- வெற்றி கொண்டாடல்
தியான வாசிப்பு: யோசுவா 6:1-20
இஸ்ரவேல் புத்திரர் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அடையுமுன், முதலாவது அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெறவேண்டியதிருந்தது. அவ்விடுதலை பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்தான் முடிந்தது. நமது பாவ விடுதலை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் மாத்திரமே சித்திபெறும். எகிப்தின் விடுதலைக்குப் பின்னர், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து திரிய நேரிட்டது. அவ்வனாந்தர வாழ்வில் எத்தனையோ வெற்றி தோல்விகளை அவர்கள் கண்டார்கள். பின்னர், அவர்கள் கானான் தேசத்துக் கரையில் கால் மிதிக்குமுன், யோர்தான் நதியைக் கடக்க வேண்டியதிருந்தது. அவ்வாறே ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவோடுகூட யோர்தான் மரணத்துக்குள் மூழ்கியாகவேண்டும். அப்படியே சிலுவை மரணத்தில் ஆழ்ந்துவிடாது மீண்டும் கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழவேண்டும்.
இஸ்ரவேலர் கானான் தேசத்தைத் தங்களுக்குச் சுதந்திரமாகக் கொள்ளுமுன் சேனைகளின் தேவனாகிய கர்த்தரைத் தங்களுக்குத் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவருடைய தலைமையின்கீழ் போராடவேண்டியதிருந்தது. கில்கால் பாளயத்திற்கெதிரே எரிகோ அரண் நின்றது. அதுபோல் கிறிஸ்தவ வாழ்விலும் நம்மெதிரே எரிகோ போன்ற சோதனைகள், கண்ணிகள், உலக மாம்ச பிசாசின் தந்திரங்கள், இச்சைகள் அரண்போல் எதிர்த்து நிற்கும். நாம் கிறிஸ்துவை நமது நாயகராக ஏற்றுக் கொண்டவுடனே இனி நமக்குச் சோதனைகள் ஒன்றுமே இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. கிறிஸ்துவுக்குள் மனந்திரும்பிய மனிதனுக்கும், பரம கானானின் சுதந்திரத்திற்கும் இடையே போராட்டப் பூமி இருக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்தப் போர்க்களத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். ஆன்ம விரோதிகளான உலகம், மாம்சம், பிசாசு போன்றவற்றோடு போரிட்டுத்தான் ஆகவேண்டும். அவன் எரிகோவின் அரணைத் தகர்த்தெறியவேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தகர்த்தெறிய வேண்டிய எரிகோ அரண் வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கலாம். சிலரது எரிகோ அவரது குணக்கேடாய் இருக்கலாம். சிலரது எரிகோ அவரது தீயொழுக்கமாய் இருக்கலாம். சிலரது எரிகோ அவரது இரகசியப் பாவங்களாய் இருக்கலாம். சிலரது எரிகோ, அவரது கெட்ட பழக்கவழக்கங்களாயிருக்கலாம். சிலரது எரிகோ, அவரது குடும்பத்தின் அசுத்த வாழ்க்கையாய் இருக்கலாம். அல்லது அவரது மனைவி மக்களின் மனந்திரும்பாத வாழ்க்கையாய் இருக்கலாம். கர்த்தர், அநேக தடவைகளில் நாம் சுவிசேஷ ஊழியத்தில் தீவிரமாக முனைந்து நிற்கவேண்டுமென்று வற்புறுத்தினபோதிலும், நாம் அவரது சத்தத்திற்குச் செவிகொடாமற்போயிருக்கலாம். ஆத்தும ஆதாயப் பணியில் நாம் குளிர்ந்து போயிருக்கலாம். கிறிஸ்தவ வாழ்வில் நாம் அனலுமின்றி, குளிருமின்றி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கலாம். இயேசுநாதர் நாம் இதைச் செய்யவேண்டும் என்று ஒரு திருத்தொண்டைச் சுட்டிக்காட்டினாலுங்கூட அதைச் செய்யாது அசட்டையாயிருக்கும் நிர்ப்பந்தமான நிலைமை போன்ற எத்தனையோ விதமான அரண்களை நம்மெதிரே காட்சி அளிக்கின்றன. ஒவ்வொருவருடைய வாழ்விலும் இளமையிலிருந்தே விடாது ஓட்டிக்கொண்டிருக்கும் பாவ ஆசைகள் போன்ற எரிகோவை எல்லாம் நாம் நொறுக்கித் தகர்த்து எறியவேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சோதனையாகிய எரிகோ உண்டு. இந்த எரிகோவை எவ்வாறு இடித்து எறிவது?
எரிகோ அரண்களை சுற்றி இஸ்ரவேலர் மௌனமாக வரும் காட்சி காண்பதற்கு எவ்வளவு விந்தையாயிருக்கும். எரிகோ மக்கள் போட்ட சத்தம் ஏழு ஆசாரியர்கள் ஊதின ஏழு எக்காளங்களின் சத்தம் மாத்திரமே. இந்த எக்காளங்களை ஊதும் ஏழு ஆசாரியர்களுக்குப் பின்னர் கர்த்தருடைய பெட்டி சென்றது. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்கு முன் யுத்த வீரர்கள் நடந்தார்கள். எக்காளங்கள் ஊதப்படும்போது, பின் துண்டு பயபக்தியோடு மௌனமாகப் பெட்டிக்குப் பின்சென்றது. இவ்விதம் கர்த்தர் சொன்னபடியே ஆறுநாள் எரிகோ அரணை மௌனமாகச் சுற்றி வந்தார்கள். ஏழாம் நாளிலே அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள். முதல் ஆறு நாளும் பட்டணத்தை ஒருதரம் மாத்திரம் சுற்றிவிட்டு, பாளயத்துக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அவர்கள், இந்த ஏழாம் நாளில் எரிகோ அரணைக் கர்த்தர் சொன்னபடியே ஏழு தடவை சுற்றி வந்தார்கள்.
ஏழாம் தடவை ஆசாரியர்கள் எக்காளங்கள் ஊதுகையில் இஸ்ரவேலர் ஆர்ப்பரித்தார்கள், எக்காளச் சத்தமும், இஸ்ரவேலரின் மகா ஆரவாரச் சத்தமும் சேர்ந்து பெரும் முழக்கமாக முழங்கின. இத்திடுக்கிடும் முழக்கத்தினால் அலங்கம் திடுதிடுவென இடிந்து விழுந்தது. உடனே இஸ்ரவேலர் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறிப் பட்டணத்தைப் பிடித்துக்கொண்டார்கள். தற்கால மொழியின்படி கூறினால் ஒரு குண்டு வீச்சுமின்றி, எரிகோ நகரம் பிடிக்கப்பட்டது. இயந்திரப் பலமுமின்றி, மனித சூழ்ச்சியுமின்றி எரிகோ நகர் வீழ்ந்தது. பின்னர், இவ்வெற்றி யாரால் ஆயிற்று? அவ்வெற்றி கர்த்தராலேயே ஆயிற்று. இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் வைத்த விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழு நாள் சுற்றி வரப்பட்டு விழுந்தது என்று எபிரெயர் 11:30ல் கண்டிருக்கிறது.
இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் வைத்த விசுவாசத்தினாலே எரிகோ எவ்வாறு விழுந்தது என்பதைப்பற்றி இரண்டொரு குறிப்புகள் கவனிப்போம். இஸ்ரவேலரின் விசுவாசம் எவ்வாறு பரீட்சிக்கப்பட்டது என்பதை நாம் உய்த்துணரலாம். பதின்மூன்று தடவை அவர்கள் அமைதியாக ஒரு பேச்சும் பேசாது சுற்றி வந்தார்கள். ஏன் அவ்வாறு அவர்கள் ஒரு செயலும் ஆற்றாது, 13 தடவைகள் பட்டணத்தைச் சுற்றிவரவேண்டும் என்பதற்கு காரணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. கர்த்தர் அவ்வாறு செய்யச் சொன்னார். அவர்கள், ஏன் எதற்கு என்று மறுகேள்வி கேட்காமல், விசுவாசத்தோடு அப்படியே செய்தார்கள். அதுவும் ஒரு பேச்சும் பேசாது பட்டணத்தைப் பதின்மூன்று தடவை சுற்றி வருவதென்றால் அவர்களுக்கு எவ்வளவோ கஷ்டமாய் இருந்திருக்கலாம். செயலற்றுச் சும்மா பட்டணத்தைச் சுற்றினால் எப்படிக் காரியம் பலிக்கும் என்று அவர்கள் சிந்திக்கலாம். ஆனால், கர்த்தர் பதின்மூன்று தடவையும் அப்படி அமைதியாய் சுற்றி வரச்சொன்னார். அவர்கள் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்தார்கள்.
இந்த விசுவாசக் கீழ்ப்படிதலுக்கு ஊக்கம் ஊட்டியது எது? அப்பவனியின் நடுவே சென்ற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிதான். கர்த்தரின் பெட்டி என்ற பதம் இந்த அதிகாரத்தில் பதினொரு தடவைகள் வருவதை நாம் உற்று நோக்கவேண்டும். இஸ்ரவேலரின் விசுவாசத்திற்கு அடிப்படைக் காரணம் அதுதான். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்கள் மத்தியில் சென்றதால், கர்த்தர் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் என்று விசுவாசித்தார்கள். கர்த்தரின் பெட்டி அவர்கள் மத்தியில் இருந்ததால் அவர்கள் அற்புதமாக யோர்தானைக் கடக்க முடிந்தது. அதே கர்த்தர் இப்போதும் தங்கள் மத்தியில் இருப்பதால் எரிகோ நகரை அதிசமாய்க் கைப்பற்ற முடியும் என்று நம்பினார்கள்.
இவ்வதிகாரத்தின் 11ம் வசனத்தில் எழுதியிருக்கிறபடி, அப்படியே கர்த்தரின் பெட்டி பட்டணத்தைச் சூழ்ந்து சுற்றி வந்தது. ஆம், கர்த்தர் இஸ்ரவேலரோடுகூடச் சேர்ந்து எரிகோ பட்டணத்தைப் பதின்மூன்று தடவை சுற்றிவந்தார். ஏன் அவர்கள் எரிகோவைச் சுற்றி பதின்மூன்று தடவைகள் எவ்விதப் பேச்சும் பேசாது மௌனமாக நடந்து வந்தார்கள்? அவர்கள் பதின்மூன்று தடவைகள் எரிகோவின் சத்துருவைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. அந்தப் பலத்த அரணைப் பதிமூன்று தடவைகள் பார்த்த பின்னர் அதைப் பிடிப்பது எவ்வளவ கடினம் என்று உணர்ந்திருப்பார்கள். அந்த வல்லரணைத் தங்கள் சொந்தப் பலத்தால் கைப்பற்ற முடியவே முடியாது என்பதை அறிந்துகொண்டார்கள். இறுதியில் தங்களால் அல்ல, கர்த்தர் ஒருவரால் மாத்திரமே எரிகோவின் பலத்த அரணை வீழ்த்த முடியும் என்று தெரிந்து கொண்டார்கள். ஆம், கர்த்தரால் ஆகாதகாரியமுண்டோ? கர்த்தரை நம்பின அவர்கள் வெட்கப்பட்டுப் போனதில்லை. கர்த்தர்தாமே எரிகோவின் அரணை அடித்து விழப்பண்ணினார்.
நமது அகவாழ்க்கையிலுள்ள எரிகோவானாலும் சரி, புற வாழ்கையிலுள்ள எரிகோவானாலும் சரி, அதை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வதற்கு நம்மிடம் பலம் இல்லை என்பதை நாம் முதலாவது உணரவேண்டும். நம்மைவிட நமது சத்துருவாகிய சாத்தான் அதிக அனுபவ வல்லமை கொண்டவன் என்பதை நாம் ஒரு நாளும் மறக்கக்கூடாது. நாம் தனிமையாக நின்று உலகம், மாம்சம், பிசாசு அசுத்தவாழ்க்கை ஆகிய சத்துருக்களை ஒருகாலும் வெல்லவே முடியாது. என்னாலேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசுநாதர் இயம்பவில்லையோ! ஆம், இயேசுநாதர் இல்லாமல் நமது ஆன்ம சத்துருக்களை மடங்கடிக்கமுடியவே முடியாது. ஆகவே, நாம் நமது ஒன்றுமில்லாமையை உணர்ந்து, அவரது சகாயத்துக்காக கெஞ்ச அவருடைய உதவிக்காக இடைவிடாமல் ஜெபம் செய்யவேண்டும். அவர் ஒருவரே வெற்றி வேந்தர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அவர் நமது வாழ்விலும் வெற்றி தருவார் என்று விசுவாசிக்கவேண்டும். அவரை நமது போர்த்தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி நாம் செய்யவேண்டும். அவர் பேசாதே என்றால் நாம் பேசாது மௌனமாய் இருக்கவேண்டும். அவர் ஆhப்பரி என்றால் நாம் ஆர்ப்பரிக்கவேண்டும். இவ்வாறு சிலுவைக்கொடியின் கீழ் இயேசுவின் தலைமையில் இவ்வுலகத்தில் போராடும் நாம் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவரோடு ஒத்துழைக்கவேண்டும். அப்போது எரிகோவின் அலங்கம் இடிந்துவிடும்.
நமது சொந்த வாழ்வில் மாத்திரமன்று, நமது சமுதாய வாழ்விலும் உலக வாழ்விலும் குறுக்கிட்டு நிற்கும் அநேக எரிகோக்கள் இக்காலத்தில் உண்டு. மண்ணாசை, சிற்றின்ப ஆசை போன்ற எரிகோக்கள் பல உள்ளன. நிர்விசாரம், அறிவீனம், ஆன்ம மமதை, பாவம் போன்ற எரிகோக்கள் பல உள. திருச்சபைக்குள்ளேயே எரிகோ அரண்பால் எதிர்த்து நிற்கும் மனந்திருப்பாத பேர் கிறிஸ்தவர்கள் பலர் உளர். திருச்சைபையைச் சற்றி நிற்கும் அநேகப் பலத்த எரிகோ அலங்கங்கள் உள்ளன. ஆகவே, நமக்குள்ளும் திருச்சபைகளுக்குள்ளும், நமக்குப் புறமும் திருச்சபைக்குப் புறமும் நாம் எதிர்த்துப் போராடவேண்டிய எரிகோக்கள் பல பல உண்டு நாம் தனித் தனியாகவும் திருச்சபையாக கூட்டங்கள், குழுக்கள், ஆலோசகைள், விவாதங்கள், நவீன முறைகள், விளம்பரங்கள், அரும்பெரும் தொண்டுகள், பல பல முயற்சிகள்மூலமாக எரிகோ அரண்களை உடைத்து தள்ள முயல்கிறோம். எனினும், எரிகோ அரண்கள் இன்னும் இடிந்து விழாது தலைதூக்கி நிற்கின்றனவே! காரணம் என்ன? மனிதன் அல்ல, தேவனே இதைச் செய்யக்கூடும் என்பதை உணராத குற்றந்தான். மனித முயற்சிகளால் அல்ல, தேவஆவியானவர் மூலமாகத்தான் எரிகோ இடிந்து விழும் என்பதை நாம் அறிந்து விசுவாசிக்கவேண்டும். மாநாடு கூட்டி, எரிகோவை வீழ்த்த எம்முறையைக் கையாடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதால் அல்ல. கர்த்தருக்குக் காத்திருந்து, அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவரோடு ஒத்துழைக்கும் புதுச்சிருஷ்டிகளான தேவ மனிதர்கள் மூலமாகத்தான் கர்த்தர் வெற்றி வாய்க்கச் செய்வார். புதுப் புது முறைகள் அல்ல, புதுச் சிருஷ்டிகளான மனிதரையே ஆண்டவர் தேடுகிறார். தமக்குக் கீழ்ப்படியும் மனந்திரும்பிய மக்கள் மூலமாகவே வெற்றியைக் காணச் செய்வார்.
எல்லாம் வல்ல இயேசுநாயகரை விட்டுவிட்டு தன்னந்தனியாகப் போராடும் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பார்த்து உலகம் எள்ளி நகையாடுகிறது. கிறிஸ்து இல்லாத பேர் கிறிஸ்தவர்கள் அடையும் படுதோல்வி கண்டு உலகம் பகடி செய்கிறது. கிறிஸ்தவர்களின் முயற்சி சித்தி பெறாததைப் பார்த்து பிறர் சிரிக்கின்றனர். சுவிசேஷம் இன்னும் அநேக இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருச்சபையின் நிலைமை பூரண வெற்றி தரும் நிலையில் இல்லை. திருச்சபையில் போதிய வளர்ச்சி இல்லை. இந்நிலையில் நான் உன்னை உலகத்தைப் பார் என்று வேண்டிக்கொள்ளாது, உன்னையே உற்றுப்பார் என்று வேண்டுகிறேன். உன் வாழ்வை எட்டிப்பார்! ஆராய்ந்து பார். உன் வாழ்வில் வெற்றி உண்டா? கனி உண்டா? கிறிஸ்து உண்டா?
இதற்கு முன்னால் இருந்ததைவிட இப்பொழுதுதான் அதிகக் கிறிஸ்தவரால்லாதேர் இருக்கின்றனர் என்பதை நீ அறிவாயோ? 150 கோடி மக்கள் கிறிஸ்தவரால்லாதவராக இருக்கின்றனர். கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் இம்சிக்கப்படும் எத்தனையோ கிறிஸ்தவர்கள் இக்காலத்தில் உண்டு. மூன்று கோடி மக்கள் ஆண்டுதோறும் இவ்வுலகத்தில் மாண்டு போகிறார்கள். மணிக்கு 3400 மக்கள் வீதம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவை அறியாமல் ஏராளமான ஆத்துமாக்கள் மறுமைக்குள் செல்கிறார்கள். பரிசுத்தாவியானவர் நம்மீது பொழியப்பட்டாலன்றி, நமக்காக யாது செய்ய முடியும்? பரிசுத்த ஆவியானவர் மூலமாக மாத்திரமே ஆத்துமாக்கள் இரட்சிப்படையக்கூடும். பரிசுத்தாவியானவரின்றி கிறிஸ்துவை ஒருவனும் தன் தெய்வமாக, இரட்சகராக காண முடியாது. இப் பரிசுத்தாவியானவரின் உதவியின்றி திருச்சபையால் ஒன்றும் செய்யக்கூடாது.
பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது எவ்வாறு? அதற்குக் காத்திருங்கள் என்று இயேசுநாதர் கட்டளையிட்டார் (அப்1:5). சீஷர்கள் பரிசுத்த ஆவியானவருக்காக ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (அப்.1:14). அமைதியான ஜெபத்தில் காத்திருந்த சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். பலம் அடைந்தார்கள். அநேகர் இரட்சிக்கப்பட்டுத் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். திருச்சபை வளர்ந்தது. ஜெப வாழ்க்கை வல்லமையுள்ள வாழ்க்கை. ஜெபம் பலவீன பாண்டங்களாகிய நம்மைச் சர்வ வல்லமையுள்ள கிறிஸ்துவோடு இணைக்கிறது. என் நாமத்தில் விசுவாசமுள்ளவர்களாக நீங்கள் வேண்டிக்கொள்கிறதெதுவோ, அது உங்களுக்கு அருளிச் செய்யப்படும் என்று வாக்கருளிய கிறிஸ்துவின் அருள், ஆற்றல் நமக்குக் கிட்டுகின்றன. தேவனுடைய வல்லமையால் எரிகோ இடிந்து விழுகிறது. தற்காலக் கிறிஸ்தவர்களின் பெரும் குறை ஜெபக்குறைவேயாகும். கடவுளுடைய பிள்ளைகள் ஜெப வாழ்க்கை ஆற்றாதிருப்பது பெரும் பாவம் என்பதை அறிந்து கொள்க. எரிகோ அரண் இடிந்து விழுமுன் இஸ்ரவேலர் கர்த்தரோடு கூட பதின்மூன்று தடவை மௌனமாக எவ்வித பேச்சும் செயலுமின்றி அதைச் சுற்றி வந்தார்கள். நமது விராதியான எரிகோ உடைந்து இடிந்து விழுவதற்கு நாம் கிறிஸ்துவோடுகூட அமைதியாக ஜெபத்தில் காத்திருக்கவேண்டும். வெற்றி வாழ்க்கையின் இரகசியம் அந்தரங்க ஜெப வாழ்க்கையன்றோ!










