அதிகாரம் 5
உள்ளிடைக் குழப்பம்
வசனம் 5:1
ஜனங்களுக்குள்ளே அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
எதிரிகள் தாக்கும்போது தேவனுடைய பிள்ளைகள் ஒன்றுபட்டு செயல்ப்பட்டனர். ஆனால் யூதர்களுக்குள்ளிருந்தே பகைமையான எதிர்ப்புக்கள் தோன்றும்பொழுது, அதன் விளைவாக மனக்கசப்பும் பிரிவினையுமே ஏற்படவேண்டியிருந்தது. தங்களின் மதில்களைக் காத்துக்கொள்ள அவர்கள் எவ்வாறு ஒன்றுபட்ட செயல்ப்பட்டனர் என்பதனை நாம் வாசித்துள்ளோம். ஆனால் இப்போது நெகேமியாவிற்கு உள்ளிடைக் குழப்பம் ஒரு பெரிய தொல்லையாக மாறியது. அது சில காலமாகவே அவர்களுக்குள் இருந்து வந்திருக்கலாம். ஆனால் மதில்கள் கட்டப்படுவதில் சிக்கல்களும் நெருக்கடிகளும் தோhன்றியபோது அந்த உள்ளிடைக்குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது.
அவர்களின் பிரமாண கற்பனைகளின்படி ஒரு குடும்பம் கஷ்டத்தில் அகப்படும்போது மற்ற யூதர்கள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி அவர்களுக்குப் பணமும் உணவும் கடனாகத் தரப்படும். ஆனால் வட்டி வாங்குதல் கூடாது. யார் ஒருவனும் அம்மாதிரியாகப் பெறும் கடனுக்காகத் தன்னை அடிமையாக ஒப்படைக்க முன்வந்தால் அதை ஒப்புக்கொள்ளக்கூடாது என்பது நிபந்தனை. ஏனெனில் அவர்கள் அனைவரும் அடிமைகளாக இருந்துதானே இப்போது மீண்டும் வந்துள்ளனர். ஆகையால் அவர்களில் ஒருவனை அடிமையாக மற்றொருவன் நடத்தக்கூடாது. (லேவி.25:39-42).
வசனம் 5:2-6
அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும். எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி. எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி. ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது. அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள். அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை. எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள். அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
இது பற்றிய கட்டளை, பிரமாணத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏழைகளான சிலரும் அவர்களுடைய மனைவிமாரும், செல்வந்தர்களான யூதர்களின் செயல்களைக் குறித்து கூக்குரலிட ஆரம்பித்தனர். தங்கள் பிள்ளைகளுக்குத் தேவiயான உணவிற்காகத் தானியம் வாங்கின வகையில் கடன் தொல்லைக்கு உட்பட்டனர். மற்றும்பலர் தங்களுடைய நிலங்களையும் வீடுகளையும் கொள்ளும்படி அடைமானமாக வைத்துவிட்டனர். சிலர் ஆயம் செலுத்துவதற்காகப் பணமாகக் கடன்வாங்கியிருந்தனர். இதுபோலக் கடன்வாங்கியவர்கள், தாங்கள் வாங்கியிருந்த கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டபோது தங்களின் ஆண்பிள்ளைகளையும், பெண்பிள்ளைகளையும் அடிமைகளாக ஒப்படைக்க நிர்பந்திக்கப்பட்டனர். இது மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்தது.
அவ்வாறு அடிமையாகப் பெறப்பட்ட ஆண்களையும் பெண்களையும், கொண்டுபோய், வேறு யூதர்களுக்கு, மறுபடியும் அடிமைகளாய் விற்கப்பட்டுப்போனபொழுது, நிலைமை மிகவும் மோசமடைந்தது. அதிர்ச்சி தரக்கூடிய இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது நெகேமியா மிகவும் கோபமடைந்தான். அவனுடைய சத்துருக்கள் பரிகசித்து கேலிபேசியபோதும், தாக்க நினைத்து பயமுறுத்தியபோதும்கூட அவன் அவ்வளவு கோபம் அடைந்ததில்லை. ஆனால் அவனுடைய சொந்த மக்களின் அற்ப நடவடிக்கைகளே அவனைக் கோபப்படுத்தின.
வசனம் 5:7-8
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரையும் நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன். அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
அவன் செயல்ப்படத் துணிந்தான். ஆனால் அதற்குமுன் ஆழந்து சிந்தித்தான். அது, நாம்கூட கடுங்கோபத்துடன் செயல்ப்பட நினைக்கும்போது, ஒரு நல்ல முறை செயல்ப்பாடேயாகும். செய்து விட்டபின் பல அவலச்செயல்களை அது தடுக்கும். ஆனால் நெகேமியாவின் கோபம் அர்த்தமுள்ளதாக இருந்தது. அவன் அதிகாரிகளையும் பிரபுக்களையும் அழைப்பித்தான். அவர்கள்தான் ஏழைகளான தங்கள் சகோதரருக்கு இடுக்கண் விளைவித்து அடிமைத்தனத்தை புகத்த முயன்றவர்கள். நெகேமியா நேரடியாக முதலில் அவர்களைச் சந்தித்து அவர்களிடதர்தில் பேசி, நீங்கள் உங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள், அது தேவகட்டளைக்கு விரோதமான காரியமன்றோ? என்று கூறினான் (யாத். 22:25).
அடுத்து நெகேமியா பெரியதொரு கூடிவரச்செய்து, அவர்களின் குற்றச்சாட்டுகளைக் கேட்கச்செய்தான். நாம் அடிமைகளாக விற்கப்பட்டுப்போன நமது சகோதரர்களை மீட்டு அழைத்து வந்தோமே. நீங்கள் அவர்களை மறுபடியும் அதே அடிமைத்தனத்திற்குட்படுத்த முயற்சிப்பது என்னே? என்று அதட்டிப் பேசினான். இந்த நேரடியான குற்றச்சாட்டுதலுக்குப் பதில் ஒன்றும் கூறமுடியாமல் அவாகள் மௌனமாயிருந்தார்கள். நெகேமியா சொல்வது முற்றிலும் சரியே என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் தாழ்மையாக , ஒப்புக்கொண்டதைப் போலிருந்தனர்.
வசனம் 5:9-10
பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல. நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா ? நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
மேலும் நெகேமியா நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல. புறஜாதியாருக்கு, முன்மாதிரியாக இருக்கும்படி நீங்கள் தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டாமா? என்று அவர்களிடம் பேசிச்சொன்னான். நெகேமியா இதுபோல் சொல்லும் தகுதியைப் பெற்றிருந்தான். அவனும் மற்ற யூதர்களுக்குக் கடனாகப் பணமும் தானியமும் கொடுத்திருந்தான். ஆனால் அவன் அனைத்தையும் பிரமாண சட்டங்களுக்குப்பட்டே செய்திருந்தான். ஆனால் அவன் தன்னையும் மற்ற அவர்களுடன் சேர்த்தே பேசினான். இந்தக் கடன்கள் யாவும் வட்டியின்றி இலவசமாக இருக்கவேண்டும் என்று அவன் முடிவெடுத்தான் போலும் ஏழைகளாக இருந்த அந்த யூதர்களில் அநேகர் தங்கள் சொந்த வருமானத்திற்கான வேலை செய்தலும், மதில்கள் கட்டும் பணியில் வேலைசெய்தலுமாகிய இரண்டு வேலைகளையும் செய்யவேண்டியதால் மிகவும் சிரமப்பட்டனர். நாட்டில் நிலவிய பஞ்சம் வேறு அவாகளை வாட்டியது. ஒருவருக்கொருவர் மிகவும் தாராளமாக உதவிசெய்யவேண்டிய நேரம் அது. திருப்பித்தருவதை எதிர்பாராமல் கொடுக்கவேண்டிய தருணம் அது.
வசனம் 5:11-12
நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம். நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள். அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.
இப்போது நெகேமியா அவர்களுக்குக் கட்டளை விதிக்கிறான். அவர்களுடைய நிலங்களையும் திராட்சத் தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் வீடுகளையும் நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சைரசத்திலும் எண்ணெயிலும் நீங்கள் தண்டிவருகிற பணத்தையும் வட்டி பங்குகளையும் திருப்பிக்கொடுத்து விடுங்கள். அதை இன்றைக்கே செய்யுங்கள் என்று கூறுகிறான்.
கட்டளை: எந்தக் கடனுக்கும் வட்டி இருக்கக்கூடாது. கடன்பாக்கிகள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை அது. எல்லா பிரபுக்களும் இந்தக் கட்டளையை உடனே ஏற்றுக்கொண்டனர். ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான் என்று வேதம் கூறுகிறது (நீதி.9:8). அவர்களும் நெகேமியாவின் கடிந்துகொள்ளுதலை உடனே ஏற்றுக்கொண்டதால் ஞானமுள்ளவர்கள் எனக் கொள்ளப்படுதல் வேண்டுமன்றோ? நீர் சொல்லுகிறபடியே செய்கிறோம் என்று அவர்கள் கூறியவுடன், நெகேமியா ஆசாரியரை அழைப்பித்து, அந்த வார்த்தையின்படியே செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டான்.
வசனம் 5:13
நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர். இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன். அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள். பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
நெகேமியா எழுந்து தன் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும், அவன் சம்பாத்தியத்திலுமிருந்து தேவன் உதறிப்போடக்கடவர் என்று கூறினான். அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள். இவ்விஷயத்தில் நெகேமியா எல்லாரையும் ஒருமனப்படச் செய்தான். அவர்களின் தவறான போக்கு பெரியதொரு குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கக்கூடியதாயிருந்திருக்கும். ஆனால் நெகேமியா தனது தகுதியான வார்த்தைகளினால் அவர்களுடைய குற்றங்களை, அவர்களுக்கு உணர்த்திக்காட்டி, தேவனுக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு விளங்கச் செய்தான். அவர்கள் தவறுகிறவர்களாயிருந்தால் தங்கள் செயல்களுக்காக கர்த்தருக்கல்லவோ கணக்குச் சொல்ல வேண்யவர்களாயிருப்பர்.
வசனம் 5:14-18
நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம்வரைக்கும்மிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள். அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள். நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை. அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன். என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள். யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது. பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
இவ் வசனங்களிலிருந்து நெகேமியா யூதாவின் தேசத்திலே 12 ஆண்டு காலம் ஓர் அதிபதியாகப் பணியாற்றினான் என்பது தெரியவருகிறது. நெகேமியா எவ்வாறு வாழ்ந்தான் என்பதனை இவ்வசனங்களில் விளக்குகிறான். அவன் அதிபதியாகப் பணியாற்றிய காலங்களிலே அவன் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கவில்லை. அவனுக்கு முன் இருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து அவர்கள் கையிலே அப்பமும் திராட்சைரசமும் 40 சேக்கல் வெள்ளியும் வாங்கி வந்தார்கள். நெகேமியா இதனை அவர்கள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்தார்கள் என்று கூறுகிறான். அதிபதிகளின் வேலைக்காரார்கள் முதலாய் ஜனங்களின்மேல் அதிகாரம் செலுத்தினார்கள் என்று வேதம் கூறுகிறது. நெகேமியா தனது வேலையைப் பற்றிக் கூறும்போது சுருக்கமாக, நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகிறான். அதற்குக் காரணம் அவன் நான் தேவனுக்குக் பயந்ததினால் என்று கூறுகிறான். சாலோமோன் குறிப்பிடும்போது கர்த்தருக்குப் பயப்படுத்தலே ஞானத்தின் ஆரம்பம் என்று கூறுகிறான் (நீதி.1:7). ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை, அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன் என்று கூறும் நெகேமியா, தன்னைப் பணக்காரனாக்கிக்கொள்ள அங்கு வாழ்ந்திருக்கவில்லை. கர்த்தருடைய வேலையயைச் செய்யவே அங்கு இருந்தான். அவனுடைய வேலைக்காரர் அனைவரும் அவனுடனே இருந்தனர். என் வேலைக்காரர் அனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்கு கூடி வந்தார்கள் என்று நெகேமியா எழுதுகிறான். அந்த வேலைக்காரர் தேவனுக்கென்று விடாமுயற்சியுடன் இருந்தால் தேவனுடைய திருப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும், தேவனுடைய பணிக்குத் தடங்கல் வராதபடி, தங்களின் உரிமைக் கோரிக்கைகளை ஒதுக்கி வைக்கவேண்டும் (1.கொரி.9:12). அது நமக்கு ஒருவேளை பேரிழப்பை உண்டாக்கலாம். நெகேமியாவிற்குக்கூட அதிக நஷ்டம் உண்டானதை வேதம் கூறுகிறது. அவன் அவனுடனிருந்த 150 பேர்களடங்கிய ஒரு கூட்டத்தினரையும், மற்றும் பலரையும் போஷிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய நல்லுணவின் விளக்கத்தைக் கூறுமிடத்து, ஒரு காளையும், ஆறு ஆடுகளும், கோழிகளும், திராட்சைரசம் ஆகிய அனைத்தையும் என்று அவன் கூறிப்பிடுகிறான் என்ற போதிலும், அவன் ஓர் அதிபதி என்ற முறையில் பெறப்படவேண்டிய படிகளை அவன் கோரிப்பெறவில்லை. அதுமட்டுமல்ல அவன் அந்தப்படிகளைப் பெறாததற்குக் கூறும் இரண்டாவது காரணம், அது ஜனங்களின்மீது பாராமான ஒரு சுமையாகும் என்கிறான். ஆகவே நெகேமியா தேவனுக்குப் பயந்து நடந்தது மட்டுமன்றி ஜனங்களுக்காக மிகவும் பரிவுகாட்டும்படியும் நடந்துகொள்கிறான். நியாயசாஸ்திரி கூறும் நியாயப்பிரமாண சட்டத்தின்படியே, நெகேமியா நடந்து கொண்டான் எனக் கூறலாம். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.
சில வேளைகளில் நாம் நமது தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் அன்புகூருவதாகக் கூறிக்கொண்டு, நம்முடன் வசிக்கும் ஒருவருக்கு, பணமோ, பொருளோ, உதவியாகக் கொடுக்க முன்வருவதில்லை. இது கிறிஸ்தவ சமயத்தின் இருமனமுள்ள வாழ்க்கையாகும். நன்மை, தீமை ஆகிய இரண்டிற்குமே நாம் தேவனுக்கு கணக்கொப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.
வசனம் 5:19
என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
இப்போது நெகேமியா, நான் இந்த ஜனத்திற்காக செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்று உரிமையோடு கேட்கத்தக்க தகுதியுள்ளவனாய் தேவனுடைய சந்திதிமுன் செல்கிறான்.












