- ஆறாம் பேறு ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” மத்.5:8 கர்த்தருடைய பகைவர்கள் தகாதவிதமாய்ப் பொருள் படுத்துகிற அருட்பேறுகளுள் இது மற்றொன்று. அவர்களுடை முன்னோடிகளாகிய பரிசேயர்களைப் போலவே தாங்களே சத்தியத்திற்காகப் போராடுகிறவர்களென்று அவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். மேலும் அவர்கள் மெய்யான தேவனுடைய மக்கள் உரிமைபாராட்டத்துணியும் பரிசுத்த வாழ்க்கையினும், தங்களுடைய வாழ்க்கை அதிக மேன்மையானதாகப் பெருமையடித்துக்கொள்கின்றனர். இன்னும் மறுபிறப்பின் அனுபவமில்லாத பழைய மனிதனுடைய முழுமையான பரிசுத்தத்தை உரிமைபாராட்டுகிற பேதைகளும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்களுமாகிய ஆத்துமாக்கள் இக்கிறிஸ்தவ யுகத்தில் இருந்துகொண்டு தானிருக்கிறார்கள். மற்றவர்களோ தங்களுடைய மாம்ச சுபாவமானது முற்றிலுமாக வேரறுக்கப்படுமளவுக்குத் தேவன்தாமே தங்களைப் புதிப்பித்துவிட்டாரென்றும், ஆகையால் பாவங்களைச் செய்ய முடியாது என்பதுமட்டுமன்றி, பாவ இச்சைகளும் சிந்தனைகளும் தங்களுக்கில்லையென்றும் வற்புறுத்திக் கூறுகின்றனர். ஆயினும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு அப்போஸ்தலனாகிய யோவான், ‘நமக்குப் பாவமில்லையென்போனால், நம்மை நாமே வாஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1.யோ.1:8) என்ற அறிவிக்கிறார். அவர்களோ தங்களுடைய வீணான வஞ்சகத்திற்குச் சாதகமாகப் பாவப்பரிகாரத்திற்கேதுவாகிய நீதியின் பிரமாணத்துக்குரிய நன்மைகளை விளக்குகிற வேதவாக்கியங்களை அனுபவ ஆதாரமாக சுட்டிக்காண்பிக்கின்றனர். ‘ அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்” (1.யோவான் 1:7) என்னும் வாக்கியமானது, கெடுக்கிற பாவ அசுத்தங்களின் கறைகளாகிய எல்லாவற்றினின்னும் நம்முடைய இருதயங்கள் கழுவிச் சுத்திகரிக்கப்படுகின்றன என்னும் பொருளில் வராமல், கிறிஸ்துவின் தியாகப் பலியானது நீதியின் பிரமாணமுறையின்படி நம்முடைய பாவங்களை நீக்கி சுத்திகரித்துக்கொள்ளுவதற்கு உதவியாயிருக்கிறதென்றுதான் போதிக்கிறது. கிறிஸ்துவுக்குள் புதிய படைப்பாக இருக்கிற மனிதனை விளக்குகிற அப்போஸ்தலனாகிய பவுல், ‘பழையவைகள் ஒழிந்துபோயின எல்லாம் புதிதாயின” (1.கொரி. 5:17) என்று கூறும்;போது, கிறிஸ்தவனுடைய இருதயத்தின் புதியதான போக்கை அல்ல மனப்பான்மையைக் குறித்தே பேசுகிறார். மறுபிறப்பிற்கேதுவாகப் பரிசுத்தஆவியானவர் செயலாற்றுமுன்னருள்ள அவனுடைய உள்ளான மனப்பான்மைக்கு, இப்புதிய மனப்பான்மையோ முற்றிலும் மாறானது. எழுப்புதல் அளிக்கிற தேவனுடைய பரிசுத்தவான்களின் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இருதயத்தின் பரிசுத்தமான வாழ்க்கையின் பாவமில்லாமையைப் பொருள்படுத்துமாறு வரவில்லை என்பது தெளிவாகும். நோவா குடித்து வெறித்திருந்தான். ஆபிரகாம் மெய்யை மறைத்துப் பேசினான். மோசே தேவனுக்குக் கீழ்ப்படியாமைக் காட்டினான். யோபு தன் பிறந்த நாளைச் சபித்தான். யேசபேலுக்குப் பயந்து எலியா தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ளும்புடி ஓடினான். பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தான். இவைகளெல்லாம் கிறிஸ்துவ மார்க்கம் உண்டாவதற்கு முன்னர் நடைபெற்றவையல்லவா, என்று ஒருவர் ஒருவேளை கேட்கலாம். ஆம் உண்மைதான். அதன் பின்னரும் அதேவண்ணமாய்த்தான் நடைபெறுகின்றன.
அப்போஸ்தலானாகிய பவுலின் தேர்ச்சிபேறுகளினால் மேலான தேர்ச்சிபேறுகளுடைய ஒரு கிறிஸ்தவனைக் கண்டுபிடிக்கும்படி நாம் எங்கே போகலாம்? அவருடைய அனுபவம் தான் என்ன? ரோமர் 7:21-25 நன்மை செய்ய விரும்பின பவுலிடம் தீமை இருந்தது. அவருடைய மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற பேறொரு பிரமாணத்தைக் தம்முடைய உடலின் உறுப்புக்களில் அவர் கண்டார். அவர் தாமே தம்முடைய மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும் மாம்சத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் ஊழியஞ் செய்தார். நம்முடைய இருதயங்களைத் தொடர்ந்து அலைக்கழிக்கிற எஞ்சியுள்ள அசுத்தத்தைப்பற்றியுள்ள கண்டுபிடிப்பும் விழிப்புணர்வுமே நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தைக்குறித்துள்ள முடிவான சாட்சியங்களின் ஒன்றாயிருக்கிறது. இதுதான் சத்தியம், ஆயினும் நெருங்கிவந்து நம்முடைய பாவத்துக்குரிய வேதவாக்கியத்தை நோக்குவோமாக.
‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” இம்மலைப் பிரசங்கத்தின் எந்தப் பகுதிக்காவது பொருள்விளக்கம் தேடும்பொழுது, முதலாவது நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டியது என்னவென்றால், இப் பிரசங்கத்தை முதன்முதல் கேட்டவர்கள் யூதமார்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதுதான். ஆவியானவரால் மிகவும் ஆழமாய்ப் போதிக்கப்பட்டவராகிய ஒருவர் இவ்வாறு சொல்லுகிறார்.
‘நம்முடைய கர்த்தர் நம் முன்னர் பயன்படுத்துகிற சொற்றொகுதியில், யூத மார்க்கத்தைச் சார்ந்த மக்களுக்குரிய புறத் தூய்மையின் நல்லொழுக்கத்தையும், அந்த நல்லொழுக்கத்துடன் தொடர்புடைய தேவனோடுள்ள அவர்களுடைய உறவின் சிறப்புரிமையையும், வெளிப்படையாகச் சொல்லாமல், குறிப்பிடுகிறரென்பதினை நான் நினைக்காமலிருக்கு முடியவில்லை. அவர்கள் விக்கிரகங்களினால் தீட்டுப்பட்டுள்ள மக்களினங்களிலிருந்து பிரிந்து வாழும் ஒரு தனிப்பட்ட இனமாயிருந்தார்கள், யேகோவாகிய தேவனுக்காகப் பரிசுத்தமாய் வாழும்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள். ஜீவனுள்ள ஒரேமெய்த் தேவனாகிய அவர்களுடை தேவனை அவருடைய ஆராதனை ஒழுங்குமுறையின்படி, ஒரு பரிசுத்த ஜனமாக ஆராதிக்கும்புடி அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்த நல்லொழுக்கத்தைத் தங்களுக்கு உடைமையாக்கிக் கொள்வதிலும், இச்சிறப்புரிமையை அனுபவிப்பதிலும் யூதர்கள் பெருமிதங்கொண்டார்கள்.
‘மேசியாவின் ஆட்சியின்கீழ் வாழும் குடிமக்களாக வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கோ இதனிலும் உயர்வான நல்லொழுக்கமும் உயர்வான சிறப்புரிமையும் இருந்தன. புறத்தூய்மை மட்டுமன்றி அகத்தூய்மையாகிய இருதயத்தின் பரிசுத்தமும் அவர்களுக்கு வேண்டும். தேவனுடை மகிமையானது வாசம்பண்ணுகிற பரிசுத்தமான ஸ்தலத்தைச் சேரும்படி அனுமதிக்கப்படுவதுமன்றி, அவர்கள் தேவனை தரிசிக்கவேண்டும். அவரோடு மிகவும் நெருங்கி உறவு பாராட்டவேண்டும். இவ்வாறு யூத மார்க்கத்திலுள்ள மக்களுடைய புறம்பான ஒழுக்கம் சிறப்புரிமையாகியவைகளுக்கு மறுதலையான மேசியாவின் அருளாட்சியின்கீழ் வாழும் குடிமக்களுடைய ஆவிக்குரிய ஒழுக்கம், சிறப்புரிமையாகியவைகளின் ஒரு விளக்கமாக நோக்குமிடத்து, நம்முன்னர் வைக்கப்பட்டுள்ள வேதாகமப்பகுதி மிகமிக இன்றியமையாததும், பேரார்வத்தை உண்டாக்குவதுமாகிய சத்தியத்தினால் நிறைந்து காட்சியளிக்கிறது”
‘இருதயத்திலே சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” கிறிஸ்துவின் வாய்மொழியாகிய இச்சொற்றொடர் மறுபடியும் பிறக்கும்பொழுது பெற்றுக்கொள்ளுப்படுகிற புதிய இருதயத்தையோ, அன்றி நம்முடைய ஆத்துமாவின் நடைபெறுகிற தேவ கிருபையின் செயலின் விளைவாகிய நல்லொழுக்கத்தின் அறமுறையான மறுரூபமாகுதலையோ எதைக் குறிப்பிடுகிறதென்பதுபற்றிக் கருத்துவேற்றுமையுள்ளது. அநேகமாகச் சத்தியத்தின் இரண்டு பகுதிகளும் இச்சுத்திகரிப்பில் அடங்கும். நம்முடைய இரட்சகர் பகர்ந்துள்ள அவருடைய ஆசீர்வாதத்துக்கேதுவான இருதயத்தின் சுத்தமானது, உன்னதத்தினின்று பிறக்கிற புதிய பிறப்புடன் நிகழ்வதும், தொடர்ந்து ஆத்துமாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதுமாகிய இரு நிலைகளிலுமுள்ள ஓர் உள்ளான சுத்திகரிப்பாயிருக்கிறது. மாம்ச சுபாவமுள்ள மனிதனில் இத்தகைய உள்ளான சுத்திகரிப்பு இல்லாதபடியால், கிறிஸ்துவினால் அறிவிக்கப்படுகிற இருதயத்தின் சுத்தமானது தேவபக்தியுள்ள மனிதனுக்கே உரியது. அது அவனுடைய மறுபிறப்பின்போது நடைபெற்ற பரிசுத்த ஆவியானவருடைய கிருபையுடன் தொடங்குகிறது.
‘இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங்.51:6) என்று சொல்லியுள்ளார் சங்கீதக்காரன். தேவன் நம்மில் வற்புறுத்திக் கேட்கிற இந்த ஆவிக்குரிய சுத்தமானது, கிறிஸ்தவ உலகத்தில் இந்நாளில் நடைபெறுகிற பெருமுயற்சியின் விளைவாகிய புறம்பான புதுப்பித்தல்களையும் சீர்திருத்தங்களையும் ஊடுருவி அவைகளுக்கப்பாலும் செல்லுகிறது! இன்று நம்மைச்சுற்றிலும் காண்பவையெல்லூம் கிரியைகளின் வாயிலாக இரட்சிப்பைத் தேடுகிறவைகளின் கைங்கரியமாயிருக்கிறது. அல்லது மரபு வழுவாத சமயச்சார்படைய கோட்பாடுகளைக் கைக்கொண்டு மனநிறைவடைகிற மூளையறிவுக்குரிய தேவபக்தியாயிருக்கிறது. ஆயினும் தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார் (1.சாமு.16:7): அதாவது அவர் உள்ளான மனிதனையும் அவனுடைய அறிவு, உணர்வு, பற்றார்வம், சித்தம் உட்பட எல்லாவறறையும் கூர்ந்து நோக்குகிறார். இவ்வாறு தேவன் அகத்தைக் கூர்ந்து நோக்குகிறபடியால், அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கத்தான் வேண்டும் (எசேக்.36:26). இத்தகைய புதிய இருதயத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் மெய்யாகவே பாக்கியவான்கள். கொடைவள்ளலாகிய தேவனுக்குப் பிரியமானது சுத்தமான இருதயமே !!
மேலே அறிவிக்கப்பட்டுள்ளதுபோலவே இந்த ஆறாம் அருட்பேறானது மறுபிறப்பின்போது நாம் பெற்றுக்கொண்ட புதிய இருதயத்தையும், அதனைத் தொடர்ந்து நம்முடைய ஆத்துமாவிலே தேவனுடைய கிருபையின் செயலினாலுண்டாகும் நல்லொழுக்கத்தின் விளைவாகிய மறுரூபமாகுதலையும் கருத்துப்பொருள்களாகக் கொண்டுள்ளதென்று நாம் நம்புகிறோம். முதலாவது நடைபெறுவது மறுஜென்ம முழுக்காகும் (தீத்து 3:5) இம்முழுக்கினால் அகத்தின் பற்றார்வங்கள் சுத்திகரிக்கப்படுகின்றனவென்று அறிகிறோம். அதன் விளைவாக அவைகள் கீழானவைகளையல்ல, மேலானவைகளையே நாடுகின்றன. மறுபிறப்பினையடுத்து விசுவாசத்தினால் எல்லா விசுவாசிகளுடைய இருதயங்களிலும் நடைபெறுகிற சுத்திகரிப்பினைத் (அப்.15:9) தொடர்ந்து வருகிற மாறுதலுடன் இது மிகவும் நெருக்கமாய் இணைக்கப்படுகிறது. இதனோடு உடன் நிகழ்வதே மனச்சாட்சியின் சுத்திகரிப்பு (எபி.10:22). அறிந்துள்ள பழி பாவங்களின் சுமை நீக்கத்தையே இந்த மனச்சாட்சியின் சுத்திகரிப்பானது குறிப்பிடுகிறது. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோம 5:1).
கிறிஸ்துவினால் பாராட்டப்படுகிற இருதயத்தின் சுத்தமானது மேலும் கடந்துசெல்லுகிறது. பரிசுத்தம் என்றால் என்ன? தூய்மைக் கேடுகள், இவ்வுலக நேசம் ஆகியவைகளினின்று உண்டாகும் விடுதலையே பரிசுத்தமாகும். இது நேர்மையும் சுத்தமும் உத்தம இருதயமுமாம். நாம் அதற்கு தேவபக்தியின் எளிமை நலம் என்று விளக்கம் தரலாம். அது வஞ்சனை, நுட்பமான சதியாலோசனையாகியவைகளுக்கு எதிரிடையானது. மெய்யான கிறிஸ்தவ மார்க்கம் எல்லாத் துர்க்குணத்தையும், கபடத்தையும், வஞ்சகத்தையும் ஓதுக்கி ஒழித்துவிடுகிறது.
வாயின் சொற்களிலும் புறம்பான நடை உடை பாவனைகளிலும் தூய்மையாயிருப்பது மட்டும் போதாது. தேவனுடைய பிள்ளையை மெய்யாகவே விம்பித்துக் காண்பிக்கிற பண்பு நலன் அவனுடைய அகத்தூய்மையேயாகும். ஆதாவது, அவனுடைய விருப்பங்கள், செயல்நோக்கங்கள், உள்நோக்கமாகியவைகளின் தூய்மையாகும். ஆகையால், கிறி;ஸ்தவர்களென்று பெருமை பாராட்டுகிற எல்லாரும் தங்களைத் தாங்களே உய்த்து ஆராய்ந்து அறிந்துகொள்ளுவதற்கேதுவான மிகமிக இன்றியமையாச் சோதனை இதுவே. ‘என்னுடைய பற்றார்வங்கள் உன்னத்திலுள்ள மேலானவைகளை நாடுகின்றனவா? என்னுடைய செயல் நோக்கங்கள் தூய்மையானவைகள்தானா? சபை கூடி வரவில் நான் ஏன் கர்த்தருடைய பிள்ளைகளுடன் சேர்ந்துகொள்கிறேன்? அவர்கள் என்னைக் காணவேண்டுமென்பதற்காகவா? அன்றி, கர்த்தரோடும் அவருடைய பிள்ளைகளோடும் இனிது உறவாடி மகிழும் ஐக்கியத்திற்காகவா? இவ்வாறு நம்மை நாமே ஆராய்ந்து அறிந்துகொள்ளுதல் நன்மை பயக்கும்.
‘அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” இந்த அருட்பேறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் நிறைவேறத்தக்கவைகளாக இருக்கின்றனவென்பதினை நாம் மீண்டும் நினைவுபடுத்துவது நல்லது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆவிக்குரிய காரியங்களைப் பகுத்தறியும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். தங்களுடைய அகக்கண்களினால் தெய்வீகப் பண்புநலன்களை நோக்கும் தெளிந்த பார்வையுடையவர்களாயும், தேவனுடைய தெய்வீக பண்பின் மேன்மையை உள்ளத்தால் உணர்கிறவர்களாயுமிருக்கிறார்கள். கண்ணானது தெளிவாயிருந்தால் உடல் முழுதும் வெளிச்சமாயிருக்கும்.
விசுவாசமானது இருதயத்தைச் சுத்தமாக்குகிறது என்னும் சத்தியத்தில் அவர்கள் தேவனைத் தரிசிக்கிறார்கள். கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளி (2.கொரி.4:6) அதாவது தெய்வீகமான பரிசுத்தமும் தெய்வீகமான அருளுடமையும் கலந்து ஒளிருகிற ஒளியின் வெளிப்பாடு! இதுவே சத்தியமாகும். இருதயத்தில் சுத்தமுள்ள மனிதனோ தெய்வீகமான பண்பு நலன்களைக் காணுமாறுள்ள தெளிந்த பார்வையை உடையவானயிருப்பதுடன், தேவனோடுள்ள நெருக்கமும் இன்பமுமான ஐக்கியத்தில் ஒன்றித் திளைக்கிறான். அவன் தேவனிடம் மிகவும் நெருக்கமாய்க் கொண்டு வரப்படுகிறான். தேவனுடைய மனமே அவனுடைய மனம், தேவனுடைய சித்தமே அவனுடைய சித்தமுமாம். அவனுடைய ஐக்கியம் மெய்யாகவே பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.
இவ்விதமாக, இந்த உலகில்தானே இருதயத்திலே பரிசுத்தமுள்ள மக்கள் தேவனைத் தரிசிக்கிறார்கள். இனிவருங்காலத்திலோ தேவனை அறிகிற அவர்களுடைய அறிவானது மேலும் பரவிப் பெருகுகிறது. தேவனோடுள்ள அவர்களுடைய ஐக்கியம் மேலும் மேலும் நெருக்கமடைகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் சிறப்புரிமைகளோடு ஒப்புநோக்கும்போது, நாம் இப்பொழுது திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறோம் (2.கொரி.3:18). ஆயினும் இதனிலும் மேலான ஓர் ஏற்பாட்டின் சிறப்புரிமைகளோடு ஒப்புநோக்குமிடத்து இப்பொழுது நாம் குறைந்த அறிவுள்ளவர்கள். நம்முடைய அறிவும் தீர்க்கதரிசனமும் குறைவுள்ளது. ஆயினும் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். அப்பொழுது நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். அப்பொழுது நாம் அறியப்பட்டிருகிறபடியே அறிந்து கொள்வோம் (2.கொரி.13:9-12). சங்கீதக்காரனுடைய வாய்மொழியின்படி, நாமோ நீதியில் அவருடைய முகத்தைத் தரிசிப்போம். நாம் விழிக்கும்போது அவருடைய சாயலால் திருப்தியாவோம் (சங்.17:15). அந்நாள் மட்டும் ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்னும் இயேசுவின் திருவாய் மொழியின் முழுமையான பொருளானது அறிந்துகொள்ளப்படமாட்டாது.












