ஒரு நாள் அவன் அழுது கொண்டிருந்தபோது நற்செய்தியாளர் என்ற ஒருவர் அவனருகே வந்தார். ஏனப்பா நீ அழுகிறாய் என்று அன்புடன் கேட்டார்.
ஐயா, நான் ஒருநாள் மரித்துப்போவேன் என்றும் அதன்பின் என் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவேன் என்றும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தண்டனைக்குப் பயப்படுவதால் என்னால் சாவைப்பற்றி நினைக்க முடியவில்லை என்றான் கிறிஸ்தியான் என்ற பெயரையுடைய அவன்.
இந்த உலகத்தில்தான் இவ்வளவு துன்பங்களும் தொல்லைகளும் இருக்கின்றனவே? பிறகு ஏன் நீ சாவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஜயோ, இதோ என் முதகில் இருக்கிறதே என் பாவச்சுமை. நான் இறந்தபிறகு இந்தச் சமை என்னை அழுத்தி நரகத்திற்கே கொண்டுபோய்விடும் என்று நினைக்கிறேன் என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
பிறகு ஏன் இங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
எனக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான்.
நற்செய்தியாளர் அவனிடம் ஒரு காகிதச் சுருளைக் கொடுத்தார். அவன் அதைத் திறந்து பார்த்தான்.
அதில் வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள ஓடிப்போ! என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் நற்செய்தியாளரைப் பார்த்து நான் எங்கே ஓடிப்போக வேண்டும்? என்று கேட்டான்.
நற்ச்செய்தியாளர் தன் கையை நீட்டி வெகு தூரத்தில் சுட்டிக்காட்டி, அதோ வெகு தூரத்தில் ஓரு இடுக்கமான வாசல் தெரிகிறதா? என்று கேட்டார்.
தெரியவில்லையே ஜயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
அப்படியானால் ஒரு பிரகாசமான ஒளியாவது தெரிகிறதா? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஆம் ஜயா, வெகு தூரத்தில் ஓர் ஒளி தெரிகிறது! என்றான் கிறிஸ்தியான்.
நீ அந்த ஒளியை நோக்கி நேராக நடந்துபோ. அருகே நெருங்கும்போது அந்த இடுக்கமான வாசல் தெரியும். அந்த வாசல் கதவைத் தட்டு. அடுத்து நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே சொல்லப்படும் என்று கூறி வழியனுப்பினார் நற்செய்தியாளர்.









