- நாலாம் பேறு
‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்” மத். 5:6.
தேவனுடைய ஆவியானவரால் விழிப்புணர்வடைந்த ஒருவனுடைய உள்ளத்தில் நடைபெறுகிற செயல்களை முதல் மூன்று அருட்பேறுகளிலும் காணுமாறு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். முதலாவது, என்னிடத்தில் நேரிடுவது ஒன்றுமில்லாமை, வெறுமையாகியவைகளினால் உண்டாகும் சிறுமைப்பாட்டுணர்வாகும். இரண்டாவதாக, என்னை நானே நியாயந்தீர்த்தலும், குற்றங்காணுதலும், காணமற்போன இழப்பு நிலையாகியவைகளைக் கண்டு துயருறுதலுமாகும். மூன்றாவதாக, என்னை நானே நீதிமான் என்கிற நாட்டத்தை ஒழித்துவிட்டு, என்னுடைய தனிப்பட்ட புண்ணியங்களைத் துறப்பதும், தேவ சமுகத்தில் புழுதியிலும் சாம்பலிலும் உட்காருவதுமாகிய செயல்களாகும். இங்கேதான் நாலாம் அருட்பேற்றிலுள்ளபடி என்னைவிட்டு என்னுடைய அகக்கண்கள், ஒரு சிறப்பான காரணத்தை முன்னிட்டு, தேவனிடமாகத் திரும்புகின்றன. என்னிடத்தில் இல்லாததும், ஆயினும் எனக்கு அவசரத் தேவையுமாயிருக்கிற தேவ நீதியைக்குறித்து ஒரு தேட்டம் உண்டாகிறது.
இப்பாடத்தின் மெய்யான பொருளைக் காணவேண்டுமாயின், பழைய ஏற்பாட்டிலுள்ள வேத வாக்கியங்களுக்கு நாம் செல்லவேண்டும். அதுவே சாலச் சிறந்த வழி. பின்னர் புதிய ஏற்பாட்டிலுள்ள நிருபங்கள் அளிக்கிற பேரொளியில் தேவநீதியின் பிரகாசத்தைக் காணவேண்டும்.’வானங்களே, உயர இருந்து சொரியுங்கள். ஆகாய மண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது. பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத் தந்து, நீதியுங்கூட விளைவதாக கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்” (ஏசாயா 45:8). இவ்வேத வாக்கியத்தின் முதற்பாகமானது இப்பூமிக்கு இறங்;கி வந்த கிறிஸ்துவின் வருகையை நமக்கு ஓர் உருவகமாக அறிவிக்கிறது. ‘ முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப் பண்ணுகிறேன். அது தூரமாயிருப்பதில்லை. என் இரட்சிப்பு தாமதிப்பதில்லை. நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்” (ஏசாயா 46:12-13). ‘என் நீதி சமீபமாயிருக்கிறது. என் இரட்சிப்பு வெளிப்படும். என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்! தீவுகள் எனக்குக் காத்திருந்து என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” (ஏசாயா 51:5) கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள். என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது” (ஏசாயா 56:1). ‘கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்கிறேன். என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது. அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசாயா 61:10). தேவனுடைய நீதியும் அவருடைய இரட்சிப்புமாகி இரண்டுசொற்களும் ஒரு பொருளையே உணர்த்துகிறதென்பதனை இவ்வேத வாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மேற்காணும் வேதவாக்கியங்கள் ரோமருக்கு எழுதின பவுலின் நிருபத்தில் விரித்துரைக்கப்பட்டுகின்றன. அங்கே சுவிசேஷமானது அவைகளினால் முழு விளக்கம் பெறுகிறது. ‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனே அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” என்று பவுல் ரோமர் 1:16-17 வசனங்களில் சொல்லுகிறார். அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவருக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும். வித்தியாசமேயில்லை. எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருயையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” என்று நாம் ரோமர் 3:22-24 வசனங்களில் வாசிக்கிறோம். ‘அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் ” என்று ரோமர் 5:19 ஆம் வசனத்தில் இந்நலமிக்க உறுதிமொழியானது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமர் 10:4 வசனத்தில், ‘ விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” என்றும் நாம் கற்றுக்கொள்கிறோம்.
‘நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” ரோமர் 3:10. ஆகையால், பாவியான மனிதன் நீதியற்ற நிலையில் கைவிடப்பட்டவனாயிருக்கிறான். ஆகவே தேவன் தம்முடைய பிள்ளைகளெல்லாருக்காகவும் தனித்தனியே ஒவ்வொருவருக்காகவும் கிறிஸ்துவுக்குள் ஒரு பரிபூரணமான நீதியை உண்டுபண்ணியிருக்கிறார். தமக்கு எதிரிடையாகவுள்ள நியாயப்பிரமாணத்தின் எல்லாக் கோரிக்கைகளையும் சந்திக்குமாறு இந்த நீதியானது நம்முடைய பதிலாளும் பிணையாளியுமானவரால் நிறைவேற்றப்பட்டது. இந்த நீதியானது ஒரு விசுவாசிக்கிற பாவிக்கு உரிமையாக்கி அவனுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். எவ்வாறு தேவனுடைய பிள்ளைகளின் எல்லாப் பாவங்களும் மாற்றப்பட்டுக் கிறிஸ்துவின்மேல் சுமத்தப்பட்டதோ, அவ்வாறே கிறிஸ்துவின் நீதியும் தேவனுடைய பிளளைகளுக்குச் சொந்தமாயிற்று (2.கொரி.5:21). இந்தப் பரிபூரணமான நீதியைக்குறித்துள்ள உயிர் நிலையானதும் நலமிக்கதுமான இப்பாடப் பொருள்பற்றிய வேதாகமப் போதனையானது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பொழிப்புரையேயாகும்.
‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” கடுமையாய் உணருமாறுள்ள ஆத்துமாவின் படுமுனைப்பான விருப்பத்தைப் பசியும் தாகமும் வெளிப்படுத்துகின்றன. முதலாவது, தேவனுடைய தூய்மையான கோரிக்கைகளைப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய அகக் கண்களின் முன்னால் கொண்டுவருகிறார். அவர் தேவனுடைய முழுநிறைவான குறையளவை நமக்கு வெளிப்படுத்துகிறார். அக்குறியளவை அவர் ஒருபோதும் தளர்த்த முடியாது. ‘ வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.5:20) என்று நம்முடைய நீதியின் குறியளவைக்குறித்து அவர் நினைப்பூட்டுகிறார். இரண்டாவது, படுமோசமான தன்னுடைய வறுமையுடன், தேவனுடைய இயலாமையையும் உணர்கிற நிலையில் நடுங்கும் ஓர் ஆத்துமா தன்னுடைய உதவியற்ற நிலையைக் காண்கிறது. வேதனை நிறைந்த இக்கண்டுபிடிப்பு அவனுக்குள் துக்கத்தையும் பெருமூச்சையும் உண்டாக்குகிறது. நீங்கள் இவ்வாறு துக்கித்துப் பெருமூச்சுவிட்டதுண்டோ? மூன்றாவது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய உள்ளத்தில் அப்பொழுது கொடிய பசியையும் தாகத்தையும் உண்டாக்குகிறார். உணர்வடைந்த பாவியானவன் தனக்குப் புறம்பாக ஆறுதலைத் தேடிக் கண்டடையுமாறு அப்பசியும் தாகமும் அவனை நெருக்குகிறது. அப்பொழுது, ‘நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தராகிய” (எரேமி.23:6) கிறிஸ்துவின்பால் விசுவாசிக்கிற கண்கள் வழி நடத்தப்படுகின்றன.
முந்தின அருட்பேறுகளைப்போலவே இந்த நாலம் அருட்பேறு இருநிலை அனுபவத்தை விளக்குகிறது. பாவியானவன் விசுவாசத்தினால் கிறிஸ்துவினிடம் திரும்புமுன்னர் உண்டாகிற முதனிலையான பசிதாகத்தை இது குறிப்பிடுகிறது. ஆயினும் இப்பசியும் தாகமுமே இரண்டாம் நிலையாக இரட்சிக்கப்பட்டுள்ள எல்லாப் பாவிகளிடமும் ஓர் இடையறா வாஞ்சையாய் அவர்களுடைய மரண நாள் மட்டும் குடிகொள்ளுகிறதென்பதனையும் குறிப்பிடுகிறது. தேவ கிருபையின் செயல்களாகிய இப்பசியும் தாகமும் நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் மீண்டும் மீண்டும் உணரப்படும். இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படும்படி விரும்பிய ஒருவன் இப்போது அவருக்கு ஒப்பாகவேண்டுமென்னும் வாஞ்சையினால் எண்ணி எண்ணி எங்குகிறான். பரந்த நோக்கத்துடன் காண்போமாயின் இப்பசியும் தாகமும் நாள்தோறும் புதிதாக்கப்படுகிற உள்ளத்தில் தேவன்மேலுள்ள நம்முடைய வாஞ்சையுடன் கூடிய கதறுதலுமாயிருக்கிறது (சங்.42:1). இதுவே தேவனோடு நெருக்கமாகச் சஞ்சரிப்பதற்கும் அவருடைய குமாரனுக்கு ஒப்பான பூரண சாயலையடையும்படி நாடுவதற்கு ஏதுவான ஒரு வாஞ்சையுமாம். நம்மைப் பலப்படுத்தி, திடப்படுத்தி, திருப்தியளிக்கிற தேவனுடைய ஆசீர்வாதங்களுக்குக் காரணமாகவுள்ள நம்முடைய புதிதான சுபாவம் அல்லது தன்மை இயல்பின் பேரார்வத்தினையே இது காண்பிக்கிறது.
நாலாம் அருட்பேற்றிற்குரிய வேதவாக்கியமானது மாம்ச சிந்தையுள்ள மக்கள் கண்டுகொள்ள முடியாதபடி ஒரு முரண்பாடு மெய்ந்நிலையாயிருக்கிறது என்பது தெளிவு. ஜீவ அப்பமாயிருக்கிறவரும், சகல பரிபூரணமும் தமக்குள்ளே வாசமாயிருக்கப் பெற்றவருமாகிய கிறிஸ்து இயேசுவோடு உயிர்நிலையான ஐக்கியத்தினால் இணைக்கப்பட்டோர் மேலும் பசியும் தாகமுமாயிருக்கும் நிலையில் காணக்கூடுமோ? ஆம், நாளும் பதிதாக்கப்படுகிற இருதயத்தின் அனுபவம் அதுவே. இந்த வசனத்திலுள்ள ‘பசிதாகமுள்ளவர்கள்” என்னும் வினையாலணையும் பெயரை நோக்குக. நிகழ்காலத்தைச் சுட்டிக்காண்பிக்கிற வினைமுற்றே பெயரின் தன்மையடைந்து வினையாலணையும் பெயரால் விளங்குகிறது. அருமையான நண்பரே, பசியையும் தாகத்தையும் பொருத்தமட்டில் நீங்கள் நிகழ்கால அனுபவமுடையவர்களாயிருக்கிறீர்களா? அல்லது அடைந்தாயிற்று என்று மனநிறைவுடன் இருக்கிறீர்களா? நீதியினிமித்தமாய் உண்டாகிற பசியும் தாகமும் தேவனுடைய மெய்யான பரிசுத்தவான்களுக்கத் தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்கிற ஓர் அனுபவமாயிருக்கிறது (பிலி. 3:8-14).
‘ அவர்கள் திருப்தியடைவார்கள்” நம்முடைய வேதபாடத்துக்குரிய இவ்வேத வாக்கியத்தின் முதற்பகுதியைப்போன்றே இதுவும் இருநிலை நிறைவேற்றமாயிருக்கிறது. தொடக்கமும் தொடர்ந்து நடைபெறுவதுமாகிய ஓர் அனுபவமாகும். ஓர் ஆத்துமாவில் தேவன் பசியையும் தாகத்தையும் உண்டாக்குவாராயின், அவரே அப்பசியையும் தாகத்தையும், ஆற்றி அவனுக்குச் சாந்தியளிக்கும்படியாகவே அவற்றை மிகவும் கடுமையாக்குகிறார். தனக்கு வேண்டுவதெல்லாம் கிறிஸ்துவே என்று ஓர் ஏழைப்பாவியானவன் உணர்த்தப்படும்போது, கிறிஸ்துவின்பால் இழுத்துக்கொள்ளப்பட்டு அவன் நடத்தப்படவேண்டுமென்பதே தேவனுடைய நோக்கமும் முடிவுமாகும். அதுவே பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக அவனுடைய நீதியாயிருக்கிறது. அவன்தானே புதிதாய்க் கண்டுகொண்ட தன் நீதியாக, கிறிஸ்துவைக்குறித்து அறிக்கைபண்ணும்போது பெருமகிழ்ச்சியடைகிறான் (1.கொரி.1:31) அத்தகைய ஒருவனைத்தான் தேவன் பரிசுத்தவான் என்று அழைக்கிறார் (1.கொரி.1:2, 2.கொரி.1:1, எபேசி.1:1, பிலி.1:1) அவனே மதுபானத்தினால் அல்லாமல், பரிசுத்த ஆவியினால் நிறைந்து (எபேசி.5:18) எப்பொழுதும் ஆவியின் நிறைவுக்குள் காணப்படவேண்டும். எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால் நிறைந்து (பிலி.4:7) அவன் வாழ்க்கை நடத்தவேண்டும்.
இவ்வாறு கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கை வைத்து வாழும் மக்களாகிய நாம் எத்துணையும் துயரத்தின் கலப்படமில்லாத பேரின்பமாகிய தெய்வீக அசீர்வாதத்தினால் ஒரு நாள் நிரப்பப்படுவோம். அன்பிற்கும் கீழ்ப்படிதலுக்கும் உரிய எல்லாச் செயல்களையும் நமக்குள் நடப்பிக்கிற தேவனை (பிலி.2:12-13) நன்றியோடு போற்றித் துதிக்குமாறு நாம் துதிகளாலும் ஸ்தோத்திரங்களாலும் நிரப்பப்படுவோம். நம்மிலும் நமக்காகவும் தேவன் நடப்பிக்கிற அவருடைய இரட்சிப்பின் செயலின் விளைவாகிய வெளியரங்கமான கனிகள் நன்றியுடன் கூடிய நம்முடைய துதிகளும் ஸ்தோத்திரங்களுமேயாகும். இந்த உலகத்தில், ‘அவர் பசியுள்ளவனை நன்மைகளினால் நிரப்புகிறார்” (லூக்கா 1:53). கர்த்தரைத் தேடுகிற மக்களுக்கு (சங்.34:10) அருளப்படுகிற நன்மைகளை இவ்வுலகமானது கொடுக்கவும் முடியாது. அவைகளைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. தம்முடைய மேய்ச்சலின் ஆடுகளாகிய நமக்குத் தேவன் நன்மையும் கிருபையும் அளிக்கிறார். நம்முடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங். 23:5-6). ஆயினும் இப்பொழுதும் நாம் அனுபவிக்கிற தேவ நன்மைகள் யாவும், ‘தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளில்” (2.கொரி.2:9). வெறும் முன்னுகர்வு அல்லது ருசி பார்த்தல்தான். நித்தியராஜ்யத்தில் நாம் அவருக்கு ஒப்பாயிருப்போமாகையால் (1.யோவான் 3:2) பூரண பரிசுத்தத்தினால் நிரப்பப்பட்டு நாம் அங்கே அவருடன் வாழுவோம். அப்பொழுது நம்முடைய பாவத்தை என்றென்றமாய் ஒழித்துவிடுவோம். அங்குப் பசியுமில்லை. தாகமுமில்லை.












