அதிகாரம் 10
உடன்படிக்கை முத்திரை போடப்படல்
வசனம் 10:1-29
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, செராயா, அசரியா, எரேமியா, பஸ்கூர், அமரியா, மல்கிஜா, அத்தூஸ், செபனியா, மல்லூக், ஆரீம், மெரேமோத், ஒபதியா, தானியேல், கிநேதோன், பாருக், மெசுல்லாம், அபியா, மீயாமின், மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும், லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும், அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், மீகா, ரேகோப், அசபியா, சக்கூர், செரெபியா, செபனியா, ஓதியா, பானி, பெனினூ என்பவர்களும், ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, புன்னி, அஸ்காத், பெபாயி, அதோனியா, பிக்வாய், ஆதின், ஆதேர், இஸ்கியா, அசூர், ஒதியா, ஆசூம், பெத்சாய், ஆரீப், ஆனதோத், நெபாய், மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, பெலத்தியா, ஆனான், அனாயா, ஓசெயா, அனனியா, அசூப், அல்லோகேஸ், பிலகா, சோபேக், ரேகூம், அஷ்பனா, மாசெயா, அகியா, கானான், ஆனான், மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே. ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
அந்த யூதர்கள் அந்த உடன்படிக்கையை எழுதி முடித்தனர். எல்லா குடும்பங்களின் தலைவர்களும், ஆசாரியர்களும், அதிலே கையொப்பமிட்டனர். நெகேமியா முதலிலும், அவருக்குப்பின் லேவியின் குடும்பத்தலைவர்களும், பின்பு மற்றெல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்டனர். இவர்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாக உடன்படிக்கையை ஆணையிட்டு பிரமாணம்பண்ணினார்கள். மற்ற எல்லாரும்கூட, தலைவர்களுடன் சேர்ந்துகொண்டு மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்று ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும், சகல நீதி நியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு அவைகளின்படி செய்வோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
வசனம் 10:30-33
நாங்கள் எங்கள் குமாரத்திகளைத் தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும், தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக்கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள். மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காகச் சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
அவர்கள் பண்ணின உடன்படிக்கையிலே நான்கு அம்சங்களைக் காணமுடிகிறது. (1) அந்நிய தேசத்திலே பெண்கொடுக்காமலும், பெண்கொள்ளாமலும் இருத்தல் – அந்நியர் என்ற கூறும்போது இனத்தின் அடிப்படையல்ல, தேவனை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற அடிப்படையிலேயே அந்நியர் எனப்பட்டனர் – இந்தக் கொள்கை இன்றும் நடைமுறையில் உள்ளது (2.கொரி.6:14-16).
(2) ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரித்தல் – இதுவரை அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஓரளவுதான் பரிசுத்தமாக ஆசரித்துவந்தனர். உதாரணமாக ஓய்வுநாளிலே அவர்கள் சரக்குகளை விற்பதைமட்டும் நிறுத்திவைத்திருந்தனர். ஆனால் அந்த இராஜ்யத்தின் மக்கள் விற்பதற்காகக் கொண்டுவந்த, தேவைப்படும் பொருட்களை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வதை, ஓய்வுநாட்களில் அவர்கள் நிறுத்திவைக்கவில்லை. ஆனால் இப்போது அவ்வாறு செய்யமாட்டோம் என்று உடன்படிக்கைபண்ணினார்கள் (உபா.5:12-15).
(3) நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ளபடி ஏழாம் வருஷத்தில், நிலத்தைப் பயிரிடாமல் விட்டுவிடுதல் (யாத்.23:10-12, லேவி.25:4-7). அதன்படி ஏழாம் வருஷத்திலே நிலத்தில் விளைந்த யாதொன்றையும் அவர்கள் விற்பமாட்டார்கள். நடைமுறையில் கைக்கொள்ளாத கற்பனைகளில் இதுவும் ஒன்று (2.நாளா.36:21). அந்தப் பாவத்திற்காக தேவன் அவர்களின் நிலங்களைச் சபித்து பயனற்றதாக 70 ஆண்டுகாலம் – அவர்கள் சிறைப்பட்டிருந்த காலத்தில் – விருதாவாக இருக்கச்செய்தார். அதனுடன், அவர்கள் நாங்கள் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்று ஆணையிட்டுக்கொண்டனர். நாமும் செய்யவேண்டிய முக்கியமான கடமையும் அதுவே. நாமும் மற்றவர்களிடம் வற்புறுத்தி அதிகம் பெறக்கூடாதன்றோ?
(4) கடைசியாக அவர்கள் ஆணையிட்டுப் பண்ணிக்கொண்ட பிரமாணம் – தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைகளுக்கும் பராமரிப்பிற்கும் ஆண்டுதோறும் ஒரு தொகையை செலுத்துதல். நாமும் நம்முடைய ஆலயங்களின் பராமரிப்புச் செலவிற்காக மற்றவர்களிடம் கேட்பதைவிட நம்மிடமே கேட்டுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். – அது பணம் மட்டுமல்ல, சகல பொருளாகவும் இருக்க அனுமதிக்கலாம். தேவன் நமக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறாரே.
இவ்வாறாக அவர்கள் உடன்படிக்கை செய்து ஆணையிட்டு பிரமாணம் பண்ணிக்கொண்டார்கள்.
வசனம் 10:34-39
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம். நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும், நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம். பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புக்களைக் கொண்டுவரவேண்டியது. இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.
அடுத்து ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் வெவ்வேறு பணிகளைக் கொடுக்கத் திட்டம் செய்தனர். அதனால் எல்லா வேலைகளும் நடந்தேறவும் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படவும் வாய்ப்பு ஏற்பட்டது. பலிபீடத்தின்மேல் எரிப்பதற்குத் தேவையான விறகு காணிக்கைகளைக் கொண்டு வருவதற்கான குழுவை ஏற்படுத்த சீட்டுப்போடப்பட்டது. அடுத்து வருஷந்தோறும் தேவனுடைய ஆலயத்திற்குத் தேசத்தின் முதற்பலனையும், விருட்சங்களின் முதற்கனிகளையும் கொண்டுவருவது குறித்தும் திட்டம் பண்ணிக்கொண்டனர். அடுத்து ஆடுமாடுகளில் தலையீற்றுகளையும், திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், ஆசாரியரிடம் கொடுக்கத் திட்டம் பண்ணிக்கொண்டனர். நிலப்பயிர்களின் தசமபாகம் லேவியருக்குக் கொடுக்கப்பட்டது. அது தேவனுடைய பொக்கிஷ அறையில் சேர்க்கப்பட்டது. தேசத்திலே நிலத்தின் வித்துpலும், விருட்சங்களின் கனியிலும் தசமபாகமெல்லாம் கர்த்தருக்கு உரியது. (லேவி.27:30)
லேவியர்களும் தங்களுடைய காணிக்கைகளில் தசம பாகத்தைக் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும். இவை அனைத்தும் தேவனுடைய பொக்கிஷ அறையிலே சேர்க்கப்பட்டது. ஆரோனின் வழிவந்தவர்களாகிய ஆசாரியர்கள், முன்னின்று அனைத்துப் பணிகளையும் செய்துவைக்க திட்டம்பண்ணிக்கொண்டார்கள் (எண்.18:26).
ஆகையால், ஒவ்வொருவரும் தனது வருமானத்தின் தசம பாகத்தைக் கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும் என்று நியாயப்பிரமாண சட்டம் கூறுகிறது. சட்டமே இப்படியென்றால் கிருபையின் காணிக்கை எத்தனை அதிகமாய் இருக்கவேண்டும்? நமது காணிக்கைகள் உற்சாகமாய்க் கொடுக்கப்படவேண்டும். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2.கொரி.9:7). இந்தக் காணிக்கைகள் அனைத்தும் தேவனுடைய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டது என்று வேதம் கூறுகிறது. நமது காணிக்கைகளும் அவ்வாறே சேர்க்கப்பட்டு தேவனுடைய சித்தத்தின்படி குறித்துவைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். எத்தனை சிலாக்கியமுள்ள தேவகிருபை.
இந்த அதிகாரத்தின் கடைசி வரிகள் அனைத்தும் செயலையும் குவித்தெடுத்துக்கூறுகிறது. தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லை (வச.39). இஸ்ரவேலர் தேவனுடைய ஆலயத்திற்கு ஒழுங்காக வருகை தந்தவர்கள். அந்தப் புதிய நாட்டிலே இப்போது அவர்கள் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்றும் தேவன் அவர்களோடு இருக்கிறார் என்றும் நம்பினார்கள். மேலும் அவர்கள் தேவனுடைய ஆலயம் ஸ்திரமாய் இருந்தவரையில் அவர்களுக்கு எந்தவிதமான இக்கட்டும் நிச்சயமாய் ஏற்படாது என்று அவர்கள் நம்பினார்கள். ஆகையால் அவர்களுடைய வாழ்க்கையில் சற்று அஜாக்கிரதையும் ஏற்படலாயிற்று. அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்து இஷ்டமானபடியெல்லாம் வாழத்தலைப்பட்டார்கள். பிறகு தேவனுடைய ஆயலத்திற்குச் சென்று, எல்லாம் நல்லபடியே நடைபெறுவதாக நினைத்துக்கொண்டனர். தீர்க்கதரிசிகள் இவர்களுடைய செயல்கள் குறித்து இரவும் பகலும் எச்சரித்து தீர்க்கதிரிசனம் உரைத்தனர். யூதாவின் கடந்த கடைசி மூன்று இராஜாக்களின் ஆட்சியின் காலங்களிலே, எரேமியா தீர்க்கதரிசி அவர்களை மிகவும் கடுமையாய் எச்சரித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்கு தூபங்காட்டி,, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப்பின்பற்றி, பிற்பாடு வந்து என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே, எனக்கு முன்பாக நின்று இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோம் என்று சொல்வீர்களோ? என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்கு கள்ளர் குகை ஆயிற்றோ? இதோ நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.7:9-11). மேலும் கர்த்தர் அவர்களை எச்சரித்து, அவர் என்ன செய்வார் என்று கூறினார். நான் உங்களை என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன். தேசம் பாழாகும் என்று எச்சரித்தார். அவர் எச்சரித்தபடியே அவர்களுக்குச் செய்தார். ஆகையால் அந்த இஸ்ரவேலர், இப்போது தேவனுக்குப் பிரியமான கீழ்ப்படிதலாக இருக்கும் என்று, தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுதலையென்று திட்டம்பண்ணி ஆணையிட்டார்கள். அது ஒரு மகிழ்ச்சியான ஆரம்பம்தான்.









