கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான்.
பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை!
அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான்.
முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.
தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.
மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.
உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.










