- அநீதியுள்ள உக்கிராணக்காரன்
லூக்கா 16:1-13
பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே, கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதihச் சம்பாதியுங்கள். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
மனிதன் தனக்குள்ளவற்றில் திருப்தியடைகிறதில்லை. அவன் மேலும் மேலும் செல்வத்தைச் சேர்க்கவே விரும்புகிறான். அது பேராசையாகி விடுகிறது. பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது – 1.தீமோ.6:10
- ஆஸ்தியை அழித்தல் கண்டிக்கபட்டது: வசனம் 16:1-3
(அ) அநீதியுள்ள உக்கிராணக்காரன்: வசனம் 1 – உக்கிராணக்காரன் கவலையீனமாயிருந்தான்.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கவலையீனமாயிருக்கிறோமா? நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றிற்கும் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை மறத்தலாகாது.
(1) சமயம்: சங்.90:12 – சமயத்தை ஞானமாய் செலவு செய்ய வேண்டும்.
(2) தாலந்துகள்: பிர.9:10 – தரப்பட்டுள்ள தாலந்தைப் பயன்படுத்த வேண்டும்.
(3) தசமபாகம்: மல்.3:8-10 – தசம பாகத்தை வஞ்சிக்கலாகாது.
(4) ஆவியின் கனி: கலா.5:22-23 – தினமும் ஆவியின் கனிகளைக் கொடுக்கவேண்டும்.
(ஆ) நம்பத்தக்க உக்கிராணக்காரன்: வசனம் 2-3 – எஜமான் திரும்ப வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. கிறிஸ்து எதிர்பாராத வேளையில் திரும்பவருவார். இதனைக் கருத்திற் கொள்ளாது கவலையீனமாயிருந்தால் அந்த உக்கிராணக்காரனைப் போலாவோம்.
எஜமான் உக்கிராணக்காரனை நம்பமுடியவில்லை. கிறிஸ்து வரும்போது நம் நிலைமை இதுதானே? சிந்திப்போம் – மத்.24:44.
(1) மரணம் நிச்சயம்: எபி.9:27
(2) கிறிஸ்துவின் வருகை நிச்சயம்: யோவான் 14:1-3
(3) நியாயத்தீர்ப்பு நிச்சயம்: வெளி 20:11-15
- முன்யோசனையுள்ளவன்: வசனம் 16:4-8
(அ) தன் எஜமானிடம் கடன்பட்டவர்களை வரவழைத்து ஒவ்வொருவருடைய கடனையும் குறைவு செய்து எழுதினான். தன் எஜமானின் பணத்தால் மற்றவர்களின் கடனைத் தீர்த்தான். தேவனுடைய பணத்தை நாம் நமது சுயநலகாரியங்களுக்காக உபயோகிக்கக்கூடாது. பிறருக்காக செலவு செய்தல் வேண்டும்.
(ஆ) சிறந்த முன்யோசனை: வசனம் 8-9 – கர்த்தரின் பணத்தை அவரது இராஜ்யத்தைப் பரப்புவதற்காக உபயோகிக்க வேண்டும்.
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான். அநீதியான பொருளால் சிநேகிதரைச் சம்பாதித்துக்கொண்டான்.
இந்த உலகம் தேவனுடையது. அதை நமக்குத் தந்துள்ளார். இங்குள்ள பொருளால் பிறருக்கு உதவி செய்வோம்.
- உண்மையாய் உழைத்தல் தேவை: வசனம் 16:10-13
(அ) சேவையில் உண்மை: வசனம் 10 – கொஞ்சத்தில் உண்மையாயிருத்தல். உண்மையாயிருக்க வேண்டியது அவசியம் – வெளி 2:10, மத்.24:13.
(ஆ) காணிக்கை கொடுப்பதில் உண்மை: வசனம் 12-13 – தேவன் தசமபாகத்தை எதிர்பார்க்கிறார். 15 சதவீதம் வரிகொடுக்கிறோமே. 10 சதவீதம் ஆண்டவருக்குக் கொடுக்கத் தயங்குவதா?
(இ) ஊழியம் செய்வதில் உண்மை: வசனம் 13 – எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யக் கூடாது. மத்.6:33, நீதி3:5-6.
ஓர் எஜமானுக்குத்தான் உண்மையாக ஊழியம் செய்யமுடியும். இரண்டு எஜமானுக்கு உண்மையாய் ஊழியம் செய்யமுடியாது.
கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் தெரிவதில்லை. அதுபோன்றே கிறிஸ்துவைப் போதிப்பவர்களும் உள்ளனர். கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது உலகப் பொருளை ஒரு பொருட்டாக எண்ணமாட்டீர்கள். அதனால் நன்மையான காரியங்களை உலகப்பொருளால் செய்து நிறைவேற்றுங்கள்.












