- பரிசேயனும் ஆயக்காரனும்
லூக்கா 18:10-14
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷihப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இயேசு இந்த உவமையில் பரிசேயரின் தேவனற்ற தன்மையையும், அவர்களது பெருமையினையும், தாங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தால் கர்வம் கொண்டிருந்தார்கள் என்பதையும் விளக்குகிறார். ஆயக்காரன் அவ்விதமில்லாது தேவனுக்கு முன்பாக தான் பாவி என்றுணர்வதும் சொல்லப்பட்டுள்ளது – ரோமர் 3:10, எரேமி.17:9. நாம் செய்யும் நற்கிரியைகளால் தேவனோடு ஒப்புரவாகிவிட முடியாது. நாம் புதுப்பிறவியாக வேண்டும் -யோவான் 3:18, 2.கொரி.5:17.
- உவமையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மனிதர்: வசனம் 18:10
(அ) சுயநீதிக்காரன்: இருவர் ஜெபிக்க சென்றனர். ஒருவன் சுயநீதிக்காரனாகிய பரிசேயன். அவன் பெருமையுள்ளவன். நமது நீதி வேதபாரகர். பரிசேயர் ஆகியோரது நீதியிலும் அதிகமாயிருக்கவேண்டும் – மத்.5:20.
(ஆ) பாவியாகிய மனிதன்: அடுத்தவன் வரிப்பிரிவு செய்யும் ஆயக்காரன். இவன் பாவி – ரோமர் 3:23. நாம் பாவிகளாயிருப்பினும், பாவிகளாகவே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதல்ல.
- பரிசேயனின் ஜெபம்;: வசனம் 18:11-12
(அ) தன்னை பிறனோடு ஒப்பிட்டு ஜெபம் செய்தல்: வசனம் 11ஏ. மற்றவர்களோடு ஒப்பிட்டு அதில் தன்னை உயர்ந்தவனாக நினைத்து ஜெபித்தான். இவ்விதமாக ஜெபம் செய்யக்கூடாது.
நமது ஆவிக்குரிய வாழ்வை பிறரது ஆவிக்குரிய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு – மத்.7:1-5.
(ஆ) தன்னுடைய செயல்களை ஒப்பிட்டான்: வசனம் 11ஏ.
(1) அவன் சுரண்டல் பேர்வழி அல்ல. பண விஷயங்களில் நேர்மையாயிருந்தான்.
(2) அநியாயம் செய்யவில்லை. எல்லாவற்றிலும் நியாயமாய் நடந்து கொண்டான்.
(3) அவன் விபசாரக்காரனல்ல. ஒழுக்கத்தில் சிறந்தவன்.
(4) வாரத்தில் இரண்டு தரம் உபவாசித்தான்.
(5) எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான். நமது ஜெபம், உபவாசம், ஈகை அனைத்தும் ஆண்டவருக்குத்தான் தெரிந்திருக்க வேண்டுமே தவிர வேறுயாருக்கும் தெரிந்திருக்கவேண்டியதில்லை – மத்.6:1-8, 16-18.
- ஆயக்காரனின் ஜெபம்: வசனம் 18:13
(அ) பணிவு: வசனம் 13 – அவன் தான் பாவி என்பதை உணர்ந்தான். தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கத் துணியவில்லை. அவனில் பணிவு இருந்தது. அவனுடைய இருதயம் நொறுங்குண்டிருந்தது. சங்.34:18.
(ஆ) அபாத்திர நிலைமை: வசனம் 13பி – தன் பாவங்களுக்காக மனம் வருந்தினான். தன் அபாத்திர நிலைமையை உணர்ந்தான். 2.சாமு.12:13 தாவீது தான் பாவி என்பதை உணர்ந்தான். கர்த்தரிடம் இரக்கம் பெற்றான். சங.;51:10.
- ஜெபத்தின் மூலம் மன்னிப்பு: வசனம் 18:14
(அ) மன்னிப்பு: வசனம் 14ஏ. ஆயக்காரனின் ஜெபத்திற்கு பலன் கிடைத்தது. மன்னிப்பைப்பெற்று நீதிமானாக்கப்பட்டான் – ரோமர் 10:13.
(ஆ) பெருமை மன்னிப்பை நாடுவதில்லை: வசனம் 14பி – கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் – நீதி 29:23. தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துகிறவன் மன்னிப்பை உதாசீனம் செய்வதால் தாழ்த்தப்படுவான்.
சுயநீதி பாவம் – நமது நற்கிரியைகளால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது – எபேசி.2:8-9.
தீத்து 3:5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
நாம் தேவனால் தான் நீதிமான்களாக முடியும். ஆயக்காரன் தகுதியற்றவன். ஆனால் தேவன் அவனை நீதிமாhனாக்கினார்.










