- கிறிஸ்தவ சுதந்திரம்
தியான வாசிப்பு: யோசுவா 8:32-35
கர்த்தர் சொற்படி ஆயி பட்டணத்தின்மீது இஸ்ரவேலர் இரண்டாம் தடவை படையெடுத்தபோது அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை 8ம் அதிகார வாயிலாக அறிகிறோம். அவர்கள் கர்த்தரைக் கேளாது சுயேட்சியாக ஆயி பட்டணத்தைத் தாக்கினபொழுது தோல்வியுற்றார்கள். அப்பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், கர்த்தருடைய கட்டளையின்படி அவர்கள் ஆயிக்கு விரோதமாகப் போருக்கு எழுந்து வெற்றி வாகை சூடினார்கள். ஆனால், இவ்வெற்றியை அடைவதற்கு அவர்கள் கடும் பாடுபட வேண்டியதாயிற்று. ஒரு தரம் தோற்ற பின்னர், மீண்டும் அந்த எதிரியை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதென்றால் அதிகக் கடினம். முதலாவது நாம் அடைந்த தோல்வியால் சத்துரு அதிக ஆணவமும் ஆற்றலும் பெறுகிறான். இரண்டாந் தடவை அவன்மீது போர்தொடுத்து அவனை மடங்கடிக்க வேண்டுமாயின், சாதாரணமாக வேண்டிய பலத்தைவிட பன்மடங்கு அதிக பலத்தைப் பிரயோகிக்கவேண்டியதிருக்கும். முதல் தடவையே இஸ்ரவேலர் கர்த்தருக்குக் காத்திருந்து அவர் கட்டளை இட்டபின் அவர் தலைமையின் கீழ் கீழ்ப்படிதலோடு போராடியிருந்தால், எரிகோவினும் சிறியதான ஆயிபட்டணத்தை அவர்கள் தேவ சகாயத்தால் வெகு எளிதாக வென்றிருப்பார்கள். ஆனால், இரண்டாந்தடவை ஆயியை வெல்வது அதிக கடினமாயிருந்தது. அவர்கள் பல யுத்தத் தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது.
கர்த்தர் சொன்னபடியே யோசுவா எழுந்து போர் வீரர்களோடு ஆயி பட்டணத்திற்கு வடக்கே வந்து பாளயம் இறங்கினான். யோசுவா ஏறக்குறைய 5000 பேரை பிரித்தெடுத்து, அவர்களை ஆயி பட்டணத்திற்கு மேல் திசையில் இரகசியமாகப் பதிவிருக்கச் செய்தான். மீதிப்பேர் வடதிசையிலிருந்து பட்டணத்தின்மீது படையெடுக்கப் புறப்பட்டார்கள். ஆயியின் அரசன் அதைக் கண்டபோது அவனும், அவனுடைய போர் வீரர்களும் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணப் புறப்பட்டார்கள். ஆனால் ஆயி பட்டணத்துக்குப் பின்னாலே இரகசியமாகப் பதிவிருந்த இஸ்ரவேல் பட்டாளத்தை அவர்கள் அறியாதிருந்தார்கள்.
இஸ்ரவேலர் ஆயி பட்டணவாசிகளுக்கு முன்பாக பயந்து தோல்வியுற்று ஓடுகிறவர்கள்போல முதுகு காட்டி ஓட்டமாய் ஓடினார்கள். அப்பொழுது ஆயி பட்டணத்திற்குள்ளிருந்த ஜனங்கள் எல்லாரும் திரண்டு வந்து இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து முன்னைப்போல முறியடிக்க ஓடிவந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டணத்தைத் திறந்து வைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். அப்பொழுது கர்த்தருடைய சொற்படி யோசுவா தன் கையிலிருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் பதிவிருந்த இடத்திலிருந்து எழும்பி, ஓடி, பட்டணத்தில் வந்து, அதைப் பிடித்து, அவசர அவசரமாகத் தீக்கொளுத்தினார்கள். ஆயியின் மனிதர் பின்னிட்டுப்பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் முனனேறிச் செல்வதா அல்லது பின்னிட்டுத் திரும்புவதா என்று தெரியாது திகைத்தார்கள். பதிவிருந்தவர்களுக்கும் இதர இஸ்ரவேலருக்கும் இடையே ஆயியின் மனிதர் அகப்பட்டுக்கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு ஒருவரையும் தப்பவிடாது அனைவரையும் வெட்டிப்போட்டார்கள். ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
நீ உனது வேதாகமத்தை தனித்து இருந்து தியானித்தால், ஒரு தடவை கிறிஸ்தவ வாழ்க்கையில் வீழ்ச்சியுற்றால் மீண்டும் அக்கட்டத்தில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்னும் அரிய சத்தியத்தைக் கைக்கொள்வாய். 30 நிமிடக் கீழ்ப்படியாமை 30 வருட ஆசீர்வாதமற்ற வறட்டு வாழ்க்கைக்கு அடிகோலிவிடும். ஓர் அற்பமான ஆபாசப் பேச்சு ஆயுள் நாளையே அலங்கோலமாக்கிவிடலாம். ஒரு கெட்ட பழக்கம் பெரும் நட்டத்தைக் கொணரலாம். இளமையில் நம்மை ஆட்கொண்ட ஓர் அசுத்தபாவம், நமது வாழ்க்கை முழுவதையுமே பாழ்படுத்திவிடலாம். கிறிஸ்துவைப் புறக்கணித்து அழிவுக்கு நேராகப் பாய்ந்து கொண்டிருக்கும் உலகத்தைக் கிறிஸ்துவுக்கு நேராகத் திருப்பவேண்டிய தனது மகத்தான பொறுப்பைச் சிறிதும் சிந்தித்துணராது. இதுகாறும் நிர்விசாரமான வாழ்க்கை ஆற்றிவரலாம். இதற்கெல்லாம் காரணம் நாம் எங்கோ தவறிவிட்டோம். கிறிஸ்துவைவிட்டு வழி விலகிவிட்டோம். கிறிஸ்துவின் சொற்படி செயலாற்றாது போய்விட்டோம். நமது பாவத்தால் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தி விரட்டியடித்துவிட்டோம். ஆகவே, இப்பொழுது கிறிஸ்து நம்மோடு இல்லை. எனினும் நாம் பிரசங்கிக்கிறோம். போதிக்கிறோம், கூட்டம் நடத்துகிறோம், அறணுரையாற்றுகிறோம். இவற்றில் வேதாசீர்வாதம் இருக்குமா? நமது திருப்பணிகளில் ஆசீர்வாதம் இல்லாது, பலம் இல்லாது, வெற்றி இல்லாது போவதற்கு; காரணம் நாம் தேவனை மறந்துவிட்டு நமது சுய பலத்தால் பணி ஆற்றுவதுதான்.
ஆகவே தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே வெற்றிகிட்டும். இன்றேல் படுதோல்வியே என்ற வாழ்க்கை நெறியை இஸ்ரவேலர் ஒருகாலும் மறந்து போகக்கூடாது. தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீண்டு; இஸ்ரவேலருக்கு அழுத்தம் திருத்தமாக யோசுவா நினைப்பூட்ட விரும்பினான். அதற்கு உதவியாக, மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை யோசுவா கற்களில் பெயர்த்தெழுதினான். இஸ்ரவேலர் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலிலே கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இரு புறத்திலும், பாதிப் பேர் கெரீசீம் மலைக்கு எதிர்ப்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, அசீர்வாதமும், சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலரின் முழுச் சபைக்கும் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக ஒரு வார்த்தைவிடாமல் நியாயப்பிரமாணம் முழுவதையும் வாசித்தான்.
இஸ்ரவேலருடைய வரலாற்றில் மாத்திரமன்று, கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அனுசரிக்கவேண்டிய சட்ட திட்டங்கள், நியாயப்பிரமாணங்கள் உள்ளன. பரிசுத்த பவுல் கிறிஸ்தவக் கட்டுப்பாட்டிற்குக் கீழடங்கி நடக்க எவ்வளவு கண்ணும் கருத்துமாய் இருந்தான் என்பதைக் கொரிந்தியர் 9:27ல் வாசிக்கிறோம். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். ஆகவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும் அனுசரிக்க வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்கு விதிகள், சுதந்தரப் பிரமாணங்கள் புத்தகத்தில் உண்டு என்பதை மறுத்தல் கூடாது. எல்லாம் கிறிஸ்தவ நெறிப்படி ஒழுங்கும் செம்மையுமாய்ச் செய்யப்படவேண்டும். கிறிஸ்தவன் கைக்கொள்ள வேண்டிய கிறிஸ்தவ நெறி நிச்சயம் உண்டு. எல்லாம் கிறிஸ்துவின் நாம மகிமைக்காகக் கிரமமாகச் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவன் பின்பற்றவேண்டிய நியாயப்பிரமாணம் பரிசுத்த வேதாகமமே. இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறோரோ அதன்படி ஒழுகவேண்டியது கிறிஸ்தவனது கடமையும் கண்ணியமுமாகும். கிறிஸ்துவே கிறிஸ்தவனின் வழிகாட்டி. கிறிஸ்துவே கிறிஸ்தவனின் வழி. கிறிஸ்துவே கிறிஸ்தவனின் இலக்கு.
பிரசங்க சிங்கமாகிய பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் முழங்குவதைக் கேளுங்கள். ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி, நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. (ரோ.8:1). எத்துணை அருமையான சத்தியம். எவ்வளவு பொன்போன்ற பாக்கியம். ஆ! எவ்வளவு ஆறுதலான, ஆனந்தமான அருள்வாக்கு. மனந்திரும்பி, கிறிஸ்துவைத் தன் இரட்சகராக்கிக் கொண்டவன் எவ்வளவு பாக்கியவான். தனக்காக மரித்து உயிர்த்து என்றும் உயிரோடிருக்கிற இயேசு கிறிஸ்துவைத் தன் தெய்வமாக்கிக்கொண்டவன் எவ்வளவு பேரின்பம் பெற்றவன். தனது பாவத்தைச் சிலுவையில் சுமத்திவிட்டு, சிலுவைநாதரின் பரிசுத்தத்தை விசுவாசத்தால் தனக்குச் சுதந்தரமாக்கிக் கொண்டவன் எவ்வளவு பெரும் பேறு பெற்றவன். கிறிஸ்துவைத் தனது சொந்த நாயகராக்கிக்கொண்டு, பரிசுத்தாவியின்படியே நடக்கிறவன் ஆக்கினைத் தீர்ப்பு அடைவதில்லை. ஆ ! என்ன இன்பமான, மகிழ்ச்சியான செய்தி! நற்செய்தி!
இது எப்படியாகும் என்று விளக்கம் கேட்கிறாயோ? இதோ! பரிசுத்த பவுல் அதற்குத் தெளிவான விளக்கம் தந்துள்ளார். அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். ஆகவே, கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்று (ரோ.3:4). இதன் பொருள் யாது? இயேசு கிறிஸ்துவைத் தனது இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளும்போது, அவனுடைய பாவம் கிறிஸ்துவின் பேரில் விழுந்து விடுகிறது. கிறிஸ்துவின் நீதி அவ்விசுவாசிக்கு வந்து விடுகிறது. அவன் அடையவேண்டிய பாவத் தண்டனையை இயேசுநாதர் சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தமும் நீதியும் மீட்பும் விசுவாசிக்கு சுதந்தரமாகின்றன (1.கொரி.3:1).
இவ்வாறு இயேசு கிறிஸ்துவை யார் யார் தங்கள் தேவ இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய பரிசுத்த ஆவியானவரின்படி நடக்கிறார்களோ அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்கிற சத்தியம் தேவனால் கிருபையாக அருளப்பட்டு, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய முத்திரையால் உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய தெய்வ உடன்படிக்கையாய் இருக்கிறது. இதற்கு அச்சாரமாக அவ்விசுவாசிக்குப் பரிசுத்தாவியானவர் அருளிச்செய்யப்படுகிறார். இக்கிறிஸ்துவின் ஆவியினால் அவ்விசுவாசி பரிசுத்தமான வெற்றியுள்ள வாழ்க்கை ஆற்ற முடிகிறது. அவன் பரிசுத்த பவுல் அப்போஸ்தலனோடு கூடச் சேர்ந்து கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே என்று வெற்றி முரசு கொட்டுகிறான் (ரோ.8:2). புதிய இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் புதிய சிருஷ்டியாகிறான். பழைய ஆதாம் அடக்கம் பண்ணப்படுகிறான். எல்லாம் புதிதாயின. கிறிஸ்துவுக்குள் அவன் ஒரு புதுக் கிறிஸ்தவ வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்கிறான். கிறிஸ்துவே அந்நெறி. கிறிஸ்துவே அவனது வெற்றியாகிறார். இப்பரம பாக்கியம் ஒரு சிலருக்கு மாத்திரம் அல்ல. கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் இப்பெரும் பேறு கிட்டுகிறது.
ஆ! கிறிஸ்தவர்கள் எவ்வளவு புண்ணியம் பெற்றவர்கள்! நாம் எத்தனை பேர் இந்தப் பாக்கியத்தைப் பெற்று அனுபவிக்கிறோம். நாம் வெறும் உதட்டுக் கிறிஸ்தவர்களாக மாத்திரம் இருந்தால் இப்பெரும் புண்ணியத்தைப் பெற முடியுமோ? நமது உதட்டை மாத்திரமன்று, நமது வாழ்க்கை முழுவதையும் கிறிஸ்துவின் ஆவியானவர் ஆட்கொள்ளவேண்டும். நாம் நமது உதட்டால் மாத்திரமன்று, நமது முழு இருதயத்தோடும் நமது முழு ஆத்துமாவோடும், நமது முழு வாழ்க்கையோடும் இயேசு கிறிஸ்துவில் அன்புகூர்ந்து, அவருடைய பரிசுத்த ஆவியால் பரிசுத்த வாழ்க்கையாற்றவேண்டும். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்கமுடியாது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே தேவனைத் தரிசிக்கமுடியும். இப்பரிசுத்தம் எம்மனிதனிடத்தில் இருக்கிறது? ஒருவனிடத்திலும் இல்லை, பரிசுத்தம் கிறிஸ்துவில் மாத்திரம் உண்டு. அவர் ஒருவரே பரிசுத்தர். அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பரிசுத்த ஆவியின்படி நடக்கிறவன் எவனோ அவன் பரிசுத்தவான் ஆகிறான். பரிசுத்தாவியானவர் ஒருவரே நம்மைப் பரிசுத்தவான்களாக்க முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே நம்மைச் சகல பாவங்களுமறக் கழுவிச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கக்கூடும்.
பரிசுத்தாவியானவர் என் இதயத்தில் வாசம் செய்கிறாரா? எனது வாழ்வில் தோல்விகளும் பாவ அசுத்தங்களும் காணப்படுவதற்குக் காரணம் என்னில் பரிசுத்தாவியானவர் இல்லாததுதான். ஆ! நாம் எவ்வளவு தூரம் பரிசுத்தாவியானவரை அசட்டை செய்துள்ளோம்? நாம் எவ்வளவாய் அவரைத் துக்கப்படுத்தியுள்ளோம்? நாம் எவ்வளவு தூரம் அவரை விரட்டியடித்துள்ளோம்? பரிசுத்தாவியானவர் இல்லாமலே நாமாகப் பரிசுத்த வாழ்க்கையாற்ற எவ்வளவு காலம் வீணாக முயன்றுள்ளோம்? பரிசுத்தாவியானவர் இல்லாமல் நாம் எவ்வளவு தூரம் நமது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோம். பரிசுத்த வாழ்க்கையாற்றவேண்டும் என்று ஆசிக்கிற கிறிஸ்தவனே உனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுகிறோம். ஒரு நற்செய்தி அறிவிக்கிறோம். நீ கிறிஸ்துவின் ஆவியால் பரிசுத்தவாழ்க்கையாற்றமுடியும். கிறிஸ்துவின் ஆவி உனக்குள் இல்லாவிட்டால் நீ ஒருக்காலும் வெற்றியுள்ள பரிசுத்த வாழ்க்கை நடத்தமுடியாது. கிறிஸ்துவே மெய்யான திராட்சைச் செடி, நாம் கொடிகள், நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருந்தால், நாம் பரிசுத்த கனிகளைக் கொடுப்போம். கிறிஸ்து அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது.
நாம் கிறிஸ்து கற்பிக்கிற யாவையும் செய்வோமானால் அவருடைய சிநேகிதராய் இருப்போம். நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால், அவருடைய அன்பிலே நிலைத்திருப்போம். கிறிஸ்துவின் கற்பனைகளைக் பெற்றுக்கெண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் மாத்திரமே அவரிடத்தில் அன்பாயிருக்கிறார்கள். கிரியையில்லாத அன்பும் விசுவாசமும் செத்ததாய் இருக்குமே. கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய பரிசுத்தாவியானவரின் உதவியால் அவைகளின்படி செய்கிறவன் எவனோ அவன்தான் பாக்கியவான். அவர் சொல்லிய வாhர்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் புத்தியில்லாத மனிதன். கர்த்தரின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், அவரை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
நியாயப்பிரமாணம் வெறுங்கற்களில் எழுதப்படவில்லை. பலிபீடக் கற்களில்தான் எழுதப்பட்டன (யோசு.8:30-32). இஸ்ரவேலரில் பாதிப்பேர் மறுபாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாக நின்றார்கள். கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள். அவர்கள் நடுவே கர்த்தருயை உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அப்பெட்டி இஸ்ரவேலரை இரு பாகங்களாகப் பிரித்தது. ஒரு பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாக நின்றார்கள். கெரிசீம் மலை இயற்கை வளம் படைத்துள்ளது. மரம் செடி கொடிகள் செறிந்துள்ளது. பச்சைப் பசேலென்ற காட்சி தருவது. இந்த செழிப்பான மலைச் சாரலில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்ஜமீன் வம்சத்தார் கூடி நின்றார்கள். இப் பசுமையான மலை, ஆசீர்வாதத்தைக் குறிக்கும் அல்லவா? எதிர்புறமாக இருந்த ஏபால் மலை தாவர வர்க்கம் இல்லாத வறண்ட கற்பாறை மலை, இவ்வறட்சியான மலைச்சாரலில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி வம்சத்தார் குழுமி நின்றார்கள். இந்த வறண்ட ஏபால் மலை, சாபத்தைக் குறிக்கும் அல்லவா? மேலும் இக்கற்பாறை மலையடிவாரத்தில் நின்ற ரூபனியரும், காத்தியரும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கானானின் போர் வாழ்க்கையை விட்டு சீக்கிரமாக ஓய்ந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தங்கள் பெண்டிர், பிள்ளைகள், சுதந்திரத்திடத்திற்கு திரும்பிப் போக விரும்பினார்கள். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமற்போனால் என்னென்ன சாபங்கள் கிடைக்கும் என்பதை இரு மலைகளுக்கும் நடுவே இருந்த உடன்படிக்கைப் பெட்டியின் அருகே நின்ற யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்திலிருந்து வாசித்தான். அப்படியே கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களுக்குக் கிட்டும் ஆசீர்வாதத்தையும் ஒரு வார்த்தை விடாமல் வாசித்தான். இரு பிரிவினருக்கும் நடுவே உள்ள சீகம் பள்ளத்தாக்கின் மத்தியிலிருந்த உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்த்திற்று.
இக்காட்சி கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது நிகழவிருக்கும் சம்பவத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறதன்றோ! இப்பொழுது யோசுவாவோடும், ஆசாரியர்களோடும் நடுவே இருந்த உடன்படிக்கைப் பெட்டியைப்போல, வெகு சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்துவானவர் தமது மகிமை பொருந்தினவராய் சகல பரிசுத்த தூதரோடுங்கூட இரண்டாம் தடவையாக இப்பூலோகத்தை நியாயந்தீர்க்க வரும்போது, தமது மகிமையுள்ள சிங்கானசத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். இப்பொழுது இராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராஜ்ஜியத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார். தமது இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டுப் பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார். அந்தப்படியே இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள். இரண்டில் ஒன்றுதான்.
நாம் கடைசி நாளில் வலது பக்கத்தில் உள்ள ஆசீர்வாதமான கெரிசீம் மலைச்சாரலில் நிற்கும் காட்சியில் இருப்போமா? அல்லது இடது பக்கத்தில் உள்ள சாபமான ஏபால் மலைச்சாரலிலுள்ள காட்சியில் இருப்போமா? இரண்டு காட்சிகளிலும் சேர்ந்து ஒருவன் இருக்க முடியாது. இரண்டில் ஒரு காட்சியில்தான் ஒருவன் இருக்கமுடியும். ஒன்று ஆசீர்வாதம் அல்லது சாபம். ஒன்று கெரிசீம் அல்லது ஏபால். ஒன்று நித்தியஜீவன் அல்லது நித்தியஆக்கினை. ஒன்று வாழ்வு அல்லது அழிவு. ஒன்று மோட்சம் மற்றொன்று நரகம். ஒன்று இயேசு கிறிஸ்து. மற்றொன்று பிசாசு. இதில் நீ இப்பொழுது எக்காட்சியில் இருக்கிறாயோ அக்காட்சியி;ல்தான் மறுமையிலும் இருக்கமுடியும். சாவு நாம் சேர்ந்திருக்கும் காட்சியை மாற்றாது. இரண்டில் ஒரு காட்சியில் சேர்ந்துகொள்ள நமக்கு உரிமை உண்டு. ஆனால், இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. நீ யாரைத் தெரிந்துகொள்ளப்போகிறாய்? இயேசுவையா? பிசாசையா? நீ யாரைச் சேவிக்கப் போகிறாய்? இயேசுவையா? பிசாசையா? இருவரில் ஒருவரைத் தெரிந்துகொள்ளும் சுதந்திரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீ என்னைத் தெரிந்துகொள் என்று கிறிஸ்து உன்னை வலுக்கட்டாயப்படுத்த முடியாது. அவரைத் தெரிந்துகொள்ளும் சுயசித்தம் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ, உன் கண்முன் கிறிஸ்துவும் பிசாசும் நிற்கிறார்கள். இந்த இருவரில் நீ யாரைத் தெரிந்துகொள்ளப் போகிறாய்?
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும், உனக்குமுன் வைத்தேன். நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள். உன் தேவனாகிய கர்த்தரைத் தெரிந்துகொண்டு, அவரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்று உபாகமம் 30ம் அதிகாரதில் வாசிக்கிறோம்.










