- மெய்யான திராட்சச் செடி
யோவான் 15:1-17
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான், அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள், அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என்சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
மறுபிறப்படைதல் முடிவு அல்ல. இது கிறிஸ்துவின் ஓர் ஆரம்பநிலையே. இது புது வாழ்வு. அவருக்குள் வாழ ஆரம்பிக்கும்போது அவரது பிரசன்னத்தை எப்போதும் உணர்ந்திட முடியும். அவ்வாறு கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு நடத்துவோர் முதலில் கிறிஸ்துவின் பக்குவமடைகின்றனர். பின்னர் மற்றவர்களைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வருகின்றனர்.
- திராட்சைத் தோட்டக்காரர்: வசனம் 15:1-2
(அ) பிதாவின் கரிசனை: வசனம் 1 – கிறிஸ்து மெய்யான திராட்சச் செடி. அவரது பிதா திராட்சைத் தோட்டக்காரர். இவர் திராட்சச் செடியின்மீது அதிக கரிசனையோடிருக்கிறார்.
(ஆ) பிதாவின் பராமரிப்பு: வசனம் 2 – திராட்சத் தோட்டக்காரராகிய பிதா அதிகக் கனி கொடுக்கும்படி கொடியைச் சுத்தம்பண்ணுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையிலுள்ள தடங்கல்களைத் தேவன் அப்புறப்படுத்துகிறார் என்பதை இது தெரிவிக்கிறது. நீதி 3:11-12.
- சுத்தம் செய்தல்: வசனம் 3
(அ) செயல்களைச் சுத்தம் செய்தல்: கலா.5:16 – ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.
(ஆ) நினைவுகளைச் சுத்தம் செய்தல்: நீதி 23:7 – இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே மனிதன் உள்ளான். ஓருவனது இருதயத்தின் நினைவு அவனது குணத்தை வெளிப்படுத்துகிறது. எனவே நினைவுகளைச் சுத்தம் செய்தல் அவசியம். அதற்கு உபதேசம் தேவை.
(இ) அன்பைப் புதுப்பித்தல்: 1.கொரி 13 – கிறிஸ்தவ வாழ்க்கையின் அன்பு தினம் வளர்வதாக இருக்க வேண்டும்.
- ஒத்துழைத்தல்: வசனம் 15:4-6
(அ) நிலைத்திருத்தல்: வசனம் 4 – நிலைத்திருத்தலில் உறவைக் குறிக்கிறது. 1.யோ.1:7. காத்திருத்தலும் அவசியம். ஏசாயா 40:31.
(ஆ) சார்ந்திருத்தல்: வசனம் 5 – அவரின்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது. அவரோடிருந்தால் எல்லாம் முடியும். பிலி 4:19.
(இ) அழிவு: வசனம் 6 – கனி கொடாதவைகள் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். மனந்திரும்புதலும் கனி கொடுத்தலும் அவசியம். லூக்கா 13:4. புதிய வாழ்க்கை அவசியம். 2. கொரி 5:17 இல்லையேல் அழிதல் உறுதி.
- அர்ப்பணித்தல்: வசனம் 157-8
(அ) ஜெபம்: வசனம் 7
(1) கேட்டுக் கொள்வது செய்யப்படும்
(2) தேவனின் பதில் கிடைக்கிறது
(ஆ) மகிமைப்படுதல்: வசனம் 8 – கனிகொடுக்கும்போது பிதா மகிமைப்படுகிறார். அப்போது நாம் இயேசுவின் சிஷர்களாகிறோம்.
- கட்டளைகள்: வசனம் 15:9-12
(அ) நேர்மையான அன்பு: வசனம் 9 – தேவன் நம்மீது கொண்டுள்ள அன்பு போன்று நாம் மற்றவர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும்.
(ஆ) நிச்சயமான அன்பு: வசனம் 10 – அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது அவரில் அன்புகூருகிறோம். யோ.14:15.
(இ) வெற்றி சிறக்கும் அன்பு: வசனம் 11. கீழ்ப்படிதல் சந்தோஷத்தைக் கொண்டு வருகிறது. யோவான் 16:24.
(ஈ) அர்ப்பணித்த அன்பு: வசனம் 12 – அவர் அன்பாயிருந்ததுபோல் அன்பாயிருக்க வேண்டும் மத்.22:39.
- செய்யவேண்டியவை: வசனம் 15:13-17
(அ) அளவிடமுடியாத அன்பு – வசனம் 13 – அவரது அன்பு சிலுவையில் வெளிப்பட்டது. யோவான் 3:16, 1.யோவான் 3:16. அதனை நாம் வெளிப்படுத்தவேண்டும்.
(ஆ) அவ்வன்பினை நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலம் வெளிப்படுத்தலாம். அவரது கற்களைகளைக் கைக்கொள்ளும்போது அவரது சிநேகிதராகிறோம். வசனம் 14.
(இ) வசனம் 15-17 – அவரது அன்பு கொடுக்கிறது. அவரது அன்பு நம் சுகதுக்கத்தில் பங்கு கொள்ளுகிறது. அவ்வன்பு பாவத்திலிருந்து மீட்டெடுக்கிறது. மாற்கு 16:16-20.
நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறீர்களா? அவரோடு தினமும் நடக்கிறீர்களா? அவரோடு தினமும் பேசுகிறீர்களா? தினமும் வளருகிறீர்களா? கனிகொடுக்கிறீர்களா? இழந்துபோனவர்களாகக் கிறிஸ்துவுக்காய் ஆதாயப்படுத்துகிறீர்களா? உங்களில் காணப்படும் தேவையற்றவைகளை அப்புறப்படுத்த அவருக்கு இடமளிக்கிறீர்களா?













