அதிகாரம் 1
நெகேமியாவின் ஜெபம்
வசனம் 1:1
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
நெகேமியாவின் புத்தகம் நெகேமியாவினாலேயே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவு. தேவனுடைய மனுஷனாகிய நெகேமியாவைப்பற்றிய மகழ்ச்சிகரமான விளக்கங்களை இப்புத்தகம் நமக்களிக்கிறது. வேதபாரகனாகிய எஸ்றாவிற்கு நேர் எதிரான கொள்ளைகளைக் கொண்டவர் நெகேமியா என்ற போதிலும் இவ்விருவரின் தாலந்துகளையும் தேவன் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி ஆசீர்வதித்துள்ளார். ஒருவிதத்தில் இருவரும் ஒரே வழியில் செயல்ப்பட்டனர் எனலாம். இருவரும் தேவனுடைய பிள்ளைகளாக விளங்கினர். இருவரும் தேவன் அருளிய வேலைகளைச் செய்ய ஆவலுடன் முற்பட்டனர்.
பெர்சியா (பாரசீக) நாட்டில் யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலத்தில் நெகேமியாவும் சிறைவைக்கப்பட்டிருந்தான். பாரசீக நாட்டு மன்னரான அர்த்தசஷ்டா இராஜாவின் அரண்மனைப் பணியாளரில் ஒருவனாக நெகேமியா இருந்தான். இராஜாவிற்குத் திராட்சைரசம் பரிமாறும் பானபத்திரக்காரனாக அவன் இருந்ததினால் அரண்மனை வழிமுறைகளை நன்கு அறிந்திருந்தான். மோசே பார்வோன் மன்னரின் அரண்மனையில் வளர்ந்ததால் அரண்மனையின் வழிமுறைகளை நன்கு அறிய முடிந்தது (யாத்.2:1-10, 1.சாமு.18:5, 19:9). தாவீது சவுலுக்காகப் பணியாற்றியதால் இத்தகைய அனுபவம் பெறமுடிந்தது. தானியேல் நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் இளைஞனாக சிறைவைக்கப்பட்டிருந்தபோதும் இத்தகையதோர் நல்லனுபம் பெற்றான் (தானி.1:19). தேவன் தமது பிள்ளைகளைத் தமது பணிக்காக ஆயத்தப்படுத்த அரச அரண்மனைக் கூடங்களைக்கூடப் பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார்.
வசனம் 1:2-4
என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள். அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள். எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
ஒருநாள் நெகேமியாவின் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும் வேறே சில மனுஷரும் எருசலேமில் இருந்து நெகேமியாவைக் காண வந்தனர். எருசலேமின் செய்தியையும் யூதர்களின் செய்தியையும் குறித்து நெகேமியா அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக எல்லாம் குழப்பமாக உள்ளதென்றும், அங்கே மக்கள் மகா தீங்கையும் நிந்தையையும் அனுபவிக்கின்றனர் என்றும் கூறினர். மேலும் எருசலேமின் அலங்கங்கள் இடிக்கப்பட்டும் அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கின்றன. ஆலயம் மறுபடியுமாய்க் கட்டப்பட்டது. ஆனால் பகைவரிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் உள்ளது என்றும் நெகேமியாவுக்கு அறிவிக்கப்பட்டது. எருசலேமின் மோசமான நிலையை நெகேமியா ஓரளவு அறிந்திருந்தான். ஆனால் ஆலயத்தைப் பற்றிய இத்தகைய அதிர்ச்சியான செய்திகளை அவன் எதிர்பார்க்கவில்லை. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நெகேமியா மிகவும் துக்கித்து உட்கார்ந்து அழுதான்;. சிலநாட்கள் வரை அவன் துக்கித்துக் கொண்டேயிருந்தான். ஆனால் உதவிக்கு எங்கே போவது என்று அவனுக்குத் தெரியும். அவன் தேவனிடத்திற்குச் சென்றான். அவன் அங்கே தேவனிடத்தில் உட்கார்ந்து அழுது உபவாசித்து பரலோகத்தின் தேவனை நோக்கிப் பிரார்த்தனை பண்ணினான்.
வசனம் 1:5
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
nநேகமியா எவ்வாறு தேவனிடத்தில் வேண்டுதல் செய்தான் என்பதைனை 5 முதல் 11 வரையிலான வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அது ஒரு முன்மாதிரி ஜெபம். முதலாவது அவன் பரலோகத்தின் தேவனை அழைக்கிறான். கர்த்தர் (இயேசு கிறிஸ்து) பூலோகத்தில் தமது சீஷர்களுக்கு ஜெபம்பண்ண போதித்ததுபோல இது உள்ளது. (லூக்.11:2). அடுத்து, அவன் தேவனை மகத்துவமுள்ளவர் என்றும் பயங்கரமானவர் என்றும் கூறுகிறான். கர்த்தருடைய ஜெபத்தில் உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக எனப்பட்டுள்ளதுபோல் இது உள்ளது. அடுத்து கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் தமது உடன்படிக்கையையைக் காக்கிற தேவன் என்றும் கூறுகிறான். கர்த்தருடைய ஜெபத்தில் அவர் நமக்குப் போதித்து, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று போதித்துள்ளார் அன்றோ?
வசனம் 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
பிறகு நெகேமியா, தன் ஜெபத்திற்கு தேவன் செவிசாய்க்கவேண்டுமென்று தேவனை நோக்கி மன்றாடினான். அவன் விடா முயற்சியோடு இருந்தான் என்று நாம் காண்கிறோம். ஏனென்றால் அவன், தனது மக்களுக்காக இரவும் பகலும் தேவனிடத்தில் ஜெபித்தான். தனது நாடும் மக்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தனர் என்று தேவனிடத்தில் மனம் கசந்து அறிக்கையிட்டான். அதில் அவனும் அவன் குடும்பத்தாரும் சேர்ந்தே பாவம் செய்தனர் என்பதையும் சேர்த்து அறிக்கையிட்டான். எஸ்றா செய்ததுபோலவே நெகேமியாவும் தனது மக்களோடு சேர்ந்து தானும் ஒரு பாவி என்று அறிக்கையிட்டான். நமது கர்த்தராகிய இயேசுவும் கர்த்தருடைய ஜெபத்தில் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று ஜெபிக்கக் கற்றுத் தந்தார்.
வசனம் 1:7
நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம். நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்.
நெகேமியா தனது ஜெபத்தில் நாங்கள் பாவம் செய்தோம் என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. ஆனால் உமக்கு முன்பாகவும் மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம் என மிகவும் பணிவாக அறிக்கை செய்தான். நாம் ஒருவேளை அதுபோல் சொல்வதற்குப் பின்வாங்கலாம். ஆனால் நெகேமியா அப்படித்தான் ஜெபித்தான்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:9) என்று வேதம் கூறுகிறது. நாம் நமது பாவங்களை உள்ளது உள்ளபடி அறிக்கையிடவேண்டும் என்று தேவன் நம்மை எதிர்பார்க்கிறார். அப்போது அவர் நமக்கு மன்னிப்பு அருளுகிறார்.
வசனம் 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
எஸ்றா ஒரு கற்றறிந்த வேதபாரகனாயிருந்தான். அதுபோல் நெகேமியாவும் வேதத்தை நன்கு அறிந்திருந்தான். அவன் தனது ஜெபத்திலே, மோசே வேதத்தில் எழுதிவைத்துள்ள சில உண்மைகளை மேற்கோளாகக் கூறுகிறான். அதாவது, நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்று கூறியிருந்தார். யூதர்களுக்கு நடந்தேறியதும் அதுவேதான்.
வசனம் 1:9
நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டுபோனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்கு கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்.
தேவன் கிருபையோடும் மேலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டும் அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும் நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் கூறியிருந்தார். (உபா.30:1-6). நெகேமியா தனது ஜெபத்தில் மிகவும் உறுதியாய் இருந்து வேண்டுதல் செய்தான். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை அவன் நன்கு அறிந்திருந்ததால் அவன் தனது ஜெபத்தில் ஒழுங்கீனமாய்ப் பேசவில்லை.
வசனம் 1:10
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
மோசே கர்த்தரை நோக்கி, இஸ்ரவேலர்களை மன்னிக்கும்படி செய்த அந்த ஒரு ஜெபத்தை இப்போது நெகேமியாவும் ஜெபமாகச் சொல்லுகிறான் (உபா.9:25-29). கர்த்தர், அன்று கடுங்கோபம் கொண்டு அந்த ஜனங்களை முற்றிலும் அழிக்க நினைத்தார். ஆனால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தமது பிள்ளையாகிய மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும் பொருட்டு அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான் (சங்.106:23). நெகேமியாவும், அதுபோன்றதொரு நிலையே இன்றும் வந்துள்ளது என தீர்மானித்து, அன்று மோசே செய்த அதே ஜெபத்தையே இன்றும் தேவனை நோக்கி ஜெபித்தான். இவர்கள் அனைவரும் கர்த்தருடைய பிள்ளைகள் தமது வல்லமையாலே அவர்களை மீட்டார் இப்போது அவர்களுக்காக தேவனுடைய சமுகத்தில் நெகேமியா வந்து நின்றான்.
வசனம் 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக. இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
அன்றைய தினத்திலே அவன் தேவனிடத்திலே மன்றாடினான். அன்றைய தினம் தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்கும்படி மன்றாடியது ஏனென்றால் அந்த நன்னாளிலே அவன் இராஜாவோடே பேச இருந்தான். அவனுடைய வேலை இராஜாவின் சமுகத்திலே என்னவென்றும் நாம் இங்கு அறியமுடிகிறது. அவன் இராஜாவிற்குப் பானபத்திரக்காரனாயிருந்தான். அது அந்நாட்களில் மிகவும் சிக்கலான ஒருவேலையாகும். இராஜாவிற்கு பரிமாறப்படும்முன் அந்த திராட்சைரசத்தை அவன் ருசி பார்த்து, அதில் விஷம் ஏதுமில்லையென்று திட்டப்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் இப்பணி அவனை இராஜாவின் சமுகத்திலேயே அடிக்கடி தங்கியிருக்கச் செய்ததினால் அவன் இராஜாவுக்கு நன்கு அறிமுகமானவனாக இருக்க வேண்டும். இப்போது அவன் ஜெபிக்கிறான். இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இராஜாவுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று ஜெபித்தான்.
நெகேமியா எருசலேம் நகரத்திலே வசிக்காதிருந்தபோதிலும் அந்த நகரத்தைப்பற்றியும், நகர மக்கள் பற்றியும் உளம் உறுத்தப்பட்டிருந்தான். அவன் அவைகளை எண்ணி அழுதான். அதற்காக உபவாசித்திருந்தான். தேவனை நோக்கி ஜெபித்தான். மோசேயின் ஜெபத்தை மேற்கோள் காட்டி தேவனிடத்தில் அந்த மக்களுக்காக மன்றாடினான். இப்போது செயல்ப்படத் துவங்குகிறான்.











