- தாலந்துகள்
மத்தேயு 25:14-30
அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரih அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே, அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே, அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன், இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றம் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது, அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான், இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.
தாலந்து என்பது திறமை, நிபுணத்துவம், புத்திக்கூர்மை அல்லது வரங்கள் ஆகியவற்றினைக் குறிக்கிறது. அவனவன் தன் தன் தாலந்துகளைப் பயன்படுத்துவதை அனுசரித்து தேவன் நியாயந்தீர்க்கிறார். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்து உள்ளது. ஓரவருக்கு ஓய்வுநாள் பாடம் கற்பிக்கும் திறனிருக்கும். இன்னொருவருக்கு பாடல்குழுவில் சேர்ந்து பாடும் திறனிருக்கும், எல்லாருக்கும் ஒரேவிதமான திறமையிருப்பதில்லை. ஆலயத்தைச் சுத்திகரிப்பதும் ஆண்டவர் தந்துள்ள தாலந்தை உபயோகிப்பதாகும். எந்த வேலையிலும் நாம் உண்மையாயிருக்க கர்த்தர் விரும்புகிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்து கொடுக்கப்பட்டாலும், எல்லாருக்கும் ஜெபிக்கும் தாலந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்தவேண்டும் (வெளி 2:10). எல்லாவற்றிலும் மரணபரியந்தம் உண்மையாயிருக்கவேண்டும்.
- உவமை: வசனம் 25:14-18
(அ) ஊழியக்காரர்: வசனம் 14 – எஜமான் பிரயாணம் போகும் முன்னர் ஊழியக்காரர் அவனைச் சந்தித்தனர். அவன் அவர்கள் வசம் ஆஸ்திகளை ஒப்புவித்தான்.
(ஆ) பங்கு வைத்தல்: வசனம் 15 – ஒருவனிடத்தில் 5000 டாலர்களும், ஒருவனிடத்தில் 2000 டாலர்களும், ஒருவனிடத்தில் 1000 டாலர்களும் கொடுத்தான் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.
(இ) பயன்படுத்துதல்: வசனம் 16-17 5 தாலந்து (5000 டாலர்) பெற்றவனும், 2 தாலந்து (2000 டாலர்) பெற்றவனும் வியாபாரம் செய்தனர்.
(ஈ) வெட்ககரமான காரியம்: வசனம் 18 – ஒரு தாலந்து (1000 டாலர்) வாங்கியவன் புதைத்து வைத்தான். பயன்படுத்தவில்லை.
- தாலந்துகளைப் பெற்றுக்கொண்டவர்கள்: வசனம் 25:19-25
(அ) திரும்பி வருதல்: வசனம் 19 – எஜமான் திரும்பி வந்தான். அவர்களிடம் கணக்குக் கேட்டான். தேவனிடம் நாம் நமது வாழ்க்கையைப்பற்றிய கணக்கை ஒப்படைக்க வேண்டியயிருக்கிறது. 2.கொரி 5:10
(ஆ) பாராட்டுகள்: வசனம் 20-23 – தாலந்துகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அவற்றைப் பயன்படுத்தியதற்காகப் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். நாமும் நம் தாலந்துகளை உத்தமமாய் பயன்படுத்தினால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். 1.கொரி.4:2
(இ) கடிந்துகொள்ளப்படுதல்: வசனம் 24-26. ஒரு தாலந்தைப் புதைத்து வைத்தவன் பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரன் எனக் கடிந்து கொள்ளப்பட்டான்.
(ஈ) கிறிஸ்தவர்கள் தங்கள் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் – சங்.90:12
தங்கள் பணத்தைச் செலவுசெய்யும் விதம் – மல்.3:8-10
தங்கள் திறமைகளையும் வரங்களையும் பயன்படுத்தும் விதம் பற்றியும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
- தண்டனை: வசனம் 25:26-30
(அ) சோம்பேறித்தனம்: வசனம் 30 – பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே நீ என் பணத்தைக் காசுக்காரர் வசம் போட்டு வைத்திருக்கக்கூடாதோ என்று எஜமான் கேட்டான். ரோமர் 12:11.
(ஆ) நஷ்டம்: வசனம் 27-30 – அவனிடத்திலிருந்து தாலந்து வாங்கி பத்து தாலந்து உள்ளவனிடம் கொடுக்க கட்டளையிட்டான். ஒரு தாலந்தைப் பெற்றவன் அதனையும் இழந்தான். புறம்பான இருளில் தள்ளப்பட்டான்.
(இ) படிப்பினை: தேவன் நியாயத்தீர்ப்பார் என்பதை மறந்து போக வேண்டாம். ஏபி.9:27, 2.கொரி.5:10, வெளி 20:11-15. சோம்பலுள்ளவர்களாயும், பொல்லாதவர்களாயும் இருந்தால் தண்டனைக்குத் தப்பிடோம். ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. கிடைத்துள்ள தாலந்துகளைக் கொண்டு ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும். இல்லையேல் நியாயத்தீர்க்கப்பட்டு தண்டனையடைவோம்.










