதுவான ஆவியைச் சுட்டிக்ககாண்பிக்கிற தெளிவான எடுத்துக் காட்டும் அதற்குரிய விளக்கமும் லூக்கா 18:9-14 வசனங்களில் காணப்படுகின்றன. அங்கே தெளிவாய் மாறுபடுகிற ஒரு நிலையினை நாம் காண்கிறோம். தன்னை நீதிமானென்று எண்ணிக்கொண்டிருக்கிற ஒரு பரிசேயன், ‘தேவனே, நான் பறிகாரன், அநியாயக்காரார், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனிதரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன். என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்” என்று தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். பரிசேயன் சொல்வதெல்லாம் உண்மையே. ஆயினும் அவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட நிலையில்தான் வீடு சென்றான். அவனுடைய அழகான உடுப்புகளும் வெண்மையான மேலாடையும் அழுக்கான கந்தைக்கு ஒப்பாகும். அவனோ அதனை அறியவில்லை. பின்னர் ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, ‘பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்றான். சங்கீதக்காரனுடைய வாய்மொழிக்கிணங்க (சங்.40:12) தன் அக்கிரமத்தினால் கலக்கமடைந்த ஆயக்காரன் நிமிர்ந்து பார்க்கவுங்கூடாதிருந்தான். ஆயினும் அவனோ ஆவியில் எளிமையுள்ளவனும் தன் பாவங்களுக்காகத் துக்கப்படுகிறவனுமாயிருந்தபடியால், நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.
ஆனபடியால், தேவனுடைய பிள்ளைகளுடைய மறுபிறப்பின் முதலாவது அடையாளங்கள் இவைகளே. ஆவியின் எளிமை நிலையினை எய்தாமலும், தன் பாவங்களுக்காக மெய்யாய்த் துயரப்படுவதனை ஒருபோதும் அறியாமலுமிருக்கிற ஒருவன், திருச்சபையில் சேர்ந்திருந்தாலும் அங்கே ஆட்சிப் பொறுப்பில் பங்கு பெற்றாலும், பரலோக இராஜ்யத்தைக் காணவோ, அதனுள் பிரவேசிக்கவோ மாட்டான். மகாதேவன் நொறுங்குண்டு பணிந்த இருதயங்களில் வாசம்பண்ணும்படி இறங்கி வருகிறார். ஆகையால் நாம் எத்துணை நன்றியறிவுடையவர்களாயிருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே இது தேவன் நமக்கு அருளியுள்ள ஓர் அற்புதமான வாக்குத்தத்தமாயிருக்கிறது. அவருடைய பார்வையில் வானங்களும் தூய்மையற்றனவாயிருக்கும்போது, மனிதன் கட்டி எழுப்புகிற ஆலயத்தை அது மகிவும் நேர்த்தியாயும், அவர் வாசம்பண்ணுதற்குரிய வீடாயுமிருப்பினும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆயினும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, தன் வசனத்துக்கு நடுங்கிறவனையே அவர் நோக்கிப் பார்ப்பார். ஏசாயா 57:15, 66:1-2 வசனங்களைப் பார்க்க.
‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்” பாவ உணர்வின் விளைவாக முதலாவது ஏற்படுகிற துயரமே இங்கு முதன்மையாய்க் குறிப்பிடப்பட்டாலும், துயரப்படுதல் அத்துடன் நின்று விடவில்லை. துயரப்படுதல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்நாளும் நிரந்தரமாய்க் காணப்படுகிற ஒரு தனிச்சிறப்புடைய பண்பு நிலையாயிருக்கிறது. துயரப்படுதற்கேதுவாக விசுவாசிக்கு எவ்வளவோ இருக்கிறது. ‘நிர்ப்பந்தமான மனிதன் நான்” (ரோமர் 7:24) என்று அவனுடைய இருதயத்திலுள்ள பொல்லாப்புகள் அவனைக் கதறியழப்பண்ணுகிறது. நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற (எபி.12:1) அவிசுவாசமும், நம்முடைய தலையின் மயிர்களிலும் அதிகமாய்ச் செய்கிற எண்ணிறந்த பாவங்களும் இடையறாத் துயரத்தைத் தருகின்றன. நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற வெறுமையும், பயனின்மையும், நம்மைத் துக்கித்து அழப்பண்ணுகின்றன. கிறிஸ்துவை விட்டுச் சுற்றித்திரிகிற நம்முடைய மனப்போக்கு, அவரோடு உறவு பாராட்டும் நிலையிலுள்ள நம்முடைய குறைபாடு, அவர் பாலுள்ள நம்முடைய அன்பின் ஆழமில்லாமையாகியவை நம்முடைய வீணைகளையும் இன்னிசைக் கருவிகளையும் பயன்படுத்தாமல் அலரிச்செடிகளின் மேல் வைத்துவிடுமளவுக்கு நம்மை நடத்துகின்றன.
இவைகளையெல்லாம் கிறிஸ்தவ உள்ளங்களை அலைக்கழிக்கிற துயரத்திற்கேதுவாகப் பல்வேறு காரியங்கள் உள்ளன. தேவ பக்தியின் வேடத்தைத் தரித்துக்கொண்டு அதன் பெலனை மறுதலிக்கிற மார்க்கம், எண்ணிறந்த பிரசங்க பீடங்களில் பொய்யான உபதேசங்களைப் போதித்து அதன் வாயிலாகத் தேவனுடைய சத்தியமானது பயங்கரமாய்க் கனவீனப்படுத்தப்படுதல், கர்த்தருடைய பிள்ளைகளிடையே நிலவுகிற பிரிவினைகள், சகோதரர்களிடையேயுள்ள பூசல்கள் முதலியன கிறிஸ்தவ உள்ளங்களை அலைக்கழிக்கிற துயரங்களாகும். இவைகள் யாவும் நம்முடைய இருதயங்களில் இடையறாத் துக்கத்ததையும் வேதனையையும் அளக்கின்றன. பொல்லாப்பு நிறைந்த பயங்கரமான உலகநிலை, கிறிஸ்துவை அசட்டைபண்ணுதல், மனுமக்களின் சொல்லிமுடியாத இன்னல்கள் முதலியன நமக்குள்ளே பெருமூச்சையுண்டாக்குகின்றுன. தேவனோடு ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு அதிகமாய் நெருங்கி வாழுகின்றானோ, அவரைக் கனவீனம்பண்ணுகிற மக்களை; காணும்போது அவ்வளவு அதிகமாய் அவன் துயரமடைகிறான். உண்மையான தேவப்பிள்ளைகளின் பொதுவான அனுபவம் இதுவே. (சங்.119:53, எரே.13:17, 14:17, எசேக்.9:4).
‘அவர்கள் ஆறுதலடைவார்கள்” இந்தச் சொற்றொடரின் வாயிலாக நமது மனட்சாட்சியைப் பாரப்படுத்துகிற குற்றமானது முதலாவதாக அகற்றப்படுவதைக் கிறிஸ்துவானவர் குறிப்பிடுகிறார். இதனைப் பரிசுத்த ஆவியானவர்தாமே தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றுகிறார். அவர் எவனோடு இடைப்படுகிறாரோ அவனுக்கு ஓர் இரட்சகரின் அவசரத் தேவையை உணர்த்தி அதன் வாயிலாக இதனை நிறைவேற்றுகிறார். கிறிஸ்து இயேசுவின் பாவப் பரிகாரமாகிய இரத்தத்தின் புண்ணியத்தினால் உண்டாகிற இலவசமும் நிறைவுடையதுமான பாவமன்னிப்பின் உணர்வே இதன் முடிவான பலனாகும். இத்தெய்வீக ஆறுதலானது ‘எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானமாயிருக்கிறது” (பிலி.4:7). இவ்வாறு பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்வாறு பிரியமானவர்க்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட (எபேசி.1:5) நிச்சயமுள்ளவர்களுடைய இருதயங்களை இத் தேவ சமாதானமானது நிரப்புகிறது. தேவன் முதலில் காயப்படுத்திப் பின்னர் புண்ணை ஆற்றுகிறார். முதற்கண்தாழ்த்தி, பின்னரே அவர் உயர்த்துகிறார். முதலாவது தேவனுடைய நீதியும் பரிசுத்தமும் வெளிப்படுத்தப்படும். பிறகுதான் அவருடைய கிருபையும் இரக்கமும் அறிவிக்கப்படும்.
‘அவர்கள் ஆறுதலடைவார்கள்” என்னும் வாய்மொழியானது கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவிக்குமாறுள்ள ஒரு நிரந்தரமான நிறைவேறுதலுமாகும். ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய மன்னிக்கப்படாத தவறுகளைக் குறித்துத் துக்கித்து, தேவனிடம் அறிக்கைபண்ணும்போது, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தமானது எல்லாப் பாவங்களையும் நீக்கி அவனைச் சுத்திகரிக்கிறது (1.யோ.1:7) என்னும் நிச்சயத்தினால், அவன் ஆறுதலடைகிறான். எப்பக்கதிலும் தேவன் கனவீனம் பண்ணப்படும்போது அவன் துக்கத்தோடு பெருமூச்சுவிடுவானாயினும், சாத்தானானவன் சீக்கிரத்தில் நரகத்தில் என்றென்றுமாய்த் தள்ளப்படுவதோடு, நீதி வாசமாயிருக்கிற புதிய வானிலும் புதிய பூமியிலும் (2.பேதுரு 3:13) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களுடன் ஆளுகைசெய்கிற நாள் வேகமாய் நெருங்கி வந்துகொண்டிருப்பதனைக் குறித்துள்ள அறிவினால் அவன் ஆறுதல் அடைகிறான். கர்த்தடைய சிட்சிக்கும் கரமானது அவன் மீது அடிக்கடி வைக்கப்படினும், அந்தச் சிட்டையானது தற்காலத்தில் மகிழ்ச்சியின்றித் துக்கமாய்க் காணப்படினும் (எபி.12:11) மகிவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது (2.கொரி.4:17) என்று அறிந்துள்ள அவனுடைய அறிவினால் ஆறுதலடைகிறான்.
தேவனோடு உறவாடுகிற விசுவாசியானவன் அப்போஸ்தலனாகிய பவுலைப்போல், துக்கப்படுகிறவன் என்னப்பட்டாலும், எப்பொழுதும் மகிழ்ச்சியுடனிருக்கிறான் (2.கொரி.6:10) மாராவின் கசப்பான தண்ணீரை அவன் அடிக்கடி பருக நேரிடினும், அவனுடைய கசப்பினை மதுரமாக்கும் மரத்தை அந்த நீர்நிலையின் அருகில் தேவன் நாட்டியுள்ளார். ஆம் துயரப்படுகிற கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவராகிய தெய்வீகமான தேற்றரவாளனால் இப்பொழுதும் ஆறுதலடைகிறார்கள். தேவ ஊழியர்களுடைய ஊழியத்தினாலும் தங்களுடனுள்ள உடன் கிறிஸ்தவ சகோதரர்களின் ஆறுதல் மொழியினாலும் அவர்கள் ஆறுதலடைகிறார்கள். இவைகளில்லா, நிலையிலும் தேவனுடைய ஆவியானவர் அவர்களுடைய உள்ளக் களஞ்சியத்தில் சேகரித்து வைத்துள்ள விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை அவர்களுடைய நினைவிற்கொண்டுவருவார். அவைகள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.
‘அவர்கள் ஆறுதலடைவார்கள்” நேர்த்தியான நல்ல திராட்ச ரசமானது இறுதியில் பரிமாறப்படுதற்காகத் தனியே சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. ‘சாயங்காலத்தில் அழுகை தங்கும். விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5). கர்த்தருடைய சமுகமானது காணப்படாத நீண்ட இராக்காலங்களில், துக்கம் நிறைந்தவராயிருந்த கிறிஸ்து இயேசுவுடன் ஐக்கியம் பாராட்டுமாறு விசுவாசிகள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு, அவருடனேகூட பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:17) என்று வேதவாக்கியம் உரைக்கிறது. மேகமந்தாரமில்லாத காலைவேளை வரும் போது, நமக்கு உண்டாகிற ஆறுதலும் மகிழ்ச்சியும் எவ்வளவு! அப்பொழுது நம்முடைய சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம் (ஏசாயா 35:10). அப்பொழுது வெளிப்படுத்தல் 21:3.4 வசனங்களிலுள்ள பெருஞ் சத்தத்தின் வார்த்தைகள் நிறைவேறக் காண்போம்.
‘இதோ, மனிதர்களிடத்தில் தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனமாயிருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். இனி மரணமுமில்லை. முந்தினவைகள் ஓழிந்துபோயின.











