அதிகாரம் 3
ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்
வசனம் 3:1
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
இந்த அதிகாரத்தின் செய்திகள் மற்ற அதிகாரங்களைவிட வேறுபட்டிருக்கிறதைக் காண்கிறோம். வாசல்களையும், அலங்கங்களையும் கட்டுகிறவர்களின் வரலாற்றுப் பட்டியலை இதில் காண்கிறோம். சிலர் குடும்பத்தினராகவும், சிலர் குறிப்பிட்ட தொழிலாளராகவும், சிலர் நகரத்தினராகவும் உள்ள வெவ்வேறு வகைப்பட்ட குழுவினரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. குழு முயற்சிகள் எவ்வாறு செயல்ப்படமுடியும் என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொருவரும் உழைக்க உதவுகின்றனர்.
ஆசாரியர்களின் குழுபற்றி முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர். எலியாசீயும் அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டு வாசலைக் கட்டினார்கள். தங்கள் பணியை, அந்த வாசலைப் பிரதிஷ்டை செய்தபின் ஆரம்பிக்கின்றனர். தங்களுடைய பணிகளிலே தேவனுடைய ஆசீர்வாதம் இருக்கத்தக்கதாய், ஜெபத்தோடு தங்கள் பணியைத் துவங்க ஆரம்பிக்கின்றனர். ஆகையால் முதல் பணி முடிந்தவுடன் அதனைத் தேவனுக்கு பிரதிஷ்டை செய்கிறார்கள். நாம் நமது காரியங்களைத் தேவனுக்குப் பிரதிஷ்டை செய்கிறோமா?
தங்கள் பணியைத் துவங்குவதற்கு ஆட்டுவாசல், ஆசாரியர்களுக்கு மிகவும் ஏற்றதென காணப்பட்டது போலும். அந்த வாசல் வழியாகத்தான் ஆசாரியர்களால் பலியிடப்படுவதற்கு ஆடுகள் நகரத்திற்குள் கொண்டுபோகப்பட்டன. அது மக்களுக்காகச் செலுத்தப்பட்ட பலி. ஆடு என்பது கர்த்தராகிய இயேசுவுக்கு முன்னறிவிப்பான ஓர் அடையாளம். அவர் தேவ ஆட்டுக்குட்டியன்றோ! அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் (ஏசா.53:7). அவர்கள் ஆட்டுவாசலிலே முதற் பணியைத் துவங்கினார்கள். ஆட்டுக்குட்டியின் பலி முதலில் வரவேண்டுமன்றோ!
அதன்பிறகு ஆசாரியர்கள் அந்த வாசலின் கதவுகளைப் பொருத்தினார்கள். அங்கிருந்து மேயா என்கிற கொம்மைக்குச் சென்று அதைக் கட்டி முடித்துப் பிரதிஷ்டை செய்தனர். அடுத்து அனானெயேலின் கொம்மைக்குச் சென்று அதைக்கட்டி பிரதிஷ்டை செய்தார்கள் (கொம்மை என்பது கோபுரமான ஓரு கட்டடம்).
வசனம் 3:2
அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள். அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான்.
ஆசாரியர்கள் கட்டத் துவங்கி வேலைசெய்துகொண்டிருந்தபோது அவர்களின் அருகே எரிகோவின் மனுஷர் கட்டிக்கொண்டிருந்தனர். எரிகோ பட்டணம் ஒரு சபிக்கப்பட்ட பட்டணம் ஆகும் (யோசு.6:26, 1.இராஜா.16:34). ஆனால் அந்த சபிக்கப்பட்ட நகரமாகிய எரிகோவின் மக்கள், எருசலேமின் அலங்கங்களைக் கட்ட உதவிசெய்தனர். கர்த்தர் சாபத்தின் முடிவுகளைக்கூட ஆசீர்வாதங்களாக மாற்ற வல்லவராய் இருக்கிறார். கிறிஸ்து….. சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். (கலா.3:13). ஆகையால் இவர்கள் சாபத்தின் பட்டணத்தை விட்டு ஆசீர்வாதத்தின் பட்டணத்தைக் கட்டவந்தனர். அதற்கு அப்பால் சக்கூர் என்ற தனி மனிதன் அலங்கத்தைக் கட்டும் பணியைச் செய்வதைக் காண்கிறோம். கர்த்தர் நம்மைக் கூட்டமாகவோ அல்லது தனிமையாகவோ பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார். சக்கூர் என்ன வேலைசெய்து கொண்டிருந்தான் என்று வேதம் நமக்குக் கூறவில்லை. ஆனால் அது கர்த்தருக்குத் தெரியும். கர்த்தருடைய வேதத்தில் அவன் பெயர் குறிக்கப்பட கர்த்தர் கிருபை செய்துள்ளார்.
கூட்டமாகவோ அல்லது தனியாகவோ அவர்கள் வேலைசெய்தனர். ஒருவர் மற்றவரின் வேலையில் தலையிடவில்லை. அல்லது பிறர்வேலையைக் குற்றப்படுத்தவில்லை, அல்லது பொறாமைப்படவுமில்லை. அவரவர் வேலையில் கடுமையாக உழைத்தனர். அது வியத்தகு ஒற்றுமையான பணியாகும்.
வசனம் 3:3
மீன்வாசல் அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
அடுத்து மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள். அதன் உத்திரங்கள் நிலைநிறுத்தி கதவுகளை மாட்டி அதன் தாழ்ப்பாள்களையும் பூட்டுகளையும் போட்டார்கள்.
வசனம் 3:4
அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரேமோத் பழுதுபார்த்துக் கட்டினான். அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்து பழுது பார்த்துக்கட்டிய மூன்றுபேரைப் பற்றி வேதம் கூறுகிறது. 1.கொரிந்தியர் 12:28ல் தேவனுடைய சபையில் உள்ள வெவ்வேறான ஊழியங்களைச் செய்கிறவர்களைக் குறிப்பிட்டு அப்போஸ்தலர், தீர்க்கதரசிகள் முதலியவர்கள் உள்ளது விளக்கப்பட்டு இருக்கையில் ஊழியம் என்ற ஒரு சிறுவார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். நாம் ஒருவேளை அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசிகளாகவோ, அல்லது போதகர்களாகவோ இல்லாமல் போகலாம். ஆனால் உதவியாளர்களாக நிச்சயமாகப் பணியாற்ற முடியும். இங்கே இருந்த பலரும்கூட இடிந்துபோன அலங்கங்களைக்கட்ட மிகவும் உதவினார்கள். நீங்கள்கூட சிதைந்துபோன வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஓர் உதவி செய்யக்கூடும் அல்லது உமது சபையில் தேவஆலயத்தில் ஒரு வேலையில் உதவி செய்யமுடியும். தேவன் உனக்குத் தந்த வரங்களின்படி நீ ஏதாவது நல்லது ஒன்றைச் செய்ய முடிந்தால் அதைத் தவறாமல் செய்வாயாக.
வசனம் 3:5
அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.
அந்த வேலையைச் செய்து வந்தவர்களிடையே இங்கு முதன் முறையாக ஒத்துழையாமையைக் காண்கிறோம். அதன் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் பிரபுக்கள் வேலைக்குத் தோள் கொடுக்கவில்லை. அல்லது அந்த வேலையில் தங்கள் பணியின் ஒத்துழைப்பையும்கூடத் தரவில்லை. ஒருவேளை அவர்கள் பிரபுக்கள் என்ற நிலையில் அந்த வேலை இழிவானது என எண்ணியிருக்கலாம். முன்மாதிரியாய் இருக்கவேண்டியவர்களே, வேலையில் தேக்கம் காட்டுதல் எவ்வளவு விசனமான காரியம். அது தேவனுக்கடுத்த திருப்பணி. நமது பங்கு ஏதுவாயிருந்தால் என்ன? நகமான் எலிசாவின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய விரும்பாமல் போனபோது, அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கடிந்து, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா…? (2.இராஜா.5:13) என்று கேட்டதும், நாகமான் கவனித்துத் தன்னைத் தாழ்த்திச் செயல்ப்பட்டு குஷ்டரோகம் நீங்கப்பெற்றதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அதுபோல் ஒருவேளை அந்தப் பிரபுக்கள் செய்வதற்காக வேறு பெரிய வேலை ஏதாகிலும் ஒப்படைக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியோடு அதனைச் செய்ய ஒப்புக் கொண்டிருப்பாரன்றோ? ஆனால் இங்கே அவர்கள் மற்றவரைப்போலவும் சாதாரணமான வேலை, இடிந்துபோன அலங்கங்களைக் கட்டும்வேலையை அவர்கள் செய்யவேண்டியிருந்தது.
வசனம் 3:6
பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டார்கள்.
அடுத்துக் கூறப்பட்டுள்ள வாசல் பழைய வாசல். அந்த வாசலில் உத்தரம் பாவுதல், கதவுகள் மாட்டுதல், தாழ்ப்பாள் பூட்டு அமைத்தல் ஆகிய பணிகளைச் செய்யும் இரண்டுபேர் இங்கு குறிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் உதவி செய்யும்நிலை நன்றி பாராட்டலுக்குரியது. அந்த இருவரும் சேர்ந்து ஒரு வாசலைக் கட்டி அமைத்தனர்.
வசனம்3:7
அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
மறுபடியும், வேற்று நகரத்தார் இங்கு வந்து பணியில் துணை நிற்பதைக் காண்கிறோம். எருசலேமின் அலங்கங்கள் எல்லா யூதர்களுக்கும் மிக முக்கியமானது என்ற அளவில் அதனைக் கட்டும் பணியில் அனைவரும் ஒத்துழைத்தனர்.
வசனம் 3:8
அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக் கட்டினான். அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேம் இடிக்கப்படாமல் விட்டிருந்தது.
இங்கு இரு ஒவ்வா நண்பர்கள் அலங்கத்துப் பணிகளைச் செய்வதை நாம் காண்கிறோம். ஒருவன் தட்டான் என்ற பொற்கொல்லன். மற்றவன் தைலக்காரன். அவர்கள் தங்கள் சொந்த அலுவல்களிலே மிகவும் நுட்பமான வேலைகளை மட்டும் செய்பவர்கள். இங்கே கடுமையான உழைப்புப் பணியை மேற்கொள்கிறார்கள். சாக்குப் போக்குகள் ஏதும் சொல்லாமல், கட்டும் பணியைச் செய்கின்றனர். அகலமான மதில் மட்டும் அவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
வசனம் 3:9
அவர்கள் அருகே எருசலேம்பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
இங்கே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஒருவன் மற்றவர்களுடன் சேர்ந்து வேலைசெய்வதை நாம் வாசிக்கிறோம். தனது கையினால் வேலைசெய்து பழுது பார்க்கும் பணியைச் செய்வது அவனுடைய மதிப்பிற்கு இழிவானது என அவன் கருதவில்லை. இத்தகைய நிலையிலும் உழைப்பவர்களைக் காணும்போது எத்துணை உற்சாகம் நமக்கு எற்படுகிறது.
வசனம் 3:10
அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்து நாம் காணும் யெதாயா வீட்டிற்கே சாட்சியாக இருக்கிறான். அவன் தனது சொந்த வீட்டின் எதிரிலேயே அலங்கங்களைப் பழுது பார்த்துக் கட்டுகிறான். தேவனுடைய வேலையைச் செய்ய இதுவே மிகவும் கடினமான சூழ்நிலை. நமது வீட்டாரின் கண்முன் மற்றும் அயலகத்தாரின் கண்முன், ஆனால் யெதாயா அதைத்தான் செய்தான். எல்லாரும் பார்க்கும்படி அவர்களின் கண்முன்னே செய்தான். யெதாயா என்னும் வார்த்தைக்கு யெகோவாவைத் துதியுங்கள் என்பது பொருள். அவன் தனது தியாகப்பணியின் மூலம் அதைத்தான் செய்தான். அடுத்துக் கூறப்பட்டுள்ள மூவர் சூளைகளின் கொம்மைகள் வரை பழுது பார்த்துக் காட்டினார்கள்.
வசனம் 3:12
அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
இவ் வசனம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறது. ஒரு பிரபு சல்லூம் தனது குமாரத்திகளுடன் சேர்ந்து பழுது பார்த்தக் கட்டுகிறான். இந்தச் சல்லூம் எருசலேமின் மறுபாதிக்கு பிரபுவானவன். அது மிகவும் கடினமான உழைப்பு. அவனுடைய குமாரத்திகள் என்ன வேலையைச் செய்ய முடிந்தது என்பது வேதத்தில் கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் தந்தையோடு சேர்ந்து அந்தக் கடுமையான வேலையில் பங்குகொண்டனர்.
இதுபோன்ற உழைத்த பல பெண்களைப்பற்றி வேதம் நமக்குக் கூறுகிறது. ரெபேக்கா அந்த நகரத்து மனிதர்களின் குமாரத்திகளில் ஒருத்தி தண்ணீர் எடுக்க குடத்தை தோளின்மேல் வைத்துக்கொண்டு வந்தாள். அந்நியனுக்கும் அவனுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர்மொண்டு வார்த்தாள் (ஆதி.24:13-20). ராகேல் தனது தகப்பனுடைய ஆட்களை மேய்த்துக்கொண்டிருந்தான் (ஆதி.29:9). ரூத் தனது மாமி நகோமிக்காக நாள் முழுவதும் வயல்களிலே கதிர் பொறுக்கினாள். (ரூத் 5:17). பவுல் அப்போஸ்தலனும் சுவிசேஷ ஊழியத்தில் தனக்கு உதவிசெய்த பெண்களைப்பற்றிக் குறிப்பிடுகிறான் (பிலி.4:3). தேவனுடைய களத்திலே எல்லாருக்கும் பணிகளில் சமபங்கு உண்டு.
வசனம் 3:13-14
பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்கள் அதைக் கட்டி, அதற்குத் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள். குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டான்.
அடுத்துப் பள்ளத்தாக்கின் வாசல். இங்கிருந்துதான் நெகேமியா முதன் முதலில், இரவு வேளைகளில் நகரின் இடிந்துபோன நிலைகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். சானோவாகின் குடிகளும், ஆனுனூம் இந்தப் பள்ளத்தாக்கு வாசலையும் அங்கிருந்து குப்பை மேட்டு வாசல் மட்டாக 1000 முழந்தூரம் உள்ள அலங்கத்தையும் கட்டினார்கள். இப்போதும் குப்பை மேட்டு வாசலைக்கட்டுவது யார்? நகரத்தின் குப்பைகள், நாள்தோறும் இந்த வாசல் வழியாகத்தான் வெளியே கொண்டுபோய் எறியப்படும். குப்பை மேட்டு வாசலை ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்துக் கட்டினான். அவன் ஒரு மகாணத்துப் பிரபுவாயிருந்தும் அந்த இழிவான இடத்தில் தேவனுடைய பணிக்காகத் தன்னைத் தாழ்த்தி ஒப்புவித்து, அப்பணியைச் செய்துமுடித்தான். அவனன்றோ ஓர் உண்மையான தலைவன்.
வசனம் 3:15
ஊரணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
2ம் அதிகாரம் 14ம் வசனத்திலே ஊரணி வாசல் அண்டையிலே நான் ஏறி இருந்த மிருகம் கடந்து போகிறதற்கு வழியில்லாதிருந்தது என்று வாசிக்கிறோம். நெகேமியா நடந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே சீர்திருத்தப்பட வேண்டிய வேலை அதிகமாய் இருந்தது எனலாம். மிஸ்பாவின் மகாணத்துப் பிரபு சல்லூம் என்பவன் இதைப் பழுதுபார்த்துக் கட்டினான். ஜீவனுள்ள தண்ணீர்களின் ஊற்றாகிய கர்த்தர் (எரேமி.17:3).
இத்தகைய ஜீவனுள்ள ஆதாரமான ஊற்றுக்கள் அடைப்பட்டுப்போனால் நாம் அதிக தொல்லைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். சல்லூம் அதனைப் பழுதுபார்த்துக் கட்டி, மச்சுப்பாவி அதற்குக் கதவுகளையும், பூட்டுகளையுமத் தாழ்ப்பாள்களையும் போட்டு முடித்தான். அதன் பின்னர் அவன் மேலும் சென்று இராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவின் குளத்து மதிலையும் கட்டினான்.
வசனம் 3:16
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கிற நெகேமியா பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவானவன் பானபத்திரக்காரனாக பாபிலோனில் இருந்து புறப்பட்டு வந்த நெகேமியா 1:11 விலிருந்து வேறுபட்டவன். இவன் பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாக இருக்கிறதைப் பழுது பார்த்துக் கட்டினான்.
வசனம் 3:17
அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
லேவியர்களும் ஆசாரியர்களைப்போலவே பணிசெய்து பிரதான ஆசாரியரின் வீட்டின் மறுபக்கத்தில் உள்ள மதிலைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
வசனம் 3:18-20
அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான். அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்தடுத்துள்ள அலங்கங்கள் கட்டப்பட்டன. 29ம் வசனத்தில் பாரூக் என்பவன் பிரதான ஆசாரியனின் வீடு மட்டும் இருக்கிற பங்கை வெகு ஜாக்கிரதையாகக் கட்டினான் என்று வாசிக்கிறோம். தேவனுடைய பணியில் மிகவும் கவனத்துடன் வெகுஜாக்கிரதையாக வேலைசெய்தல் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். நாம் செய்யும் வேலைகள் கடமையுணர்வுடன் வெகு ஜாக்கிரதையாகச் செய்யப்படுகின்றனவா?
வசனம் 3:23
அவர்களுக்குப் பின்னாகப் பென்ஜமீனும், அசூபும், தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இவ்வசனத்தில் தங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுது பார்த்தக் கட்டினார்கள் என்று வாசிக்கிறோம். சகோதரனே, உனது வீட்டிற்கு எதிரே இருக்கிறவர்களிடம் நீ தேவனுடைய வார்த்தைகளைப்பற்றிப் பேசுவதுண்டா?
வசனம் 3:26
ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
நீதனிமீயரைச் (கோயில் பணியாளர் வழிவந்தோர்) சேர்ந்த மனிதர்கள் தண்ணீர் வாசல்வரை கட்டினார்கள். இந்தத் தண்ணீர் வாசல் நீரூற்றிற்கு எதிரே கிழக்கு மதில்களில் நடுப்பகுதியண்டை உள்ளது. தண்ணீர் கடவுளுடைய வார்த்தைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. (எபேசி.5:26, சங்.119:9). இந்தத் தண்ணீர் வாசல் மதில்கள் பழுதுபார்க்கப்படவில்லை என்ற செய்தி சற்று வியப்பாகவேயுள்ளது. கர்த்தருடைய வார்த்தை பழுது அடைவதேயில்லை.
வசனம் 3:27
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
சில குழுவினர் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களையும் பழுது பார்த்தனர். தெக்கோவா ஊரார் அவ்வாறுதான் செய்தனர். தெக்கோவா ஊராரின் பிரபுக்கள் இந்தப் பணிக்குத் தோள் கொடுக்கவில்லையென்றும் 50ம் வசனத்தில் வாசித்தோம். ஆனாலும் ஊரார் இரு மடங்காகச் செய்தனர்.
வசனம் 2:28
குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
மறுபடியும் ஆசாரியர்கள் பணியில் முன் மாதரியாகத் தங்கள் தங்களின் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். இது குதிரை வாசல் முதற்கொண்டு நடைபெற்றது. வேதத்திலே குதிரைகள், யுத்தத்தோடு சம்பந்தப்படுத்தித்தான் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. நமது யுத்தமோ நமது எதிரியான சாத்தானோடுதான் உள்ளது. இந்தக் கொடுரமான குதிரை வாசலண்டையில்தான், அரசியாயிருந்த அத்தாலியாள் கொடுரமாகக் கொன்று போடப்பட்டாள் (2.நாளா.23:15).
வசனம் 2:29
அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
அடுத்த இருவர் சேர்ந்து அடுத்த இடங்களில் பழுதுபார்த்துக் கட்டுவதை வேதம் கூறுகிறது. அவர்களில் இரண்டாமவன், கிழக்கு வாசலைக் காக்கிறவன். அவன் தனது வாசல் சூரியனை நோக்கி, நிமிர்ந்து ஒழுங்காக இருக்கவேண்டுமென்ற விரும்பியிருப்பான்.
வசனம் 2:30
அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஆனூன் என்பவன் சாலாபின் ஆறாவது குமாரன் என அறிகிறோம். மற்ற ஜந்து மகன்கள் என்ன ஆனார்கள்? வேதம் அதைப்பற்றிக் கூறவில்லை. சலாப் என்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது பொருள் அவனை அவனது தியாகப் பணிகளுக்காக கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
மெசுல்லாம் என்பவன் தன் அறைவீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுது பார்த்துக் கட்டினான்.
வசனம் 3:31-32
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
இங்கே தட்டாரும், நீதனீமியரும், மளிகைக்காரரும் அடுத்தடுத்த பழுதுபார்க்கும் பணிகளைச் செய்வதை வேதம் கூறுகிறது. நாம் நகரத்தைச் சுற்றிலும் மதில்களைப் பழுது பார்த்துக் கட்டியவர்களைப்பற்றிப் படித்து மறுபடியும் ஆட்டுவாசலின் அருகே வந்து அங்கு நடைபெறும் பணியைப்பற்றி வாசிக்கிறோம். இதிலிருந்து எல்லா தொழில் செய்வோரும் ஆசாரியர்கள் மட்டுமின்றிக் கட்டும் பணியைச் செய்தனர். பலதரப்பட்ட மக்களும் சேர்ந்து, ஒவ்வொருவரின் திறமைக்குத் தக்கதாக தேவபணியைச் செய்ய வேண்டுமென்பதே முறை என்று நாம் அறிய முடிகிறது.
இவ்வாறாக எருசலேமின் அலங்கங்களையும் மதில்களையும் பற்றிய செய்தியினை நாம் அறியமுடிகிறது. இதுதான் தேவனுடைய திருப்பணியின் சிறப்பாகும். கர்த்தர், நம்மை நமது வேலை, திறமை, தகுதி, கல்வி எது எத்தகையதாயினும் தமது திருப்பணிக்கு இசைய வைக்க வல்லவராயிருக்கிறார்.











