- வென்றேறிச் செல்லல்
தியான வாசிப்பு: யோசுவா 10:1-26
பேராசீர்வாதம் மிக்க கானான் நாட்டைக் கைப்பற்றவேண்டுமாயின், பெரும் போர், ஓயாப் போர் தொடுத்துத்தான் ஆகவேண்டும். வெற்றி காண்பதில் நமக்குப் போதிய பயிற்சி வேண்டும். உலகம், பிசாசு, மாம்சம் ஆகிய பயங்கர சத்துருக்களை வெல்வதற்கு நமக்குத் தக்க பயிற்சியும், தைரியமும், வீரமும், வன்மையும் வேண்டுமன்றோ! உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குள் இருக்கும் பேராசீர்வாதங்களை ஒவ்வொரு கிறிஸ்தவனும் விசுவாசத்தினால் தனதாக்கிக் கொள்ளவேண்டும். கிறிஸ்துவைத் தனது சுதந்தரமாகாதபடிக்கு அவனைத் தடுத்துநிறுத்தும் எல்லா வகைச் சோதனைகளையும், இடையூறுகளையும் அவன் எதிர்த்து ஒழிக்கத் தயங்கவே கூடாது.
சாத்தான் மிக மிகத் தந்திரசாலி. அவனுக்குத் தெரியும், கிறிஸ்து ஒருவர் நமக்கு உண்டானால் போதுமென்று. அவன் வேறு எதைச் சம்மதித்தாலும், நாம் கிறிஸ்துவை தமதாக்கிக் கொள்வதைச் சம்மதிக்கவே மாட்டான். அதைத் தடுப்பதற்குத் தன்னாலானவற்றைச் சாதுரியமாகவும், தந்திரமாகவும், சூழ்ச்சியாகவும் செய்யத் துடித்தெழுவான். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ நம் மூலமாகவோ, பிறர் மூலமாகவோ, வெளிப்படையாகவோ அந்தரங்கமாகவோ, மெதுவாகவோ பளிச்சென்றோ, நம்மைத் தாக்க சதி செய்வதே அவனது ஓயா வேலை. நமக்கோ, அவனை எதிர்ப்பதில் அவ்வளவு சாமர்த்தியம் போதாது. ஜெப ஆயத்தமின்றி, கிறிஸ்துவின் ஒத்தாசை தேடாது, நிர்விசாரமாகச் சோதனைகளை எதிர்ப்பதில் ஈடுபடுகிறோம். அதன் பலன் தோல்வியே. எவ்வளவு திட்டத்தோடும், முன்யோசனையோடும் சாத்தான் சோதனைகளைத் தயாரித்து, வனாந்தரத்தில் கிறிஸ்துவைத் தாக்கினான் பாருங்கள். ஆனால் பேரொளிக்கு முன் காரிருள் நிலைநிற்கமுடியுமோ? வேதவசனப் பட்டயத்தால் பிசாசை வெட்டி வீழ்த்தினார் இயேசுநாதர். அந்த ஜெய வேந்தர் இன்று நமக்குச் சோதனையில் ஜெயம் கொடுப்பதற்காக நம்மோடிருக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்வில் ஒரு சோதனiயில் நாம் படுதோல்வியுற்றால், அதனால் நாம் வாழ்க்கையில் இறுதிவரை படுதோல்வியே அடைந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. ஒருதரம் தோல்வியுற்றதினால், இனி நமக்கு விமோசனம் இல்லை என்று அப்படியே இளக்கரித்துப்போகக்கூடாது. இயேசுவின் சகாயத்தால் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று தைரியமாய்ச் சாத்தானை எதிர்த்து மடங்கடிப்போமாக. இயேசு கிறிஸ்துவுக்குள் இறுதி வெற்றி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.
இதுகாறும் இஸ்ரவேலர் ஆற்றிய படையெழுச்சியிலிருந்து, நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் உண்டு. எப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் தேவனைச் சார்ந்து, தேவனுக்குக் காத்திருந்து, தேவசித்தம் அறிந்து, தேவ ஆணை பெற்று, தேவகட்டளையைச் சிரமேற்கொண்டு, கீழ்ப்படிந்து நடந்தார்களோ, அப்பொழுதெல்லாம் வெற்றி பெற்றார்கள். ஆனால் எப்பொழுதெல்லாம் தேவனைத் தேடாது தங்கள் பலத்தைச் சார்ந்து போரில் இறங்கினார்களோ, அப்பொழுதெல்லாம் படுதோல்வியே அடைந்தார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம், தவறாது கற்கவேண்டிய அதி முக்கியமான பாடம் இது. பரிசுத்த ஜெபஜீவியம் செய்ய வேண்டும் என்று ஆசிக்கிற அனைவரும் அனுசரிக்க வேண்டிய அத்தியாவசிய சட்டம் இது. கிறிஸ்தவனின் வாழ்க்கை விதி இதுதான். கிறிஸ்து, அவர் வேதம், அவரோடு ஜெப ஐக்கியம், அவருக்குக் கீழ்ப்படிதல், எல்லாவற்றிற்கும் அவரையே சார்ந்து வாழல், அவரையே உயிராகக்கொள்ளல், அவரோடு அவருக்காக ஜீவித்தால்.
கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர் சொற்படி நடந்தால் வெற்றி கிட்டுவது திண்ணம். இதைத்தான் 10ம் அதிகாரம் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறது.
யோசுவா எரிகோவையும் ஆயியையும் பிடித்துக்கொண்டதையும், பலசாலிகளான கிபியோனின் குடிகள் இஸ்ரவேலரோடு சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் இராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, மனம் கலங்கிப்போனான். அவன் எபிரோனின் இராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூகிதின் இராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் இராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி, நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணை செய்யுங்கள். அவர் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம் பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். அப்படியே இந்த ஐந்து இராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும், அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதன்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி, உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும். பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் இராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் குடியேறினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி, அவர்களுக்குப் பயப்படாயாக. உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன். அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இராமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார். ஆகையால் அவர்கழளைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து பெத்தோரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் முறிய அடித்தார்கள்.
அவர்கள் பெத்ரோனிலிருந்து இறங்குகிற வழியிலலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்;த்தர் வானத்திலிருந்து கற்களை விழப்பண்ணினார். அவர்கள் செத்தாhகள். இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கர்த்தர் அனுப்பின கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக, சூரியனே, நீ கிபியோன் மேலும் சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.
சுரறiஒ ளை வாந அழளவ pழிரடயச றநடிளவைந னநனiஉயவநன வழ ழடெiநெ pரணணடந pசழபசயஅள யனெ வரவழசயைடள.
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது. அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை, அதற்குப் பின்னுமில்லை. கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
பின்பு யோசுவா இஸ்ரவேலரோடுகூட கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள். இச்செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யோசுவா, பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காக்க மனுஷரை வையுங்கள். நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள். அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவெட்டாதிருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் மகா பெரிய சங்காரமாய் அவர்களை அழியுமளவும் சங்கரித்தார்கள். அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்திற்குத் திரும்பி வந்தார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, ஐந்து இராஜாக்களைத் தன்னிடத்தில் கொண்டுவரச்சொன்னான். அப்படியே அவர்களைக் கொண்டு வந்தார்கள். அவனிடம் அவர்களைக் யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடுகூட வந்த யுத்த மனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த இராஜாக்களுடைய கழுத்துக்களின்மேல் வையுங்கள் என்றான். அவர்கள் கிட்டவந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துக்களின்மேல் வைத்தார்கள்.
அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் திடமனதாயிருங்கள். நீங்கள் யுத்தம் பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். அதற்குப் பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான். சாயங்காலமட்டும் மரங்களிலே தொங்கினார்கள். சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக் கொண்டிருந்த கெபியிலே பெரிய கற்களைக் கெபியின் வாயிலே போட்டு அடைத்தார்கள்.
அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதன் இராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம் பண்ணி, எரிகோவின் இராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் இராஜாவுக்கும் செய்தான். அவ்வாறே யோசுவா லிப்னா, லாகீஸ், எக்லோன், எபிரோன், தெபீர், இன்னும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்து, அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தான். இப்பட்டணங்களில் இராஜாக்களனைவரும் கொல்லப்பட்டார்கள். இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென் தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா இராஜாக்களையும் ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி, காதேஸ்பர்னேயா துவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும், கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
அந்த இராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும், யோசுவா ஒருமிக்கப் பிடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடுங்கூட கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை (யோசு.10:21). நாடெங்கும் இஸ்ரவேலரைப்பற்றிய பயத்தால் அவர்கள் இருதயம் கரைந்து போயிற்று. இஸ்ரவேலர் சாதரணமானதொரு சாதியல்ல. அவர்களை நடத்தின தெய்வம் சாதரண தெய்வமல்ல. இவர் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள ஒன்றான மெய்த்தெய்வம் என்பதை அவருடைய அதிசயக்கிரியைகள் மூலமாகக் கண்டார்கள். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்பதற்காக அவர் செய்த அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்த அற்புதத்தையும், வானாந்தரத்தில் அவர்களை மன்னாவால் போஷித்துப் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும் நடத்திவந்த சர்வவல்லமையும், யோர்தானைக் கடக்கச்செய்த புதுமையையும், எரிகோ ஆயி போன்ற அநேகப்பட்டணங்களை வென்ற பராக்கிரமத்தையும் கேள்விப்படும்பொழுது, கானானின் பூர்வீகக்குடிகளது இருதயம் கரைந்துபோகாது வேறு என்ன செய்யும்? ஆம், இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கமுடியாது போயிற்று. ஆம். இத்தெய்வத்திற்கு விரோதமாக நிற்கக்கூடியவன் யார்? இப் பாதையில் மோதுகிற எவனும் நொறுங்கிப்போவான் அன்றோ! நாடெங்கிலும் கர்த்தரைப் பற்றிய பயம் உண்டானது.
இக்காலத்திலும் திருச்சபையைப்பற்றிய பயபக்தி எங்கும் எழுமாறு திருச்சபையானது அவ்வளவு பரிசுத்தமும் சக்தியுமுடையதாக இருக்கவேண்டும். திருச்சபையைக் கண்டு பிறர் நடுங்கத்தக்கதாக அவ்வளவு புனித ஆற்றல் திருச்சபையில் பொங்கவேண்டும். திருச்சபையின் தெய்வம், சர்வவல்லமையுள்ள தேவன், பிசாசுகள் கண்டு, நடு நடுங்கும் தெய்வம். அத்தகைய பரிசுத்த தெய்வத்திடம் விசுவாசம் கொண்ட கிறிஸ்தவர்களும் பரிசுத்தவான்களாக வேண்டும். நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1.தெச.4:3). கிறிஸ்தவர்களிடம் காணப்படும் கற்புள்ள வாழ்க்கையும், பரிசுத்த ஜீவியத்தையும் பிறர் கண்டு பயபக்திகொள்ளவேண்டும். சாத்தானையும் அவன் ஆளுகைக்குட்பட்டவர்களையும் கண்டு கிறிஸ்தவர்கள் சிறிதும் அஞ்சவேண்டியதில்லை. பிசாசு ஆளுகைக்குட்பட்டவர்கள் எழுப்பும் நெருப்புக்கோ, எடுக்கும் பட்டயத்திற்கோ, இடும் தூக்குத்தண்டனைக்கோ, கிறிஸ்தவர்கள் பயப்படவேண்டியவர்கள் அல்ல, கிறிஸ்துவுக்காக நெருப்பாக நிற்கும் கிறிஸ்தவ உயிர்த்தியாகிகள் இவ்வுலகம் அல்லது பிசாசு மூட்டும் நெருப்புக்கு ஒருக்காலும் பயந்தவர்களல்லர்.
கிறிஸ்தவ விசுவாசிகளை எரிப்பதற்காகச் சாத்தான் மூட்டும் நெருப்பு அணைந்துபோம். ஆனால், கிறிஸ்து சிலுவையில் மூட்டிய அன்புத் தியாக தீ, மாந்தர் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டேயிருக்கும். கிறிஸ்தவ அன்பு ஒருக்காலும் அழியாது. கிறிஸ்தவப் பரிசுத்தம் என்றும் நிலைக்கும். அதைக் கண்டு அசுத்தர் அஞ்சி நடுங்குவர். பாதாளத்தின் வாசல் கிறிஸ்துவின் இராஜ்யத்தை மேற்கொள்ளமுடியாது. இறுதி வெற்றி இயேசுவுக்கே. ஆகையால், கிறிஸ்தவனே நீ பாவம் ஒன்றைத்தவிர வேறே எதற்கும் அஞ்சவேண்டாம்.
செத்த பாம்பைக் கண்டு ஏன் அஞ்சுகிறாய்? சிலுவைத்தடியால் உன் இயேசுநாதர் சாத்தானின் தலையை உடைத்துவிட்டாரே. இதை அறியாயோ? இவ்வுலகை அவர் வென்றுவிட்டாரே, இதே உனக்குத் தெரியாதோ? பாவம், சாபம் எல்லாம் தொலைத்துவிட்டாரே. இதை நீ உணராயோ? மோட்சவாசலை உனக்காகத் திறந்துவைத்துள்ளாரே. இதை நீ சிந்திக்கமாட்டாயா? பரிசுத்தப் பேரின்ப வாழ்வு உனக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதே. இதை நீ மறந்துவிட்டாயா? நீ உன்னுடையவன் அல்லன். நீ கிரயத்தால் மீட்கப்பட்டவன். நீ கிறிஸ்துவின் உரிமைப்பொருள். நீ கிறிஸ்துடையவன். ஆ, என்ன மகிழ்ச்சியான செய்தி. எவ்வளவு மாட்சிமையான சுதந்திரம்? எவ்வளவு மகிமையான பாக்கியம்? இவ்வளவு மகத்தான தெய்வத்தைச் சொந்தமாகக் கொண்டவன் எத்துணை பாக்கியவான்! பின்னை ஏன் நீ தலைகுனிந்து நிற்கிறாய்? நீ வாடி வதங்கியிருக்கக் காரணமேன்? கோழைபோல் பின்வாங்கி பதுங்கியிருக்கக் காரணம் என்ன? அனாதைபோல் பின்வாங்கிப் பதுங்கி நிற்கக் காரணம் என்ன? அனாதைபோல் ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்? எழும்பு! எழும்பு! முன்நோக்கிப்பார்! பின்னோக்காதே! கிறிஸ்துவைப் பார்! கிறிஸ்துவைப் பார்! செத்தபாம்பு போன்ற சாத்தானைக் கண்டு அஞ்சற்க. யானைமீதிருக்கிறவன் நாய் குரைச்சலுக்குப் பயப்படுவானோ? நாய்கள் குரைக்கலாம். ஆனால் ஒட்டகப்பிரயாணிகள் ஒரு சிறிதும் தயங்காது முன்னேறிச் சென்றுகொண்டேயிருப்பாரன்றோ! ஆம், கிறிஸ்துவோடுகூட இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிமேல் வெற்றிகண்டு, ஜெயபேரிகை கொட்டிக்கொண்டு பரிசுத்தவாழ்வில் முன்னேறிச்சென்றுகொண்டேயிருப்பர்.
இப்பத்தாம் அதிகாரத்தைப் படிங்குங்கால், ஒரு வாக்கியம் அடிக்கடி வருவதைக் கண்ணுறலாம். பட்டணத்தைப் பிடித்து அதிலுள்ள நரஜீவன்கள் எல்லாவற்றையும் ஒருவரையும் மீதியாகவைக்காமல் அதிலுள்ள யாவரையும் சங்காரம்பண்ணினான். ஆம், பழையன முழுவதும் கழிதல் வேண்டும். எல்லாம் புதிதாகவேண்டும். பாகாலை வழிபட்டவர்கள் அத்தனைபேரும் அழிதல் வேண்டும். பரிசுத்த தெய்வமான இயேசு கிறிஸ்து அவதரிக்கப்போகும் பலஸ்தீனா பூமியில் விசுவாசக்கோத்திரத்தார் வாசம்பண்ணத்தக்கதாகப் பாகால் மக்கள் முழுவதும் அழியவேண்டும். பெத்லகேமின் திருஅவதாரப் பிறப்புக்கும், எருசலேமின் கல்வாரி மரணத்திற்கும், மேல்வீட்டறையின் பெந்தெகொஸ்தே பரிசுத்த ஆவியின் பொழிவுக்கும் கானான் நாடு இடம்தரவேண்டும். தவறிப்போன மனுக்குலத்தை மீட்பதற்குத் தெய்வம் வகுத்த திட்டத்தை நிறைவேற்றுதல் பொருட்டுக் கானான் இப்பொழுதே இடத்தைத் தயார் செய்யவேண்டுமன்றோ! ஒளிக்கும் இருளுக்கும் சம்பந்தமேது? பேரொளிப் பிழம்பான நீதியின் சூரியன் பலஸ்தீனா நாட்டில் உதயமாகுமுன் காரிருள் ஒளிந்துபோம் அன்றோ! ஆகவே, இருளின் மக்கள் கானான் நாட்டைவிட்டு முற்றிலும் சங்கரிக்கப்படவேண்டும். அவர்களோடு ஒட்டும் உறவு விசுவாச மக்களுக்குச் சிறிதேனும் கூடாது. ஆகவே, அவிசுவாசிகள் அனைவரும் முற்றிலும் ஒழிக்கப்படல் வேண்டும்.
ஆகையால்தான் கெபியில் ஒழித்த ஐந்து இராஜாக்களையும் அப்படியே கெபியில் வாழவிடாது, அவர்களைக் கொன்று கெபியினின்று வெளியே கொணர்ந்து, வெட்டிக் கொன்று, அனைவருடைய கண்களும் காணத்தக்கதாக அந்த ஐந்து இராஜாக்களையும் ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான். சத்துருக்களில் ஒருவனையும் மீதியாக வைக்கவில்லை. அனைவரையும் சங்காரம்பண்ணினார்கள்.
நமது கிறிஸ்தவ வாழ்வில் பூரண வெற்றியில்லாததற்குக் காரணம் என்ன? நமது கிறிஸ்தவ சாட்சியில் கனி கிடைப்பதில்லையே. காரணம் யாது? நமது ஜீவியத்தின் வாயிலாகக் கிறிஸ்துவின் நாமம் சரிவர மகிமைப்படவில்லையே. அதற்கு மூலக்காரணம் யாது என்று சிந்தித்தாயோ? சிந்தித்துப் பார்!
உன் இதயக் கெபியை உற்று நோக்கு. அந்நாட்களில் இஸ்ரவேலருக்குத் தப்பி, பஞ்ச மாவேந்தர்கள் கெபியில் ஒழித்திருக்குமாப்போல, இன்று உன் இதயக் கெபியில் பஞ்சமா பாதகங்கள் ஒழிந்து பதுங்கியிருக்கவில்லையோ? இன்னும் நீ கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து விட்டுவிடாத இரகசியப் பாவங்கள், சிற்றின்ப ஆபாசங்கள், கொடிய பழக்கவழங்கங்கள் உன் இருதயக் குகையில் மறைந்து வாசஞ்செய்யவில்லையோ? உன் உள்ளம் கள்ளர் குகைபோல் இருக்கவில்லையோ? உன் இருதயத்தை இயேசுநாதர் படம்பிடித்துக் காட்டுகிறார். இதோ, உன் இதயப் படக்காட்சியைப் பார்! பொல்லாத சிந்தனைகள், விபசாரங்கள், வேசித்தனங்கள், கொலைபாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துட்டத்தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு, பொறாமை, கோபம், பகை, விரோதம், வைராக்கியம், சண்டை, பிரிவினை, மார்க்கபேதம், வெறிகள், கசப்பு, களியாட்டு, தன்னயம், தீச்சொல், பொய்ச்சொல், கோட்சொல், பயனில்லாச்சொல், தீயசொல் இன்னும் எத்தனையோ நச்சுப்பாம்புகள் உன் இதயக் குகைக்குள் ஒளிந்து இருக்கின்றன. கெபிக்குள் ஒளிந்திருந்த அந்த ஐந்து அரசர்களையும் யோசுவா வெளியே கொணர்ந்து வெட்டிக்கொன்றொழித்ததுபோல, இன்று நானும் நீயும் நமது இரகசியப்பாவங்களை முற்றிலும் சின்னப் பாவமோ, ஒன்றும்விடாமல் அத்தனை பாவப் பழக்கங்களையும் கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து, அவற்றை அடியோடு விட்டுவிடுவோமாக. பனைபோன்றதாயினும் சரி, அல்லது தினை போன்றதாயினும் சரி, எவ்வளவாயினும் சரி, பாவம் பாவமே. பாவத்தின் பால் தயவுதாட்சண்யம் காட்டாது, அவற்றை அறவே ஒழித்துக்கட்ட, கங்கணம் கட்டவேண்டும். ஒவ்வொரு பாவத்தோடும் போர்தொடுக்கவேண்டும். அப்பாவத்தைச் சர்வசங்காரம் செய்யும்வரை போர்புரியத்தயங்கக்கூடாது. பாவத்தோடு மாத்திரம் நமக்குச் சிறிதும் ஒட்டும் உறவும் வேண்டவே வேண்டாம். நமது பரிசுத்த தேவ இரட்சகராகிய இயேசு பாவத்தை எவ்வண்ணம் வெறுக்கிறாரோ, அவ்வண்ணம் நாமும் வெறுக்கவேண்டும். இறுதி வெற்றி இயேசுவின் மக்களுக்கே! கிறிஸ்தவனே, உன் இரகசியப் பாவத்தை எதிர்த்துப்போராடு. ஆம், இன்னும் அதிக வன்மையாய் எதிர்த்துப் போராடு. ஆம். இதுவும் போதாது. இன்னும் உக்கிரப் போர்புரி. விழுந்துவிட்டாயோ? ஆ, உடனே உடனே எழும்பு, எழும்பு. மீண்டும், மீண்டும், போராடு. ஆ, இறுதி வெற்றி மாலை சூடும்வரைத் தீவிரமாய்ப் போராடு. இதோ, வெற்றி! இதோ, புனித வெற்றி வாழ்வு!
இவ்வெற்றியின் அதிகார இறுதி வாக்கியம் என்றும் நம் நினைவில் வைத்துச் சிந்திக்கத்தக்கது.
பின்பு, யோசுவா இஸ்ரவேலனைத்தோடும் கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான் (யோசு.10:43).
ஆம், வெற்றிபெற்ற பின்பு, யோசுவா கில்கால் பாளயத்துக்குத் திரும்பவேண்டும். கில்கால் பாளயம் இளைப்பாறும் இடம். பதிவிருக்கும் இடம், காத்திருக்கவேண்டிய இடம். இழந்துபோன சக்தியை மீண்டும் பெறுவதற்குரிய இடம். போர் ஆரவாரத்திற்குப்பின் அமைதியாக இருக்கவேண்டிய இடம். ஒரு வெற்றியின் பின்னர் இளைப்பாறும் இடம். அடுத்த போருக்கு ஆயத்தமாகும் இடம். அடுத்துவரும் போருக்குத் திட்டம் வகுக்கும் இடம். தேவஆலோசனைக்கு வழி நடத்துதலுக்கும் காத்திருக்கவேண்டிய இடம். தெய்வப் பலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடம். அமைதியாக அவர் சித்தம் அறிய அமர்ந்திருக்க வேண்டிய இடம்.
ஆம், பகலின் இரைச்சலுக்குப்பின், இரவின் அமைதி தேவை. பகலின் வேலைக்குப்பின், இரவின் இளைப்பாறுதல் தேவை. இரவின் அமைதியை நாம் அனுபவியாவிடின் பகலின் வேலைக்குத் தயாராக முடியாது. இரவின் அமைதியை ஏற்றுக்கொண்டால், பகலில் ஆர்வத்துடன் பணியாற்றலாம். ஆகவே, ஆணடவர் உன்னை அமர்ந்திரு, காத்திரு என்று சொல்லுங்கால், நீ அவரசப்படாது, அவர் பாதத்தில் அமர்ந்து காத்திருக்கவேண்டும். ஆ, நாம் கர்த்தருக்குக் காத்திராது, எத்தனையோ போர்களில் படுதோல்வியடைந்துள்ளோமே! ஆகையால், இன்றேனும் அமர்ந்திருந்து, கடவுள் பாதத்தில் பக்தி விநயத்தோடும், ஜெபசிந்தையோடும், கீழ்ப்படிதல் உள்ளத்தோடும் காத்திருக்கக் கற்றுக்கொள்வோமாக.
கிறிஸ்துவின் பாதத்தில் ஜெபத்தோடு அமைதியாக இரு, என் மகனே, அமர்ந்து காத்திரு. அவர் உனக்கு வழி திறக்கும்வரையில் நீர் ஓர் அடிகூட எடுத்துவைக்க வேண்டாம். அவர் உனக்குக் கதவைத் திறந்தபின், எவ்வளவு இன்பமாய், எவ்வளவு ஆற்றலுடன், எவ்வளவு தீவிரமாய், எவ்வளவு விறுவிறுப்புடன் விரைந்து வழிநடப்பாய் என்பதை இப்பொழுது எண்ணிப்பார். அப்பொழுது கர்த்தரின் பாதத்தில் ஜெபத்தில் காத்திருந்த நேரம் எவ்வளவு பயனுள்ளது என்பதை அறிந்துகொள்வாய். தற்கால மக்கள் ஜெபத்தில் கடவுள் காலடியில் காத்திருக்கும் மகத்தான கிறிஸ்தவக் கலையை இழந்து வருகிறார்கள். தற்கால கிறிஸ்தவ சமுதாயத்தின் தாழ்ந்த தரத்திற்குக் காரணம், கிறிஸ்தவர்கள் அந்தரங்க தனி ஜெபவாழ்வில் குளிர்ந்துபோனதேயாகும். அவசரப்பட்டு ஒன்றைச் செய்துமுடிக்கத் தீவிரிக்கிறோம். ஆனால், அதிகாலையில் அவசரப்படாமல் அமைதியாகத் தனி ஜெபம் செய்ய சோம்பல்படுகிறோம். அதிகாலை தனி ஜெப அசதி நமக்குத் தோல்வியையே கொணரும், நாம் வாழும் யுகம் அவசரம்மிக்க, ஆரவாரம் பெருத்த, இரைச்சல் மிகுந்த யுகமாகும். எங்ஙனும் அவசரம்! அவசரம்! எல்லாரும் அவசரம்! அவசரம்! அதிகாலையிலோ மற்ற நேரத்திலோ கடவுள் பாதத்தில் அமைதியாக இருப்பது அரிதாகிவிட்டது. இது கடினமானதுதான். ஆனால், நல்ல பொருள்களுக்கு விலையும் அதிகம் அல்லவா?
உன் உருவச் சித்திரம் சித்திரிக்கப்படுகையில், நீ எவ்வளவு அசைவின்றி அமர்ந்திருக்கவேண்டுமென்று உனக்குத் தெரியுமல்லவா? இதோ, கிறிஸ்து உன்னைத் தம்மைப்போல் உருவாக்குகிறார். நீ அவரைப்போல் ஆகவேண்டும். அங்ஙனமாயின், அவருக்குமுன் அமைதியாக ஜெபத்தில் காத்திருக்கவேண்டும். அவர் ஜெபம்பண்ணுகையில், மறுரூபமானார் (லூக்.9:29). நீயும் அவரைப்போல் ஆகவேண்டுமானால், அவரோடு ஜெபத்தில் தனித்திருந்து ஐக்கியமாதல் வேண்டும். ஜெபவாழ்வே ஜெயவாழ்வு.









