- பின்வாங்குதல் – அதன் காரணமும் பரிகாரமும்
தியான வாசிப்பு: யோசுவா 7:1-26
சாபம், கோபம் போன்ற பதங்களோடு ஏழாம் அதிகாரம் ஆரம்பமாகிறது.
இதுகாறும் இஸ்ரவேலருக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டினது. யோர்தானைக் கடப்பதில் வெற்றி. கானானுக்குள் பிரவேசிப்பதில் வெற்றி. கில்காலிலே தேவனோடு வெற்றி. எரிகோவில் வெற்றி, இவ்வாறு இதுகாறும் இஸ்ரவேலருக்கு வெற்றிமேல் வெற்றி. ஆனால், சிறிய ஆயி ஊரில் படுதோல்வி. யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்பற விழுந்து, தன் தலையிலே புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தான். அவன் ஆயி என்னும் இச்சிறிய ஊரில் இத்தனைய அவமான தோல்வி கிடைக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பலத்த அரண் படைத்த எரிகோவின் நகர்தனில் வெற்றி தந்த தெய்வம் ஒருநாளும் தோல்வி காண ஒட்டார் என்ற உறுதியான நம்பிக்கையோடு இருந்தான். இந்தத் தோல்வி அவனைத் திடுக்கிடச் செய்தது.
ஆ கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஐனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்துவிட்டோமேயானால் நலமாய் இருக்கும். ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக்காட்டினார்கள். இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்? கானானியரும், தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியில் இராதபடிக்கு வேர் அற்றுப் போகப் பண்ணுவார்களே. அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர்? என்று புலம்பினான்.
தம்முடைய மக்கள் தோல்வியுற வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம் அன்று. அவர்கள் வெற்றிமேல் வெற்றி, பூரண வெற்றி அடையவேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். கானான் நாட்டில் அவர்கள் அடைந்த தோல்வி இது. கானான் வாழ்வில் தோல்வி ஏற்படலாம். ஆனால் கட்டாயம் தோல்வி அடைந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமே இல்லை. தோல்வியே காணாத முற்றிலும் பரிசுத்தமுள்ள வெற்றி வாழ்க்கை நடத்தவேண்டும் என்பது தேவனுடைய சித்தம். எனினும் தோல்வி நேரிட்டால் அதற்குக் காரணமும் நம்முடைய பாவம் என்றுணரவேண்டும். தோல்விக்குக் காரணம் கர்த்தர் அல்ல. அவர் கர்த்தர். அவர் என்றும் வெற்றி வேந்தரே.
ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலர் அடைந்த தோல்விக்கு அவர்கள் காரணம் ஆவர். ஆயி ஊரின் தோல்விக்கு ஒரு காரணம் இஸ்ரவேலரின் தன்னம்பிக்கையாகும். தரைமட்டமான எரிகோவிலிருந்து ஆயி பட்டணத்துக்கு வேவு பார்த்துவரும்படி யோசுவா ஆட்களை அனுப்பினான். அந்த மனிதர் ஆயியை வேவு பார்த்துவிட்டு யோசுவாவிடத்தில் திரும்பி வந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போருக்குப் போகவேண்டியதில்லை. ஏறக்குறைய 2000 அல்லது 3000 பேர் போய் ஆயியை முறியடிக்கலாம். எல்லா இஸ்ரவேலரையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் கொஞ்சப் பேர்தான் என்றார்கள். அப்படியே அவர்களில் எறக்குறைய 3000 பேர் ஆயிக்குப் போனார்கள். ஆனாலும் அவர்கள் ஆயியின் மனிதருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். ஆயியின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய 36 பேரை வெட்டிப்போட்டார்கள். இஸ்ரவேலரின் இருதயம் கரைந்து போயிற்று.
ஒரு வெற்றி இன்னொரு வெற்றியைக் கொண்டு வராது. எரிகோவின் வெற்றிக்கு ஆயியின் வெற்றியைக் கொண்டு வராது. எரிகோ வெற்றிக்குக் காரணமாகிய கர்த்தர்தாமே ஆயியிலும் வெற்றி தரமுடியும். எரிகோவின் வெற்றியிலே இஸ்ரவேலர்கள் மூழ்கிவிட்டார்கள். அவ் வெற்றியைக் கொடுத்த கர்த்தரை நன்றியோடு நினைக்கவில்லை. கில்காலுக்குப்போய் மீண்டும் கர்த்தர் கொடுத்த அற்புத வெற்றிக்காக அவருடைய பாதத்தில் வீழ்ந்து, அவரை அவர்கள் துதிக்கவில்லை. எரிகோவைத் தாக்குமுன் அவர்கள் கர்த்தருக்காக அமைதியோடு காத்திருந்ததுபோல, இப்பொழுது ஆயியின்மீது பிடையெடுக்குமுன் அவர்கள் கர்த்தருக்கு காத்திருக்கவில்லை. வெற்றி கிடைத்த எரிகோவிலிருந்துதானே அவர்கள் ஆயி பட்டணத்தை வேவு பார்க்க ஆட்களை அனுப்பினார்கள். அது எரிகோவைவிட மிக மிகச் சிறிய பட்டணமாயிருந்தபடியால், தாங்களாகக் கொஞ்சம் பேர் போய் அதை முறியடிக்கலாம் என்று கருதிவிட்டார்கள். கர்த்தரின் பெட்டி அவர்களோடு செல்லவில்லை. பின்னை எப்படி வெற்றி கிட்டும்?
கர்த்தரை விட்டுவிட்டு நாம் தனிமையாகப் போராடினால் ஒரு சிறிய சோதனையிலும் தோல்வியே காண்போம். மாபெரும் சோதனைகளில் மகத்தான வெற்றி கிடைத்துள்ளபடியால், நாமாகச் சென்று ஒரு சின்னஞ் சிறு பாவச் சோதனையை வென்றுவிடலாம் என்று தவறாகக் கருதக்கூடாது. பெரிய வெற்றியின் மமதையால் கர்த்தரைப் பாராதபடிக்கு நமது கண்கள் கொழுப்படைந்து போகக்கூடாது. வெற்றியின் வெற்றியால் நாம் வெற்றியின் காரணராகிய கர்த்தரை மறந்துவிடக்கூடாது. வெற்றி கிடைத்தவுடனே கர்த்தரின் பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி செலுத்தி, அடுத்து வரும் சோதனையிலும் வெற்றி தருமாறு அவரது பாதத்தில் காத்திருக்கவேண்டும். தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தேவனோடு கூடச் சென்று, தேவனுடைய தலைமையின்கீழ் போர் செய்தால் மாத்திரம் வெற்றி கிடைக்கும். மற்றப்படி நம்முடைய சொந்தப் பலத்தில் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தேடாது, நாம் தன்னம்பிக்கையோடு தனித்து நின்று போரிட்டால், அது சிறிய போராயிருந்தாலும் சரி, அதில் நாம் தோல்வியுறுவது திண்ணம். நேற்று வெற்றி தந்த கர்த்தரே இன்றும் வெற்றி தருவார். கர்த்தர் நம்மோடு இல்லையென்றால் நமக்கு வெற்றியில்லை.
என் மாம்சத்தில் நன்மை வாசமாய் இருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் அறிந்த உண்மையை நாம் ஒருக்காலும் மறக்க வேண்டாம். மாம்சம் பலவீனமுள்ளது. ஆனால் என் பலவீனத்தில் கிறிஸ்துவின் கிருபை என்னைத் தாங்கும். அவரது பலம் எனக்குப் போதும் என்ற சத்தியத்தை நாம் எப்பொழுதும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை படுதோல்வியைத் தரும்.
ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலர் அடைந்த தோல்விக்கு இரண்டாவது காரணம் அவர்களது ஜெப அசட்டையாகும். இந்த அதிகாரத்தின் 2 ம் வசனத்தில் கண்டிருக்கிறபடி, யோசுவா எரிகோவிலிருந்து ஆயி பட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பினான். இதிலிருந்து யோசுவா ஆயி பட்டணத்தின்மேல் படையெடுக்குமுன் கர்த்ருக்குக் காத்திருக்கவில்லையென்பது தௌ;ளத் தெளிய அறியக்கிடக்கிறது. யோசுவா கர்த்தருக்கு நன்றி செலுத்த கில்காலுக்குச் செல்லவில்லை. எரிகோவின் வெற்றி ஆனந்தத்தில் ஆழ்ந்தவனாக, அடுத்துள்ள ஆயி பட்டணத்தை வெல்ல முயன்றான். அதற்குரிய முயற்சிகளை உடனே தீவிரமாய் ஆலோசித்தான். தேவனிடத்தில் கேட்காது தானாகவே திட்டம் தீட்டினான். அவன் தன்னம்பிக்கையைத் தவிர்த்து தேவன்பேரில் சார்ந்து அவருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி கர்த்தரைப் போற்றியிருந்தால், அவன் இப்பொழுது தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுப் புரளவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அவன் ஆயியைத் தாக்குமுன் ஆண்டவருடைய ஆலோசனையைத் தேடியிருந்தால் அவர் உடனே இஸ்ரவேலரின் பாவத்தை அவனுக்குத் தெரியப்படுத்தியிருப்பார். ஆயியின்மீது படையெடுக்குமுன் இஸ்ரவேலரைச் சுத்திகரிததுக்கொள்ள போதிய வாய்புக் கிடைத்திருக்கும். அவர்கள் சாபத்தீடானதை ஒழித்து, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்ட பின்னர், சேனைகளின் கர்த்தரிடத்தில் விண்ணப்பத்தில் தரித்திருந்து, அவர் கட்டளையிட்டபிறகு, அவருடைய தலைமையின்கீழ் போராடிருயிருந்தால், அவர் அவர்களுக்கு வெற்றி அளித்திருப்பார். அவர்கள் அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்திருந்தால், அவர்களுடைய பாவத்தை அவர் சுட்டிக் காட்டிருயிருப்பார். ஜெபம் நமது பாவத்தை உணர்த்த உதவுகிறது. ஜெப அசட்டை பாவத்தின்மேல் பாவத்தைக் குவிக்கிறது. ஜெப நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் நமது பாவத்தைக் கண்டித்து உணர்த்துவார். ஜெபம் இல்லாத ஆத்துமா ஆபத்தில் செத்துவிடும். நாம் பரிசுத்தத்தில் வளர ஜெபம் மகத்தான ஆயுதம் ஆகிவிடுகிறது. ஜெபம் ஜெயத்திற்கு அடிபோடுகிறது. ஜெபமற்ற வாழ்க்கை ஜெயம் அற்ற வாழ்க்கை. நாம் செயலற்று அமைதியாக ஜெபம் பண்ணவேண்டிய நேரத்தில், தனித்து துணிகரமாக தேவனை விட்டுவிட்டு செயலாற்றினால், நாம் செயலாற்ற வேண்டிய நேரத்தில் வருந்திப் புலம்பி அழுது கெஞ்ச வேண்டியதிருக்கும்.
இவ்வாறு புழுதியில் புரண்டு கிடந்த யோசுவாவை கர்த்தர் நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன? இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறீனார்கள். சாபத்தீடானதை வஞ்சித்து மறைத்து வைத்துள்ளார்கள். நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால், இனி நான் உங்களோடு இரோன். எழுந்திரு. நீ ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணி சொல்லவேண்டியது என்னவென்றால், நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். இஸ்ரவேலரே, உங்கள் நடுவிலிருக்கிற சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்வாறு இஸ்ரவேலரின் தோல்விக்கு மூன்றாவது காரணம் கீழ்ப்படியாமையின் பாவமாகும். இஸ்ரவேலர் எரிகோவைத் தாக்குமுன் கர்த்தர் அவர்களுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது, எரிகோவும் அதிலுள்ள யாவும் கர்த்தருக்கு சாபத்தீடாயிருக்கும். சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்கிறதினாலே, நீங்கள் சாபத்தீடானதிற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும், இருப்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள். அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரவேண்டியவை.
ஆனால் ஆகான் என்பவன் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு, அவைகளை இச்சித்துத் தனக்கென்று எடுத்துக்கொண்டான். அவைகளைத் தன் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்து வைத்திருந்தான். இவ்வாறு ஆகான் கர்த்தரின் கட்டளையை மீறினான். சாபத்தீடானதைத் தனக்கென்று இச்சித்து வைத்துக்கொண்டான்.
ஆகான் என்னும் தனி ஒரு மனிதன் பாவம் செய்திருக்க, இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள் என்று கர்த்தர் எல்லாரையும் சேர்த்துக் குறிப்பிடுகிறாரே. இதன் கருத்து என்ன? தனி ஒரு மனிதன் பாவத்திற்காக இஸ்ரவேலரின் முழு சமுதாயமும் தோல்வியுறுவானேன்? இஸ்ரவேல் புத்திரரை ஆண்டவர் ஒரு ஜாதியாகவே எகிப்தின் அடிமைத்தனத்தினின்று மீட்டு இரட்சித்தார். ஒரு ஜாதியாகவே அவர்களை வனாந்தர மார்க்கமாக கானானுக்குள் பிரவேசிக்கப்பண்ணினார். அவர்கள் எல்லாரையும் தனி ஒரு சமுதாயமாகவே கருதினார். அநேக அவயவங்களுடைய ஒரே சரீரம்போல் அவர்கள் எண்ணப்பட்டார்கள். ஓர் உறுப்புக்குள் நுழைந்த நஞ்சானது உடம்பு முழுவதையும் தாக்குவதுபோல், தனி ஓர் ஆகானின் பாவம் இஸ்ரவேல் சமுதாயம் முழுவதையும் தாக்குமன்றோ!
தனி ஒரு கிறிஸ்தவரின் பாவம் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை முழுவதையும் தாக்குகிறது. தனி ஒரு கிறிஸ்தவனின் ஆன்ம குளிர் காய்ச்சல் திருச்சபை முழுவதையும் பாதிக்கிறது. திருச்சபையின் வெற்றி தனி ஒரு கிறிஸ்தவனின் வெற்றியைப் பொறுத்தே. ஆகவே, சமுத்திர வெள்ளத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு சொட்டு நீர்த்துளி போன்றவர்களே. நாம் செய்யும் நன்மை தீமை கடலில் காயம் உரசினதுபோல் இருக்கும் என்று தவறாகக் கருதக்கூடாது. சங்கிலித்தொடரில் ஒரு முடிச்சுக் கண்ணி அறுந்துபோனாலும் சங்கிலி முழுவதையும் துண்டித்து விடுமன்றோ! சங்கிலியின் பலம் ஒவ்வொரு தனித்தனி முடிச்சுக் கண்ணியின் பலத்தைப் பொறுத்துள்ளது. ஒரு முடிச்சு விழுந்தால் சங்கிலி முழுவதும் வீழ்ச்சியுறும் அல்லவா? ஆகவே, தற்கால கிறிஸ்தவத் திருச்சபை வெற்றி சிறக்க வேண்டுமாயின் தனித்தனி ஒவ்வொரு கிறிஸ்தவனும் வெற்றியுள்ள புனித வாழ்க்கை ஆற்றவேண்டும்.
மீண்டும் ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலர் வெற்றி காண அவர்கள் யாது செய்தார்கள்? முதலாவது பாவ அறி;க்கை செய்தார்கள். ஆகான் தனது பாவத்தை அறிக்கையிட்டான். அவன் யோசுவாவை நோக்கி: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன். இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளிச் சேக்கலையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன். இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. பகிரங்கப் பாவ அறிக்கை இஸ்ரவேல் சமுதாயத்தைச் சுத்திகரிக்க ஏதுகரமாயிற்று.
இவ்வாறு வெளியரங்கமாக பாவ அறிக்கை செய்வதற்கு ஆகானைப்போல நான் என்ன பாவம் செய்துள்ளேன் என்று ஒருவர் கேட்கலாம். நீ ஒரு பாவமே செய்யவில்லையா? உனது சொல்லால் அல்லது செயலால் பிறருடைய வாழ்க்கையை நீ பாழ்படுத்தவில்லையா? உனது அந்தரங்க அசுத்த ஜீவியத்தால் நீ உன்னையும் பிறரையும் கறைப்படுத்தவில்லையா? உனது தீய பழக்க வழக்கங்களால் பிறர் பாதிக்கப்படவில்லையா? கர்த்தருக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுக்காது அதை உனக்கென்று இச்சித்து வைத்துக்கொள்ளவில்லையா? நீ செய்யத்தக்கவைகளைச் செய்யாது செய்யத் தகாதவைகளைச் செய்து, கர்த்தருக்கு துரோகம் பண்ணவில்லையா? கர்த்தருக்கென்று செலவிட வேண்டியப் பொருளை நீ வஞ்சித்து உனக்கென்று மறைத்து வைத்துக்கொள்ளவில்லையா? சிந்தித்துப்பார்!
ஆகானின் பாவத்துக்காக அவனோடுகூட அவனுடைய குடும்பம் முழுவதும் அழிந்தொழிந்தது. ஆகானும், அந்த வெள்ளியும், சால்வையும், பொன் பாளமும், அவன் குமாரரும், குமாரத்திகளும், அவன் ஆடு மாடுகளும், கழுதைகளும், அவன் கூடாரமும், அவனுக்குள்ள யாவும் ஆகோர் பள்ளத்தாக்கிலே கல்லெறிந்து கொல்லப்பட்டு, அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டு, கற்களினாலே மூடப்பட்டன. எவ்வளவு கடுமையான பயங்கரத் தண்டனை! புதிய ஏற்பாடு காட்டும் அன்பின் அவதாரத் தெய்வத்திற்கும், பழைய ஏற்பாடு காட்டும் இது போன்ற கண்டிப்பான தெய்வத்திற்கும் வேறுபாடு இல்லையா என்று அநேகர் என்னிடம் கேட்டுள்ளார்கள். பாவத்தின்மீது கடவுளுக்கு இருக்கும் சொல்லொணாக் கசப்பும் அதை வேரோடு அழித்து ஒழித்துக் கட்டவேணடும் என்ற துடிப்பும் கடவுள் பால் எவ்வளவு ஆழமாய்க் குடிகொண்டுள்ளன என்பதைச் சிந்திக்குங்கால் என் உள்ளம் நடுங்குகிறது. ஆண்டவர் நம் ஒவ்வொருவருடைய வாழ்கையிலுள்ள பாவத்தை எவ்வளவ வெறுக்கிறார் என்பதையும், நமது வாழ்க்கையிலுள்ள பாவத்தை அறவே துடிக்கிறார் என்பதையும் நாம் அடிக்கடி நினைவு கூரவேண்டும். வெற்றியுள்ள தூய கிறிஸ்தவ வாழ்க்கை நாம் ஒவ்வொருவரும் நடத்தவேண்டும் என்பதே அவரது இதய வாஞ்சை.
பாவம் இருக்கிற இடத்தில் இயேசு கிறிஸ்து வீற்றிருக்க முடியாது. அசுத்தம் இருக்கிற இடத்தில் பரிசுத்த கர்த்தர் தங்கியிருக்கமுடியாது. ஆகவே அவர் யோசுவாவை நோக்கி: நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன் என்றார். இயேசுவின் இரத்தத்தால் நம்முடைய சகல பாவங்களுமற கழுவிச் சுத்திகரிக்கப்படாவிட்டால், இயேசுநாதர் நமது இதயத்தில் குடிகொள்ளமுடியாது. ஆதலின், நாம் நமது பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட்டு அவற்றைக் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்வது மாத்திரம் போதாது. நமது பாவம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நாம் அவரால் பரிசுத்தமாக்கப்படவேண்டும். நமக்குப் பாவமில்லையென்போனால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1.யோ.1:7-9). நாம் சாபத்தீடானதை நம் நடுவிலிருந்து விலக்கும்மட்டும் நாம் நமது சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் (யோசு.7:13).
இதை வாசிக்கும் நண்பர்களே, உங்கள் பாவங்களை உடனே இப்பொழுதுதானே கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, இயேசுவின் இரத்தத்தால் நீங்கள் கழுவப்படுமாறு உங்களை மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறேன். நீங்கள் மனந்திரும்ப மனதில்லாமற்போனால் உடனே கிறிஸ்தவத் திருச்சபையை விட்டு விலகிக்கொள்ளுமாறு அதிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். ஆகான் இஸ்ரவேலின் சமுதாயத்தை விட்டு ஒழிந்த பின்னரே அவர்களுக்கு வெற்றி கிட்டியது. பாளயத்தில் ஆகான் இருக்கும்வரை படுதோல்வியே நேரிடும். உனது இருதயத்தில் மறைந்துள்ள ஆகான் எது எது என்று சிந்தித்துப்பார். அயலாரிடத்திலுள்ள ஆகானை அன்று, உங்கள் அகத்திலுள்ள ஆகானையே ஆராய்ந்த பார்க்குமாறு அடிபணிந்து வேண்டுகிறேன். சிலுவை நாதர் கெஞ்சுகிறார். மனந்திரும்புங்கள். பாவத்தை அறிக்கையிடுங்கள். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் ஆவியானவர் உங்கள் இருதயங்களில் வாசம் பண்ணுவார். கிறிஸ்துவுக்குள் வாழ்க்கையில் வெற்றியே வாய்க்கும். உன் வாழ்வின் தோல்விக்கு காரணம் உன்னிடம் கிறிஸ்து இல்லாமையேயாகும்.











