அதிகாரம் 12
ஆசாரியர்களின் பெயர்கள்
இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின் புத்தகத்தில் மூன்றுமுறை குறிக்கப்பட்டு, வேறு சில ஆசாரியர்களின் தலைவர்களின் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் குடும்பத் தலைவர்களின் பெயர்களும் லேவியர்களின் தலைவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
வசனம் 12:24
லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன், யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.
லேவியர்கள் தேவனை எவ்வாறு துதித்தார்கள் என்று விளங்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். அவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து எதிரெதிரே நின்று தேவனைத் துதித்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாக, முதலில் ஒரு குழு துதியை ஏறெடுக்க அதன்பின் அதற்கு எதிர்பதிலாக மற்ற குழு துதியைச் செலுத்தியது. அந்தப் பெயர்களில் குறிக்கப்பட்டுள்ள சிலர் பாடகர்களாகவும் அதே நேரத்தில் காவல் காக்கிறவர்களாகவும் பணியாற்றி வந்ததாகக் காண்கிறோம் (வச.8,9,24-25). ஒரு கூட்டத்தார் முதலில் துதிப்பாடல் பாடவும் அதற்கு பதிலாக மற்றொரு குழுவினர் பாடவும், மாறி மாறி பாடிய விதம் கேட்கப்பட்டதற்கு மிகவும் இனிமையான குரலோசையாக இருந்திருக்கவேண்டும்.
வசனம் 12:27
எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
அலங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு மிகவும் ஆயத்தமாக இருந்தது. அதற்காக எங்குமிருந்த லேவியரையும், பாடகர்களையும் எருசலேமுக்கு வந்து சேரும்படி அழைப்புவிடுவித்தனர். அவர்கள் வரும்போது எல்லாவிதமான தங்களுடைய இசைக்கருவிகளையெல்லாம் கொண்டுவரும்படி அழைக்கப்பட்டனர். மற்றுமொரு சுவையான செய்தி யாதெனில், அந்தப் பாடகர்கள் தங்கள் இருப்பிடமாக, எருசலேமைச் சுற்றிலும் பல கிராமங்களை அமைத்திருந்தனர். அந்தக் கிராமங்களில் தங்கியிருந்ததினால், அவர்களின் பணியிடமாகிய தேவனுடைய ஆலயத்திற்கு வெகு அருகாமையிலேயே அவர்கள் தங்கியிருந்தனர் எனலாம். இதற்கு உதாரணமாக, இராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்காக, அருகிலேயே வாசம்பண்ணின குயவராயிருந்த (1.நாளா.4:22) அவர்களைக் கூறலாம். நமது வாழ்க்கையிடமும் தேவனுக்கடுத்த பணிக்கும், துதிக்கும் ஏற்ற இடத்தின் அருகிலேயே அமைந்திருத்தல் வேண்டும்.
வசனம் 12:30
ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.
முதலாவது ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம் பண்ணிக்கொண்டனர். அடுத்து ஜனங்களையும், பட்டண வாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம் பண்ணினார்கள். நாமும் நமது இருதயங்களைப் பரிசுத்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்று யாக்கோபு 4:8ல் வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது. அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிற எவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுவான் (1.யோ.3:3) என்று வேதம் கூறுகிறது. அதுமட்டுமின்றி 1.பேதுரு 1:22ல் கூறியுள்ளபடி, ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்பு கூறுவதனால் நம்மைச் சுத்தமாக்கிக்கொள்ள முடியும். அலங்கங்கள் பிரதிஷ்டைக்காக ஆயத்தப்படுத்தப்பட்டது.
வசனம் 12:31
அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன். அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
இந்த வசனத்தில் நெகேமியா செய்தது என்ன என்பதனை அவன் விளக்கி எழுதியுள்ளான். வழக்கம்போல் நெகேமியா யாவற்றையும் ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தான். முதலாவது தலைவர்கள் அலங்கத்தின் மேல் ஏறிப்பொனார்கள். அடுத்து பாடகர்கள் இரண்டு பிரிவினராய் பிரிந்து, எதிரெதிர் திசையில் அலங்கத்தைச் சுற்றி நடந்து வந்து தேவஆலயத்தண்டையிலே சந்தித்தனர். இந்தப் பாடகர் குழுவினர் அவ்வாறு சென்றதன் நோக்கம் அவர்கள் செல்லும் வழியயெல்லாம் துதி பாடல்களைப் பாடியவண்ணம் தங்களின் இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்பதேயாகும். ஒரு பாடகர் குழுவினருடன் எஸ்றாவும் மற்றொரு குழுவினருடன் நெகேமியாவும் சென்றனர். அந்த இரண்டு தேவனுடைய பிள்ளைகளுக்கும் அன்று மிகவும் ஒரு மிகழ்ச்சியான நாளன்றோ! ஒவ்வொரு தனிமனிதனும் அந்தப் பாடகர் குழவினருடன் செல்லும்போது, அவன் கட்டிய மதில் பகுதியின் பக்கமாகச் செல்கையில் எவ்வளவு உற்சாகமும் மகிழ்சியும் அடைந்திருப்பானன்றோ! அந்த நாளின் மகிழ்ச்சிக்கு அவன் ஒருவன் செய்து முடித்த பணியும் முக்கியமானதென்று அவன் நிச்சயம் அறிந்திருப்பான். இப்படியாக அலங்கங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
இந்த நாளின் முக்கியம் தேவனைத் துதிசெய்யவேண்டும் என்பதே. அதற்காகவே அந்த இரண்டு பாடகர் குழுக்களும் தேவனுடைய ஆலயத்தினருகே சந்தித்தன. நெகேமியாவும் அவனுடனிருந்த பாடகர் குழுவும் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் சத்தமாய்ப் பாடினார்கள் என்று நெகேமியா எழுதுகிறான். அடுத்து, அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் அவர்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும்கூட களிகூர்ந்தார்கள். எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது. எவ்வளவு குதூகலமான ஆரவாரமாய் அது இருந்திருக்கவேண்டுமன்றோ!
வசனம் 12:44-47
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள். ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள். பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலோமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது. ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள். அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள். லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.
இந்த அதிகாரத்தில் தாவீது ராஜாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் முறை ஒழுங்குகள் அவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதற்காக ஆறுமுறை குறிப்பிட்டுள்ளதை நாம் காண்கிறோம். தாவீது நன்றாய் சுரமண்டலம் சாசிப்பதிலே தேறினவன் (1.சாமு.16:18). அவன் சங்கீதம புத்தகத்திலே உள்ள பல சங்கீதங்களைப் பாடினவன். ஆகையால் அவனுக்குத் தேவனைத் துதிப்பதிலே உள்ள இசைகளைத் திட்டம்பண்ணுவதில் பெரும்பங்கு உண்டு எனலாம். ஆனால் இதைவிட அதிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது இரு இடங்கிளலே தாவீது Nதுவனுடைய மனிதன் என அழைக்கப்படுவதேயாகும். அதைவிட சிறந்த வார்த்தைகள் அவனைப்பற்றிக் கூறப்பட்டிருக்க முடியாது.
வழக்கமான சுறுசுறுப்பின்படியே நெகேமியா பொக்கிஷங்களையும், படைப்புகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளுக்கு காவலையும் ஏற்படுத்தினான். ஜனங்களுக்கு அவர்கள் செலுத்தவேண்டிய முறைமையின்படியான தசம பாகங்களைக் குறித்து நினைவுபடுத்தவேண்டிய தருணம் அதுவன்றோ? அவர்கள் மகிழ்ச்சியோடே துதித்துப் பாடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் காணிக்கை செலுத்தவேண்டிய கடமைபற்றியும் உணர்த்தப்படவேண்டுமன்றோ? அதைச் செய்வதற்கும், காணிக்கை செலுத்தவும் மக்கள் மகிழ்ச்சியாகவேயிருந்தனர். தேவன் நமது துதிதோத்திரங்களுடனே நாம் செலுத்தவேண்டியதை இணைத்தேயுள்ளார் எபிரெயர் 13:15-16ல் கூறியுள்ளபடி நாம்…. ஸ்தோத்திரபலஈpயை எப்போதும் செலுத்தக்கடவோம். அதே நேரத்தில் நன்மை செய்யவும் மறவாதிருக்கவேண்டும்.










