மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன.
ஆனால் இடுக்கமான பாதையோ அவற்றின் நடுவே மலையுச்சியை நோக்கிச் சென்றது!
கிறிஸ்தியான் அந்த நீரோடைக்குச் சென்று தெளிந்த நீரைப் பருகினான். களைப்பு நீங்கியவனாக இடுக்கமான பாதையின் வழியாக மலையேறத் துவங்கினான்.
இடுக்கமான பாதை மலையேறும் கடினமான பாதையாக இருப்பதைக்கண்ட சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடதுபுறம் அபாயப் பாதையில் சென்றவன் அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைந்தான்! வலதுபுறம் அழிவின் பாதையில் சென்றவன் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தான்!
இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!
பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருந்தது. கிறிஸ்தியான் களைப்போடு அங்கு சென்று அமர்ந்தான். சுருளை எடுத்துப் படிக்கத் துவங்கினான். அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. சுருள் கையிலிருந்த நழுவியதுகூடத் தெரியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டான்! அப்போது ஒருவர் வந்து, சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதன் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதி.6:6) என்று கூறி அவனை எழுப்பி விட்டார்!
திடுக்கிட்டு விழித்த கிறிஸ்தியான், மலையுச்சியை அடையும்வரை விரைந்து பயணம் செய்தான்! அங்கே இருவர் அவனை நோக்கி எதிர்த் திசையில் வருவதைக் கண்டு வியப்படைந்தான். கோழை, அவநம்பிக்கை என்ற அந்த இருவரையும் பார்த்து,
ஏன் ஜயா? என்ன ஆயிற்று? என்று கேட்டான்.
போகும் வழியில் சிங்கத்தைப் பார்த்தோம். இன்னும் போகப்போக அபாயம்தான் என்று எண்ணித் திரும்பிவிட்டோம் நடுங்கும் குரலில் கூறினார்கள் அந்த இருவரும்.
நீங்கள் எனக்கும் பயமூட்டிவிட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது? திருப்பிப் போவதென்றால் நிச்சயமாக மரணதண்டனைதான் கிடைக்கும். நேரே சென்றாலும் மரணத்துக்கேதுவான அபாயங்கள் என்று ஒரு கணம் தயங்கிய கிறிஸ்தியான்,
இல்லை……………….இல்லை…………….. நான் நேராகத்தான் செல்வேன். பாதையின் முடிவில் எனக்கு நித்திய வாழ்வு கிடைக்குமே! என்று கூறியபடி உற்சாகத்தோடு முன்னே செல்லத் துவங்கினான். கோழையும் அவநம்பிக்கையும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள்.











