- பூட்டப்பட்ட கதவு
லூக்கா 13:24-30
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
நமக்குக் கிடைக்கும் தருணங்களை வழுகிப்போக விடக்கூடாது என்று இந்த உவமை வலியுறுத்துகிறது. ஒரு நாளில் கதவு அடைக்கப்படும் என்று இயேசு எச்சரிக்கிறார்.
நோவாவின் காலத்தில் (ஆதி 6:3) தருணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனைப் புறக்கணித்தனர்.
இப்பொழுதே இரட்சண்யநாள் – 2.கொரி.6:2 நாளையத்தினம் இந்நாள் போன்று இருக்கும் என்று சொல்லமுடியாது – நீதி.27:1.
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத்தேடுங்கள் – ஏசா.55:6.
இந்த சந்தர்ப்பமே கடைசி சந்தர்ப்பமாயிருக்கலாம்.
- வழி: வசனம் 13:24 – மத் 7:13-14 வசனத்தைக் கருத்தாய்ப் படியுங்கள்.
(அ) வாக்குத்தத்தம்: யோவான் 14:1-3. தேவன் நமக்காக ஓர் இடத்தை ஆயத்தம் பண்ணுவதாக வாக்களித்துள்ளார் – யோவான் 3:16. நாம் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படிக்கு வழியை ஆயத்தப்படுத்தியுள்ளார்.
(ஆ) ஒரேவழி: யோவான்14:6 – இயேசுவே வழி. வேறு செம்மையாய்த் தோன்றுகிற வழிகளும் உண்டு. அவற்றின் முடிவோ மரணம் – நீதி.14:12, அப்.4:12.
(இ) ஜனங்கள்: ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டுவார்கள் – வெளி 20:15.
நாம் மறுபடியும் பிறக்கும்போது ஜீவபுத்தகத்தில் நமது பெயர்கள் எழுதப்படுகின்றன – யோவான் 3:1
- தவறு: வசனம் 13:25-26
ஜனங்கள் மார்க்கப்பற்றுடையவர்கள், ஆனால் நீதியின் மேல் பற்றுடையவர்களல்ல. இது பெரும் தவறு. மதம் மனிதனுடைய வழி. நீதி தேவனுடைய வழி.
(அ) விசுவாசமில்லாத சடங்குகள்: கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுவதால் பயனில்லை. வீண் சடங்குகளால் பயனில்லை. விசுவாசமில்லாது கிறிஸ்தவனாயிருப்பதில் யாதொரு பயனுமில்லை. அவன் தேவனுடைய பிள்ளையாயிருக்க முடியாது. எபேசி.2:8-9.
(ஆ) நேரடித் தொடர்பு அவசியம்: தேவனோடு நேரடித்தொடர்பு அவசியம். ஏராளமானோர் உதட்டளவில் ஆராதனை செய்கின்றனர். பவுலைப்போல் கர்த்தரோடு நேரடித்தொடர்பு கொள்ளவேண்டும் – மாற்கு 7:6, லூக்கா 6:46, 2.தீமோ.1:12.
(இ) நீதியில்லாத மதம்: தீத்து 1:16. அவர்களுடைய கிரியைகள் அவர்கள் தேவனது பிள்ளைகள் அல்ல என்பதை அறிவிக்கிறது.
ஆனால் ஒருவன் மறுபடியும் பிறந்தால் அவன் புதிய சிருஷ்டியாயிருக்கிறான் – 2.கொரி.5:17.
- அழுகை: வசனம் 13:27-28
(அ) தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல்: வசனம் 27
(1) நீதியுள்ளவர்களிடமிருந்து அநீதியுள்ளவர்கள் பிரிக்கப்படுதல் – மத்.13:49
(2) செம்மறியாடுகளிலிருந்து வெள்ளாடுகள் பிரிக்கப்படுதல் – மத்.25:32
(3) பரிசுத்தவான்களிடமிருந்து பாவிகள் பிரிக்கப்படுதல் – லூக்கா17:34
(ஆ) துக்கம்: வசனம் 28
ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்போபையும், சகல தீர்க்கதரிசியையும் தேவனுடைய இராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும் காணும்போது துக்கமும் அழுகையும் உண்டாகும்.
(1) நரகம் தேவனை மறக்கிறவர்களின் பங்கு. சங்.9:17, தானி.12:2, மத்.25:41.
(2) நரகத்தின் உரிமையாளர்கள் – வெளி 21:8ஐ கருத்துடன் படியுங்கள்.
(3) நரகத்திலிருந்து மீட்பு – 2.பேதுரு 3:9, ரோமர் 6:23.
பரலோக வாசல் இப்போது திறந்திருக்கிறது. நாளை அது பூட்டப்படலாம். பின்னர் திறக்கப்பட மாட்டாது. உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாது தரப்பட்ட தருணத்தில் வாசல் வழியாய்ப் பிரவேசியுங்கள். இல்லையேல் அழிவு நிச்சயம் – நீதி.29:1
கிறிஸ்துவை இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள். அவரே வழி. அவர் உங்களை நீதியின் பாதையில் நடத்துவார். அவர் நீதிபரர்.











