- கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு
தியான வாசிப்பு: யோசுவா 1:1-10
யோசுவாவின் புத்தகத்தில் யோசுவாவும் அவனுடைய போர் வீரரும் கண்ட கானான், போர் வாழ்வின் வெற்றிகள் பொறிக்கப்பெற்றுள்ளன. இப்போர் வெற்றி வரலாற்று ஏட்டுக்கு, ஏன் பரிசுத்த வேதாகமத்தில் இடம் தரப் பெற்றுள்ளது என்று வாசகர்கள் கேள்வி எழுப்பலாம். இப் புத்தகத்திற்குள் ஒரு புதை பொருள் ஆழந்து கிடக்கத்தான் வேண்டும். மேலாட்டமாய் வாசிப்பவர்களுக்கு முதலில் அது வெட்ட வெளிச்சம் ஆகாதிருக்கலாம்.
இப்புத்தகத்தில் அகத்தே புதைந்து கிடக்கும் ஆன்மக் கருத்தைத் தேடித் திரியுங்கால், பாமாலை தரும் சில உவமைகள் நம்மைத் தடுமாறச் செய்து, பக்க வழிக்குட்படுத்தலாம். காரணம், சில ஞானப்பாக்களில் யோர்தான் மரணத்திற்கும், கானான் மோட்சத்திற்கும் உவமிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, இஸ்ரவேலரின் கானான் வாழ்வை மோட்ச வாழ்விற்கு நாம் உவமித்துவிட்டால், யோசுவாவின் புத்தகத்தில் தீட்டப்பெற்றுள்ள அநேக நிகழ்ச்சிகளுக்கு நாம் சரியான ஆன்மப் பொருளை அறியாது போய்விடுவோம். மோட்ச வாழ்வு இளைப்பாறுதலான வாழ்வு. ஆனால் இப்புத்தகத்தின்படி இஸ்ரவேலர் கண்ட கானான் வாழ்வோ ஆரம்பத்தில் இளைப்பாறுதலான வாழ்வன்று, பெரும் போர் மேல் போர் தொடுத்த கானான் வாழ்வுக்கும் உவமை கூறுதல் பொருந்தாததன்றோ!
இஸ்ரவேலர் கானான் தேசத்தைச் சுதந்தரித்து இளைப்பாறுமுன், அவர்கள் அந்நாட்டிலுள்ள பகைவர்களை எதிர்த்துப் போராடிக் கொன்றொழிக்க வேண்டியதாயிருந்தது. கானானின் வெற்றியின்ப வாழ்வுக்கு முன்னர் மாபெரும் போர் வாழ்வு காத்திருந்தது. ஆம், நாமும் வெற்றி, ஓய்வு, இன்பம் பெறவேண்டின், அதற்கு முன் போர், ஓயா விழிப்பு, யுத்த இன்னல் அடைந்துதான் தீரவேண்டும். போர் இன்றேல் எவ்வாறு வெற்றி கிட்டும்?
இம்மண்ணுலக வாழ்வு ஒரு மாண்புமிக்க கிறிஸ்தவனுக்கு ஓர் உக்கிரமான யுத்த வாழ்வுதான், யுத்தம் என்றால் கத்தியின்றி, ஈட்டியின்றி, முழங்காலில் நின்று ஆன்மப் பகைவரை எதிர்த்து போர் புரிதல் ஆகும். யோசுவாவின் புத்தகத்திலுள்ள 24 அதிகாரங்களும் இஸ்ரவேலர் ஆற்றிய எண்ணிறைந்த யுத்தங்களையும், அவர்கள் கண்ட இறுதி வெற்றியையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆற்றவேண்டிய ஆன்மப் போராட்டங்களுக்கும் அவன் அடையப்போகும் இறுதி வெற்றிக்கும் மகத்தானதோர் உவமையாகக் காட்சியளித்து நிற்கிறது யோசுவாவின் புத்தகம். எபேசியர் நிருபமும், எபிரெயர் நிருபமும் இக்கருத்தை வலிறுயுத்தி நிற்கின்றன.
தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் (எபி.4:9-10).
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்தும் போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சண்யம் என்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடு சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (எபேசி.6:10-18).
பழைய ஏற்பாட்டிலுள்ள யோசுவாவின் புத்தகம் சுட்டிக்காட்டும் ஆன்மநெறி, புதிய ஏற்பாட்டிலுள்ள எபேசியர் நிருபத்தில் எவ்வளவு ஆழகாக, எவ்வளவு தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது பாருங்கள்.
ஆகவே, இஸ்ரவேலரின் கானான் போர் வெற்றி வாழ்வு ஒவ்வொரு கிறிஸ்தவனின் இவ்வுலக இரண்சண்ய வெற்றி வாழ்வுக்கு நிழல்போல் அமைந்து கிடக்கிறது.
கர்த்தர்தாமே இஸ்ரவேலருக்கு கானான் தேசத்தைக் கொடுப்பதாக திருவாக்கருளியிருந்தார் என்பதை நாம் முதலாவது அறிந்துகொள்ளவேண்டும். மோசேக்குக் கர்த்தர் முட்செடியில் தரிசனம் தந்தருளியபோது: நான் என் ஜனத்தை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்கள் அந்தத் தேசத்திலிருந்து நீக்கி கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற, நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்றார் (யாத்.8:8).
இஸ்ரவேல் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெறல், பஸ்கா ஆசரித்தல், இரத்தஞ்சிந்துதல், சிவந்த சமுத்திரத்தைக் கடத்தல், பார்வோனின் சேனைகளை அழித்தல், கடும் பிரயாணம் செய்தல் போன்ற அத்தனையும், அவர்கள் இறுதியில் கானான் சுதந்திரம் அனுபவியாவிடின் விருதாவாயிருக்குமே! இஸ்ரவேலர் கடைசியில் கானான் நாட்டைச் சுதந்தரித்தால்தானே கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு நிறைவேறும் (ஆதி.14:13-17).
பாவி மனந்திரும்ப வேண்டும் என்பது மாத்திரமன்று. அவன் வெற்றியுள்ள பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டும் என்பதுவும் பரிசுத்த வேதாகமம் பறைசாற்றும் சத்தியம். நமது மனந்திரும்புதல், மறுஜனனம் இவற்றின் நோக்கமே நாம் பரிசுத்த வாழ்க்கையாற்ற வேண்டும் என்பதுதான். நாம் பரிசுத்தத்திற்கென்றே அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் துன்மார்க்க வாழ்வின்றி மனந்திரும்பியுள்ள காரணமே நாம் இனிப் பரிசுத்த வாழ்வு நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தால்தான் அல்லவா? பவுல் ரோமர் 8:30இல் கூறியுள்ளபடி, தேவன் எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
நாம் மீட்கப்பட்டதினால், அவருடைய கிரயப் பொருள் ஆகிறோம். தமது சொந்த கிரயம் கொடுத்து நம்மை அவர் மீட்டுக் கொண்டாரே. ஆகவே, நாம் இனி அவருக்கே சொந்தம். அவர் தமக்குச் சொந்தமான மீட்கப்பட்ட ஜனத்தைப் பரிசுத்தமாக்குகிறார். அவரைப்போல் அவர்தம் மக்களும் பரிசுத்தமாயிருக்கவேண்டும் என்பதே அவருடைய பேரவா, பெருஞ்சித்தம்.
வெற்றியுள்ள தூய வாழ்க்கையாற்றவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் அழைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அநேகர் இந்த அதிவுன்னத அழைப்பை இன்னும் சரிவர அறிந்துகொள்ளவில்லை. இன்னும் வனாந்தர தோல்வி வாழ்க்கையனுபவத்திலேயே காலங்கழிக்கின்றனர். இஸ்ரவேலர் வாழ்நாள் முழுவதும் வானந்தரத்திலேயே அலைந்து திரிந்து விட்டுக் கானானைச் சுதந்தரியாவிடில், அவர்களின் வாழ்க்கை இலட்சியம் படுதோல்வியாகவன்றோ முடிந்திருக்கும். இதை வாசிக்கும் நண்பரே! நீர் இன்னும் வனாந்தரப் பயண அனுபவத்தில்தான் இருக்கிறீரா அல்லது கானான் வெற்றி வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருக்கிறீரா? உமது வாழ்க்கை இதுகாறும் படுதோல்வியானதா அல்லது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவால் பரிசுத்த ஜெய ஜீவியம் செய்கிறீரா?
யோசுவாவின் புத்தகம் முதல் அதிகாரம் முதலாம் இரண்டாம் வசனங்கள் நமக்கு ஒரு மகத்தான சத்தியத்தை நினைவுறுத்துகின்றன. நியாயப்பிரமாணம் நம்மைக் கானானுக்குள் அழைத்துச் செல்லமுடியாது. என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்திற்குப் போங்கள்.
மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதி, ஆகவே அவன் கண்கள் இருளடையாதிருந்த போதிலும், அவன் பலம் குறையாதிருந்தபோதிலும், அவன் இஸ்ரவேல் புத்திரரைக் கானான் தேசத்திற்குள் அழைத்துச் செல்லக்கூடாது. அவன் மரித்த பின்பு இரட்சகனாகிய யோசுவாதான் இஸ்ரவேலரைக் கானானுக்குள் அழைத்துச் செல்லக்கூடும்.
மறுஜனனம் அடைந்துள்ள ஒரு கிறிஸ்தவனின் அனுபவம் ரோமர் 7ம் அதிகாரத்தில் வரையப் பெற்றுள்ளது. அங்கு பவுலடிகள் கூறுவதைக் கேளுங்கள். நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான். கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. ஆகிலும், என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. ஆதலால், நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையே செய்கிறேன். நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆகவே, நமது சொந்தத் தீர்மானத்தாலோ, முயற்சியாலோ, ஜெபத்தாலோ, உபவாசத்தாலோ, நாம் பாவத்தின்மேல் ஜெயம் பெறாமல், சிலுவைநாதர் மூலமாகவே ஜெயம் பெறுகிறோம். கிறிஸ்துதான் ஜெயம். அவரை விசுவாசக்கரம் நீட்டி நம் சொந்தமாக ஏற்றுக்கொள்வோம். அப்பொழுது ஜெயவேந்தர் இயேசுநாதர் தம் பரிசுத்த ஜெயவாழ்வை நம்மில் இன்றும் நடத்துவார்.
இஸ்ரவேலரைக் கானானுக்கள் அழைத்துச் செல்லும் பொறுப்பு ஒரு பிரதிநிதியிடம் ஒப்புவிக்கப்பட்டது. கர்த்தர் அடிக்கடி யோசுவாவுடன் பேசி, அவன் இன்னின்னவாறு செய்து, ஜனங்களைக் கானானுக்குள் வழி நடத்திச் செல்லவேண்டும் என்று போதித்தார். அவனைத் திடப்படுத்தினார். இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, கானான் தேசத்துக்குப் போங்கள் என்றார் (யோசு.1:2). மேலும் கர்த்தர் யோசுவாவை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு. இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் என்றார். இவ்வாறு இஸ்ரவேலர் கானான் வாழ்வைப் பெறுவதற்குக் கருவியாயிருந்தவன் யோசுவா.
பாவிகள் மோட்ச வாழ்விற்குள் பிரவேசிக்கக் கருவியாயிருந்தவர் இயேசு கிறிஸ்து. பாழான பாலைவன வாழ்க்கையினின்று பாவிகளை பரமக் கானான் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறவர் இயேசு கிறிஸ்து. மோட்சத்திற்கு இயேசு ஒருவரே வழியாயிருக்கிறார். அதற்குரிய சகல அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பாவியின் மோட்ச வாழ்வு இயேசு கிறிஸ்துதான். அவரே அவனுக்கு நித்திய ஜீவனும் பேரின்பமுமாயிருக்கிறார். விசுவாசியின் இதயத்தில் இயேசு வந்தவுடனே, அவனுடைய பேரின்ப வாழ்வும் ஆரம்பித்துவிடுகிறது. இயேசு யாருடைய இதயக்கமலத்தில் வாழ்கிறாரோ அந்த இதயத்தில் கானான் வெற்றி வாழ்வு மலர்ந்துவிடுகிறது. பரிசுத்த ஜெய ஜீவியம் வளரத் தொடங்கிவிடுகிறது. பரிபூரண முக்தியின்பத்தின் முன் ருசியாகப் பரிசுத்த ஆவியானவர் அந்த இதயத்தில் பொங்கி வழிகிறார்.
யோசுவா முதல் அதிகாரம் மூன்றாம் நான்காம் வசனங்களைப் பாருங்கள். உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். கானான் தேசம் முழுவதும் இஸ்ரவேலருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எவ்விடத்திலெல்லாம் காலடி மிதித்து அதைத் தங்களுக்கு உரிமையாக்குகிறார்களோ அந்த இடமெல்லாம் மட்டுமே அவர்கள் சுதந்தரிக்க முடியும். ஆண்டவர் நமக்கருளியிருக்கும் திருவாக்குகளை முழுவதும் நாம் அறிந்திருப்பது மாத்திரம் போதாது. அவைகளையெல்லாம் விசுவாசத்தால் நமக்கு உரிமையாக்கி, சுதந்தரித்து, அனுபவிக்கவேண்டும். இவ்வாறு யார் யார் அதிகம் உரிமையாக்கி அனுபவிக்கிறார்களோ அந்த விசுவாசிகளே பெரும் பாக்கியவான்கள். விசுவாசக் கரம் நீட்டி யார் அதிகம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களே பெரும் பரிசுத்தவான்கள்! பரபூரண பரிசுத்த வெற்றி வாழ்வு கிறிஸ்துவுக்குள் நமக்கு ஆணைசெய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் அந்த மகிமையான புனித வாழ்வை நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தால் பெற்றனுபவிக்கவேண்டும். அதற்காகவே நாம் கிறிஸ்தவர்களாக அழைக்கப் பெற்றிருக்கிறோம். நாம் வெற்றியுள்ள தூய வாழ்க்கையாற்றாவிடின், அது நமது விசுவாசக் குறைவையே காட்டும். ஒரு பாவி மனந்திரும்பி, கிறிஸ்துவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடனே, இந்தப் பரிபூரண தூய ஜெய ஜீவியம் அவனுக்கு உரிமையாகிவிடுகிறது. ஆனால் அதனை அவன் எவ்வளவு தூரம் விசுவாசத்தால் தனதாக்கிக் கொள்கிறானோ அவ்வளவு தூரமே அதன் சுதந்தரவாளியாக முடியும். ஆ, விசுவாசக் குறைச்சல் எவ்வளவு நம்மைக் குன்றச் செய்துவிடுகிறது. ஆனால் பெரும் விசுவாசம் எவ்வளவு ஐசுவரியவான்களாக்கி விடுகிறது நம்மை! ஆண்டவரே! என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்.
எகிப்தினின்று புறப்பட்ட எல்லாரும் கானான் நாட்டைக் காணவில்லை. யோசுவா, காலேப் என்ற இரண்டு பேரைத் தவிர மற்றெல்லாரும் அவிசுவாசத்தாலும் முரட்டாட்டத்தாலும் கானான் வாழ்வைக் கண்டு அனுபவியாது, இடையில் வனாந்தரத்தில் மாண்டொழிந்தார்கள். தற்காலத் திருச்சபையிலுள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கதியும் இப்படித்தானோ? சிலுவைநாதரின் உள்ளம் எவ்வளவு கொதிக்குமோ! கிறிஸ்துவின் அவதார வாழ்வு, சிலுவை மரணம், திறந்த கல்லறை, பரமேறுதல், பரிசுத்த ஆவியானவர் பொழியப்படல் போன்ற கிருபையின் மேல் கிருபை பெற்றும் தற்காலக் கிறிஸ்தவர்கள் பாவத்திலும், சிற்றின்பத்திலும், உலக ஆசாபாசங்களிலும் பிசாசின் தந்திரங்களிலும் வீழ்ந்து மாய்ந்து போவார்களானால், இயேசு நாதரின் இதயம் எவ்வளவாய்ப் புண்பட்டுத் துடிக்கும்.! அன்று சிலுவையில் நீர் பட்டபாடு போதாதா? இன்றும் உம் உள்ளத்தை உடைக்கிறேனே, இந்த அவிசுவாசப் பாவியாகிய நான் ஆண்டவரே, எம் மட்டும் நான் பன்றிபோல் பாவச் சேற்றில் உழல்வேன், நாதா நீர் எனக்கு வாக்கருளியிருக்கும் பரிசுத்த வெற்றி வாழ்வை நான் இன்றே எனதாக்கி, அதில் வளாந்தேறக் கிருபை செய்யும்.
இக்காலத்திலும் நாம் அங்கொரு யோசுவாவையும், இங்கொரு காலேப்பையும் காணலாம். அவர்கள் மனந்திரும்பின பின்பும் நெடுநாட்களாக வனாந்தரத்திலேயே சுற்றி அலைந்து அங்குதானே மாண்டு போகாது, கானான் நாட்டுக்குள் கால் மிதித்து, விரோதிகளை எதிர்த்துக் கொன்றொழித்து, கானானைச் சுதந்தரித்துக் கொள்கிறார்கள். கானான் எவ்விதச் சத்துருக்களுமில்லாத நாடு. அன்று அங்கு ஏழு பலத்த சாதியினர் வாழ்ந்து வந்த அவர்களைக் கூடாரவாசிகளாகிய இஸ்ரவேலர் சங்காரம் செய்தாலன்றி அந்நாட்டைக் கைப்பற்றிச் சமாதானமாக வாழமுடியாது. ஆகவே, கானானில் சாந்தி தவழும் பேரின்ப வாழ்வு நடத்த வேண்டுமெனின், அதற்கு முன்னர் அங்குள்ள பகைவர்களை ஒழிக்கப் போர் வாழ்வு நடத்தியே தீரவேண்டும். அவ்வாறே இயேசுநாதர் வாக்களித்துள்ள இரட்சண்ய கானான் வாழ்விலும் போராட்டம் உண்டு. ஆனால் போருக்குப் பின் வெற்றியின்பமும் உண்டு என்பதை மறத்தல் கூடாது. இஸ்ரவேலரைக் கானானுக்குள் வழிநடத்த ஒரு யோசுவா இருந்ததுபோல, விசுவாசிகளைப் பரம கானானுக்குள் வழிநடத்த இயேசுகிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஆன்ம விரோதிகளை எதிர்த்துப் போராடி வாகைசூடும் மாபெரும் வாய்ப்புக் பெற்றுள்ள நாம் உண்மையாகவே பாக்கியவான்களே! இவ்வுலகில் நமக்குப் போர் வாழ்வுதான். அனால் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்.










