- இது உங்களுக்கே!
இந்நூலின் இலட்சியம் வாசகர் இரட்சிக்கப்படுதலே. தேவாஞ்சையை முன்னிட்டு, அநேக ஆயிர மக்கள் மனந்திரும்புவதற்கு இது கருவியாய் அமையும்படி, பரிசுத்த ஆவியானவரான தேவவல்லமையில் குழந்தையைப் போல் நம்பிச் சார்ந்து இது அனுப்பப்படுகிறது. இச்சிறு நூலைப் பல எளிய ஆண்களும் பெண்களும் எடுத்து வாசிப்பாரென்பதிலும், தேவன் அவர்களைக் கிருபையுடன் சந்திப்பாரென்பதிலும் ஐயமில்லை. படிப்பறிவற்றோரால் புரிந்து கொள்ளக் கூடியது அறிவு நிரம்பியோருக்கும் கவர்ச்சிகரமாய் இல்லாமலில்லை. ஒரு சிலராயினும் வாசித்து ஆதாயம் பண்ணுவதில் பிரபலமடைவாரெனில் எவ்வளவு நலமாயிருக்கும்!
இச்செய்தியை வாசிப்பதால் எத்தனைபேர் சமாதானத்துக்கு வழி நடத்தப்படுவார்களென்பதை யாரறிவார்? அருமையான வாசகரே, உங்களிடம் கேட்கவேண்டிய மிகமுக்கியமான கேள்வி இதுதான். அவர்களில் ஒருவராக நீங்கள் இருப்Pர்களா?
ஒரு மனிதன் பாதையருகே ஒரு நீரூற்றை உண்டாக்கினான். பின் அதன் பக்கத்தில், சிறு சங்கிலியுடன் இணைக்கப்பட்டதோர் கோப்பையையும் வைத்தான். சில காலமான பிறகு, புகழ்வாய்ந்த ஒரு கலை நிபுணன் அதன் அமைப்பைக் குறித்துப் பல குறைகள் கூறியதாகத் தெரிந்தது. எனினும் அநேகர் இங்கு வந்து தாக சாந்தி பெறுகிறார்களல்லவா? என்று வினாவினான் நீர்க் குளம் அமைத்தவன். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகளான ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வந்து தாக விடாய் தீர்த்துக் கொள்வதாக அவனுக்கு அறிவிக்கப்பட்டது. கலை நிபுணனின் கூற்றால், தான் சிறிதும் பாதிக்கப்படவில்லையென்றும் வெப்பம் மிகுந்த கோடைப் பருவத்தில் என்றாகிலும் ஒருநாள் குறைகூறிய அவனே அக்கோப்பையில் நீர் பருகி, தாகம் நீங்கியவனாய் ஆண்டவனின் நாமத்தை வாழ்த்துவானென்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவன் புன்முறுவலுடன் மொழிந்தான்.
இதோ என் நீர்க்குளம், இதோ என் கோப்பை, உங்களுக்கு விருப்பமாயின் குறை காணுங்கள், ஆயினும் ஜீவத்தண்ணீரைத் தயவாகப் பருகுங்கள். என் கவலை அது ஒன்று தான்.
வாசகரே இந்நூலை அலட்சியப்படுத்தாமல் வாசிப்பீர்களா? அப்படியானால் நாம் ஆரம்பத்திலேயே ஒரே மனத்தினராகி விட்டோம். ஆனால் கிறிஸ்துவையும் பரலோகத்தையும் காண்போமென்று நீங்கள் எதிர்நோக்கியதற்கு குறைவாக ஒன்றும் இங்கே இராது. ஆகா! நாம் இதை இணைந்து நாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இச்சிறு நூலை ஜெபத்துடன் நான் சமர்ப்பிப்பது மூலம் நானும் அவ்விதமே நாடுகிறேன். நீங்களும் என்னுடனே சேர்ந்து தேவனை ஏறெடுது;து நோக்கி, நீங்கள் இதை வாசிக்கையில் அவர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக்கொள்ள மாட்டீர்களா? இப்புத்தகம் உங்களிடம் கிடைக்கும்படி ஆண்டவர் கிருபை புரிந்திருக்கிறார். இப்பக்கங்களை வாசிக்க உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது. அது அளிக்கும் செய்தியில் கவனம் செலுத்த நீங்கள் சித்தமாயிருக்கிறீர்கள். இவை நல்ல அறிகுறிகள். ஆசீர்வாதத்துக்கென்று குறிக்கப்பட்டிருக்கும் வேளை வந்திருப்பதை யாரறிவார்? எவ்வாறிருப்பினும் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். (எபி 3:7,8)












