- விசுவாசத்தின் வளர்ச்சி விசுவாசத்தில் பெருகுவது எப்படி? இது அநேகருடைய ஆர்வமான கேள்வி. விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினாலும் தங்களால் இயலவில்லையென்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொருளின் பேரில் அர்த்தமற்ற பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. நாம் இதோடு சம்பந்தம் கொள்ளும்போது, செயல்முறையில் அதை வெளிப்படுத்த கவனமாயிருக்கவேண்டும். மற்றக் காரியங்களில் பொது அறிவு தேவைப்படுவதுபோல் மார்க்கத்திற்கும் தேவைப்படுகிறது. ‘விசுவாசிக்கும்படி நான் என்ன செய்யவேண்டும்?” ஒரு எளிய செயலைப் புரிய சிறந்த வழி என்னவென்று ஒருவர் கேட்டபோது, அதைச் செய்வதற்கான சிறந்த வழி அதை உடனே செய்துவிடுவதுதான் என்ற பதில் வந்தது. செயல்படுதல் எளிதாயிருக்கையில், முறைகளைக் குறித்து விவாதித்து நாம் நேரத்தை விரயமாக்குகிறோம். விசுவாசிப்பதற்குக் குறுகிய வழி விசுவாசித்தலே. பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கபடமற்றவராக மாற்றியிருந்தாரெனில், சத்தியம் உங்கள் முன்பாக வைக்கப்பட்டதுமே நீங்கள் அதை நம்பிவிடுவீர்கள். அது உண்மையாயிருப்பதால் நீங்கள் அதை நம்புவீர்கள். சுவிசேஷத்தின் கட்டளையான, ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” என்பது தெளிவாயுள்ளது (அப் 16:31) வினாக்களாலும் பசப்பு மொழிகளாலும் இதை ஒதுக்கிவிடுவது பயனற்றது. தெளிவாயுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டும். மேலும், உங்களுக்கு ஏதும் சிரமம் இருக்குமென்றால், ஜெபத்துடன் தேவனிடம் டுத்துச் செல்லுங்கள். உங்களைக் குழப்புவது யாதென்பதை விளக்கமாய் ஆண்டவரிடம் அறிவித்து, பரிசுத்த ஆவியானவரால் உங்களுக்கு அந்த புதிர் விடுவிக்கப்படவேண்டுமென்று அவரை இறைஞ்சுங்கள். ஒரு நூலில் காணப்படும் ஒரு கருத்தை என்னால் நம்பமுடியவில்லையெனில் அந்நூலாசிரியனிடம் அதன் பொருளைக் கேட்க ஆவலுறுவேன். ஆசிரியன் வாக்கில் உண்மையுள்ளவனென்றால், அவன் தரும் விளக்கம் எனக்குத் திருப்பதியளிக்கும். உண்மையில் ஆண்டவரை நாட விழைபவனுக்கு வேதத்தின் கடின பகுதிகளைப் பற்றிய தெய்வீக வியக்கம் இன்னும் அதிகமாயத் திருப்தியளிக்கும். தம்மை வெளிப்படுத்த ஆண்டவர் சித்தமாயிருப்பதால், அவரிடம் சேர்ந்து அது உண்மைதானா என்பதை அறியுங்கள். உங்கள் தனி அறைக்கு இப்போது சென்று, ‘பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சத்தியத்துக்குள் நடத்தும்! நான் அறியாதிருப்பதை எனக்குப் போதித்தருளும்” என்று மன்றாடுங்கள். தவிர, விசுவாசித்தல் கடினமாயிருக்குமாயின், நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது எதுவோ அதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் அடிக்கடியும் கேட்பீர்களென்றால், தேவ ஆவியானவர் நீங்கள் அதை விசுவாசிக்கும்படி செய்யக்கூடும். அநேகக் காரியங்களை நாம் அடிக்கடி காதால் கேட்பதால் நம்புகிறோம். சாதாரண வாழ்க்கையில் நீங்கள் ஒரே காரியத்தை ஒரு நாளில் ஐம்பதுமுறை கேட்க நேரிட்டால், இறுதியில் அதை நீங்கள் நம்பிவிடுகிறீர்கள் அல்லவா? இந்த வகையில் சிலர் நம்பக்கூடாதவைகளையும் நம்பியிருக்கின்றனர். எனவே, நல்ல ஆவியானவர் சத்தியத்தை அடிக்கடி கேட்கும் முறையை ஆசீர்வதித்து, நம்பவேண்டிய காரியத்தின் சம்பந்தமாக விசுவாசம் கிரியை செய்யும்படி அம்முறையைப் பயன்படுத்துகிறரென்பது அதிசயமல்ல. ‘விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று எழுதப்பட்டிருப்பதால், அடிக்கடி கேளுங்கள். நான் ஆர்வத்தோடும் கவனத்தோடும் சுவிசேஷத்தைக் கேட்டேனேயாகில், தேவ ஆவியானவர் என் சிந்தனையில் ஆசீர்வாதமான கிரியை செய்வதன்மூலம் நான் செவிமடுப்பதை என்றாகிலும் ஒருநாள் விசுவாசிப்பேனென்பது உறுதி. உங்களைத் தடுமாறப் பண்ணுவதற்காக இருக்கும் எதையும் வாசிக்கவோ, செவியில் ஏற்கவோ, உங்கள் சிந்தையைச் சிதறடிக்காமல் சுவிசேஷத்தைக் கேட்பதில் மட்டுமே எச்சரிக்கையாயிருங்கள்.
இதுவும்கூட உங்களுக்கு ஏற்ற ஆலோசனையாயிராவிடில் மற்றவர்களுடைய சாட்சியைச் சிந்தித்துப் பாருங்கள் என்று அடுத்ததாகக் கூறுவேன். இயேசுவைக் குறித்து சமாரிய ஸ்திரீ தன் ஊராரிடம் கூறியதால், சமாரியர்கள் அவரில் விசுவாசம் வைத்தனர். பிறருடைய சாட்சிகளின் வாயிலாக நம்முள் அநேக நம்பிக்கைகள் பிறக்கின்றன. ஜப்பான் என்றதோர் தேசமுண்டென்பதை நான் நம்புகிறேன். நான் அதைக் கண்டிராவிட்டாலும் மற்றவர்கள் அங்கே சென்றிருப்பதால் அப்படியொரு நாடு உண்டென்று நான் நம்புகிறேன். நான் மரிப்பேனென்பது என் நம்பிக்கை. நான் இன்னும் மரிக்காவிட்டாலும் நான் அறிந்திருந்த பலர் இறந்துவிட்டதால், நானும் அதே நிலையை அடைவேனென்ற நிச்சயம் எனக்குண்டு. அநேகருடைய அறிக்கைகளும் அந்த உண்மையை நிலைநிறுத்துகின்றன. ஆகையால், தாங்கள் எவ்விதம் மன்னிக்கப்பட்டனர், எவ்விதம் தங்கள் குணத்தில் மாற்றம் கண்டனர் என்றெல்லாம் உங்களிடம் கூறுபவர்களுக்குச் செவி சாயுங்கள். நீங்கள் அக்காரியத்தைக் கவனிக்கையில், உங்களைப்போலவே இருந்த ஒருவர் இரட்சிக்கப்பட்டுள்ளாரென்பதை உணருவீர்கள். நீங்கள் திருடனெ;றால் கிறிஸ்துவின் இரத்தப் பொய்கையில் தன் பாவத்தைக் கழுவி ஒரு கள்ளன் களிப்புற்றானென்பதை அறிவீர்கள். துர்ப்பாக்கிய வசமாக, நீங்ள் ஒழுக்கத்தில் தவறியிருந்தால்,அதே குழியில் வீழ்ந்திருந்த பல ஆண்களும் பெண்களும் சுத்திகரிக்கப்பட்டு மாறுதலடைந்தார்கள் என்பதைக் காண்பீர்கள். நீங்கள் துயரத்தில் மூழ்கியிருந்து, தேவனுடைய மக்களிடம் சென்று உங்கள் சிக்கலை எடுத்துரைப்பின் உங்களோடு கூட பல பரிசுத்தவான்களும் அதே மனிநிலையில் இருந்தனரென்பது உங்களுக்கத் தெரியவரும். ஆண்டவர் அவர்களை மீட்டுக்கொண்டார் என்பதையும் அவர்கள் உங்களுக்கு ஆனந்தத்துடன் விவரிப்பார்கள். தேவனுடைய வார்த்தையைச் சோதித்து அது உண்மையென்று கண்டவர்கள் ஒவ்வொருவராய் உங்களிடம் வந்து கூறும்போது நீங்கள் விசுவாசிக்கும்படி தேவ ஆவியானவர் உங்களை நடத்துவார் . ஒரு தேவ ஊழியர் ஒருமுறை ஓர் ஆப்பிரிக்கனிடம் தண்ணீர் சில சமயங்களில் கடினமாய் உறைந்து விடுமென்றும், அதன்மேல் மனிதன் நடக்கமுயுமென்றும் கூறினார். அதற்கு ஆபிரிக்கன் மிஷனெரி தன்னிடம் கூறிய அநேக பெரிய காரியங்களைத் தான் நம்பினாலும் இதைத் தன்னால் நம்பமுடியாது என்றான். அவன் இங்கிலாந்துக்கு வந்தபோது, பனிகாலத்தில் ஒருநாள் நதியின் நீர் உறைந்துவிட்டிருந்ததைக் கண்டான். ஆனாலும் அதன்மேல் நடந்து போக அவன் தயங்கினான். அது ஆழமான ஆறு என்பது அவனுக்குத் தெரிந்திருந்ததால், தான் அதில் நடந்துசென்றால் மூழ்கிவிடக்கூடும் என்று அவன் அஞ்சினான். அன் நண்பரும் வேறு பலரும் அதன்மேல் நடந்துசெல்லும்வரை அவன் அங்கேசெல்ல எத்தனிக்கவில்லை. அதன் பின்னர், மற்றவர்கள் பத்திரமாகச் செல்வதைக் கண்ட பிறகு, அவர்கள் கூற்றை நம்பிச் சென்றான். அதே வண்ணமாய் நீங்களும் ஒருவேளை, மற்றவர்கள் தேவ ஆட்டுக்குட்டியில் விசுவாசம் வைத்திருப்பதை கண்டும், அவர்களுடைய மகிழ்வையும் சமாதானத்தையும் கவனித்தும் விசுவாசத்திற்கு மெதுவாய் நடத்தப்படலாம். நாம் விசுவாசித்ததற்குத் துணை செய்ய மற்றவர்களுடைய அனுபவமும் தேவனுடைய வழிகளில் ஒன்றாயிருக்கிறது. அது எவ்வாறாயினும் நீங்கள் ஒன்று விசுவாசிக்கவேண்டும். அல்லது மரிக்கவேண்டும். உங்களுக்கு அவரையன்றி வேறு நம்பிக்கையில்லை.
இன்னும் சற்று உகந்த திட்டம் எதுவென்றால், நீங்கள் விசுவாசிக்கவேண்டுமென்று எந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறதென்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். விசுவாசிப்பதற்கு இது வெகுவாக உதவும். இந்த அதிகாரம் என்னுடையதானால் நீங்கள் ஏற்க மறுக்கலாம். நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று தேவனுடைய அதிகாரத்தினாலேயே கட்டளையிடப்பட்டுள்ளது. நீங்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்று ஏவுவதால், உங்களைப் படைத்த கர்த்தாவுக்கு நீங்கள் கீழ்ப்படிய மறுக்கக்கூடாது. ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஒருவன் சுவிசேஷத்தை எத்தனையோ முறை கேட்டிருந்தும்கூட, தான் கிறிஸ்துவிடம் சேரமுடியாது என்ற திகிலால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய நல்ல முதலாளி ஒரு தினம், ‘வேலை முடிந்ததும் என் வீட்டிற்கு வா” என்ற ஒரு சீட்டில் எழுதி அவனுக்கு அனுப்பினார். மேற்பார்வையாளன் தன் முதலாளியின் வீட்டை அடைந்ததும், முதலாளி வெளிப்பட்டு, சற்றே காரமாக ‘என்னை வேண்டும் உனக்கு? ஏன் இப்போது என்னை வந்து தொந்தரவு செய்கிறாய்? வேலைதான் முடிந்துவிட்டதே, இங்கே ஏன் வந்தாய்?” என்று வினாவினான். ‘ஐயா வேலைமுடிந்ததும் உங்களிடம் வரவேண்டுமென்று நீங்கள் குறிப்பிட்டு அனுப்பியிருந்த சீட்டின்படி வந்தேன்” என்றான் தொழிலாளி. வெறும் சீட்டுக் கிடைத்ததாலா நீ வேலைமுடிந்ததும் இங்கே வந்திருக்கிறாய்? என்று கேட்டான் முதலாளி. ‘நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை நீங்கள் அழைத்து அனுப்பியதால்தான் நான் உரிமையோடு வந்திருக்கிறேன்” என்றான் அவன். உடனே அனுடைய முதலாளி ‘உள்ளே வா உனக்கு நான் வேறொரு செய்தியை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று கூறி இருக்கையி;ல் வீற்று ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” எஎன்று வாசித்தபின், ‘கிறிஸ்துவிடமிருந்து அப்படியொரு செய்தியை நீ பெற்றபின் அவரிடம் நீ வருவது தவறாயிருக்குமா? என்று கேட்டான். உடனே எல்லாவற்றையும் புரிந்துகொண்ட அப் பாவி, விசுவாசிப்பதற்கு நல்ல உத்திரவாதம் அதிகாரமும் இருப்பதை அறிந்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி ஆண்டவராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்தான். அதேவிதமாக அவரில் சார்ந்திருக்கும்படி ஆண்டரே உங்களை அழைப்பதால் நீங்கள் கிறிஸ்துவைச் சேர்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இதுவும் உங்களில் விசுவாசம் சுரக்கக் காரணமாயில்லையெனில், நீங்கள் எதை விசுவாசிக்கவேண்டுமென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆண்டவரான இயேசு கிறிஸ்து பாவிகளுக்காய், பாவிகளின் இடத்தில் பாவிகளுக்குப் பதிலாக வேதனை ஏற்றதால் அவர் தம்மில் நம்பிக்கை வைப்போர் அனைவரையும் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டியிருக்கிறது. மனிதன் அங்கீகரிக்க வேண்டுமென்று கூறப்பட்ட உண்மையிலேயே இதுதான் மிக ஆசீர்வாதமானது. மனித சிந்தைக்கு முன்பாகப் படைக்கப்பட்டவற்றிலேயே அதிக தகுதியுள்ளதும், அதிக ஆறுதலளிப்பதும் உன்னத தெய்வீக சத்தியமாயிருப்பதும் இதுவே. இதை அதிகமாய்த் தியானித்து, அதில் பொதிந்துள்ள கிருபையையும், அன்பையும் நீங்கள் ஆராயவேண்டுமென்று அறிவுறுத்துகிறேன். நான்கு சுவிசேஷங்களையும் பவுலின் நிரூபங்களையும் வாசித்து ஆராய்ந்து, நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுவதற்கேற்ற தகுதி அந்தச் செய்தியில் உண்டோ இல்லையோவெனக் காணுங்கள்.
அதுவும் சத்தியமில்லையென்றால், இயேசு கிறிஸ்துவின் தன்மையைக் குறித்து சிந்தனை புரியுங்கள். அவர் யார்? என்ன செய்தார்? எங்கு உள்ளார்? என்னவாயிருக்கிறாரென்று எண்ணிப் பாருங்கள். அவரை நீங்கள் எப்படி சந்தேகிக்கலாம்? என்றென்றும் சத்தியவந்தரான இயேசுவை நம்பாதிருத்தல் கொடுமை. அவநம்பிக்கைக்கு இலக்காகும்படி அவர் ஏதும் செய்யவில்லை. மாறாக, அவரை சார்ந்திருத்தல் இலகுவாயிருக்கவேண்டும். அவநம்பிக்கைமூலம் அவரை மறுபடியும் முட்கிரீடம் சூட்டுவதுபோலன்றும், மறுபடியும் அவரைத் துப்புவதுபோன்றும் இல்லையா? இதைக் காட்டிலும் மோசமான அவதூறை, போர்வீரர் அவர்மேல்காட்டியிருக்கக்கூடுமா? அவரை அவர்கள் ஓர் இரத்த சாட்சியாக்கினார்கள். ஆனால் நீங்களோ அதைவிட மோசமாக அவரை ஒரு பொய்யாராக்கிவிட்டீர்கள். ‘நான் எப்படி விசுவாசியாமலிருப்பது?” என்ற கேள்வியைக் கேட்டுப் பதில் கூறுங்கள்.
இந்தத் தர்க்கங்களால் பயனில்லை என்றால், உங்களில் ஏதோ கோளாறு இருக்கவேண்டும். ஆகவே உங்களையே தேவனிடம் தத்தம் செய்யுங்கள் என்பதுதான் என்னுடைய இறுதி வார்த்தை! இந்த அவநம்பிக்கைக்குக் காரணமாகப் பெருமையோ அல்லது தவறான அபிப்பிராயமோ இருக்கும். தேவ ஆவியானவர் உங்கள் குரோதத்தை அகற்றிவிட்டு நீங்கள் உங்களை அவருக்கென்று தத்தம் செய்ய உதவுவாராக. நீங்கள் பெருமை மிகுந்த எதிரியாயிருப்பதால்தால்தான் உங்கள் தேவனை நம்பாதிருக்கிறீர்கள். உங்கள் எதிர்ப்பை விட்டுவிடுங்கள். உங்கள் ஆயுதங்களை விட்டெறியுங்கள். விவேகத்துடன் ஒப்புவித்து உங்கள் வேந்தரிடம் சரணடையுங்கள். நம்பிக்கையின்மையால் துயர்மேலிட ஓர் ஆத்துமா தன் கைகளை உயர்த்தியதும், ‘;ஆண்டவரே, என்னை அர்ப்பணிக்கிறேன்” என்று கதறியதும் தாமதமின்றி விசுவாசித்தல் அதற்கு இலகுவாகிவிடும். தேவனோடு உங்களுக்கு இன்னும் ஒரு பூசல் இருப்பதாலும், உங்கள் சுய சித்தத்தின்படி உங்கள் சொந்த வழியில் செல்ல நீங்கள் உறுதி கொண்டிருப்பதாலுமே உங்களால் விசுவாசிக்க முடியவில்லை. ‘ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார் கிறிஸ்து. சுய பெருமை அவிசுவாசத்தைத் தோற்றுவிக்கும். மனிதனே உன்னை தேவனுக்கு ஒப்புவித்துவிட்டால், உன் இரட்சகரில் இனிய விசுவாசம் கொள்வாய். பரிசுத்த ஆவியானவர் உங்களில் இரகசியமாகவும், ஆனால் பலன் ஈனும் வகையிலும் இப்போது கிரியை புரிந்து, இவ்வினாடியே நீங்கள் ஆண்டவராகிய இயேசுவில் விசுவாசம் கொள்ளச் செய்வராக! ஆமென்.










