- ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி
தியான வாசிப்பு: யோசுவா 3:1-17
இஸ்ரவேலரின் வனாந்தர வாழ்விற்கும் கானான் வாழ்விற்கும் நடுவே நின்றது யோர்தான் நதி. வனாந்தரத்தில் இருந்த அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் குறுக்கே நின்ற யோர்தான் நதியைக் கடந்துதான் ஆகவேண்டும். யோர்தான் நதியைக் கடப்பதற்குமுன் கானான் வாழ்வுக்குள் காலெடுத்துக்கூட வைக்கமுடியாது.
யோர்தானைக் கடத்தலென்றால், ஆன்ம பிரகாரமாக மரணத்தைக் கடப்பதாகாது. யோர்தான் நதியானது மரணத்தைக் குறிக்காதென்றால் பின் எதனைக் காட்டுகிறது? ஆன்ம வளர்ச்சியிலுள்ள பல்வேறு படிகளையே அல்லது பல்வேறு உயர்நிலைகளையே அது குறித்து நிற்கிறது. யோர்தான் நதியைக் கடத்தல், வனாந்தர வாழ்வின் முடிவைக் காட்டுகிறது. அதுபோல் ஒருவனது அசுத்த வாழ்வின் இறுதியைக் காட்டும் சின்னமாக அமைந்து நிற்கிறது யோர்தான். அங்ஙனமே ஒருவன் யோர்தானைக் கடந்து தனது சுயமுயற்சி வாழ்விற்கு ஒரு முடிவு கட்டிவிட்டுக் கிறிஸ்தவ வாழ்வுக்குள் பிரவேசிக்கிறான். சுயநீதி வாழ்க்கை தொலைந்து போய், விசுவாச வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது என்பதற்கு, யோர்தானைக் கடந்து செல்லுதல் காட்டி நிற்கும். மாம்ச வாழ்வுக்கும் ஆன்ம வாழ்வுக்கும் இடையே கிடப்பதுதான் யோர்தான். கிறிஸ்துவையே நடு மையமாகக் கொண்ட தூய வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னர் யோர்தானைத் தாண்டிச் செல்லவேண்டும். நரக வாழ்வக்கும் மோட்சவாழ்வக்கும் இடைச்சுவராகிய யோர்தானை வென்றேறிச் செல்ல வேண்டும்.
சிற்றின்ப வாழ்வு நடத்துகிறவன் எப்படி பேரின்ப வாழ்வுக்குள் பிரவேசிக்கமுடியும். மாம்சச் சிந்தையுள்ள மனிதன் எவ்வாறு கிறிஸ்துவின் சிந்தையுள்ளவனாக முடியும்? துர்க்குணத்தில் தாயின் கர்ப்பதில் உருவாக்கப்பட்டவன் எப்படி நற்குணத்தில் வளரமுடியும்? சாத்தானுக்கு அடிமையானவன் எவ்வாறு கிறிஸ்துவுக்கு அடிமையாக முடியும்? பாவ வாழ்வில் அமிழ்ந்தவன் எங்ஙனம் பரிசுத்த வாழ்வு நடத்த முடியும்? மனிதனால் இது கூடாதுதான். ஒரு மனிதனாலும் இது இயலாததுதான். இந்த இடர்கட்டையைக் கடந்து செல்வதற்குக் கிறிஸ்துவின்மீது விசுவாசம் வேண்டும். விசுவாசக் கப்பலாலன்றி இப்பாழுங்கடலைக் கடக்க எவராலும் முடியாது.
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் கால்பட்டவுடனே யோர்தான் தண்ணீர் நின்று, இஸ்ரவேலர் கடந்து செல்லத்தக்கதாக ஒரு வறண்ட பாதை ஏற்பட்டது. ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு நிற்காமல், உடன்படிக்கைப் பெட்டியின்றி யோர்தான் ஓரத்தில் நின்றிருந்தால், நிச்சயமாக யோர்தானின் தண்ணீர் நின்றிருக்காது.
இன்று நம்மொவ்வருவருக்கும் பரிசுத்த வாழ்வாகிய பரம கானான் வாழ்வுக்குள் பிரவேசிக்க அளவற்ற ஆசையுண்டு. ஆனால் அதன் குறுக்கே முட்டுக்கட்டைபோல் முண்டிக் கிடக்கிறது யோர்தான். அந்த யோர்தானைக் கடப்பதற்கு நாம் இதுகாறும் வெறுமனே தனியே சென்றோம். ஆகவே தோல்வியுற்றோம். இன்றோ, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்வோம். உடன்படிக்கைப் பெட்டி தெய்வ சமூகத்தைக் குறிக்கும். ஆகவே, நாம் இன்று கிறிஸ்துவோடுகூடச் சென்றால், கரை புரண்டு வரும் யோர்தானைக் கடந்து செல்வதற்கோர் வழியைக் காண்போம். மனிதனால் கூடாததுதான். ஆனால் தேவனால் எல்லாம் கூடும் அல்லவா! என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பலமுண்டு என்று யோர்தானைக் கடந்து சென்ற பவுலடிகள் வீரமுழக்கம் செய்கிறார். கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே யோர்தானை ஜெயிக்கிற ஜெயம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனே பாக்கியவான். இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கடந்து செல்ல முடியாத யோர்தான் இவ்வுலகில் இல்லை. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த யோர்தானிலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? இதோ, உன்னை விடுதலையாக்கக்கூடிய ஒரு கடவுள் உன்முன் நிற்கிறார். அவர்தாம் இயேசு சுவாமி. அவராலேயன்றி வேறு எவராலும் நமக்கு விடுதலை இல்லை. இயேசுவின் அருளால், அவருடைய சிலுவை புண்ணியத்தால் நாம் வனாந்தர பாவ வாழ்வை நீத்து, முட்டுக்கட்டையாகிய யோர்தானை உடைத்தெறிந்துவிட்டு, பரிசுத்த ஜெயவாழ்க்கைக்குள் பிரவேசிப்போமாக.
நீ தற்பொழுது ஆற்றுகிற மட்டரகமான கிறிஸ்தவ வாழ்வை உதறிவிட்டு அதிவுன்னத தூய வெற்றி வாழ்வு கிறிஸ்துவுக்குள் நீ அனுபவியாதபடி உன்னைத் தடுத்து நிற்கும் இரகசிய பாவமாகிய முட்டுக்கட்டை எது என்று உடனே சிந்தித்துப்பார். இந்த யோர்தானைக் கடந்து நீ உடனே முதல் ரகமான கிறிஸ்தவ பரிசுத்த ஜெய ஜீவியம் செய்ய முற்படுவாயாக. அதற்கு இயேசு உனக்குத் துணை செய்கிறார். உன்னைத் தட்டி எழுப்புகிறார். உன்னைத் தூக்கிச் செல்கிறார். உன்னைக் கானானுக்குள் கால் மிதிக்கக் கிருபை செய்கிறார். நாம் நாளுக்குநாள் பரிசுத்த ஜீவியத்தில் முன்னேற வேண்டும். அதற்குத் தடையாக நிற்கும் யோர்தானை ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல வேண்டும். அதற்கு உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்ல வேண்டும். அதாவது இயேசு கிறிஸ்துவோடுகூடச் செல்ல வேண்டும். இயேசு கிறிஸ்து நம் சொந்தத் தெய்வமாக, நம் சொந்த இரட்சகராக நம் இதயத்தில் தங்கி வாழவேண்டும்.
ஒரு முக்கியமான கேள்வி. கடவுள் எல்லா மனிதருக்கும் பொதுவான தெய்வமாக இருக்க வேண்டியவர். அவரிடம் பாராபட்சம் காணப்படக்கூடாது அல்லவா? அப்படியிருக்க அவர் ஏன் கானானியரைப் பகைத்தார்? இஸ்ரவேலரோடுகூடச் சேர்ந்துகொண்டு ஏன் கானானியரை எதிர்த்துப் போராடிக் கொன்றொழித்தார்? இஸ்ரவேலருக்கும் கானானியருக்கும் பகை, போர், ஏன் மூளவேண்டும்?
இஸ்ரவேலருக்கும் கானானியருக்கும் நடந்த சண்டையை இருவேறு சாதியினரிடையே நடந்த சண்டையாகக் கருதக்கூடாது. அதை நீதிக்கும் அநீதிக்கும் பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும், பரிசுத்தத்திற்கும் அசுத்த ஆவிகளுக்கும், ஒன்றான மெய்த் தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தமாகவே கருதவேண்டும். கானானியர் அசுத்த வாழ்வில் மூழ்கியிருந்தார்கள். சிற்றின்பத்தில் புதைந்து போனார்கள். அசுத்த ஆவிகளைத் தொழுது அவைகளுக்குப் பலியிட்டுத் தொண்டாற்றி வந்தார்கள். பாகாலைச் சேவித்தார்கள். ஒன்றான மெய்த்தெய்வத்தையோ மறந்து விட்டார்கள்.
ஆனால் இஸ்ரவேலரோ தங்கள் குறைவுகள் மத்தியிலும் ஒன்றான மெய்த் தெய்வத்தை மறக்கவில்லை. அவர்களின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு போன்றவர்கள் மெய்த்தேவனிடத்தில் விசுவாசம் வைத்து அவரையே வழிபட்டார்கள். ஆகவே, இஸ்ரவேலரோடுகூட தெய்வசமுகத்தின் சின்னமாக உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. இத்தகைய தெய்வ மக்களுக்கே பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் உரித்தானது. கானானியரோ தங்கட்குப் பிறப்புரிமையாக இருந்த கானான் தேசத்தை இழந்துவிட நேரிட்டது. அதற்கு ஆணித்தரமான முதற்காரணம் அவர்கள் ஒன்றான மெய்த் தெய்வத்தை மறந்துவிட்டுத் தங்கள் மனம்போனபடி அசுத்த வாழ்க்கை ஆற்றி, சாத்தனை வழிபட்டு வந்ததுதான். அவர்களுக்குள் ஓர் அற்ப விசுவாசி இருந்தாள். அவள் பெயர் ராகாப். அவள் ஒன்றான மெய்க் கடவுளை விசுவாசிக்கவே, அந்த விசுவாசமே அவளுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அந்த ராகாப் என்னும் விசுவாசிக்கு, மெய்க் கர்த்தரை நம்பினவளுக்கு, கானான் சுத்தரம் நிலைத்திருக்கவில்லையோ?
அதே சமயத்தில் இஸ்ரவேலராக இருந்த போதிலும், மெய்த தெய்வத்திற்கு விரோதமாக அவிசுவாசம் காட்டின ஒருவரேனும் கானானில் கால் மிதிக்கவில்லையே. எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் கடைசிவரை கர்த்தரிடத்தில் விசுவாசம் கொண்ட காலேபும் யோசுவாவும்தான் கானானுக்குள் பிரவேசித்தார்கள். இதிலிருந்து நாம் அறியக்கிடக்கிற ஒரு சத்தியம் யாதெனில், யாரென்றாலும் சரி, இஸ்ரவேலரோ, கானானியரோ, மோசேயோ, யாரானாலும் யாரொருவர் ஒன்றான மெய்த்தேவனிடம் விசுவாசம் கொள்கிறார்களோ அவர்களுக்கே கானான் வாழ்வு கிட்டும். விசுவாசியாதவர்கள் வனாந்தரத்திலே மாண்டு ஒழிவார்கள். ஒரு கால் கானானைத் தங்கள் பிறப்புரிமையாகக் கொண்ட கானானியரும் தேவனை மறந்தால் அழிவது திண்ணம். ராகாப் போன்ற அற்ப விசுவாசிகள் கானானைச் சுதந்தரிப்பார்கள். அந்த விசுவாசிகளின் வம்சத்தில் கிறிஸ்து பிறப்பார். விசுவாசிகளின் இருதயங்களில் கிறிஸ்து தங்குவார். கீழ் நாட்டாரோ மேல்நாட்டாரோ யாரொருவர் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பரம கானானைச் சுதந்தரிப்பார்கள்.
அவன் கள்ளன்தான். வாழ்க்கை முழுவதையும் கள்ளங்கபட்டில் கழித்தவன்தான். அதுவும் கடைசி நேரந்தான். எனினும் அவன் இயேசுவை விசுவாசித்தான். ஆகையால் இயேசுவுடன் பரதீசுக்கள் செல்லும் பெரும் பாக்கியம் பெற்றான் அல்லவா?
பலஸ்தீனா நாட்டைக் கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது. இஸ்ரவேலர் தங்கள் பலவீனங்கள் மத்தியிலும், ஒன்றான மெய்த் தேவனிடம் விசுவாசம் கொண்டனர். ஆனால் கானானியருக்கோ உண்மையான தெய்வ விசுவாசம் இல்லை. அவர்கள் பிசாசை வழிபட்டனர். இந்த அவிசுவாசிகள் பலஸ்தீனாவில் பரிசுத்த தெய்வம், தெய்வமனிதனாக அவதரித்துப் பிறக்கமுடியாது. கண் கண்ட தெய்வத்திற்காக அதாவது மேசியாவுக்காகக் காத்திருந்து, வழி வகைகளைச் செவ்வைப் பண்ணிக் கொண்டிருக்கும் விசுவாசிகள் வாழும் நாட்டில்தான் தெய்வம் கிறிஸ்துவாகப் பிறக்க முடியும். ஆகவே, விழுந்துபோன மனுக்குலத்தை இரட்சிப்பதற்குத் தேவன் மனித அவதாரம் எடுப்பதற்கு முன்னர், அவர் பிறக்கப்போகும் கானான் நாட்டில் விசுவாசிகளின் வம்சம் குடியிருக்கவேண்டும். ஆகையால்தான் அண்டவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு விசுவாசிகளின் தந்தையாகிய ஆபிரகாமின் பிற் சந்ததியாருக்குக் கானான் நாட்டை வாக்களித்திருந்தார். தாம் செய்த வாக்கைப் பின்னர் நிறைவேற்றியும் விட்டார். ஆனால் கானான் நாட்டிலுள்ள பூர்வீகக் குடிகளான கானானியரும், ஏத்தியரும், ஏவியரும், கிர்காசியரும், எமோரியரும் எபூசியரும் பெர்சியரும் ஒன்றான மெய்த்தெய்வத்தின்மீது விசுவாசம் வைத்து அவர் ஒருவரையே வணங்கி வந்திருந்தால் இந்த யுத்தமெல்லாம் நடந்திருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது அன்றோ? ஆனால், இப்பொழுதோ கானானின் பூர்வீகக் குடிகள் சோரம் போய்விட்டார்கள். ஆகையால் அவர்களை அழித்து விட்டு, கானான் தேசம் ஆபிரகாமின் விசுவாசச் சந்ததியார் வசம் ஒப்பவிக்கப்பட்டது.
இந்த விசுவாசப் பரம்பரையில் வந்த பலத்த உண்மையான விசுவாசியாகிய மரியாளின் வயிற்றில் கானான் நாட்டில் தெய்வம் மனிதனாக அவதரித்தார். தெய்வ மனிதன் பெத்லகேமிலே பிறந்தார். மானிடரை மீட்பான் வேண்டி, கானானிலுள்ள எருசலேமில் சிலுவை மரணமுற்றார். அதே கானான் நாட்டின் ஒரு புதுக் கல்லறையில் அவர் அடக்கம் பண்ணப்பட்டார். ஆனால் மரணம் அவரை ஆண்டு கொள்ள முடியவில்லை. அவர் நித்திய ஜீவனுள்ள தெய்வம் அன்றோ! அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்துவிட்டார். மரித்தேன், அனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று வெற்றி முரசு கொட்டுகிறார் இயேசு கிறிஸ்து. ஆமென், அல்லேலூயா! இயேசுநாதர் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறார். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்கிறார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருக்காலும் மறக்கவேண்டாம். அந்த இயேசு பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியைத் தமது விசுவாசிகள்மீது பொழிந்தருளி அவர்களுக்குள் வாசம்பண்ணினார். ஆகவே, அவர்கள் பலபல முட்டுக்கட்டைகளாகிய யோர்தானைக் கடந்து பரிசுத்த ஜெயஜீவியம் செய்தார்கள்.
தாங்கள் பெற்ற இப்பேரின்ப வாழ்வு இவ்வையகமும் பெறவேண்டும் என்று துடித்தார்கள். அதற்குக் காரணராகிய கிறிஸ்துவைப் பிறருக்குச் சுவிசேஷமாக அறிவித்தார்கள்.
இச்சுவிசேஷ வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் சோதனைகளாகிய யோர்தான் குறுக்கிட்டு நின்றன. கிறிஸ்துவால் அந்த யோர்தானையெல்லாம் கடந்து சென்றார்கள். கிறிஸ்துவால் யோர்தானின் மீது வெற்றிகொண்டார்கள். நீ தண்ணீரையும் நதிகளையும் கடந்துபோவாய். நதி வெள்ளம் உன்மேல் புரளுவதில்லை. காரணம், நீ தண்ணீர்களைக் கடக்கும்போது உன் தேவனாகிய நான் உன்னோடேகூட இருப்பேன். நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது. பயப்படாதே. உன்னை மீட்டுக்கொண்டேன். உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன் என்று தேவன் இன்று உன்னைப் பார்த்து சொல்லுகிறார் (ஏசா.43:1-2).
ஆம், தேவன் உன்னோடுகூட இருந்தால் மாத்திரமே நீ யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்க முடியும். இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்ததின் இரகசியம் யாதெனில், தேவப் பிரசன்னத்தின் சின்னமாகிய உடன்படிக்கைப் பெட்டி அவர்களோடு கூடச் சென்றது. இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்கள் முன்னே யோர்தானிலே போகிறது, என்று யோசுவா இயம்புகிறான் (யோசு.3:11). ஆகவே யோர்தான் வெற்றிச் சின்னம் உடன்படிக்கைப் பெட்டிதான் என்பது அறியக்கிடக்கிறது. இந்த ஓர் அதிகாரத்திலயே உடன்படிக்கைப் பெட்டி என்ற பதம் பத்து தடவை வருகிறது. தேவ பிரசன்னம் அவர்களோடுகூடச் செல்ல வில்லையானால், அவர்கள் யோர்தானில் படுதோல்வி அடைந்திருப்பர். நம் வாழ்வின் தோல்விக்கு மூலகாரணம் தேவன் நம்மோடுகூட இராமையே ஆகும்.
யோர்தானைக் கண்டு மயங்கி நிற்கும் கிறிஸ்தவனே, கேள். இந்த யோர்தான் உனக்கு முன்பாக எதிர்படுமுன் கிறிஸ்துவின்மேல் கெத்சமனேயில் புரண்டு போனது என்பதை மறவாதே. கொல்கொதா மலையில் இந்த யோர்தான் அவரை மூழ்கடித்தது, கல்லறையில் அவரை ஆழ்த்தி விட்டது. எனினும் மூன்றாம் நாள் இந்த யோர்தானை விட்டு வெற்றி வேந்தராக வெளியேறினார் இயேசு கிறிஸ்து. உனக்காகவே, உன்னுடைய யோர்தானையே தாம் ஏற்றுக்கொண்டு, அதில் அப்படியே ஆழ்ந்து விடாமல் கரையேறி விட்டார் கிறிஸ்து. ஆகையால் இன்று அந்த யோர்தானுக்கு உன்மேல் அதிகாரம் இல்லை. யோர்தானில் ஒரு வழியைத் திறந்துவிட்டார் இயேசு கிறிஸ்து. அவரை விசுவாசித்து அவர் வழியே செல்பவர்கட்கு யோர்தான் மேல் வெற்றியும் கானான் சுதந்திரமும் கிட்டும். கிறிஸ்துவே நமக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவரை நம்பி அவர் வழி சென்றவர்கள் இதுவரை ஒருவரும் ஒருக்காலும் ஏமாற்றமடைந்ததில்லை. அவரை விசுவாசித்து அவர் சென்ற வழி சென்ற அத்தனை பேர்களும் யோர்தானைக் கடந்து நித்திய ஜீவகரை சேர்ந்துள்ளார்கள்.
நமது அன்றாட வாழ்வில், தினந்தோறும் யோர்தானைக் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. இத்தகைய யோர்தான் எங்கே உள்ளது? சாப வாழ்வை விட்டு ஆசீர்வாதங்களுக்குள் செல்ல விரும்பின், இரண்டும் இடையே குறுக்கிட்டு நிற்பது அவிசுவாசம் எனும் யோர்தான். பாவ வாழ்iவிட்டு, பரிசுத்த வாழ்வுக்குள் நுழைய ஆசிப்பின், இரண்டுக்கும் குறுக்கே இருதயக் கடினமாகிய யோர்தான் எழும்பிவிடுகிறது. இவ்வாறே இருள் வாழ்வுக்கும் பேரொளி வாழ்வுக்கும் ஊடேயிருப்பது யோர்தான் என்னும் இரும்புத்திரை. சாத்தானின் அடிமை வாழ்வை உதறிவிட்டுக் கிறிஸ்துவின் ஆட்சிக்குள் பிரவேசிக்க முற்படின், அவநம்பிக்கை இடையே முட்டுக்கட்டையாக எழுந்து நிற்கிறது. கிறிஸ்தவ வட்டரக வாழ்வை நீத்து, உலர் பரிசுத்த வெற்றி வாழ்வில் ஈடுபடுவதை, இரகசிய பாவமாகிய யோர்தான் இடை மறித்து நிற்கிறது. ஆகவே யோர்தானைக் கடக்காவிட்டால் நமக்கு ஆசீர்வாத வாழ்வு கிட்டாது.
ஆனால், ஆசீர்வாதம் என்றால் என்ன? கிறிஸ்துதான் நமது ஆசீர்வாதம். இம்மைக்கும் மறுமைக்கும் போதுமான பேராசீர்வாதம் இயேசுதான். வெற்றி வேந்தராகிய இயேசுகிறிஸ்த்துவை நாடு. அப்பொழுது அவரால் உனக்கு வெற்றி வாய்க்கும். கிறிஸ்துவே நமது வெற்றியன்றோ! நமது இலட்சியம் மோட்சம் அன்று, இயேசுதான் நமது இலட்சியம். இயேசுவை அடைந்தவன் மோட்சம் அடைந்தவன் ஆவான். பரிசுத்தராகிய இயேசுவை நாடு. இயேசு அடைந்தவன் பரிசுத்தம் அடைந்தவன் ஆவான். நமது இலக்கு இரட்சிப்பு அன்று, இரட்சகராகிய இயேசுவே நமது இலக்காக இருக்கவேண்டும். இயேசுவை அடைந்தவன் இரட்சிப்பு அடைந்தவன் ஆவான். சாந்தி, சமாதானம் அல்ல, சமாதானப் பிரபுவாகிய இயேசுவையே தேடு. இயேசுவை அடைந்தவன் சாந்தி, சமாதானம் அடைந்தவன் ஆவான். நாம் வாழ்வதெல்லாம் இயேசுவை அடைவதற்கே. நமது ஆசையெல்லாம் இயேசுவே, நமது பேரின்பமெல்லாம் இயேசுவே. அவரை அடையாதபடி தடுப்பதெல்லாம் யோர்தானே. நமது ஆத்ம நேசராகிய இயேசுவையும் நம்மையும் பிரித்து வைக்கும் எப்பாவ யோர்தானையும் தாண்டிச் செல்ல அவரே வழி வகுத்துள்ளார். அவர் அருளால் எந்த யோர்தானையும் நாம் கடந்து செல்லலாம். அவர் சிலுவைப் புண்ணியத்தால் நாம் கடக்க முடியாத யோர்தான் ஒன்றுளதோ! ஆசீர்வாதம் வேண்டுமா? யோர்தானைக் கடந்து செல். எத்தகைய ஆசீர்வாதம் வேண்டும்? எது பேராசீர்வாதம்? அழியாப் பேரின்பப் பேராசீர்வாதம் கிறிஸ்து ஒருவரே. அந்த ஆசீர்வாதத்தை அடைவதற்கு ஒரே வழியும் அவரே.










