- துரும்பும் உத்திரமும்
மத்தேயு 7:1-5
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் 28ம் அதிகாரம் 3ம் வசனம் முதல் 6ம் வசனம் வரையிலும் படிக்கிறபோது ஜனங்கள் எவ்வளவு விரைவாகப் பவுலைப்பற்றி நிதானித்தார்கள் என்பதைக் காணமுடிகிறது. முதலில் அவனைக் கொலை பாதகன் என்று நிதானித்தார்கள். பின்னர் தேவனென்று சொன்னார்கள். இவ்விதமாய்த் தீர்ப்புக் கூறுதல் தவறு என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. தீர்ப்புக் கூறுதல் ஆபத்தானது. தேவனே தீர்ப்புக்கூறத் தகுதியுள்ளவர். நாம் அன்பு பாராட்ட அவர் விரும்புகிறார். தீர்ப்புக் கூறுவதை அவரிடமே விட்டு விடச் சொல்கிறார்.
- குறை கூறுதலும் நியாயம் தீர்த்தலும் : வசனம் 7:1-2
குறைகூறாதே. அப்படியானால் நீயும் குறைகூறப்படமாட்டாய். நீ மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே – நீ மற்றவர்களை நடத்துகிறதின்படியே உனக்கு அளக்கப்படும் – நீயும் நடத்தப்படுவாய்.
(அ) குற்றப்படுத்துதல் கிறிஸ்தவம் அல்ல – யாக் 4:12.
(ஆ) குற்றப்படுத்துதல் கட்டுப்பாடின்மையை வெளிப்படுத்துகிறது. தேவனின் பிள்ளைகள் கிறிஸ்துவின் கட்டுப்பாடுக்குள்ளிருக்கக் கற்றிட வேண்டும் – 1.கொரி.9:27
(இ) குற்றப்படுத்துதல் தயவு இன்மையை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவர்கள் மனஉருக்கமுள்ளவர்களாயும், மன்னிக்கிறவர்களாயுமிருக்க வேண்டும் – எபேசி.4:32
- கரிசனையும் நியாயந்தீர்த்தலும் : வசனம் 7:3
சகோதரன் கண்ணிலுள்ள துரும்பைக் காணுமளவு கரிசனை காணப்படுகிறது. அதேவேளை தன் கண்ணிலுள்ள உத்திரத்தைப் பற்றிய கரிசனை இல்லை.
(அ) மற்றவர்களுடைய பாவத்தைக் காண முற்படல்: பவுல், உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள் என்று தீமோத்தேயுவுக்குச் சொன்னார் – 1.தீமோ.5:22
உனது பாவத்தை முதலில் பார். அப்பொழுது மற்றவர்களின் பாவம் உன் கண்ணுக்குத் தெரியாது மறைந்து விடும். மற்றவர்களை நியாயந்தீர்க்க நீ யார்? – ரோமர் 14:14.
(ஆ) மற்றவர்களின் இறுமாப்பைக் காணுதல்: நீ இறுமாப்பு உள்ளவனா என்பதை முதலில் அறிந்து கொள். நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே -1.கொரி.4:5
- குற்றப்படுத்தலும் நியாயாந்தீர்த்தலும்: வசனம் 7:4
உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டுமா என்று நீ சொல்வதெப்படி?
(அ) தினமும் சுயத்தைச் சுத்திகரிக்க வேண்டும். 2.கொரி.7:1
(ஆ) நாவையும் உதட்டையும் கட்டுப்படுத்த வேண்டும். சங்.34:13. நாவை பொல்லாப்புக்கும் உதடுகளை கபட்டு வசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும். அப்படியானால் நாம் அநேக உபத்திரவங்களுக்குட்படாதிருப்போம்.
(இ) நம்மை நாமே ஆராய்ந்து சோதித்து அறிய வேண்டும். சங்.139:23-24. தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் என்ற தாவீதைப் போல் நாமும் தினமும் ஜெபிக்க வேண்டும்.
- தீர்ப்புக்கூறாதபடி சுத்தமாக்குதல்: வசனம் 7:5
(அ) நீ மற்றவனைச் சுத்திகரிக்க முற்படுமுன் உன்னைச் சுத்திகரித்துக் கொள். பின்னர் மற்றவன் சுத்திகரிக்கப்பட உதவிசெய்.
(ஆ) உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு.
(இ) உன் கண்ணிலுள்ள உத்திரம் எடுக்கப்பட்டபின் உன் சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பதற்கும் எடுத்துப் போடுவதற்கும் இலகுவாயிருக்கும். யாக்கோபு 4 ஆம் அதிகாரம் 8ம் வசனத்தைக் கருத்தாய் படியுங்கள். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் முதலில் நாம் தேவனோடு உறவு கொண்டிருக்க வேண்டும். மாயமான வாழ்வு நடத்தி மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவியத்தில் அனுகூலமாயிருக்க முடியாது.
பிறரை நற்குணம் இல்லாதோர் என்று நியாயந்தீர்ப்போர் நற்குணம் இல்லாதோரே என்பதைக் காணலாம். தன் குறையை மறைப்பதற்காகவே பிறரில் குறை காணுகின்றனர். பிறரை நியாயம் தீர்ப்போர் தேவனோடு நெருங்கிய உறவு உள்ளவர்கள் அல்ல. அவர்கள் சிறந்த கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவர் அல்ல. நியாயம் தீர்ப்பது தேவனுக்குரியது.









