இறுதியாக கிறிஸ்தியான் பொருள்கூறுபவரின் வீட்டை அடைந்தான். கதவைத் தட்டினான்.
யார் அது? என்ற குரல் கேட்டது.
நான்தான் கிறிஸ்தியான். தயாளன் என்னை அனுப்பினார் பொருள்கூறுபவர் என்பவரைப் பார்க்க வேண்டும் என்றான் கிறிஸ்தியான்.
கதவு திறந்தது. பொருள்கூறுபவர் அவனை அன்புடன் அழைத்துச் சென்றார்.
கிறிஸ்தியானே வா, உனக்குப் பயனளிக்கக்கூடிய அநேக காரியங்களைக் காட்டுகிறேன் என்று கூறிய பொருள்கூறுபவர் அவனை ஒரு தனி அறைக்குக் கூட்டிச் சென்றார்.
அங்கே ஒரு பெரியவரின் படம் மாட்டப்பட்டிருந்தது. அவரது கண்கள் மோட்சத்தையே நோக்கின. நூல்களுக்கெல்லாம் மேலான நூல் அவர் கையில் இருந்தது. உலகம் அவருக்குப் பின்னாகக் காணப்பட்டது.
இவர்தான் மனிதர்களை மனம் மாறச்செய்து அவர்களுக்குப் பின்னாலுள்ள உலகமும், அவர் தலையிலுள்ள கிரீடமும் எதைக் குறிக்கின்றன தெரியுமா? உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விரும்பாதவர்கள் மோட்சத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம் என்பதே என்று விளக்கினார் பொருள்கூறுபவர்.
அதன்பின் இதுவரை சுத்தம் செய்யப்படாத பெரிய அறை ஒன்றினுள் கிறிஸ்தியானை அழைத்துச் சென்றார் பொருள்கூறுபவர். அறையெங்கும் தூசு நிறைந்திருந்தது!
பொருள்கூறுபவர் சுத்தம் செய்பவனைக் கூப்பிட்டு அறையைப் பெருக்கும்படி கட்டளையிட்டார். அவன் விளக்குமாறு கொண்டு அறையைக் கூட்ட தூசு புகை மண்டலம் போலப் புறப்பட்டது! மூச்சுவிடத் திணறினான் கிறிஸ்தியான்.
பொருள்கூறுபவர் அருகிலிருந்த பெண்மணியிடம், கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து அறையெங்கும் தெளி என்றார். தண்ணீர் தெளித்தபின்பு அறையைச் சுத்தம் பண்ணுவது எளிதாக இருந்தது!
ஐயா, இதன் பொருள் என்ன? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
இந்த அறைதான் ஒரு மனிதனின் இருதயம். தூசு தான் அவனை அசுத்தப்படுத்தியிருந்த பாவங்கள்! முதலில் அப்படியே அறையைப் பெருக்கியவன்தான் நியாயப்பிரமாணம். தண்ணீர் கொண்டுவந்து தெளித்த பெண்மணிதான் சுவிசேசம்! நியாப்பிரமாணம் என்ற சட்டங்கள் நமது பாவங்களை நீக்கி நம்மைச் சுத்தப்படுத்த முடியாது. பதிலாக நமது மனதில் பழைய பாவங்களும் மீண்டும் தலைகாட்ட பாவங்கள் அதிகரிக்கின்றன! சுவிசேசம் என்ற கிறிஸ்துவின் நற்செய்தியை நமது மனம் ஏற்றுக்கொள்ளும்போது, நமது பாவங்கள் நீங்கி, இதயம் சுத்தமாகிறது. அப்போதுதான் மகிமையின் இராஜா அதில் தங்க முடியும் என்று கிறிஸ்தியானுக்குப் புரியும்படி தெளிவாக விளக்கினார்.
கிறிஸ்தியானின் கையைப் பிடித்து இழுத்தபடி ஒரு சிறிய அறையினுள் நுழைந்தார் பொருற்கூறுபவர். அங்கே இரணடு சிறுவர்கள் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். அவர்களில் கோப முகத்தோடு குதித்துக் கொண்டிருந்தவன் ஆத்திரக்காரன். சாந்தமான முகத்தோடு அமைதியாக இருந்தவன் பொறுமை!
ஆத்திரக்காரன் ஏன் இப்படிக் கோபமாக இருக்கிறான்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
அவன் கேட்ட பொருள்களுக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்கும்படி அவன் பெற்றோர் கூறிவிட்டார்கள். ஆனால் அவனோ இப்போதே அதைக் கேட்கிறான். அதனால்தான் இப்படி ஆத்திரப்படுகிறான். ஆனால் பொறுமையோ அமைதியாகக் காத்திருக்கிறான் என்று விளக்கினார் பொருள்கூறுபவர்.
அப்போது ஒருவர் பைநிறைய பொன்னும் மணிகளும் கொண்டுவந்து ஆத்திரக்காரனின் காலடியில் கொட்டினார். பொறுமையைப் பார்த்து கிண்டலாக சிரித்தபடி ஆத்திரக்காரன் அந்தப் பொக்கிசத்தைக் கைகளில் அள்ளிக் கொண்டான். ஆனால் சிறிது நேரத்திற்க்குள் அவையனைத்தையும் செலவழித்துவிட்டான்! அவன் உடுக்கக் கூடக் கந்தை ஆடைகளே மிஞ்சின!
ஆத்திரக்காரன் இந்த உலகத்து மக்களுக்கு அடையாளம் பொறுமைதான் வரப்போகும் புதிய உலகத்து மக்களுக்கு அடையாளம். ஆத்திரக்காரன் எப்படி எல்லாமே உடன்தானே வேண்டும் என்று ஆத்திரப்பட்டானோ, அவ்வாறே இவ்வுலக மக்களும் எல்லாவற்றையும் இப்போதே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நமது மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை! ஆத்திரக்காரனின் பொக்கிசம் விரைவாக அழிந்துபோனதுபோல இவ்வுலகத்து இன்பங்களும் சீக்கிரமே அழிந்துபோகும். நாம் நித்திய வாழ்வையே விரும்ப வேண்டும் என்பதற்கு இது ஒரு படிப்பினை என்றார் பொருள்கூறுபவர்.
பின்பு பொருள்கூறுபவர் கிறிஸ்தியானை மற்றொரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சுவற்றின் ஓரமாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. ஒரு மனிதன் அந்த நெருப்பின்மீது வாளி வாளியாகத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான். ஆனால் அந்த நெருப்போ அணையவில்லை! இன்னும் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது!
ஏன் நெருப்பு அணையவில்லை? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான். இந்த நெருப்புத்தான் மனிதனுடைய இருதயத்தில் செயல்படும் ஆண்டவருடைய கிருபை. தண்ணீரை ஊற்றுபவன் சாத்தான். ஆனால் இதோ பார், நெருப்பு இன்னும் பிரகாசமாகவும், மிகுந்த வெப்பத்துடனும் எரிகிறது! அதற்கு என்ன காரணம் தெரியுமா? என்று கூறிய பொருள்கூறுபவர் கிறிஸ்தியானை சுவற்றின் மறு பக்கம் அழைத்துச் சென்றார்.
அங்கே ஒருவர் கையில் எண்ணெய்க் குடவையை ஏந்தியவராய் தொடந்து எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தார். இவர்தான் கிறிஸ்து. அவர் ஊற்றும் எண்ணெய் தான் அவருடைய கிருபை. அவருடைய பிள்ளைகளின் மனதில் தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் சாத்தானின் செயல்கள் அழிக்கப்படுகின்றன. அவர் ஏன் சுவற்றின் மறுபக்கம் நிற்கிறார் தெரியமா? அவருடைய கிருபையைப் பற்றிச் சந்தேகப்படுகிறவர்களால் அவரைக் காணமுடிவதில்லை என்று விளக்கம் கூறினார் பொருள்கூறுபவர்.
ஒரு அழகான வாயிலண்டை கிறிஸ்தியானை அழைத்துச் சென்றார் அவர். அங்கே கவசம் தரித்த நான்கு பலவான்கள் காவல்காத்துக் கொண்டு நிற்கிறார்கள். அந்த வாயிலினுள் நுழைபவர்களின் பெயர்களை எழுதும்படி ஒருவன் அங்கே அமர்ந்திருந்தான். அந்த வாயிலின் முன்னால் அநேகர் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த பலவான்களைக் கண்ட பயந்த அவர்கள் உள்ளே நுழையத் துணியவில்லை! அந்த அரண்மனையின் மாடத்தின்மீது வெள்ளை உடை தரித்த பலர் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மனத்திடம் கொண்ட ஒருவன் அந்தப் பெயர் எழுதுபவனின் அருகில் செல்வதை கிறிஸ்தியான் கவனித்தான்.
ஐயா, என் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறிய அவன், தன் தலையில் ஒரு தலைக்கவசத்தை அணிந்து கொண்டான். கையில் வாளை ஏந்தினவனாக அந்த நான்கு பேருடனும் போர்புரியக் கிளம்பிவிட்டான்! நான்கு பலவான்களும் அவனுடன் மூர்க்கமாகச் சண்டை போட்டார்கள்! இறுதியில் பல காயங்களைப் பெற்ற அவன் வெற்றிகரமாக வாசலினுள் நுழைந்துவிட்டான்!
வாரும், வாரும்! நித்திய மகிமை உமக்கே என்று வாழ்த்தி வரவேற்ற வெண்ணுடை தரித்தவர்கள் அவனுக்கு வெண்ணங்கியை அணிவித்தார்கள். இதற்குப் பொருள் எனக்குத் தெரியுமே! என்று புன் சிரிப்புடன் கூறிய கிறிஸ்தியான் புறப்படத் துவங்கினான். பொறு, அவசரப்படாதே என்ற பொருள்கூறுபவர் அவனை ஓர் இருண்ட அறைக்குக் கூட்டிச்சென்றார். அங்கே இரும்புக் கூண்டுக்குள் ஒருவன் சோகமாக அமர்ந்திருந்தான். பெருமூச்சுவிட்டுக் கண்கலங்கினான் அவன்.
இவன் ஏன் இவ்வாறு சோகமாக இருக்கிறான்? என்று கேட்டான் கிறிஸ்தியான். நீயே கேட்டுப்பார் என்று கூறிவிட்டார் பொருள்கூறுபவர். இரும்புக் கூண்டை நெருங்கிய கிறிஸ்தியான், நீர் யார்? என்று கேட்டான். ஒருகாலத்தில் நான் ஒரு சிறந்த, வெற்றியுள்ள கிறிஸ்தவனாக இருந்தேன். மோட்சத்துக்குப் போகும் வழியில் செல்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இப்போதோ நான் அழிந்துபோகிறேன் என்று புலம்பினான் அவன்.
ஏன் என்ன நடந்தது? கேட்டான் கிறிஸ்தியான். சாத்தான் என்னைச் சோதித்தான். நான் என் உலக ஆசைகளுக்கு இடம்கொடுத்துப் பாவம் செய்து விட்டேன். பரிசுத்த ஆவியானவர் என்னைவிட்டு விலகி விட்டார். மனம் திரும்ப முடியாமல் என் இருதயம் கடினப்பட்டுப் போய்விட்டது என்று அழுதான் அவன். ஏன் உன்னால் மனம் திரும்ப முடியாது? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
ஆண்டவர் எனக்குக் கொடுத்த காலம் முடிந்து போய்விட்டது. இனி என்னால் ஒன்றுமே செய்ய முடியாது! நித்திய காலமாய் இந்தத் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும் பெருகுரலெடுத்துப் புலம்பினான் அவன்.
கிறிஸ்தியானின் உடலில் நடுக்கமே ஏற்பட்டுவிட்டது! உனக்கு எச்சரிக்கை செய்யவே இதைக் காட்டினேன். ஆண்டவருடைய வழியைவிட்டு பாதை மாறிவிடாதே என்று எச்சரித்தார் பொருள்கூறுபவர். சரி ஐயா, ஆண்டவர்தான் எனக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான் கிறிஸ்தியான். வா, உனக்குக் காட்ட வேண்டியது இன்னும் ஒன்று இருக்கிறது என்று கூறிய பொருள்கூறுபவர் அவனை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே படுக்கையிலிருந்து எழும் ஒருவனைக் கண்டார்கள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது! ஏன் இவ்வாறு பயந்து நடுங்குகிறீர்? என்று கேட்டான் கிறிஸ்தியான். ஐயா, நான் தூங்கும் போது ஒரு கனவு கண்டேன். வானம் இருண்டு போயிற்று! இடி இடித்தது! பளீர் பளீரென்று மன்னலடித்தது! நான் நிமிர்ந்து பார்த்தேன். மேகத்தின் நடுவே ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான தேவதூதர்கள்! மரித்தவர்களே, நியாயந்தீர்க்கப்பட எழுந்து வாருங்கள் என்ற குரல் கேட்டது. உடனே கல்லறைகள் திறந்தன! இறந்துபோனவர்கள் எழுந்து வந்தார்கள். சிலர் மகிழ்ச்சியோடு ஆண்டவரைத் துதித்தார்;கள். மற்றவர்களோ தலைகளைத் தொங்கப்போட்டுக் கொண்டு பயந்து நடுங்கினார்கள்! மேகத்தின் நடுவே அமர்ந்திருந்தவர். பதரை அவியாத அக்கினியில் போடுங்கள் (மத்.3:12, 13:40, வெளி.20:12,15) என்று கட்டளையிட்டார் என்று கூறிய அவன் உடல் மேலும் நடுங்கியது.
நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் திடீரென்று ஒரு பெரிய பள்ளம் தோன்றியது! அதன் அடிப்பாகத்தையே பார்க்க முடியாதபடி அவ்வளவு ஆழம்! அதனுள்ளிருந்து நெருப்பும் புகையும் மேலே எழும்பியது! நியாயத் தீர்ப்பு நாள் வந்துவிட்டதையும், அதற்கு நான் தயாராக இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனது தண்டனையை நினைத்துத்தான் இவ்வாறு நடுங்குறேன் என்று அவன் கூறியவுடன், தான் அவனைப் போலல்லாது நியாயத்தீர்ப்பைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான் கிறிஸ்தியான்.
கிறிஸ்தியான் கண்ட இவ்வளவு காரியங்களும் அவனுக்குச் சிறந்த படிப்பினையை அளித்தன. பொருள் கூறுபவர் அவன் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் அவனை வழியனுப்பி வைத்தார்.











