- கைக்கொள்ள வேண்டியவை
தியான வாசிப்பு: யோசுவா 23:1-16
இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு அதிகமானபின் நிகழ்ந்த நிகழ்ச்சி யோசுவா 23ம் அதிகாரத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன. இதுகாறும் இஸ்ரவேலரை எத்தனையோ போரில் யோசுவா முன்னின்று நடத்தியுள்ளான். யோசுவாவுக்கு எத்தனையோ பொறுப்பான வேலைகள், எத்தனையோ அல்லல் நிறைந்த அலுவல்கள். எத்தனையோ வெற்றிகள், தோல்விகளும் கூட. இத்தனை போர்களையும் தலைமை தாங்கி நடத்தி வெற்றிகண்ட யோசுவா பின்னர் இச் சுதந்தரப் பூமியை இஸ்ரவேலருக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் வாய்ப்பும் பெற்றான். இவ்வளவு போர் வாழ்வுக்குப் பின்னர் யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானான்.
யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார். யோர்தான் முதல் நாம் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரம்மட்டு;ம் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு உங்களுக்கு உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய் சுதந்திரமாகப் பங்கிட்டேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப் போடுவார் என்ற உறுதி மொழிகளைப் பகர்ந்தான். இவ்வளவு பழுத்த அனுபவம் படைத்த ஒரு பக்தனுடைய காலடியில் அமர்ந்து, அவன் தன் வாழ்நாளில் கண்ட அனுபவத்தைக் கூறக்கேட்பது நம்மெல்லாருக்கும் அதிகம் பிரியமாயிருக்கும் அல்லவா?
இவ்வளவு முதிர்ந்து வயதுவரை கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றி அவரை இதயபூர்வமாக சேவித்து வந்த யோசுவாவின் அனுபவ மொழிகள் பொன்னால் பொறிக்கவேண்டியவை. அந்த அமுத மொழிகளைக் கேளுங்கள்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். கர்த்தர் சொன்ன எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு நிறைவேறிற்று. அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. ஆம், கர்த்தர் மனம் மாற மனிதனும் அல்லர். அவர் பொய் சொல்லுகிறவரும் அல்லர். அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இரார். கர்த்தரே சத்தியம் ஆனவர். அவர் வாயினின்று புறப்படுவதெல்லாம் சத்தியம். அவைகளில் ஒரு வார்த்தையும் பொய்ப்பதில்லை. ஆகவே, அவருடைய வார்த்தையை நம்பினவர்கள் ஒருக்காலும் வெட்கமடைவதில்லை. அவரை விசுவாசிக்கிறவர்கள் ஒருவரும் ஏமாற்றம் அடைகிறதில்லை. இதோ, ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை அவனுடைய பின்சந்ததியாருக்கு கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணின கர்த்தர் தமது வாக்கை நிறைவேற்றிவிட்டார். கர்த்தருடைய ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. ஆம், கர்த்தர் ஒருபோதும் தவறாதவர். கர்த்தருடைய சொல் ஒருபோதும் தவறாது. கர்த்தருடைய செயல் ஒருக்காலும் தவறாது. எவ்வளவு சத்தியமான சத்தியம். நானே சத்தியம் என்று இயேசுநாதர் இயம்பவில்லையோ!
யோசுவாவின் வாழ்க்கை இறுதி வந்துற்றது. தனது வாழ்க்கையின் கடைசி நேரத்தில் வந்துற்ற யோசுவா கர்த்தரை நினைத்து அவரது அதிசயக் கிரியைகளையெல்லாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தை குளிர்ந்தான். ஆனால், அவன் இஸ்ரவேலரை நினைத்தபொழுது ஒரு கலக்கம் அவன் மனத்தை வாட்டிப் பிழிந்தது. கானானிலுள்ள பலத்த ஏழு பகைவரான சிலர் இன்னும் அழிக்கப்படாது எஞ்சியிருந்தனர். ஒருவேளை இந்த இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு விலகி, எஞ்சியிருந்த இப்பகைவர்களோடு கலந்து, அவர்களோடு சம்பந்தமும் கொண்டு, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொள்ளும் சோதனைக்குள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சம் யோசுவாவைக் கவ்விக் கொண்டது. ஐயோ ஒருக்கால் இந்த இஸ்ரவேலர் பின்வாங்கிப்போய் கர்த்தரை மறந்துவிட்டு, அவர்களுக்குள்ளே மீதியாய் இருக்கிற கானான் பூர்வீகக் குடிகளோடு சேர்ந்து உறவுகொண்டால், கர்த்தரது கோபத்தால் இவர்கள் நல்ல தேசத்திலிருந்து சீக்கிரமாய் அழிந்து போவார்களே என்று மனம் அழுந்தினான்.
ஆகையால், யோசுவா தான் மரிக்கப்போகும்முன் இஸ்ரவேலருக்கு எச்சரிப்பும் அறிவுரையும் பகர்வான் வேண்டி, அவர்களையெல்லாம் அழைப்பித்து, அவர்கள் கைக்கொள்ளவேண்டிய கொள்கைகளைத் தௌ;ளத் தெளிய எடுத்துரைத்தான்.
யோசுவா இஸ்ரவேலருக்குக் கூறிய இறுதி எச்சரிப்பு மொழிகள் பவுல் அடிகள் எபேசியருக்கு இறுதியாகக் கூறிய எச்சரிப்பு மொழிகளுக்கு ஒத்திருக்கின்றன அல்லவா?
ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தனது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடனவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்று வருட காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்தி விருத்தி அடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும், வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும், என்னுடனேகூட இருந்தவர்களுக்கும், வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இவைகளைச் சொன்ன பின்பு, அவன் முழங்கால்படியிட்டு அவர்கள் எல்லாரோடும்கூட ஜெபம்பண்ணினான். அவர்கள் எல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய் துக்கப்பட்டு பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தம் செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனேகூடப் போனார்கள்.
நான் போன பின்பு, மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். ஆகையால் உங்களைக் குறித்தும், மந்தை முழுவதைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்ற பவுலடிகள் எச்சரித்த அதே உண்மையான எச்சரிப்பையே யோசுவா தனது இறுதிக் காலத்தில் இஸ்ரவேலருக்கு விடுவித்தான்.
யோசுவா கொடுத்த முதல் எச்சரிக்கை யோசுவா 23:6ம் வசனத்தில் அடங்கியுள்ளது. ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டு வலது புறமாகிலும் இடது புறமாகிலும் விலகிப் போகாமல் அதையெல்லாம் கைக்கொள்ளவும், செய்யவும் நிர்ணயம்பண்ணிக் கொள்ளுங்கள். அதாவது, கர்த்தருடைய வசனத்திற்கும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க, எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். தனி ஒரு மனிதனோ அல்லது ஒரு ஜாதியோ கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற்போனால் கர்த்தருடைய சாபத்தையே அவர்கள் ஏற்பர். ஆனால், கர்த்தருடைய வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனிதனோ அல்லது மனுஷியோ அல்லது ஜாதியோ, ஆசீர்வாதம்பெற்று, பாக்கியம் அடைவர். கர்த்தர் அவர்களோடு இருந்து, அவர்களை எல்லாத் தீமைக்கும் தற்காத்து இரட்சிப்பார். ஆகவே, கிறிஸ்தவ வாழ்விலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கைக்கொள்ளவேண்டிய முதல் கொள்கை யாதெனில் அவன் கர்த்தருடைய வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
கிறிஸ்தவனே, நீ தினந்தேறும் ஒழுங்காக வேதம் வாசித்து வரலாம். அநேக வேத வசனங்கள் உனக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்கலாம். அநேகப் பொன்னான வசனங்கள்பேரில் நீ ஆழ்ந்த தியானம் செய்திருக்கலாம். அதன் உட்கருத்தைப்பற்றி நீ விளக்கமாக வியாக்கியானம் படித்திருக்கலாம். அல்லது எழுதியிருக்கலாம், அல்லது பிரசங்கித்து இருக்கலாம். இவையெல்லாம் அதிக நல்லவைதான், வேதம் தினந்தோறும் ஒழுங்காக வாசித்து, அதன் ஆன்மக் கருத்தை அறிந்துகொள்வது நல்லதுதான். இல்லையென்று மறுத்துரைப்போர் யாருமே இல்லை. ஓவ்வொரு கிறிஸ்தவனும் நாள்தோறும் அதிகாலையில் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, வேதத்தியானம் செய்வது மிகமிக முக்கியம். ஆனால் அதோடு நின்றுவிடாது, கர்த்தருடைய வசனம் நம்மை எதை செய்யச் சொல்கிறதோ அதற்குக் கீழ்ப்படிந்து அதைத் தவறாமல் செய்யவேண்டும். எந்தெந்தப் பாவப் பழக்கங்களை விட்டுவிடச் சொல்கிறதோ அதற்குக் கீழ்ப்படிந்து அத்தீய பழக்கத்தை விட்டுவிடத் தவறக்கூடாது. கர்த்தருடைய வசனத்தை வாசிக்கிறதும் அல்லாமல், அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் வேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கைக்கொள்ள வேண்டிய முதல் கொள்கையாகும். கர்த்தருடைய சொல்லுக்கு யார் யார் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் வளர்ச்சி ஏற்படும். அவர்கள் வாழ்வில் பரிசுத்தம் விருத்தியாகும். அவர்கள் வெற்றிமேல் வெற்றி காண்பார்கள். யார் யார் தூய கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை ஆற்ற ஆசிக்கிறார்களோ, அவர்களெல்லாம் தவறாது அவசியம் அனுசரிக்க வேண்டிய முதல் கிறிஸ்தவ நெறி, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதலே.
யோசுவா தனது வாழ்வின் கடைசிக் காலத்தில் இஸ்ரவேலருக்கு விடுத்த இரண்டாவது எச்சரிக்கை யோசுவா 23:7-8ல் அடங்கியுள்ளது. உங்களுக்குள்ளே மீதியாய் இருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பெயரை நினையாமலும், அவைகளைக் கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும் பணிந்து கொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாய் இருங்கள். இந்நாள் மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப்பற்றிக் கொண்டிருங்கள். ஆம், இஸ்ரவேலருக்கு கர்த்தர் ஒருவரே. அவர்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களுக்குப் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தைக் கிருபையாய்க் கொடுத்த தேவனாகிய கர்த்தரை அன்றி வேறே தேவர்களை அவர்கள் நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் கூடாது. ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும், அவர்கள் உண்டாக்கக் கூடாது. அவர்கள் அந்நிய தேவர்களுடைய நாமத்தை தங்கள் வாயால் உச்சரிப்பது மாத்திரமன்று, தங்கள் மனதில் அந்நிய தேவர்களின் பெரை நினைக்கவும் கூடாது. அவர்கள் எண்ணமெல்லாம் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தால் நிறைந்திருக்கவேண்டும். அவர்கள் நெஞ்சமெல்லாம் கர்த்தருடைய பிரசன்னத்தால் பொங்கி வழியவேண்டும். அவர்கள் உள்ளத்தில் கோயில் கொண்டுள்ள கர்த்தரின் புனித நாமத்தையே அவர்கள் உதடுகள் உச்சரிக்கவேண்டும். இதயத்தின் நிறைவால் வாய் பேசும் அன்றோ? அவர்கள் கர்த்தரையே சேவித்து, கர்த்தருடைய தூய நாம மகிமைக்கான செயல்களையே செய்யவேண்டும்.
பரிசுத்த வெற்றி வாழ்க்கை நடத்த விரும்புகிற ஒவ்வொரு கிறிஸ்தவனும் பின்பற்ற வேண்nடிய இரண்டாவது நெறி இதுதூன். ஓவ்வொரு கிறிஸ்தவனும் உள்ளத்திலும் கிறிஸ்து தேவ இரட்சகராக வீற்றிருக்கவேண்டும். அவனது இதயமெல்லாம் கிறிஸ்து. அவனது பேச்செல்லாம் கிறிஸ்து. அவனது செயல்களில் எல்லாம் கிறிஸ்து மகிமைப்படவேண்டும். மரம் அதன் கனிகளால் அறியப்படுவதுபோல, கிறிஸ்தவனுடைய செயலால் கிறிஸ்து அவனுக்குள் வீற்றிருப்பது உலகுக்கு வெளியாக வேண்டும். மனுஷர் உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று இயேசுநாதர் பறைசாற்றவில்லையோ? சாத்தானுடைய ஆட்சியால் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெளியாகும் மாம்சத்தின் கிரியைகளைக் கண்டால், உலகம் அவனை எவ்வாறு கிறிஸ்தவன் என்று ஒத்துக்கொள்ளும்? ஆனால் ஒருவனுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியின் கனிகள் காணப்பட்டால் அவனுடைய இதயத்தில் கிறிஸ்து கோயில் கொண்டுள்ளார் என்பதை உலகம் அறிந்துகொள்ளும். ஆகவே, பரிசுத்த வெற்றி வாழ்வு வேண்டும் என்று விரும்புகிற அனைவரும் கிறிஸ்துவையே தங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் இதய எண்ணமும், சொல்லும், செயலும் எல்லாம் கிறிஸ்துவால் நிறைந்திருக்க வேண்டும்.
இஸ்ரவேலருக்கு யோசுவா கொடுத்த மூன்றவாது எச்சரிக்கை யோசுவா 23:11ல் கூறப்பட்டுள்ளது. உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். ஆம், இஸ்ரவேலர் தேவனாகிய கர்த்தரிடத்தில் மாத்திரம் அன்பு கொள்ளவேண்டும். கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கம் கிடைக்கும். அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும் என்பதே பிரதான கற்பனையாகும். கர்த்தரிடத்தில் அன்பு இல்லாவிட்டால், எப்படி அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவரையே சேவிக்க முடியும்?
ஓவ்வொரு கிறிஸ்தவனும் கைக்கொள்ளவேண்டிய மூன்றாவது மாபெரும் கொள்கை இதுதான். அவன் கிறிஸ்துவினிடத்தில் முழுமனதோடும் முழு இருதயத்தோடும் அன்புகூரவேண்டும். கிறிஸ்துவினிடத்தில் ஒருவன் அன்புகூராமல் போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்று பவுலடிகள் எச்சரிக்கிறார். ஆகையால்த்தான், ஆண்டவர் பேதுருவைப் பார்த்து: நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா என்று மும்முறை கேட்டார். கிறிஸ்தவ ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்க்க வேண்டிய மகத்தான பொறுப்பை யார் யார் ஏற்றுக்கொண்டுள்ளார்களோ அவர்களிடம் இருக்கவேண்டிய மூலப்பண்பு கிறிஸ்தவ அன்புதான். கிறிஸ்துவினிடத்தில் அன்பில்லாதவன் ஆடுகளை எவ்வாறு அன்புடன் மேய்க்கமுடியும்? கிறிஸ்துவின்மீது இருக்கவேண்டிய அன்பு குறைவுபட்டால், ஒரு கிறிஸ்தவனின் வாழ்விலும் ஊழியத்திலும் குளிர்ச்சியும் கனியின்மையும் காணப்படும். கிறிஸ்துவிடம் அன்பு வளர வளர, பரிசுத்த வாழ்விலும் வெற்றி வளரும். ஒரு கிறிஸ்தவனிடம் இருக்கவேண்டிய உயிர்ப்பு பண்பு கிறிஸ்தவ அன்புதான். கிறிஸ்துவின் மீதுள்ள அன்பை விட்டு உலகிலுள்ள எந்தச் சக்தியும் நம்மைப் பிரிக்காதபடி, கண்ணங்கருத்துமாய் இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள அன்பு குறைந்து போனால், ஒருவனுடைய வாழ்வே ஒழிந்துபோகும். ஆகவே, உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் ஒரு மனிதனுக்குக் கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய அன்பு. பழுத்த அனுபவம் படைத்த யோசுவா கூறும் இம்மூன்றாவது நெறியை நாம் ஒவ்வொருவரும் மகா பிரதான கிறிஸ்தவ நெறியாகக் கைக்கொள்ளவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படுகிறது (ரோ.5:5). கிறிஸ்துவிடம் எனக்கு அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் கிறிஸ்துவின் மீதுள்ள அன்பே பெரியது.













