- மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை
பாவமன்னிப்போடுங்கூட மனந்திரும்புதல் நெருங்கிய தொடர்புள்ளதென்பது சமீபத்தில் நாம் வாசித்த வசனத்திலிருந்து தெரிகிறது. அப்.5:31 ல் ‘மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக” இயேசு உயர்த்தப்பட்டாரென்று நாம் வாசிக்கிறோம். இந்த இரண்டு ஆசீர்வாதங்களும், ஒரு காலத்தில் சிலுவையுடன் சேர்த்து ஆணிகளால் அறையப்பட்டவையும், தற்போது மகிமையில் உயர்த்தப்பட்டிருப்பவையுமான பரிசுத்த கரங்களினின்று வருகின்றன. தேவனுடைய நித்திய நியமத்தின்படி மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் இணைந்துள்ளன. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்.
இக்காரியத்தைக் குறித்து நீங்கள் சற்றே சிந்தித்தால், மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்றாய் நிகழவேண்டுமென்பதை உணருவீர்கள். மனஸ்தாபமுறாத பாவிக்கு பாவமன்னிப்பு அருளமுடியாது. அப்படிச் செய்தால், அது அவனுடைய தீய வழிகளில் அவனை உறுதிப்படுத்தி, பாவத்தைப் பெரிதுபடுத்தாமலிருக்க அவனுக்குப் போதிப்பது போலாகும். நீ பாவத்தை விரும்பி, அதில் திளைத்து, வர வர மோசமாகிறாய். ஆயினும், பரவாயில்லை, நான் உன்னை மன்னிக்கிறேன் என்று ஆண்டவர் கூறுவாராகில், அது பாவத்துக்குப் பயங்கரமான அனுமதிச் சீட்டு வழங்குவது போலிருக்கும். அதனால் சமுதாய ஒழுங்கின் அஸ்திபாரங்கள் அகற்றப்பட்டு, தீமை தலைதூக்கி நிற்கும். மனந்திரும்புதலையும் மன்னிப்பையும் பிரித்து, பாவத்தைப் பொருட்படுத்தாது பாவி முன்போல் தீமையில் திளைக்கும்படி விட்டுவிட்டால் எத்தனை விபரீதங்கள் நிகழுமென்று கூறமுடியாது. நாம் தேவனுடைய பரிசுத்தத் தன்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் நாம் மனந்திருப்பாது நம் பாவத்தில் மூழ்கியிருந்தால், நமக்கு மன்னிப்பு கிட்டாமல், நம் பிடிவாதத்தின் விளைவையே அநுபவிப்போம். நாம் நம் பாவங்களை விட்டொழிந்து, அவற்றை அறிக்கையிட்டு, கிறிஸ்து இயேசுவில் நமக்கு அருளப்பட்டிருக்கும் கிருபையை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டோமானால், நம் பாவங்களை நமக்கு மன்னிக்கவும் , நம்மை நம் அக்கிரமங்களினின்று சுத்திகரிக்கவும் தேவன் உண்மையும் நீதியுமுள்ளவருமாயிருக்கிறாரென்று தேவனுடைய அளவற்ற இரக்கத்தின்படி நமக்கு வாக்கருளப்பட்டுள்ளது. ஆனால்; தேவன் நிலைத்திருக்கும்வரை, தங்கள் தீய வழிகளை விடாமல் பற்றியிருந்து, தங்கள் பிழைகளை உணர மறுக்கிறவர்களுக்கு இரக்கம் உண்டென்று வாக்குத்தத்தமே இருக்காது. எந்த எதிரியும், வெளிப்படையாக எதிர்ப்பைக் காண்பித்துக் கொண்டே தன் துரோகத்துக்கு மன்னனிடமிருந்து மன்னிப்பைப் பெற எதிர்பார்க்கமுடியாது. நாமோ நம் பாவங்களை ஒதுக்கிவிட மறுக்கும்போது, சர்வலோக நியாயாதிபதி நம் பாவங்களை அகற்றிவிடுவாரென்று மடத்தனமாக யாரும் நினைக்கமுடியாது.
அதுமட்டுமல்லாது, தெய்வீக இரக்கம் முழுமைப்பெற, மனந்திரும்புதலும் மன்னிப்பும் சேர்ந்திருக்க வேண்டும். பாவத்தை மன்னித்தாலும், பாவத்திலேயே பாவி நிலைத்திருக்கும்படி அனுமதிக்கும் இரக்கமானது, அளவில் குறைந்ததும் ஆழமில்லாததுமாய் இருக்கும். அது சம நிலையற்றதாய், ஒரு நொண்டிக்காலும், ஒரு சூப்பின கையும் கொண்ட ஊனமுள்ள இரக்கமாய் இருக்கும் பாவபழியினின்று சுத்திகரிக்குப்படுதல், பாவத்தின் வல்லமையினின்று மீட்கப்படல் இவை இரண்டில் எது மேலான உரிமையென்று நீங்கள் கருதுகிறீர்கள்? இணையற்ற இந்த இரண்டு இரக்கங்களையும் தராசு தட்டுகளில் நிறுத்துக் காண நான் எத்தனிக்கமாட்டேன். இயேசுவின் நிலையேறப்பெற்ற இரத்தத்தினாலன்றி இவை இரண்டும் நமக்குக் கிடைத்திருக்கமாட்டா. எனினும், இவற்றை ஒப்பிட்டுக் காணவேண்டுமெனில், பாவத்தின் ஆதிக்கத்தினின்று மீட்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதல் இவ்விரண்டிலும் பின்னதே பெரியதென்று கணிக்கலாம். மன்னிக்கப்படுதல் பெரும் தயவு. நமது ஸ்தோத்திர சங்கீதத்தில், ‘அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து” என்று மன்னிப்புக்கு முதலிடம் அளிக்கிறோம். மன்னிப்பைப் பெற்றபின், மறுபடியும் பாவத்தை விரும்பி, அக்கிரமத்தில் ஈடுபட்டு, தீமையில் உழன்றிருக்க விரும்பி, அனுமதிக்கப்பட்டால், அத்தகைய மன்னிப்பால் பெறும் பயன் யாது? நாளடைவில் நம்மை நிச்சயமாக அது அழித்துவிடாதா? கழுவப்பட்டாலும் சேற்றில் அமிழ்ந்திருத்தலும், சுகம்பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குஷ்டரோகத்தின் வெண்மை நெற்றியில் தோன்றுதலும் இரக்கத்தை அவமதித்தல் போல் இருக்கும். ஒரு மனிதனைச் சவக்குழியினின்று எடுத்துவந்தும் அவனை உயிரற்றவனாகவே விட்டு வைத்தால் லாபமென்ன? குருடனானகவே இருக்கும் ஒருவன் ஒளிக்குள் நடத்துவதால் என்ன பலனுண்டாகும்? நமது அக்கிரமங்களை மன்னிப்பவர் நம் நோய்கயையும் குணமாக்குவதால் நாம் தேவனைத் துதிக்கிறோம். கடந்த காலக் கறைகளினின்று நம்மைக் கழுவுபவர், நிகழ்கால ஆபாச வழிகளுக்கு மேலாக நம்மைத் தூக்கிவிடுவதுடன், வருங்காலத்தில் நாம் விழுந்துவிடாதபடி நம்மைப் பாதுகாக்கிறார். மனந்திரும்புதலும் மன்னிப்பும் பிரிக்கப்படக்கூடாதவை என்பதால், நாம் இரண்டையும் களிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடன்படிக்கை வழியில் வந்த சொத்து முழுவதாகவும், பங்கீடு செய்யக்கூடாததாகவும் இருப்பதால், அதைப் பகுதிகளாகப் பிரிக்கக்கூடாது. கிருபையின் கிரியைதனைப் பிரித்தல் உயிரோடிருக்கும் குழந்தையை இரு துண்டுகளாக்குவது போன்றிருத்தலால், அதை அனுபதிப்போருக்கு அதில் அக்கறை இல்லையென்றே கொள்ளவேண்டும்.
ஆண்டவரை நாடும் நீங்கள், இந்த இரக்கங்களில் ஒன்றை மட்டும் பெற்றுத் திருப்தியுறுவீர்களாவென்று நான் கேட்கவிழைகிறேன். தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து, பின்னர் நீங்கள் முன்பு இருந்ததுபோலவே உலகக் காரியங்களிலும் துன்மார்க்கு நெறியிலும் ஈடுபட்டிருக்க உங்களை அவர் விட்டுவிட்டால், என் வாசகரே! அது உங்களுக்கு நிம்மதி அளிக்குமா? இல்லை, அளிக்காது! உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியானது பாவத்தின் விளைவுகளான தண்டனைக்கு அஞ்சுவதைவிட மிக அதிகமாய்ப் பாவத்துக்கு அஞ்சும் உங்கள் உள்ளத்தின் ஓலம், ‘ஆக்கினையினின்று என்னை விடுவிப்பார் யார்? ” என்றில்லாமல், ‘நான் எவ்வளவு கேவலமான நிலையிலிருக்கிறேன்! மரணத்துக்கேதுவான இந்த சரீரத்தினின்று என்னை யார் தப்புவிப்பார்? நான் சோதனைக்குட்படாமல் வாழவும், தேவன் பரிசுத்தராயுள்ளதுபோல் நானும் பரிசுத்தமாயிருக்கவும் எனக்கு உதவுவார் யார்?” என்றிருக்கும். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு இவற்றின் ஐக்கியம் மேலான வாஞ்சை என்பதுடன் ஒத்துப்போவதாலும், இரட்சிப்பு பூரணமாய் நிறைவேற அது தேவைப்படுவதாலும், பரிசுத்தத் தன்மையினிமித்தம் அது அவ்வாறே ஒன்றுபட்டிருக்கிறதென்பதில் நிச்சயமாயிருங்கள்.
மனந்திரும்புதலும் மன்னிப்பும் சகல விசுவாசிகளின் அனுபவத்திலும் ஒன்றூய்ப் பின்னப்பட்டுள்ளன. மனந்திரும்புதலில் நம்பிக்கை கொண்டு, பாசாங்கின்றி தன் பாவத்துக்காக மனம் வருந்திய எவருக்கும் மன்னிப்பு அருளப்படாதிருந்ததில்லை. அதே சமயத்தில் தன் பாவத்தினிமித்தம் வருத்தமுறாத யாருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டதில்லை. வானத்தின்கீழ் எங்கும் இதயம் மனந்திரும்புதலுக்கு நடத்தப்பட்டு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தாலன்றி எப்பாவமும் கழுவப்பட்டதில்லை. கழுவப்படுகிறதில்லை. கழுவப்புடாது என்று நான் தயங்காது கூறுவேன். பாவத்தின்பால் வெறுப்பும், மன்னிப்பும் பெற்ற உணர்வும் ஆத்துமாவில் ஒரே தருணத்தில் வந்து, நம் வாழ்நாள் முழுவதும் நம்மில் நிலைத்திருக்கின்றன.
இவ்விரண்டும் செயல்பட்டு ஒன்றையொன்று பிரதிபலிக்கவும் செய்கின்றன. ஆகையால் மன்னிக்கப்பட்டவன் மனந்திரும்புகிறான். அவ்விதமே மனந்திருப்புகிறவனும் திட்டமாக மன்னிக்கப்படுகிறான். மன்னிப்பு மனந்திரும்புதலுக்கு வழி நடத்துகிறதென்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். நாம் மன்னிக்கப்பட்டோமென்ற நிச்சயம் நமக்குண்டானதும், நாம் அக்கிரமத்தை அருவருக்கிறோம். இயேசுவின் இரத்தம் நம்மை உறைந்த பனியைவிட வெண்மையாகக் கழுவிவிட்டதென்ற உறுதி, ஐயத்திற்கு இடமின்றி நமக்கு ஏற்படுவம் விதத்தில், விசுவாசமானது பூரண நிச்சயத்தில் பெருகும். அப்பொழுது மனந்திரும்புதல் உச்சநிலையை அடைகிறது என மனந்திரும்புதல், நாள் கணக்கில் அல்லது வாரக்கணக்கில் ஏற்படுவதன்று. எவ்வளவு விரைவில் செய்து முடித்துவிடக்கூடுமோ அவ்வளவு அவசரமாக நேர்ந்து கொள்ளக்கூடிய தற்காலிக நோன்புமல்ல அது! இதைக்குறித்துத் தவறாக எண்ணிவிடாதீர்கள். விசுவாசத்தைப்போல் இதுவும் ஜீவகால முழுவதும் எடுக்கக்கூடிய கிருபையாகும். தேவனுடைய சிறுபிள்ளைகள் மனந்திரும்புவதுபோலவே, வாலிபரும், பெற்றோரும் மனந்திரும்புகின்றனர். மனந்திரும்புதலானது விசுவாசத்தின் இணைபிரியாத தோழன். பார்வையைக் கொண்டல்ல, விசுவாசத்தைக் கொண்டு நாம் நடக்கும்போதெல்லாம், விசுவாசத்தின் வழிகளில் மனந்திரும்புதலின் கண்ணீர் மின்னும். இயேசுவின் பேரிலுள்ள விசுவாசத்தினின்று தோன்றாத மனந்திரும்புதல் மெய்யானதன்று. அதே வண்ணம் மனந்திரும்புதலுக்கு ஏவப்படாத விசுவாசம் கிறிஸ்துவில் கொண்டிருக்கும் மெய் நம்பிக்கையாகாது. இரட்டையர் போல், விசுவாசமும் மனந்திரும்புதலும் இன்றியமையாத இணைப்பைப் பெற்றுள்ளன. கிறிஸ்துவின் மன்னிக்கும் அன்பில் நாம் எந்த அளவுக்கு விசுவாசம் வைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் மனஸ்தாபமுறுகிறோம். எந்த விகிதத்துக்கு நாம் பாவத்தினிமித்தம் மனந்திரும்பி, தீமையை வெறுக்கிறோமோ,அந்த விகிதத்தில் உயர்த்தப்பட்டிருக்கும் கிறிஸ்து அருளும் பூரண சுத்திகரிப்பில் நாம் களிகூறுகிறோம். மனந்திரும்புதலை நீங்கள் உணர்ந்தால்தான் மன்னிப்பை மதிப்பீர்கள். அவ்விதமாகவே, நீங்கள் மன்னிக்கப்படாயிற்று என்பதை நீங்கள் உணருமட்டும் மனந்திரும்புதல் அரைகுறையாகத்தான் இருக்கும். இது விசித்திரமாய்த் தோன்றினும், ஒவ்வொரு கிருபை நிறைந்த வாழ்விலும், மனந்திரும்புதலின் கசப்பும், மன்னிப்பின் இனிப்பும் இரண்டறக் கலந்து ஈடில்லா இன்பத்தைக் கொணருகிறதென்பது மெய்தான்.
உடன்படிக்கை ஈவுகளான இவையிரண்டு ஒன்றை மற்றொன்று சார்ந்திருப்பதைக் காட்டுகின்றன. நான் மனந்திரும்புகிறேனென்பதை அறிந்தால், மன்னிக்குப்படுகிறேனென்பது எனக்குத் தெரியும். என் முன்னைய பாவநெறியை நான் விட்டு விலகுகிறேனென்பது எனக்குத் தெரிந்தாலல்லாது, நான் மன்னிக்கப்பட்டேனென்பது எனக்கு எவ்விதம் தெரியவரும்? விசுவாசியாயிருப்பதற்கு, பாவத்துக்குக்கு வருந்துபவராயிருக்க வேண்டும். ஒரு சக்கரத்தின் இரண்டு ஆரைக்கால்கள் போலவும், ஒரே கலப்பையின் இரு கைப்பிடிகள் போலவும், விசுவாசமும் மனந்திரும்புதலும் இருக்கின்றன. பாவத்திற்காகவும் பாவத்தினின்றும் நொறுங்கிய உள்ளமென்று மனந்திரும்புதலுக்கு நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது. திரும்புதல், மறுபடியும் வருதல் என்றும் அதைக் குறிப்பிடலாம். அடியிலிருந்து மேல் வரை முற்றுமாக மாறுபட்டு அந்த மனமாற்றம் கடந்த காரியங்களுக்காகத் துயரப்பட்டு, வருங்காலத் திருத்தத்திற்காக உறுதி பூண்டிருப்பதாகும்.
தேவன் மன்னிப்பை அருளாமல், ஓர் இருதயம் பாவத்திற்காகவும் பாவத்தினின்றும் நொருங்கும்படி செய்வதில்லையாகையால், நாம் மன்னிக்கப்டுகிறோமென்பது திண்ணம். நாம் மன்னிப்பை இயேசுவின் இரத்தத்தால் பெற்று, விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டு, நமது ஆண்டவரான கிறிஸ்துவின்மூலம் தேவனோடு சமாதானமாயிருக்கிறோம் என்றால், நமது மனந்திரும்புதலும் விசுவாசமும் நேர்மையானவையே என்பதை நாம் அறியலாம்.
நீங்கள் பெற்ற மன்னிப்பின் காரணம் உங்கள் மனந்திரும்புதலேயென்று நீங்கள் பாவிக்காமல், இரண்டும் உடன்தோழர்களென்று கருதுங்கள். நமது ஆண்டவர் இயேசுவின் கிருபையை நீங்கள் கண்டு, உங்கள் பாவத்தை அகற்ற அவர் சித்தமாயுள்ளாரென்பதை நீங்கள் அறியுமளவும் மனந்திரும்ப முடியாதென்பதை உணருங்கள். இந்த ஆசீர்வாதமான காரியங்களை அவற்றின் இடங்களில் நிறுத்தி, அவை ஒன்றோடொன்று எவ்விதம் சம்பந்தப்பட்டுள்ளன என்பதைக் காணுங்கள். ஒரு இரட்சிப்பின் அநுபவத்தில் இவை யாகீனும் போவாசுமாய் இருக்கின்றன. அதாவது, பரிசுத்தமான ஸ்தலத்துக்குக் கம்பீரமான நுழைவாயிலாக இருக்கும்படி, சாலோமோன் நிறுவிய தேவாலயத்தின்முன் நாட்டிவைக்கப்பட்ட இருபெரும் தூண்களை அவை ஒத்திருக்கின்றன. மனந்திரும்புதல், மன்னிப்பு எனும் இரு தூண்களிடையில் ஒருவன் கடந்துவந்தாலன்றி, அவன் தேவனைச் சரியாக அணுகமுடியாது. மனந்திரும்புதலின் கண்ணீர்த் துளிகளில் பூரண மன்னிப்பெனும் ஒளி வீசும்போது, உங்கள் உள்ளத்தில் உடன்படிக்கையின் கிருபை என்னும் வானவில் தன்முழு எழிலோடு சோபிக்க்கிறது. பாவத்தினின்று மனந்திரும்புதல், தெய்வீகமன்னிப்பில் விசுவாசம், இவையிரண்டும் மெய்யான மனமாற்றம் எனும் துணியின் நீட்டுப்போக்கிலுள்ள இழையும் குறுக்கிழையுமாகும். இந்த அடையாளங்களின் மூலம் ஒரு விசுவாசியை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
மறுபடியும் நாம் தியானித்துக்கொண்டிருந்த வேதவாக்கியத்துக்குத் திரும்புவோம். மன்னிப்பும் மனந்திரும்புதலும் ஒரே ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஒரே இரட்சகரால் வழங்கப்படுகின்றன. ஆண்டவர் இயேசு இரண்டையும் ஒரேவிதமான மக்களுக்கு தம் மகிமையில் வழங்குகிறார். மன்னிப்பையோ மனந்திரும்புதலையோ நீங்கள் பிறிதோர் இடத்தில் காணமுடியாது. இரண்டையும் தயாராய் வைத்திருக்கும் இயேசுபிரான், அவற்றை இப்போதே அருள ஆயத்தமாயிருப்பதுடன், அவற்றைத் தம் கரங்களினின்று பெறவிழைவோருக்கு இலவசமாய் வழங்கச் சித்தமாயுள்ளார். நம் இரட்சிப்புக்கு அவசியமான யாவையும் இயேசு அளிக்கிறாரென்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. இரக்கத்தை நாடும் யாவரும் இதை நினைவில் வைக்கவேண்டுமென்பதும் மிக முக்கியம். விசுவாசம் சார்ந்திருக்கும் இரட்சகர் எவ்வாறு தேவனுடைய ஈவாய் உள்ளாரோ, அதேவிதமாக, விசுவாசமும் தேவனுடைய வரமாய் உள்ளது. பாவத்தை அகற்றக் காரணமான ஒப்புரவாகுதலைச் செய்வது எவ்விதம் கிருபையின் கிரிiயாக உள்ளதோ, அதே வண்ணம் பாவத்தினின்றுமனந்திரும்புதலும் கிருபையின் செயலாயிருக்கிறது. முதலிலிருந்து முடிவுரை, இரட்சிப்பு கிருபையினாலேயே நிறைவேறுகிறது. தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். மனஸ்தாபமுறுவது பரிசுத்த ஆவியானவரல்லர். அவர் மனந்திரும்பும்படி அவர் ஏதும் புரியவில்லை. நாமே நம் சொந்த பாவங்களினிமித்தம் மனம் வருந்தினாலன்றி, அதன் பிடியினின்று நாம் மீட்கப்படோம். மனந்திரும்புகிறவர் ஆண்டவரான கிறிஸ்துவும் அல்லர். அவர் எதைக்குறித்து மனஸ்தாபமுறவேண்டும்? நம்மில் எந்த எதிர்ப்புமின்றி நாமே சுயமாக மனந்திரும்புகிறோம். பாவத்தினின்று மனந்திரும்புதல் எனும் இந்த பாக்கியமான செயலுக்காக, சித்தம், ஆசைகள், உணர்ச்சிகள் யாவும் மனப்பூர்வமாய் இணைந்து வேலை செய்கிறன. இருந்தாலும், இந்த நம் சொந்த செயல்கள் அனைத்துக்கும் பின்னால், இரகசியமான பரிசுத்த தூண்டுதல் ஒன்று இருந்து, நம் நெஞ்சு நொறுங்கவும், ஒரு முழுமையான மாறுதல் ஏற்படவும் காரணமாக அமைகிறது. பாவத்தை நாம் இன்தென்று கண்டு அருவருக்கத்தக்கதாய் தேவ ஆவியானவர் நமக்கு ஒளி தருகிறார். தேவ ஆவியானவர் நம்மைப் பரிசுத்தத்தன்மையின் புறமாகவும் திருப்பி, நாம் அதை முழு மனதோடே உயர்வாய் மதிக்கவும் நேசிக்கவும், விரும்பவும் செய்கிறார். படிப்படியாய் நாம் புனிதத் தன்மைக்கு நடத்தப்பட ஒரு தூண்டும் விரையாகவும் நமக்கு அவர் விளங்குகிறார். தேவனுக்கு மகிழ்வூட்டும் வகையில் நாம் முடிவெடுக்கவும் செயலாற்றவும் தேவ ஆவியானவர் நம்மில் கிரியை புரிகிறார். தம் கிருபையின் ஐசுவரியத்தின்படியே இரட்டை ஆசீர்வாதமான மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் இலவசமாய் நமக்கு வழங்க வல்ல இயேசு பெருமானிடம் நம்மை வழிநடத்துமாறு, அந்த நல்ல ஆவியானவரிடம் நாம் உடனே நம்மை அர்ப்பணிப்போமாக.
‘கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8)











