- உண்மையின் பரிசு
தியான வாசிப்பு: யோசுவா 5:10-15
கில்கால் இஸ்ரவேலரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மாபெரும் மகத்தான பாளயம். அவர்கள் இப்பொழுது வனாந்தரத்தில் இல்லை. யோர்தானையும் கடந்து கானானுக்குள் புகுந்துவிட்டார்கள். அவர்கள் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தைத் தங்களுக்குச் சுதந்திரமாகக் கொள்ளுமுன் கில்காலிலே பாளயமிறங்கி ஆகவேண்டும். தங்களுக்கு எதிரேயிருக்கிற கானானிய பகையரசர்களை முறியடிக்க எழுமுன் கர்த்தர் என்ன சொல்வாரோ அவ்வாறே செய்து, தங்களைப் போருக்கு ஆயத்தமாக்கிக் கொள்ளவேண்டும். படையெடுப்புக்கு முன்னர் தகுந்த ஆயத்தம் வேண்டும். கானான் வாழ்வுக்கு முன்னர் யோர்தான் மரணத்தை ருசிக்கவேண்டும். ஆனால் அம் மரணத்தில் ஆழ்ந்து ஒழிந்து போகக்கூடாது. யோர்தான் மரணத்தைக் கடக்க வேண்டும். கானான் என்னும் நித்திய கரை சேர்தல் வேண்டும். மரித்த அவர்கள் உயிர்ப்பிக்கப்படவேண்டும். பின்னர் விருத்தசேதனம் பெறல் வேண்டும். அதாவது பாவ மாம்சத்தைச் சிலுவை என்னும் கருக்கான கத்தியால் வெட்டி வீசியெறிய வேண்டும். பாவ மாம்சத்தைக் களைந்த பின்னர் ஆத்துமா ஆற்றல் பெற பஸ்காவை ஆசரிக்கவேண்டும். பஸ்காவாகிய கிறிஸ்துவை உட்கொள்ளாவிட்டால், வெற்றி வல்லமை பெற முடியாது.
கில்காலில் படிக்கும் ஐந்தாம் பாடம் யாதெனில், நாம் அவருடைய அதிசயங்களை உணர்ந்தறிய வேண்டும் என்பதே. ஆகவே கில்கால் உணர்ந்தறியும் பாளயமாகும்.
பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும், அடைகளையும், சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது. அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்திலேதானே புசித்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அடுத்தடுத்து வரும் மூன்று நாட்களின் சம்பவங்களை நாம் வாசிக்கிறோம். மாதத்தின் 14ம் தேதியில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரித்தார்கள். மறுநாளில் கானான் தேசத்துத் தானியத்தைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்துத் தானியத்தைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுவிட்டது. எவ்வளவு துரிதமாகத் தமக்குக் கீழ்ப்படிகிற மக்களுக்குக் கர்த்தர் உத்தரவளிக்கிறார் பாருங்கள். தனது சொற்படியே நடக்கிற மக்களுக்கு எவ்வளவு விரைவாக பரம நன்மைகள் வழங்கப்படுகின்றன. உண்மையான கீழ்ப்படிதலுக்கு உடனே விரைந்து பரிசளிக்க பரலோகம் முந்திக்கொள்கிறதன்றோ! உண்மைக்கு எஞ்ஞான்றும் பரிசு உண்டு. கீழ்ப்படிதலுக்கு எக்காலத்தும் வெகுமதி உண்டு. கர்த்தருடைய சொற்படி நடக்கிறவர்களுக்கு ஜீவகிரீடம் உண்டு.
பஸ்காவாகிய கிறிஸ்துவைப் புசிப்பவர்களுக்குப் பரம கானானின் ஜீவதானியம் கிடைக்கும். சிலுவையை ஏற்றவுடனே பரம அப்பமாகிய கிறிஸ்து கொடுக்கப்படுவார். பஸ்கா இன்றேல் கானான் தானியம் இல்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய ஜீவ அப்பத்தை நாம் உண்டு அனுபவிக்க முடியாது. உலக சிலுவையை நாம் அனுபவிக்காவிட்டால், நாம் பரலோகக் கிரீடத்தைப் பெறமுடியாது.
மன்னா வனாந்தரத்து ஆகாரமாகும். வனாந்தர பிரயாண வாழ்க்கைக்கு எற்றது மன்னாதான். வனாந்தர வாழ்வின் அவசியங்களுக்கு மிகவும் அனுகூலமாக இருந்தது மன்னா. அவ்வனாந்தரத்தின் கடவுள் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சிறந்த பிரயாண உணவு மன்னாவேதான். அந்தந்தக் காலத்துக்கு, அந்தந்த இடத்திற்கு, அந்தந்த வசதிக்குத்தக்க நன்மையருளிச் செய்வது கடவுள் வழக்கம். அன்றன்றுள்ள ஆகாரம் அவர்களுக்கு அப்பாழான பாலைவனத்திலும் வழங்கப்பட்டது. கூப்பிடுகிற காக்கைக் குஞ்சிற்கும் ஆகாரமளிக்கிறவர், தான் நடத்திச் செல்லும் மக்களுக்குத் தக்க ஆகாரம் அளிப்பதற்குத் தயங்குவாரோ? கர்த்தருடைய வழியில் நடக்கிறவர்களுக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கும் ஒருக்காலும் ஒரு நன்மையும் குறைவுபடாது. எலியாவைக் காகங்களைக் கொண்டு போஷிக்கச் சித்தம் கொள்ளும் அதிசயத் தெய்வம், இஸ்ரவேல் புத்திரருக்கு அற்புதமாய் வானத்திலிருந்து மன்னா வருஷிக்கப் பண்ணச் சித்தம் கொண்டார்.
இஸ்ரவேலரைக் கானான் தேசத்திற்கு அழைத்து வருகிறவர் கர்த்தர். அவர் இஸ்ரவேலரின் வாழ்க்கை வசதிகளையெல்லாம் கிருபையாக அருளிச் செய்கிறவர். அவர் அனுப்புகிற வேலையில் ஈடுபட்டவர்களை அவரே அற்புதமாய்ப் போஷிக்கிறார். அவர் கட்டளையிடும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்பொழுது, நமக்குரிய காரியங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆ ! கர்த்தர் எவ்வளவு இரக்கம் உள்ளவர். அவரது கிருபையின் ஆழத்தை யாரால் அழக்கமுடியும். அவருடைய அன்புக்கு எல்லையும் உண்டோ! அவர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.
இஸ்ரவேலரைக் கானான் தேசத்திற்கு அழைத்து வருகிறவர் கர்த்தர். அவரே இஸ்ரவேலரின் வாழ்க்கை வசதிகளையெல்லாம் கிருபையாக அருளிச்செய்கிறவர். அவர் அனுப்புகிற வேலையில் ஈடுபட்டவர்களை அவரே அற்புதமாய்ப் போஷிக்கிறார். அவர் கட்டளையிடும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்பொழுது, நமக்குரிய காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆ ! கர்த்தர் எவ்வளவு இரக்கம் உள்ளவர். அவரது கிருபையின் ஆழத்தை யாரால் அளக்க முடியும். அவருடைய அன்புக்கு எல்லையும் உண்டோ! அவர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.
இஸ்ரவேலர் வாழ்வின் குறிக்கோள் கானான் வாழ்வே ஆகும். அதை அடைவதற்கு முன் ஆரம்ப நிலையில் மன்னா ஆகாரந்தான் அவர்களுக்குப் பொருத்தமான ஆகாரமாகும். மன்னா வனாந்தர ஆகாரம். பிரயாண ஆகாரம். வழி நடைக்கு பெரிதும் உதவும் கட்டமுது போன்ற காட்டுணவு ஆகும். ஆனால், இப்பொழுது அவர்கள் நாடிச்சென்ற நாட்டை அடைந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு இனி வனாந்தரப் பிரயாண ஆகாரமான மன்னா வேண்டியதில்லை. அவர்கள் கானான் தேசத்தின் தானியத்தை இப்பொழுது புசித்துவிட்டார்கள். ஆதலின் இனிமேல் மன்னா வேண்டியதில்லை. சுதந்தர பூமியின் தானியம் போதும்!
மன்னா குழந்தை உணவு. இஸ்ரவேல் புத்திரர் இப்பொழுது குழந்தைகள் அல்ல. போருக்குப் புறப்பட்டு நிற்கும் போர்வீரர் ஆவர். அவர்களுக்கு இப்பொழுது குழந்தை உணவாகிய மன்னா வேண்டாம். போர் வீரர்களுக்குரிய சத்துள்ள உணவாகிய தானியம் வேண்டும். நாம் குழந்தைகளாயிருங்குங்கால், பால் பருகினோம். ஆனால் இப்பொழுது பெரியவர்களாக வளர்ந்துள்ளோம். ஆகவே, தாய்ப்பாலை நீத்து, இப்பொழுது ஊட்டம் தரும் உறுதியான உணவு உண்கிறோம். நமது சரீர வளர்ச்சிக்குத்தக்க ஆகார வகைகளை மாற்றிக்கொள்கிறோம். அங்ஙனமே ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தக்கதாக ஆண்டவர் அவ்வப்போது ஆன்ம ஆகார வகைகளை மாற்றித் தருவதற்குத் தயங்குவதில்லை. ஏனென்றால், அது நமக்கு நன்மை பயக்கும். உலகம், மாம்சம், பிசாசு முதலியவற்றை எதிர்த்து போரிட்டு வெற்றி காண வேண்டிய கிறிஸ்தவனுக்கு முன்னிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த அதி உன்னத ஆகாரம் வேண்டும். இவ்வுலகத்தில் போராடும் கிறிஸ்தவன் உண்ணவேண்டிய உன்னத உணவு இயேசு சுவாமிதான். அவரே புத்துயிரும், புது ஊக்கமும், புது ஆற்றலும் தரக்கூடிய ஒப்பற்ற ஜீவ அப்பம். இயேசு கிறிஸ்து இல்லாதவன் இவ்வுலகப்போரில் வெற்றிமாலை சூடமுடியாது. ஆகவே, அனுதினமும் அவரால் நாம் ஊட்டம் பெறல் வேண்டும். பரம கானானின் ஈடு இணையற்ற தானியம் இயேசு கிறிஸ்துதான்.
ஆகவே, மன்னா நின்று தானியம் கிடைப்பதால் ஏற்படும் ஆகார மாற்றத்தால் நாம் அதிர்ச்சியுறல் கூடாது. இவ்வாகார மாற்றம் ஆன்ம முன்னேற்றத்தையே குறிக்கும். அவ்வாறாயின், மாற்றத்தைக்கண்டு மதிமயங்குவது கூடாது அல்லவா? நமது சூழ்நிலையில் மாற்றம், அலுவலில் மாற்றம், அதிகாரத்துறையில் மாற்றம், உறைவிடத்தில் மாற்றம், வீட்டில் மாற்றம். நாட்டில் மாற்றம், ஏட்டில் மாற்றம் போன்றன பல்வேறு மாற்றங்களைக்கண்டு பதற்றமடையக்கூடாது. எது மாறினாலும் மாறட்டும், அவருடைய அன்பு மாறாததன்றோ. மாறாத நம் நேசர் நமக்குப் போதுமானவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் பலம் நமக்குப்போதும். அவருடைய பலத்தால் வெற்றிமேல் வெற்றிகிட்டும். அவர் இல்லாத போர் வாழ்வு, படுதோல்வி வாழ்வாகவே முடியுமன்றோ! இதனை நாம் உற்றறிதல் வேண்டும். இச்சத்தியத்தை நாம் ஒருநாளும் மற்றகவேண்டாம். கில்கால் உணர்ந்தறியும் பாளயம் அல்லவா?
ஆறாவது கில்கால் நமக்கு அறைகூவும் அருமையான பாடம் யாதெனில், கண்கண்ட தெய்வம் நமக்கு வேண்டும் என்பதே. நாம் கடவுளைக் காணமுடியாது. அவரே நம்மை நமக்கு வெளிப்படுத்தச் சிந்தங்கொள்ளவேண்டும். அவர் வெளிப்பட்டாலன்றி நாம் அவரை எவ்வாறு காணமுடியும்? ஆனால், அவருடைய வெளிப்படுத்தலில்லாமல் நாம் போருக்கு எழுதல் விருதா. ஆகவே, இஸ்ரவேல் போருக்கு எழுமுன், சேனைகளின் கர்த்தர் அவர்களுக்குக் கில்காலில் வெளிப்படுத்தப்பட்டார். ஆகவே, கில்கால் வெளிப்படுத்தல் பாளயமாகும்.
யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது. யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார். அப்பொழுது யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார். யோசுவா அப்படியே செய்தான்.
இஸ்ரவேல் புத்திரர் இப்பொழுது போருக்குத் தயாராக இருந்தார்கள். கானான் தேசத்துப் பகைவரை வெல்லுவதற்குக் கானான் தேசத்துத் தானியத்தை உண்டு பலப்பட்டார்கள். போருக்கு எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. எனினும் அவர்கள் அப்படியே போய் விரோதிகள் மீது விழுந்து அவர்களை மடங்கடிக்கமுடியாது. பகைவர்கள் ஏராளம். இஸ்ரவேல் புத்திரரோ ஒரு சிறிய ஜாதியினர் மாத்திரமே. ஒப்பிட்டுப்பார்த்தால் கானான் நாட்டிலுள்ள பகைவர்களைவிட இஸ்ரவேலர் ஆள் எண்ணிக்கையிலும் பலத்திலும் குறைந்தவர்கள். ஆகவே, அவர்கள் தன்னந்தனியராய்ப்போய் கானானியரைத் தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு இருந்த மனிதப் பலத்தால் மாத்திரம் அவ்வேற்று மனிதரை விரட்டியடிக்க முடியாது. ஆகவே, சிறுபான்மையான இஸ்ரவேல் புத்திரர் வெற்றிபெறவேண்டுமாயின், உன்னதத்திலிருந்து அவர்கள் தெய்வ பலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலின் சேனைகளினால் மாத்திரமன்று. பரம சேனைகளின் உதவியினால் மட்டுமே அவர்கள் பகைவர்களை வெல்லமுடியும். பரம சேனைகள் மாத்திரமன்று, அச்சேனையின் கர்த்தரும் தங்களுக்குச் சேனாதிபதியாய் முன்நின்று போரை நடத்த வேண்டும். வெறும் மனிதனான யோசுவா மாத்திரம் தங்களுக்குத் தலைவனாக நின்று போர் புரிந்தால் இத்தனை திரளான போர்த்திமிக்க கானானியரைக் கொன்று குவிப்பது எப்படியாகும்? ஆகவே, கில்காலை விட்டுப் போருக்குப் புறப்படுமுன் சேனைகளின் கர்த்தர் தரிசனம் தரவேண்டும். அவரே இஸ்ரவேலரின் சேனைக்குத் தலைமை தாங்கவேண்டும். அவரே முதன்மையாக நின்று இஸ்ரவேலரைப் போர்க்களத்தில் நடத்தவேண்டும். அவரே இஸ்ரவேலருக்காக் போர் புரிதல் வேண்டும். அவரே கானான் தேசத்தைக் கைப்பற்றி இஸ்ரவேலருக்கு அதை தானமாக வழங்கவேண்டும். இஸ்ரவேலர் கானான் நாட்டைச் சுதந்தரிக்க சேனைகளின் கர்த்தரது சகாயத்தால் தான் முடியும். யுத்தம் கர்த்தருடையது. யுத்தத்தை நடத்த வேண்டிய பொறுப்பும் அவருடையது. வெற்றியும் கர்த்தருடையது. சுதந்திரமும் கர்த்தருடையது. அச்சுதந்திரத்தைக் கர்த்தர் கொடுக்க, அவருடைய பிள்ளைகள் விசுவாசத்தோடு அதைப்பெற்று நன்றியோடு அவருக்கு மகிமையாக வாழவேண்டும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும், கனமும் என்றென்றைக்கும் கர்த்தருடையவைகளே. கர்த்தர் இன்றேல், கானான் இல்லை.
யோசுவாவுக்குக் காணப்பட்ட இந்தச் சேனைகளின் கர்த்தர் யார்? சிலுவையில் சாத்தானைச் சங்கரித்த இயேசு நாதரே அந்தச் சேனைகளின் கர்த்தரவர். சிலுவைப்போரில் வெற்றி மாலை சூடியவரே அவர். சிலுவை ஆயுதத்தால் சாத்தானின் தலையை நசுக்கியவர் அவர். சிலுவையில் மரணத்தை வென்றவரே அவர். மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று வெற்றி முழக்கங்கள் செய்கிறவரே அவர். இதோ, நான் உலகத்தை ஜெயித்தேன், வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். திடன் கொள்ளுங்கள் என்று ஜெயபேரிகை முழங்கியவர் அவர். இவ் வெற்றி வேந்தனே யோசுவாவுக்கு காட்சியளித்தார்.
இதே சேனைகளின் கர்த்தர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்குத் தரிசனமானான். அவர் தரிசனம் அளித்த பூமி, பரிசுத்த பூமி. ஆகவே, கர்த்தரின் சொற்படி மோசே தன் காலிலிருந்த பாதரட்சையைக் கழற்றிப் போட்டான். அவன் கர்த்தரைப் பார்க்க பயந்ததினால் தன் முகத்தை மூடிக்கொண்டான். தேவ பர்வதமாகிய ஒரேபிலே மோசேக்குத் தரிசனம் தந்த சேனைகளின் கர்த்தர் மோசே மூலமாக இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்தினின்று மீட்டு இரட்சித்தார்.
இப்பொழுது அதே இரட்சகர் கில்காலில் யோசுவாவுக்குத் தரிசனமானானர். கர்த்தருடைய சொற்படியே யோசுவா தன் கால்களிலிந்த பாதரட்சைகளைக் கழற்றிப்போட்டான். அவன் நின்ற பரிசுத்த பூமியில் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து அவரைப் பணிந்துகொண்டான். முன்னர் மோசே மூலமாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டு இரட்சித்த கர்த்தர், இப்பொழுது யோசுவா மூலமாகக் கானான் நாட்டுப் பகைவரின், கைகளினின்று இஸ்ரவேலரை மீட்டு கானான் நாட்டை அவர்களுக்குச் சுதந்திரமாக இந்த யோசுவா மூலம் பகிர்ந்து கொடுக்கச் சித்தங்கொண்டார். அதற்காகவே, தம்மைக் கில்காலிலே வெளிப்படுத்தினார். கில்கால் வெளிப்படுத்தல் பாளயமாகும்.
இந்தச் சேனைகளின் கர்த்தருக்குப் பரம சேனைத்திரள் உண்டு. அப்பரம சேனைத்திரள் கர்த்தரின் ஏவலைச் சிரமேற்கொண்டு ஒழுகுகின்றவர்கள். கர்த்தரின் சித்தத்தை தங்கள் பாக்கியமாக கொண்டவர்கள். ஆண்டவரின் ஆணையை நிறைவேற்றுவதையே தங்கள் அருந்தொண்டாகக்கொண்டவாகள். அவரது கட்டளைப்படி அவரது பிள்ளைகளுக்குச் சேiயாற்றுகிறவர்கள். வேதாகமத்தில் அநேக இடங்களில் இந்தப் பரம சேனையைப் பற்றிப் படிக்கிறோம். யாக்கோபு தன் தாயகம் மீளுங்கால், இந்தப் பரமசேனையைக் கண்டான். இயேசுநாதர் கெத்சமனே தோட்டத்தில் பேதுருவை நோக்கி: நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று கேட்டது இந்தப் பரமசேனையைக் குறித்துத்தான். இயேசுநாதரின் திருஅவதாரப் பிறப்பின்போது இந்தப் பரம சேனையின் திரள் பெத்லகேமில் தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலேயே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
யோசுவா இந்தச் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து கொண்டமையின், அவன் கர்த்தரின் தலைமையை மனதார ஏற்றுக்கொண்டான் என்பது புலனாகிறது. தான் அல்ல, நீரே இஸ்ரவேலரின் போர்த்தலைவர் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறான். கர்த்தரே தலைமைதாங்கி இஸ்ரவேலருக்காக யுத்தத்தை நடத்தவேண்டுமென்று இதன் மூலம் வேண்டுகிறான். இவ்வாறு யோசுவா இதயபூர்வமாகக் கர்த்தரைத் தலைவராக ஏற்றுக்கொண்டபடியால், எரிகோ மனித யுத்தமின்றி, தெய்வக் கரத்தால் நொறுக்கப்பட்டுக் கீழே விழுந்தது. ஏழு ஆண்டுகளுக்குள் கானான் தேசமனைத்தும் இஸ்ரவேலரின் சுதந்திரமாயிற்று. எரிகோவின் மதில்கள் மனிதனின் குண்டுவீச்சின்றி, தெய்வவல்லமையால் தகர்ந்து இடிந்து விழுந்தன. காரணம் சேனைகளின் கர்த்தரை யோசுவா தனது தலைவராக ஏற்றுக்கொண்டதுதான். கர்த்தரே போர் செய்தால் அவருக்கு எதிரே நிற்பவன் யார்? ஒளிமுன் இருள் நிலைநிற்க முடியுமோ?
தற்காலத்துத் திருச்சபை மக்கள் இயேசுநாதரை உண்மையாகவே தங்கள் தலைவராகக்கொண்டு, அந்தகாரத்தின், லோகாதிபதியோடு போர் செய்தால், ஜெயம் பெறுவது நிச்சயம், நமது சங்கங்களின் தலைவர் யார்? நமது பள்ளிகளின் தலைவர் யார்? நமது மருத்துவச் சாலைகளின் தலைவர் யார்? நமது அனாதைச்சாலைகளின் தலைவர் யார்? நமது வீட்டின் தலைவர் யார்? நமது அலுவலகத்தின் தலைவர் யார்? நமது கழகங்களின் தலைவர் யார்? மனிதரா? கிறிஸ்துவா? கிறிஸ்து தலைவரானால், அவரது தலைமையின்கீழ் வெற்றிமேல் வெற்றி எட்டுத்திக்கும் முழங்கக்காணலாமே! தோல்வியுள்ள இடத்தில் கர்த்தரின் தலைமை இல்லை என்பது தெளிவு. அவர் தோல்வியின் தெய்வம் அல்லர். அவர் வெற்றியின் தெய்வம் ஆவார்.
ஒரு கிறிஸ்தவன் ஆற்றவேண்டிய போர் சாதாரணப் போர் அன்று. அது திருப்போர் ஆகும். அதைப் பவுல் அடிகள் இவ்வாறு விவரித்திருக்கிறார். நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்திற்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தெய்வ பலமுள்ளவைகளாயிருக்கின்றன. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிறி அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நீர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருப்போம் (2.கொரி.10:3-5).
இயேசு நாதர் தமது அவதாரக் காலத்தில் இந்த ஆன்ம விரோதிகளோடு எதிர்த்து நின்று அவைகள்மேல் இறுதியில் சிலுவையில் வெற்றி சிறந்தார். அந்த ஆத்துமப் பகைவர்ர்ர்ர்கள் வனாந்தரத்தில் அவரைச் சோதித்தன. உமக்குச் சிலுவை மரணம் எதற்கு? என்று பேதுரு வாயிலாக நயவஞ்சகமாக வினவின. கெத்சமனேயில் அவரைக் கசக்கிப் பிழிந்தன. கடைசியில் முழு உக்கிரத்தோடு அவைகள் எல்லாம் சேர்ந்து சிலுவையில் அவரைக் கடுமையாகத் தாக்கின. நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்து கீழே வாரும் என்று பரிகசித்தன. ஆனால், இயேசுநாதர், அவைகளுக்குச் செவிகொடுக்காது, தமது சிலுவையால் அவைகளை அடித்துத் தகர்த்துக் கொன்றொழித்தார். சிலுவை ஜெயமாயிற்று. மரணம் அவரைத் தன்னுள் அடக்கிக்கொள்ளமுடியவில்லை. மரணத்தின் மேலும் வெற்றி சிறந்தவராய் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் நம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும், அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரே எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார் (எபேசி.1:20-23).
நாம் இப்பொழுது நமது அன்ம விரோதிகளை மாம்ச ஆயுதங்களால் தாக்க முயல்கிறோம். இம்முறையில் நாம் ஒருக்காலும் வெற்றி காணமுடியாது. நமது உலக ஞானமான திட்டம், விவேகமான விளம்பரம், தீவிர படை முயற்சிகள், அரும் பிரயாசம் போன்ற எல்லாம், மனித முயற்சிகள். வெகு ஊக்கமாக கிரியைசெய்யும் கிறிஸ்துவின் ஆவியானவர் அங்கு கிரியைசெய்யாவிட்டால் அத்தனையும் விருதாவாக முடியும். ஆன்ம சத்துருக்களை ஆன்ம ஆயுதங்கொண்டே தாக்கல் வேண்டும். அசுத்த ஆவிகளை வெல்லத்தக்கவர் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே. நமது மாம்ச வழிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, நம்மை ஆவியானவர் கையில் அர்ப்பணம் செய்வோமாக. பாதாளத்தன் வாசல்கள் இயேசு கிறிஸ்துவை மேற்கொள்வதில்லை (மத்.16:18).
ஓர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்போது, அந்த அலுவலகம் முழுவதற்கும் அவன் பெரும் ஆசீர்வாதமாக இருப்பான். ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு மனிதன் அல்லது பெண் கிறிஸ்துவின் ஆவியால் பொங்கி வழிந்தால், அத் தொழிற்சாலையில் இயேசுநாதர் மகிமைப்படுவார். நாம் எத்துறையில் எத்தொண்டு ஆற்றினாலும், கிறிஸ்துவின் ஆவியை உடையவராக இருந்தால் நமது போக்கையும் வரத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நம் மூலமாக அநேகர் கிறிஸ்துவைக் கண்டுகொள்வார்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்கமுடியாது. புனித கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியாது. நாம் தனிமையாக ஆண்டாண்டு காலமாக அழுதுபுரண்டு அரும்பெரும் சேவையாற்றினாலும், மாம்சத்தினால் ஆவியை யார்தான் வெல்லமுடியும்? ஆகவே நாம் தனிப்பட்டவர்களாக மாம்சத்தில் நமது ஆயுள்காலம் முழுவதும் செய்யமுடியாததைப் பரிசுத்தஆவியானவர் மூலமாக ஒரு நொடிப்பொழுதில் வெற்றியுடன் சாதிக்க முடியும். நமது மனைவியை அல்லது கணவனை அல்லது பிள்ளைகளை அல்லது பிற மதத்தினரைக் கிறிஸ்துவின் ஆவியானவர் மூலமாகக் கணப்பொழுதில் அவரின் காலடி சேர்க்கலாம். நமது மூலம் மனந்திரும்புதல் இல்லை. கிறிஸ்துவே ஒருவனை மனந்திரும்பச்செய்யமுடியும். உலகத்திலுள்ள எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஆத்துமாவைக் குணப்படுத்த முடியாது. கிறிஸ்து ஒருவரே ஆன்மாக்களைக் குணப்படுத்தக்கூடும். அவர் முதலாவது நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் குணப்படுத்துவாராக. அதற்கு இன்றே, இப்பொழுதே போருக்கு புறப்படுவதற்கு முன்னர்தானே, கில்கால் இருக்கும்பொழுதே, அவர் தம்மை நம் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்துவாராக. கில்கால் வெளிப்படுத்தல் பாளயம் என்பதை மறக்கவேண்டாம். யோசுவா தாழ விழுந்து கர்த்தரைப் பணிந்து கொண்டு அவரைத் தனக்குத் தலைவராக ஏற்றுக்கொண்டதுபோல, நாம் இப்பொழுதே கிறிஸ்து இயேசுவை நமது சொந்தத் தெய்வமாக ஏற்றுக்கொள்வோமாக. கிறிஸ்து நமது தலைவரானால், நாம் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி அடைவது திண்ணம்.










