அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற அங்குமிங்கும் புரண்ட போது அவர்கள் உடலெங்கும் சேறு அப்பிக்கொண்டது! கிறிஸ்தியானின் முதுகிலுள்ள சுமையினால் அவன் மெல்ல மெல்ல சகதியினுள் மூழ்கத் துவங்கினான்!
என்ன இது? நாம் ஏன் இவ்வாற சிக்கிக்கொண்டோம்? ஏன்று கோபத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். எனக்குத் தெரியவில்லையே! என்றான் கிறிஸ்தியான் பரிதாபமான குரலில். இது தான் நீ கூறிய மகிழ்ச்சியா? ஆரம்பமே இப்படியிருந்தால் மோட்சத்தை அடைவதற்குள் இன்னும் எவ்வளவு ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ! என்னால் முடியாதப்பா! நீயே போய் எனக்குள்ள மகிழ்ச்சியையும் சேர்த்து அனுபவித்துக் கொள். நான் எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்வேன் என்று கோபத்துடன் கத்திய இளகிய நெஞ்சன் குட்டையிலிருந்து வெளியேறக் கடுமையாக முயன்றான். இறுதியில் தான் விழுந்த பக்கமே கரையேறிவிட்டான்! நகரத்தை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கினான். அதன்பிறகு கிறிஸ்தியான் அவனைப் பார்க்கவேயில்லை! ஆனால் கிறிஸ்தியானோ இடுக்கமான வாசல் இருக்கும் திசைப்பக்கமாக மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றான். முதுகிலுள்ள சுமையின் பாரத்தினால் அவனால் கரையில் ஏற முடியாமல் தவித்தான்!
அப்போது சகாயர் என்ற ஒருவர் அங்கு வருவதை நான் என கனவில் கண்டேன். அவர் கிறிஸ்தியானைக் கண்டவுடன் நின்று, ஏனப்பா, என்ன ஆயிற்று? என்று அன்புடன் கேட்டார். நற்செய்தியாளர் என்ற மனிதர் நான் தண்டனைக்குத் தப்பும்படியாக இடுக்கமான வாசலைச் சென்றடைய வழிகாட்டினார். நான் அந்த வழியே செல்லும்போது தவறி இந்தக் குட்டைக்குள் விழுந்து விட்டேன் என்றான் கிறிஸ்தியான். நீ ஏன் கவனமாகப் போகக்கூடாது? இந்தக்குட்டையின் நடுவேதான் வரிசையாகக் கற்கள் போடப்பட்டுள்ளதே! அதை நீ பார்க்கவில்லையா? அவற்றின் மீது கால் வைத்து இந்தக் குட்டையை மிக எளிதாகக் கடந்திருக்கலாமே என்றார் சகாயர்.
நான் அவசரப்பட்டதால் அந்தக் கற்களைக் கவனிக்கவில்லை, ஐயா என்றான் கிறிஸ்தியான் வருத்தத்துடன்.
சரி சரி, உன் கையைக் கொடு என்று சொன்ன சகாயர் அவன் கையைப் பிடித்திழுத்து கரையில் சேர்த்தார்.
ஐயா, அழிவின் நகரத்திலிருந்து இடுக்கமான வாசல் செல்லும் வழியில் இந்தக் குட்டை இருக்கிறதே. இதனால் பயணம் செய்பவர்களுக்கு ஆபத்து வரக்கூடுமே. ஏன் இதுவரை இதை மூட வழி செய்யவில்லை? ஏன்று அக்கறையுடன் கேட்டான் கிறிஸ்தியான்.
இந்தக் குட்டையை மூடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பது எங்கள் மன்னனின் விருப்பமல்ல. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ பேர் இதைச் சரிசெய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் இதைச் செப்பனிடமுடியவில்லை. ஏனென்றால் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் இரட்சிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ளும்போது அந்த எண்ணங்களே இந்தக் குட்டையை உருவாக்கின்றன. அவநம்பிக்கை எண்ணங்கள் பெருகி வருவதால் இந்தக் குட்டை எப்போதுமே நிரம்பி வழிகிறது. ஆனாலும்கூட விசுவாசத்தோடு இந்தக் குட்டையைக் கடக்க முற்படும்போது, நடுவில் போடப்பட்டுள்ள கற்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் மிக எளிதில் கடந்து செல்லலாம். இடுக்கமான வாசலை நெருங்குவதற்குள் பாதை சரியாகிவடும் என்ற சகாயர் கிறிஸ்தியானை வழியனுப்பி வைத்தார். இதற்குள்ளாக இளகிய நெஞ்சன் தனது கிராமத்தை அடைந்திருப்பதை நான் என் கனவில் கண்டேன். அவனுடைய நண்பர்கள் அவனைத் தேடி வந்தார்கள். சிலர் அவன் புத்தியோடு திரும்பி வந்ததற்காக அவனைப் பாராட்டினார்கள். வேறு சிலரோ அவன் துன்பங்களைக் சகிக்க முடியாமல் திரும்பி வந்ததற்காக அவனைக் கோழை என்று கூறி கேலி செய்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இளகிய நெஞ்சன் பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து கிறிஸ்தியானைக் கேலி செய்யத்தொடங்கினான்!










