- பகைவரின் உபாயம்
தியான வாசிப்பு: யோசுவா 9:3-15
கிறிஸ்தவப் போராட்ட வாழ்விற்கு ஓர் இலக்கு உண்டு. ஒரு நோக்கம் உண்டு. பரிபூரண இரட்சிப்பும், பாவத்தினின்று பரிபூரண விடுதலையுமே அந்த இலட்சியமும் நோக்கமும் ஆகும். இப்போராட்ட வாழ்வின் இறுதி வெற்றி பரிசுத்தம்தான். பூரண பரிசுத்தம் அடையுமுன் எத்தனையோ போராட்டங்கள். எத்தனையோ தோல்விகள்! எத்தனையோ வெற்றிகள்! ஒரு சிறு போரில் ஆரம்பத்தில் வெற்றி கண்டுவிட்டால், இறுதி வெற்றி கிட்டிவிட்டது என்று ஆர்ப்பரிக்கமுடியாது. அங்ஙனமே ஆரம்பப் போரில் ஒருகால் தோல்வியுற்றால், போர் முழுவதிலும் படுதோல்வியே ஆகிவிடும் என்று எண்ணக்கூடாது. இறுதி வெற்றிக்குமுன் எத்தனையோ சிறுசிறு வெற்றிகள், தோல்விகள் நேரிடலாம். பகைவன் உயிரோடு இருக்கும்வரை போர் நடந்துகொண்டுதான் இருக்கும். பகைவனைக் கொன்றொழித்துவிட்டால் வெற்றி கிட்டிவிடும். நம் வாழ்வில் பாவம் இருக்கும்வரை போர் இருந்தே தீரும். நீயும் நானும் மாம்சத்தில் இருக்கும்வரை போர் நிகழ்ந்தே தீரும். சோதனை இருந்துகொண்டே இருக்கும். எப்பாவச் சோதனையையும் நாம் இலேசாகக் கருதி அசட்டையாக இருக்கக்கூடாது. பெரிதானாலும் சிறிதானாலும் பாவம் பாவமே. நஞ்சு நஞ்சே. பிசாசு பிசாசே. பிசாசோடு இசைந்து வாழ இணங்குவது எப்பொழுதும் பேராபத்தே !
கர்த்தருக்குள்ளான ஆழ்ந்த ஜெபம் நமது தோல்வியின் காரணத்தைத் தௌ;ளத்தெளிய எடுத்துக்காட்டிவிடும். ஜெபத்தில் தோல்வியின் இரகசியம் வெளிப்படும். ஆனால், தோல்வியை மேற்கொண்டு, வெற்றிவாழ்க்கை நடத்துவதற்கு ஜெபத்தோடுகூடக் கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு வேண்டும். கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்டு கீழ்ப்படிதலோடு அவர் சொற்படி செய்யும்போது மாத்திரந்தான் வெற்றி கிடடும். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அதுதான் அல்லவா?
கேட்டு, கீழ்ப்படிந்து அதன்படி செய்வதற்கே கர்த்தருடைய கற்பனை ஒரு கிறிஸ்தவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தாவியானவர் சகாயத்தால் கிறிஸ்துவின் கற்பனையைக் கடைப்பிடித்து ஒழுகுவதே நன்நெறி. கிறிஸ்துவைச் சேவிப்பதே மெய்ச் சுயாதீனம். கிறிஸ்துவின் கற்பனைக்குக் கட்டுப்பட்டு நடப்பதே உண்மையான விடுதலை. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் கனியும் கனியே, பரிசுத்த வாழ்க்கை.
இப் பாடங்களை நாம் முந்திய அதிகாரங்களில் கற்றுக்கொண்டோம். போரில் வெற்றி வாய்க்கவேண்டுமாயின் போர்த்திறமை சாதுரியம் வேண்டும் என்ற பாடத்தை இவ்வதிகாரத்தில் நாம் ஆராய்வோம். ஆயி பட்டணத்தை இரண்டாந்தடவை படையெடுக்குங்கால் யோசுவா அதிசாமர்த்தியமாக நடந்துகொண்டான் என்பதை மறக்கவேண்டாம். தனது படையிலுள்ள 5000 பேரைப் பிரித்தெடுத்து அவர்களை ஆயி பட்டணத்திற்குப் பின்னாலே பதிவிருக்க வைத்தான். இதை ஆயி பட்டணவாசிகள் அறியாது, இரகசியமாக வைத்திருந்தான். ஆனால், தானும் மற்ற இஸ்ரவேலரும் ஆயி பட்டணவாசிகள் அறியத்தக்கதாகப் பகிரங்கமாய் அவர்கள்மீது படையெடுத்துச் சென்றான். அவர்கள் இந்த இஸ்ரவேலரைக் கண்டபோது, அவர்களுக்கு முன்பாகப் பயந்து தோற்று ஓடிப்போகிறவர்களைப்போல், பின்வாங்கி ஓடினார்கள். அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி ஒருவரையொருவர் கூப்பிட்டுக் கொண்டு, பட்டணத்தைத் திறந்து வைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டு போனார்கள். எல்லோரும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்தவுடன் யோசுவா தன் கையிலிருந்த ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டினான். அந்த இரகசிய அடையாளத்தைக் கண்டவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய் எழும்பி, பட்டணத்திற்கு ஓடிவந்து அப்பட்டணத்தைத் தீக்கொழுத்தினார்கள். ஆயி மனிதர் பின்னிட்டுப்பார்த்தபொழுது, தங்கள் பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்பி வருவதைக் கண்டார்கள். அவர்கள் பின்னாகத் திரும்புவதற்குள்ளாக பதிவிருந்தவர்களுக்கும் மற்ற இஸ்ரவேலருக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள். ஆ! எவ்வளவு தந்திரமாக ஆயி பட்டணவாசிகளை யோசுவா கொன்றொழித்துவிட்டான். ஆம், ஆன்மப் போரிலும் வெற்றி காண நமக்கு யுத்தத் தந்திரம் வேண்டும். போர் ஞானம் வேண்டும். சாமர்த்தியமான போர்த்திட்டம் வேண்டும்.
நமது அன்றாட கிறிஸ்தவப் போராட்ட வாழ்விலும் நாம் வெற்றிகாணவேண்டுமாயின், நமக்குப் போர் முறைத் திறமை வேண்டும். முறையான திட்டம் வகுத்துக்கொண்டு, சாத்தான் தலையை உடைக்கவேண்டும். காரணம் நம்மை எதிர்த்து நிற்கும் ஆன்ம விரோதியாகிய சாத்தான் மிகவும் தந்திரசாலி. போர் அனுபவம் மிக்கவன். சூழ்ச்சியில் கைதேர்ந்தவன். உபாயத்தில் மேம்பட்டவன். வெகுயுக்தியாகக் காரியங்களை சமாளிக்க வல்லவன். யார் யாரை எந்தெந்த முறையில் தாக்கவேண்டும் என்று தெரிந்தவன். யார் யார் எதில் சமர்த்தர், எதில் பலவீனர் என்பதை நன்கு அறிந்தவன். ஆள், இடம், பொருள், ஏவல் அறிந்து காரியம் சாதிப்பதில் சாதுரியம் கொண்டவன். யுத்தத்தந்திரத்தில் நெடுங்கால அனுபவம் பழுத்தவன். அவன் கெர்ச்சிக்கிற சிங்கம் மாத்திரமன்று. அரவம் காட்டாது ஆட்களை கடித்துச் செல்லும் சர்ப்பமானவன். பாய்ந்து சென்று தாக்கவும் தெரியும், பதிவிருந்து கொல்லவும் தெரியும் அவனுக்கு. சிறீவிழுந்து சிதைக்கவும் தெரியும், சிரித்துக்கொண்டு மாய்க்கவும் தெரியும் அவனுக்கு. பாராட்டிக்கொள்ளவும் தெரியும் அவனுக்கு. பயங்காட்டி வெல்லவும் தெரியும் அவனுக்கு. இத்தகைய போர்த்திறம் படைத்தவன் தான் நமது ஆன்மப் பகைவனாகிய சாத்தான். அவனை வெல்லவேண்டுமாயின், அவனைவிட அதிகப் பேராற்றல் படைத்தவர்களாக நாம் இருக்கவேண்டும் அல்லவா? இதை நாம் அறியாது அநேகத் தடவைகளில் அவனுடைய வஞ்சகச் சூழ்ச்சிக்கு ஆளாகிவிடுகிறோம். அந்தோ பரிதாபம்.
யோசுவா 9ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள சாத்தானின் தந்திரம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் எவ்வளவு எளிதாய் ஏமாந்து போகிறோம் என்பதற்கு இது தக்கதோர் உதாரணம். ஆனால், எல்லாம் வல்ல கடவுள் நமது பலவீனத்தை எவ்வளவு கிருபையாய் நன்மையாக மாற்றிவிடுகிறார் என்பதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு இது. நமது ஆன்ம விரோதியாகிய சாத்தானின் மாய வஞ்சகத் தந்திரந்தான் என்னே என்னே!
இதுகாறும் தங்களுக்குள் சண்டை சச்சரவு செய்துகொண்டிருந்த கானானியர் எல்லாம் இப்பொழுது அவைகளை மறந்துவிட்டு இஸ்ரவேலரைத் தாக்க ஒன்று கூடிக்கொள்கிறார்கள். எப்போது, ஏன் இவ்வாறு கானானியர் இஸ்ரவேலருக்கு எதிராக ஒன்றுகூடி போராடத் திட்டமிட்டார்கள்? இஸ்ரவேலர் இதுவரை கானானில் வெற்றிமேல் வெற்றி பெற்றுவருவதைக் கேள்வியுற்றபோதுதான் அவர்களை மடக்க வேண்டும் என்று விரோதிகள் ஒன்றுபட்டு எழுந்தார்கள். ஆம், நமது ஆன்ம வாழ்விலும் அப்படித்தான். நாம் ஒரு பாவச் சோதனையில் வெற்றியடையும்பொழுது, சாத்தான் முன்னைவிட அதிக உக்கிரத்தோடு நம்மைத் தாக்கிச் சீறி எழுகிறான். ஒரு வெற்றி இன்னொரு போருக்கு அழைப்பு விடுவதுபோல் ஆகிறது. நாம் வெற்றி முரசு கொட்டுங்கால், சாத்தானின போர் முரசொலியையும் கேட்கத் தவறக்கூடாது. ஒரு வெற்றியோடு நமது வாழ்வு முடிந்தது என்று தவறாகக் கருதக்கூடாது. அடுத்தடுத்துத் திருப்போர் தொடுக்கவேண்டும் என்பதை ஒருக்காலும் மறக்கவேண்டாம். நீ ஒரு வெற்றி மாலையைக் காணும்முன் சாத்தானின் இன்னொரு பயங்கர ஈட்டிமுனையைக் காணத் தவறாதே. ஒரே போர்க்களத்தில் தானே போரின்மேல் போர், சோதனைமேல் சோதனை, கண்ணின்மேல்கண்ணி காணின் கவலையுறாதே. கிறிஸ்துநாதர் இவ்வுலகப் போராட்டத்தில் அவ்வாறுதர் வீர தீராமாய்ப் போராடினார். சோதனைமேல் சோதனை, வேதனைமேல் வேதனை, சிலுவை மரணம்வரை அஞ்சா நெஞ்சத்துடன் தீவிரமாய்ப் பேராடினார். சிலுவையில் வெற்றி சிறந்தார். இறுதி வெற்றி எம்பெருமான் இயேசுநாதருக்கே. ஆ! என்ன என் ஆனந்தம்! எவ்வளவு மகோன்னத மாதிரி வாழ்க்கை.
கானானியர் தங்கள் சின்னஞ்சிறு பூசல்களை மறந்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு இஸ்ரவேலரை எதிர்க்கத் திட்டமிட்ட அப்போர் முறைத் திறத்தை நாம் நம் பகைவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிற திருச்சபை மக்கள் அவசியம் படிக்கவேண்டிய பாடம் அது. கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இன்றேல் தாழ்வு. திருச்சபையிலுள்ள சிறுசிறு சில்லறை வேறுபாடுகளை நாம் மறந்துவிட்டு ஒற்றுமையோடு ஒத்துழைத்து ஏகமனதுடன் சாத்தானை மடங்கடிக்கவேண்டிய காலம் இது. திருச்சபையினர் தங்களுக்குள்ளிருக்கும் அற்ப அபிப்பிராயப் பேதங்களை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒற்றுமையோடு முழு மூச்சுடன் முழுப் பலத்துடன் ஏகமனதாய்ச் சாத்தானை எதிர்க்க வேண்டிய காலம் இது. இந்தப் பெரிய சவாலை மறந்துவிட்டு, நாம் இன்னும் சின்னச் சின்ன கசப்புக்களில் நம்மைநாமே நொந்துகொண்டிருந்தால் நாம் தோல்வியுறுவது திண்ணம். திருச்சபைக்குள் கலகம் செய்யவேண்டிய காலம் இது அல்ல. திருச்சபையினர் ஒன்று திரண்டு ஐக்கியப்பட்டவர்களாகச் சிலுவைக் கொடியின்கீழ் நின்று சாத்தானைத் தாக்கி வெல்லவேண்டிய காலம் இது. திருச்சபையின் விசுவாசிகள் ஒன்றுபட ஜெபிப்போம். விசுவாசிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். விசுவாசிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சாத்தான் கோட்டையைத் தகர்ப்போம். விசுவாசிகள் தோளோடு தோள் கோர்த்து, சாத்தானின் தலையை உடைப்போம் வாரீர்.
இஸ்ரலேவர் ஒருமனப்பட்டு கானானியரைத் தாக்குமுன், சிலர் அவர்களை நயவஞ்சகமாக வஞ்சித்தததைப் பார்ப்போம். நேருக்கு நேர் போர்செய்தால் தோல்வியுறுவது நிச்சயம் என்பதை அறிந்த கானானிலுள்ள கிபியோன் குடிகள் இஸ்ரவேலரோடு தந்தரமாகச் சமாதான உடன்படிக்கை செய்து, அவர்களை வஞ்சிக்கத் திட்டமிட்டார்கள். கானானியர் எல்லாரையும் சர்வ சங்காரம் செய்யவேண்டும் என்பதுதான் இஸ்ரவேலரின் இலட்சியத் திட்டம். ஆனால், கிபியோனின் குடிகள் அவர்களைத் தந்திரமான ஒரு சூழ்ச்சியில் அகப்படச்செய்து, அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். நமது பிராணச் சத்துருவோடு சமாதான உடன்படிக்கை செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்தக் கிபியோனின் மக்களோடு செய்த உடன்படிக்கையால் இஸ்ரவேலர் பிற்காலங்களில் பட்டபாடுகள் பலப்பல. அவர்களுடைய விக்கிரகவணக்கம் இஸ்ரவேலருக்கு எப்பொழுதும் பெரும் கண்ணியாகவேயிருந்தது. இவர்களுடைய பழக்கமும், கலப்பு விவாகமும் பாகால் வணக்கத்திற்கு இஸ்ரவேலரை வழிநடத்தின. ஆகவே, கர்த்தர் அடிக்கடி அவர்களைக் கடிந்துகொண்டு சுத்திகரிக்க வேண்டியதாயிற்று. நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை (1.கொரி.10:20).
எரிகோவுக்கும் ஆயியிக்கும் யோசுவா செய்ததை கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாதிபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுடுப்புக்களையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து, பழுது பார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள். வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பம் எல்லாம் உலர்ந்ததும் பூஷணம் பூத்ததுமாயிருந்தது. அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவைனiயும் இஸ்ரவேல் மனிதரையும் நோக்கி: நாங்கள் தூர தேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே சமாதான உடன்படிக்கை பண்ணுங்கள் என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேல் மனிதர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும். நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். அதற்கு யோசுவா: நீங்கள் யார்? எங்கே இருந்து வந்தீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக்கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரத்திலிருந்து வந்தோம். அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், அவர் எமோரியரின் இரண்டு அரசர்களான சீகோனுக்கும், ஓகுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். ஆகையால், எங்கள் மூப்பரும், எங்கள் தேசத்துக் குடிகள் எல்லாரும் எங்களை நோக்கி: அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில் நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னார்கள். உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தை சுடச்சுட எங்கள் வீட்டிலிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம். இப்பொழுது இதோ, உலர்ந்து அது பூசணம் பூத்து இருக்கிறது. நாங்கள் இந்த திராட்சைரசத் துரத்திகளை நிருப்புகையில் அவை புதிதாய் இருந்தன. ஆனாலும், இதோ, அவை இப்பொழுது கிழிந்து போயிற்று. எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழமையாய்ப் போயிற்று என்றார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலர், கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜன பதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான். அதற்காக இஸ்ரவேலரின் மூப்பர்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.
அவர்களோடே உடன்படிக்கை பண்ணி மூன்று நாள் சென்றபின்பு, தங்கள் அயலார் என்றும், தங்கள் நடுவே குடியிருக்கிற கிபியோனின் மக்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். தாங்கள் வஞ்சிக்கப்பட்டதைப்பற்றி விசனம் கொண்டார்கள். எனினும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணை இட்டுக்கொடுத்தபடியால், அவர்களைக் கொல்லாது உயிரோடே வைத்தார்கள். கர்த்தரைக் கேளாது, தங்கள் சொந்த விருப்பம்போல் விரோதிகளோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டதால் இஸ்ரவேலர் அடைந்த இன்னல்கள் ஏராளம். வெளியேயிருக்கிற பகைவரைக் காட்டிலும், உட்கலந்து உள்ளேயிருக்கிற பகைவர்கள் அதிக ஆபத்தைத் தரக்கூடியவர்கள். ஆம், கர்;த்தருடைய ஆலோசனையைக் கேளாமல், இஸ்ரவேலர் கொல்லாமல் விட்ட கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர் வாழ்க்கை முழுவதிலும் ஒரு முள்போல் நறுக்கென்று அவ்வப்போது குத்திக்கொண்டேயிருந்தார்கள். ஆ! கர்த்தரிடம் கலந்து கொள்ளாமல் பகைவரோடு கலந்துகொள்வது எவ்வளவு இடையூறு தருகிறது.
எனினும் நமது தோல்விகளைக் கர்த்தரிடம் முறையிடும்பொழுது, அவர் அவைகளை ஒருவாறு நன்மையாக திருப்புகிறார். கிபியோனின் குடிகள் இந்நாள்மட்டும் இருக்கிறபடியே அந்நாளில் இஸ்ரவேலருக்கும் கர்த்தருடைய பலிபீடத்துக்கும், ஆலயத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும், இஸ்ரவேருக்குப் பணிவிடை செய்தார்கள். அந்த ஊழியம் ஒருக்காலும் அவர்களை விட்டு நீங்கவில்லை. காரணம், அவர்கள் இஸ்ரவேலரை வஞ்சித்தார்கள்.
கிபியோனின் ஸ்தானாதிபதிகளைப்போல் சாத்தான் இன்று மாயவேடம் போட்டுக்கொண்டு உன்னிடம் வரலாம். அவனைப் பார்க்குங்கால் அவன் தேவதூதன் என்று நீ ஏமாந்துவிடலாம். அவன் ஒளியின் வேடம் தரித்து வருவதுண்டு. கிபியோனின் குடிகள் வெகு தூரத்திலிருந்து வந்தவர்கள்போல் பாசாங்கு பண்ணினார்கள். கபட நாடகம் நடித்தார்கள். அதைப்போல் சாத்தான் இன்று நயவஞ்சக நாடகம் உன்னிடம் நடித்துக் காட்டுவான். உன்னையும், உன் தேவனையும், இரட்சகரையும் தான் கௌரவிப்பவன்போல் வேடம் போடுவான். நாம் நேசிக்கிற வேதவசனங்களை வைத்துக்கொண்டே நம்மிடம் வாலாட்ட ஆரம்பித்துவிடுவான். கிறிஸ்துவுக்காக உருகுகிறவனைக்போல் மாய உள்ளம் துடித்து நிற்பான். கிறிஸ்தவ நெறிக்காக உயிர்துறக்க ஆர்வம் படைத்தவன்போல் உபாயமாய் மாயவித்தை காட்டுவான். கிபியோனின் குடிகள் இஸ்ரவேலின் தேவனுக்கு அஞ்சுகிறவர்கள்போல் காணப்பட்டார்கள். ஆனால், அவர்கள் நெஞ்சகத்தே இஸ்ரவேலின் தேவனுக்கு இடமில்லை. அவர்கள் உண்மையில் பாகாலை வணங்குகிறவர்கள். ஆனால், தங்கள் உயிருக்கு அஞ்சியே ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்களைப்போல் கள்ள நாடகம் நடித்தார்கள். அவர்கள் முழு இருதயத்தோடும் இஸ்ரவேலின் தேவனைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொள்ளவில்லை. தங்கள் உயிரைக் காப்பாற்றவே இந்த உபாயம் செய்தார்கள். அதுபோல் கிறிஸ்துவிடம் உண்மையான பற்றற்ற பிசாசும் உன்னிடம் வஞ்சகமாக நடந்துகொள்ள துணிச்சல் கொள்வான். அவனுடைய தந்திரத்திற்கு ஆளாகி, அவனுடைய சூழ்ச்சிக்கு உட்பட்டு நாம் அவனைக் கொன்று ஒழிக்காது சமாதான உடன்படிக்கை செய்துகொண்டால் பேராபத்தே விளையும். சாத்தான் நம்முடைய கர்த்தர் அல்ல. அவன் கர்த்தருடைய விரோதி. அவருடைய விரோதி, நம்முடைய விரோதி என்பதை நினைவில் இருத்திக்கொள். பிரியமானவர்களே, உலகத்திலே அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1.யோ.4:1).
தேவ ஆவியை நீங்கள் எதனாலே அறியலாம் என்றால், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்i இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வரும் என்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அன்பர்களே! நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர். தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவி கொடுக்கிறான். இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிகிறோம். இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவனெவனும் தேவனால் பிறந்திருக்கிறான். இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
இஸ்ரவேலரின் இம்மதியீனத்தின் காரணம் யோசுவா 9:14ல் தெளிவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
கர்த்தருக்கு காத்திருந்து ஜெபத்தின்மூலம் அவரிடம் கேளாது, நாம் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. நுண்ணிய காரியமாயினும் ஜெபத்தில் கர்த்தரிடம் கேட்ட பிறகு அக்காரியத்தைச் செய்யத் துணியலாம். ஜெப அசட்டைதான் அநேக தோல்விகளுக்குக் காரணம். கர்த்தரிடம் கேளாது ஏதாவதொரு பணியை நாம் செய்யமுற்படின், அது நமது தற்பெருமையைக் காட்டும். நான் என்ற ஆணவமும், திமிரும், துணிச்சலும், நிச்சயமாய் அழிவையே கொணரும், நயவஞ்சகனாகிய சாத்தானுடைய முக்கிய தந்திரம் நம்மைக் கடவுளை மறக்கவைப்பதே. ஜெபத்தில் அசட்டையாய் இருக்கச் செய்வதே. கர்த்தரின்றி நாமாகத் துணிந்து ஒரு துறையில் இறங்கவைப்பதே. ஒளியின் வேடம் தரித்துக்கொண்டு நம்முன் வந்துநின்றுவிடுவான். புறக்காட்சிக்கு அவன் தேவதூதன்போலவே தென்படுவான். ஆனால், அவன் அகத்திலோ விடம் பொங்கிக்கொண்டிருக்கும். இந்த நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏன் கடவுளைக் கேட்கவேண்டும்? இதை அவருடைய சம்மதமின்றிச் செய்தால் அவர் சினம் கொள்வதற்கு இதில் என்ன பொல்லாப்பு இருக்கிறது. இது நல்ல காரியந்தானே போன்ற நச்சு அம்புகளை நம்மேல் அலைமேல் அலைபோல் தாக்கி எறிவான். கர்த்தர் ஒருவரே நல்லவர். அவரிடமிருந்து புறப்படுவதே நன்மை. நாம் அனைவரும் பாவிகள். நம்மிடமிருந்து பிறப்பதெல்லாம் பாவம். ஆகவே, எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணருமான கர்த்தரைத் தவிர்த்துச் செய்வதெல்லாம் தீமை. கடவுளைக் கலந்து கடவுள் ஒத்தாசையால் கடவுளோடுகூட நாம் எதைச் செய்கிறோமோ அதுதான் நன்மை. சாத்தானிடமிருந்து ஒருகாலும் நன்மை புறப்படாது என்னும் சத்தியங்களை மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும்.
சாத்தானுடைய வஞ்சகமான ஆலோசனைகள் வெளித்தோற்றத்திற்கு நன்மையானவைபோல காட்சி அளிக்கும். சில களைகள் உண்மையான பயிரைப்போல தோற்றம் அளிக்கவில்லையா? ஆரம்பத்தி; புத்தியில்லாத கன்னிகைகளும் புத்தியுள்ள கன்னிகைகளைப்போல காட்சி அளிக்கவில்லையா? கூலியாளின் சத்தம் மெய்யான மேய்ப்பனைப்போல ஒலிப்பதில்லையோ? கள்ள நாணயம் நல்ல நாணயம்போல வெளிப்பகட்டு அளிப்பதில்லையோ! புறக்காட்சி கண்டு புத்தியைப் பறிகொடுக்கக்கூடாது. வெளித்தோற்றம் கண்டு மயங்கிவிடக்கூடாது. எது சரி, எது தவறு என்று கடவுளிடம் கேட்கவேண்டும். எது மெய், எது பொய் என்று ஜெப வாயிலாக கர்த்தரிடம் கேட்டறிய வேண்டும். அவ்வாறு ஆண்டவரிடம் கேட்டு ஐயம் திரிபற அறிந்த பின்னரே ஒரு காரியத்தை சாதிக்க அவர் உதவியால் முனையவேண்டும்.
வெளித் தோற்றத்தால், உதட்டு வசனிப்பால் மயங்கினவர்கள் எத்தனை ஆத்துமாக்களை ஞானஸ்நான வாயிலாகத் திருச்சபையில் சேர்த்துக்கொண்டுள்ளோம். அப்படிப்பட்டவர்களால் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படவில்லையோ? காரணம் அவர்கள் அகத்தில் கிறிஸ்து இல்லை. அவர்கள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ மார்க்கத்துக்கு வந்தவர்களல்ல. அவர்கள் உலக நன்மைக்காகவே கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள். அத்தகைய கிறிஸ்து இல்லாத பேர்க்கிறிஸ்தவர்கள் திருச்சபையை அரிபிளவைப்போல அரித்து வருகிறார்கள் அன்றோ!
வெளிவேடம் எத்தனை வாலிபர்களை மயக்கியுள்ளது. புறத்தோற்றங்கண்டு எத்தனை பெண்கள் வீழ்சியற்றிருக்கிறார்கள். பார்வைக்கு நல்லவர் அல்லது நல்லவள் என்று கண்டு கல்யாணம் செய்துகொண்ட பின்னர் எவ்வளவாய்த துடிக்கிறார்கள். எவ்வளவாய் மனம் புண்படுகிறார்கள். அகத்தை நோக்காமல் புறத்தை மாத்திரம் பார்ப்பதால் எத்தனை பேர் வாழ்நாள் முழுவதும் அவதியுற நேரிடுகிறது. வாலிபத்தில் வஞ்சிக்கப்பட்டு மணவாழ்வில் ஈடுபட்டு, வாழ்க்கை முழுவதும் புண்பட்டுக்கொண்டிருப்போர் எத்தனை எத்தனையோ பேர். ஆம். இதற்கு விமோசனமே இல்லையா? ஒருகால் செய்த பாவத்திற்காக வாழ்நாளெல்லாம் வருந்திக்கொண்டேதான் இருக்கவேண்டுமா? கர்த்தரிடம் கேளாது கிபியோனின் குடிகளோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்ட குற்றத்திற்கு இஸ்ரவேலருக்கு ஒருகாலும் மீட்பே கிடையாதா? அவர்கள் வாழ்நாள் பூராவும் இந்தத் தவறுக்காக அழுந்திக்கொண்டேதான் இருக்கவேண்டுமா? இதற்கு மருந்தே கிடையாதா?
மருந்து கர்த்தர் ஒருவரிடத்தில்தான் உண்டு. தவறு இழைத்த பின்னர் தேவனிடம் மீண்டும் எவ்விதம் செல்வது என்று தயங்கிக்கொண்டு இருக்காது. உடனே அவரிடம் ஓடவேண்டும். அப்பாவத்திற்கு ஆழ்ந்து தவித்துக்கொண்டிருக்கவேண்டாம். கிறிஸ்துவிடம் பரிகாரம் இல்லாத ஒரு பாவ வியாதியும் இப்பூவுலகில் இல்லை. கிறிஸ்துவின் இரத்தம் அந்தப் பாவத்தை மாத்திரம் தீர்க்கவல்லர் என்றல்ல. கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களும் அற நம்மைக் கழுவிச் சுத்திகரிக்கவல்லது. இதை வாசிக்கும் நண்பனே! நீ சோர்ந்துபோகவேண்டாம். கிறிஸ்துவின் இரத்தம் கழுவிச் சுத்திகரிக்கமுடியாத எக் கொடிய பாவமும் இப்பூமியில் இல்லை. எத்துணை பஞ்சமாபாதகமாயினும் அவரது இரத்தம் அதையெல்லாம் கழுவிச்சுத்திகரிக்க வல்லது. எப்பேர்ப்பட்ட துரோகியானாலும், எப்பேர்ப்பட்ட பாதகியானாலும், எப்பேர்ப்பட்ட படுபாவியானாலும் சிலுவைநாதர் தன்னிடம் வருகிறவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். அவர் ஒரு பாவியையும் புறம்பே தள்ளினதில்லை. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று கூவியழைக்கிறார். தன்னைத் தஞ்சம் என்று அடைந்தவர்களைத் தயவாய் ஏற்றுக்கொள்கிறார். அவருடைய சிலுவை இரத்தத்தால் அடைக்கலம் அடைந்தோரைக் கழுவிச் சுத்திகரிக்கிறார். இதோ! உன்னை அன்போடு அழைக்கிறார். சோர்ந்து நில்லாது விரைந்து வா! உனக்கு அதைரியத்தை அளிப்பது சாத்தான்தான் என்பதை மறவாதே. மனச்சோர்வு சாத்தானின் பலத்த ஆயுதம். ஆகவே மன இளக்கரிப்பை உடனே உதறித்தள்ளிவிட்டு, உடனே இயேசுநாதரிடம் வா. உன்னைக் கட்டி அணைக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்.
கர்த்தரைக் கேளாது கர்த்தர் பேரில் ஆiணியிட்டுக்கொடுத்து, சமாதான உடன்படிக்கை செய்துகொண்ட கிபியோனின் குடிகளை அவர்கள் கொல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் இஸ்ரவேலருக்கு உதவிசெய்கிறவர்ளாக நிமிக்கப்பட்டார்கள். இஸ்ரவேலருக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும், ஆக்கப்பட்டார்கள். சாபம் நன்மையாக மாற்றப்பட்டது. தவிர்க்கமுடியாதது ஆசீர்வாதமாக திருத்தப்பட்டது. உபத்திரவம் உதவியாக மாற்றப்பட்டது. சேற்றில் செந்தாமரை முளைத்தது. யாரால் இந்த அதிசயம் கைகூடிற்று. ஒரே விடை, அத கர்த்தரால் ஆயிற்று. அவரது நாமம் அதிசயமானவர் (ஏசா.9:6). அவர் ஒருவரே அதிசயங்களைச் செய்ய வல்லவர். இயேசு சுவாமியை விசுவாசிக்கிறவர்களின் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும்.
ஜான் வெஸ்லிக்கு ஒரு முள்போன்ற மனைவி அகப்பட்டாள். உடனே அம்மனைவியை அவர் விவாகரத்து செய்து விட்டாரா? இல்லை. அதைத் தமது இயேசு நேசரிடமே முறையிட்டார். இயேசுநாதர் அம்முட்செடி வாழ்வில் இனிய ரோஜா மலரச் செய்தார். ஆம். அவர் அதிசயமானவர் அல்லவா? முள்போன்ற மனைவி இருந்ததால் ஜான் வெஸ்லி ஜெப வாழ்க்கையில் அதிகமதிகமாக ஈடுபடவும், சுவிசேஷத் தொண்டில் தீவிரமாக முனையவும் ஏதுவாயிற்று. சாக்கடைத் தண்ணீரில் சாதி மல்லிகை சில்லென்று பூத்தது, கிறிஸ்துவின் கிருபையால். கழிவு கந்தையிலிருந்து கச்சிதமான காகிதம் செய்யப்படுகிறதன்றோ! கர்த்தருடைய கரம் வல்லமையானவைகளைச் செய்யும். அவர் சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும். அவரால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? சிலுவைநாதரால் நாம் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்! இது தேவனுடைய ஈவு. ஆ! என் நேசரே! இயேசு சுவாமி, நீர் எவ்வளவு அதிசயமானவர்! நீர் என்னை எவ்வளவாக நேசிக்கிறீர்! நான் உம்மை நேசியாது இருப்பேனோ ???










