- ஊதாரியான குமாரன்
லூக்கா 15:11-32
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரih நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான், ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கெட்டுப்போன ஒருவன் மனம் திரும்பி பரலோகப் பிதாவிடம் வருவதைக்குறிப்பிடுகிறார். அவனது பல தன்மைகளை நாம் காண்கிறோம்.
- அவன் தகப்பனுக்கு விரோதமாக கலகம் செய்து ஆஸ்தியை கேட்டான்.
- பாவத்தில் வாழ்ந்தான். ஆனால் பாவம் திருப்பதியளிக்கவில்லை.
- மனம் வருந்தினான். தவறை உணர்ந்தான்.
- திரும்ப வந்தான். ஏற்றுக்கொள்ளப்பட்டான்.
- சுயநலமுள்ள மகன்: வசனம் 15:11-12
(அ) மகன்கள்: வசனம் 11 – அந்தத் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர்.
(ஆ) சுயநலம்: வசனம் 12 – இளைய மகன் சுயநலமுள்ளவனாய் ஆஸ்தியில் தன் பாகத்தைக் கேட்டான்.
- பாவியாகிய மகன்: வசனம் 15:13-14
(அ) விருதாவாய் செலவு செய்தான்: வசனம் 13 – இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூர தேசத்துக்குப்போய் அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
(ஆ) தேவை: வசனம் 14 – எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு அந்தத் தேசத்தில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி பட்டினியானான். அவனுக்கு ஆகாரம் தேவைப்பட்டது.
- துக்கமுள்ள மகன்: வசனம் 15:15-16
(அ) சிறுமையடைதல்: வசனம் 15 – செல்வந்தரின் குமாரனாகிய அவன் கூலிக்காகப் பன்றி மேய்த்து சிறுமைப்பட்டான் – 2.பேது.2:22.
(ஆ) பசியடைந்தான்: வசனம் 16 – அவனிடமிருந்த பணம் பறந்துவிட்டது. சிநேகிதரும் சென்றுவிட்டனர். பசியடைந்தான். ஒருவனும் அவனுக்கு உதவிசெய்ய வரவில்லை. துக்கமடைந்தான்.
- உணர்வடைந்த மகன்: வசனம் 15:17-19
(அ) ஞாபகம்; வந்தது: வசனம் 17 – அவனுக்குப் புத்திதெளிந்தது. உணர்வு வந்தது. தகப்பன் வீட்டின் செழிமை பற்றிய ஞாபகம் வந்தது. அவனது தகப்பன் தேவைகளைச் சந்திக்கும் சக்தியுள்ளவன். அதுபோல் நம் பரமபிதாவும் நாம் உணர்வடையும்போது நமது தேவைகளைச் சந்திக்கிறார்.
(ஆ) தீர்மானம்: வசனம் 18 – பன்றியோடு வாழ்வதை விட்டுவிட்டு தந்தையிடம் செல்வோம்; என்று தீர்மானம் செய்தான்.
நாமும் தேவனண்டை செல்ல தீர்மானம் செய்வோம். சங்.37:25.
(இ) பழைய நிலையை விடுதல்: வசனம் 19 – உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல. கூலிக்காரரில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் என்று சொல்வேன் என்று பழைய நிலையை விட்டு வேறோர் நிலைமைக்கு வந்தான்.
- இரக்கம் காண்பித்தல்: வசனம் 15:20-24
(அ) பாசஉணர்வு: வசனம் 20 – அவன் தூரத்தில் வரும்போதே பாசமுள்ள அவனது தந்தை மனதுருகி ஒடி வரவேற்றான்.
கிறிஸ்து நம்மை வரவேற்க மனதுருக்கத்தோடு ஆவலாயிருக்கிறார். மறந்திட வேண்டாம் – வெளி 3:20, ஏசாயா. 1:18.
(ஆ) அறிக்கையிடுதல்: வசனம் 21 – அவன் தன் தவறை அறிக்கையிட்டான். நாமும் தேவனிடம் அறிக்கையிட வேண்டும். 1.யோவான் 1:9, ரோமர் 10:9-10.
(இ) கரிசனை: வசனம் 22-24 – தந்தையின் அன்பு அளவிட முடியாதது. நமது தேவனும் இவ்வாறு அன்புள்ளவராய் மன்னித்து மறக்கிறார். சங்.103:3,12.
- பிடிவாதமுள்ள மகன்: வசனம் 15:25-32
(அ) களிப்பு: வசனம் 25 – காணாமற்போனவன் திரும்ப வந்தான். வீட்டில் களிப்பு ஏற்பட்டது.
(ஆ) விசாரித்தல்: வசனம் 26 – மூத்தமகன் வீட்டில் காணப்பட்ட களிப்பிற்கும் கீத வாத்திய இசைக்கும் காரணமென்ன என்று விசாரித்து அறிந்தான்.
(இ) எடுத்துரைத்தல்: வசனம் 27 – காணமற்போன மகன் திரும்பி வந்துள்ளான் என்று எடுத்துரைக்கப்பட்டது.
(ஈ) குழப்பம் ஏற்படுதல்: வசனம் 28-32. மூத்தமகன் கோபமடைந்தான். பொறாமை கொண்டான். தகப்பன் அன்புடன் திரும்பி வந்தவனின் நிலையை எடுத்துரைத்தும் மூத்தமகன் அமைதிப்படவில்லை. இது ஒரு பெரும் பாவம்.
பாவி உணர்வடைந்து திரும்பும்போது களிப்படைய வேண்டுமேயன்றி கசப்படையலாகாது. மனிதனின் கடந்தகால வாழ்க்கையைப்பற்றி எண்ணிடாது தேவன் உணர்வடைந்த பாவியை மன்னிக்கவும் மறக்கவும் செய்கிறார். மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோஷமுண்டாகும். லூக்கா 15:10.
வாழ்க்கையை வீணாக்குபவரைப்பற்றி குறைசொல்லாது அவர் திருந்திட வகைசெய்ய வேண்டும். தேவன் அந்த நபர் மீது மனதுருக்கமுள்ளவர் என்பதை உணர்த்தவேண்டும்.










