- பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்
தங்கள் வருங்காலத்தைக் குறித்தத் திகிலோடிருந்தக் கொரிந்து பட்டண சகோதரருக்காகப் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை பெரும் ஆறுதலாயிருந்தது. அந்தச் சகோதரர் முடிவு பரியந்தம் நிலைநிறுத்தப்படுவார்களென்று பவுல் நம்பியதேன்?
அவன் அதற்குரிய காரணங்களை வெளியிடுதலை நீங்கள் கவனிக்கவேண்டும். அவையாவன:
‘தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” (1.கொரி.1:9).
மனிதனின் வாய்மை வெறும் பகட்டாயிருப்பதால், அதை நம்பமுடியாது. உங்களுக்குத் தலைமை தாங்கி உங்களை வழிநடத்த உண்மையுள்ள ஊழியர் உங்களுக்கு இருப்பதால், நீங்குள் காக்கப்படுவீர்களென்று நம்புகிறேன் என்று அவன் கூறவில்லை. நாம் மக்களால் காக்கப்படுவதென்றால், அது தவறான பாதுகாப்பாயிருக்கும். ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவன் குறிப்பிடுகிறான். நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டால், அதற்கு காரணம் தேவன் உண்மையுள்ளவராயிருப்பதுதான். நமது உடன்படிக்கை தேவனின் உண்மையையொட்டி, நமது இரட்சிப்பின் முழுச்சுமையும் சார்ந்திருக்கிறது. தேவனுடைய இந்த மகிமையான பண்பே இரட்சிப்புக்கு ஆதாரம். காற்றைப்போல் மாறும் தன்மையுடனும், சிலந்தி வலையைப்போல் பெலனற்றும், நீரைப்போல் கனமற்றும் நாமிருக்கிறோம். நமது இயல்பான சுபாவங்கள் அல்லது ஆத்மீகத் திறமைகள் பேரிலும் நாம் சார்ந்திருக்கக் கூடாதெனினும், தேவன் என்றும் உண்மையுள்ளவர். மாறுதல் தன்மையோ, வாக்கினின்று பிறழும் சாயையோ அவரிடமில்லை. தம் நோக்கத்திலும் அவர் உண்மையுள்ளவர். ஒரு பணியைத் துவக்கியபின் அதை அவர் முடிக்காமல் விடுவதில்லை. தாம் கொண்டுள்ள சம்பந்தங்களில் அவர் வாய்மை நிறைந்தவர். தந்தையாக உள்ள அவர், தம் பிள்ளைகளைக் கைவிடார். நண்பராக உள்ள அவர் தம் ஜனத்தை மறுதலியார். படைப்பின் கர்த்தாவான அவர் வாக்குத் தவறாதவராதலின் எந்த வாக்குறுதியும், எந்த ஒரு விசுவாசிக்கும் கிட்டும்படி கவனமாயிருப்பார். கிறிஸ்து இயேசுவில் நம்மோடுகூட அவர் செய்த உடன்படிக்கையில் அவர் உண்மையாயிருப்பதுடன், இயேசுவின் பலியான இரத்தத்தின்மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தம் குமாரன் சிந்திய விலைமதிப்பற்ற இரத்தம் விருதாவாயப்போக அனுமதியார். தாம் நித்திய ஜீவனை அருளுவதாய் வாக்களித்த தம் ஜனத்திடம் அவர் வாய்மையுள்ளவராயிருப்பதுடன், அவர்களிடமிருந்து விலகமாட்டார்.
தேவனுடைய இந்த உண்மையான தன்மையே இறுதி முயற்சிக்கடுத்த நமது நம்பிக்கையின் அடிக்கல்லாகவும் மூலைக்கல்லாகவும் உள்ளது. தேவன் கிருபையை விடாது அருளுவதால், பரிசுத்தவான்கள் தூய்மையில் மனவுறுதி கொண்டிருக்கின்றனர். தம் மக்களை அவர் தொடர்ந்து காக்கிறராகையால். அவர்கள் அவர் கற்பனைகளை என்றும் காத்திட முயற்சிக்கின்றனர். நிலையாய் நிற்பதற்கு அது உறுதியான தரையாயிருப்பது மட்டுமல்ல, கிருபைக்கு இலக்கானோர் என்ற இந்நூலின் சட்ட வாக்கியத்துக்கும் இது மிகப் பொருத்தமாயுள்ளது. இவ்வாறாக இலவச தயவு, எல்லையற்ற இரக்கம் என்னும் மணிகளே இரட்சிப்பின் விடிகாலையைத் தம் ஒலியுடன் அறிவிக்கின்றன. அதே இனிய மணிகள் கிருபையின் நாள் முழுவதும் தொனிக்கின்றன. நாம் முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்தப்படுவோம். இறுதியில் மாசற்றோராய்க் காணப்படுவோம், எனினும் நம்பிக்கைக்கான காரணங்கள் நம் தேவனிடமே இருக்கிறதென்பது தெளிவு. ஆனால் அவரில் இக்காரணங்கள் ஏராளமாயுள்ளன.
தேவன் என்ன செய்திருக்கிறாரோ, அதில் அவை அமைந்திருக்கின்றன. தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நம்மை அழைத்துள்ளாரா? அவ்வாறாயின், அந்த அழைப்பை மாற்றமுடியாது. ஏனெனில், தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைளே. பலன் ஈனும் தமது கிருபையின் அழைப்பிலிருந்து கர்த்தர் ஒருபோதும் திரும்புவதில்லை. எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இது தெய்வீக நடவடிக்கையின் மாறாத விதி. அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றதோர் பொதுவான அழைப்பு உண்டென்றாலும் இ;போது நம் சிந்தனைக்கரிய அழைப்பு, விசேஷித்த அன்பைக் குறிப்பதாயும் எதைப் பெற அழைப்புப் பெற்றோமோ அதைச் சுதந்தரித்துக் கொள்ளும் அவசியமுடையதாயும் இருப்பதால் முன்னைய அழைப்பினின்று இது வேறுபட்டுள்ளது. ஆபிரகாமின் சந்ததிக்கு கர்த்தர் நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து நீ என் தாசன். நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்” என்று கூறியதுபோல் இந்த அழைப்பைப் பெறுகிறவர்களுக்கும் ஆண்டவர் கூறுகிறார்.
தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை தேவன் அழைத்திருக்கிறபடியால், அவர் செயலிலிருந்து, நாம் காக்கப்படுதலுக்கும், நமது வருங்கால மேன்மைக்கும் வலுவான காரணங்களை நாம் காணமுடிகிறது. இயேசு கிறிஸ்துவுடன் பங்காளியாயிருத்தல் என்பது அதன் பொருளாகையால், இதைக் குறித்து நாம் கவனமாய்ப் பரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் உண்மையாகவே தேவ கிருபையால் அழைக்கப்பட்டிருப்பின், எல்லாக் காரியங்களிலும் நீங்கள் கிறிஸ்துவுடன் சம உரிமை கொள்ளுமாறு அவருடைய ஐக்கியத்தில் இணைந்துவிட்டீர்கள். தேவனுடைய பார்வையில் நீங்களும் கிறிஸ்துவும் இனி ஒன்றாய்த் தெரிவீர்கள். ஆண்டவர் இயேசு தம் சொந்த சரீரத்தில் உங்கள் பாவங்களைச் சுமந்து, சிலுவையில் தொங்கி, உங்கள் நிமித்தம் சாபத்துக்குட்பட்டார். இதே சமயத்தில் நீங்கள் அவரில் நீதிமான்களாகும்படி, உங்கள் நீதியாக அவர் மாறினார். நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து உங்களுடையவர். தன் வழிவந்தவர்களுக்காக ஆதாம் குறிப்பிடப்படுவதுபோல், அவரில் நிலைத்திருப்பவர்களுக்காக இயேசு பிரதிநிதியாயுள்ளார். கணவனும் மனைவியும் ஒன்றாயிருப்பதுபோல், தம்முடன் விசுவாசத்தால் இணைக்கப்பட்டவர்களோடு இயேசுவும் ஒன்றாயிருக்கிறார். அது பிரிக்கப்பட முடியாத ஓர் இணைப்பு.
இதைத் தவிர கிறிஸ்துவின் சரீரத்தில் விசுவாசிகள் உறுப்புகளாயிருப்பதால், அவர்கள் அவருடன் அன்பானதும் ஜீவனுள்ளதும் நீடித்திருப்பதுமான ஐக்கியத்தில் கட்டுண்டிருக்கின்றனர். இந்த இணைப்புக்குள் இந்த ஐக்கியத்துக்குள், இந்த பங்காளி உரிமைக்குள் தேவன் நம்மை அழைத்திருக்கும் உண்மையினிமித்தம், நம்மை அவர் முடிவுபரியந்தம் திடப்படுத்துவாரென்பதற்குரிய வாக்கையும் அடையாளத்தையும் அவர் நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் கிறிஸ்துவினின்று வேறாக எடுத்துக்கொள்ளப்பட்டால், பரிதாபத்திற்கும் அழிவுக்கும் உரியவர்களாய் விரைவில் உருமாறி, நாசத்துக்கு எடுத்துச் செல்லப்படுவோம். ஆனால் கிறிஸ்துவில் ஒன்றாய்ப் பிணைபட்டிருக்கையில் அவரது தன்மையில் நாம் பங்குகொண்டு, அவரின் இறவா ஜீவனைப் பெற்றவர்களாகிறோம். நமது பங்கு ஆண்டவருடைய பங்குடன் சேர்க்கப்பட்டிருப்பதால், அவரை அழிக்க முடிந்தாலன்றி, நாம் அழிவைக் காணவியலாது.
தேவகுமாரனுடன் நீங்குள் பங்காளிகளாயிருப்பதற்குப் பெற்றிருக்கும் உங்கள் அழைப்பில்தான் உங்கள் சகல நம்பிக்கையும் இருப்பதால், இதைப்பற்றி அதிகமாகச் சிந்தியுங்கள். நீங்களும் இயேசுவும் ஒரே நிலையில் ஒன்றாயிருப்பதால் அவர் செல்வந்தராயிருக்கையில், நீங்கள் வறியராயிருக்க முடியாது. வானத்துக்கும் பூமிக்கும் உரியவரான அவரோடுகூட நீங்களும் சம உரிமையாளராயிருப்பதால், தேவையினிமித்தம் நீங்கள் ஒருபோதும் தாக்குறமாட்டீர்கள். தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் அச்செயல் மூலம் உங்களை நிச்சயமான பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.
தேவனுடைய மாற்றமுடியாத கிரியை மூலம் நீங்கள் மெய்யாகவே இயேசுவுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவர் மறுபடியும் வரும் நாள் வரை, முடிவு பரியந்தம், நீங்கள் ஸ்திரப்படுத்தப்படுவீர்கள்.
நமது உண்மையுள்ள தேவன் விடாமல் பெருக்கெடுக்கும் களிப்பு ஊற்றாயும், தேவ குமாரனுடன் நாம் கொண்டுள்ள ஐக்கியம் பிரவாகிக்கும் மகிழ்வு நதியாயும் இருப்பதால் இந்த மேலான காரியங்கள் உணர்ந்திருக்கும் நாம் ஊக்கம் குன்றாமல், அப்போஸ்தலனோடு சேர்ந்து ‘கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?” என்று பெருமிதக் குரலெழுப்புவோமாக.











