- பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம்
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்பிக்கையோடிருப்பின் நீதிமானாகவியலும் என்னும் முறையைப் புரிந்துகொண்டிருப்பினும், பாவத்தை விட்டுவிடமாட்டாது அல்லலுறுவோருக்கு இத்தருணத்தில் ஒரு பார்த்தை கூற ஆசிக்கிறேன். நாம் பரிசுத்தமாகும்வரை மகிழ்வுடனிருத்தலோ, அமைதிபெறுதலோ, அல்லது ஆத்மீக சுகத்துடன் வாழ்தலோ கடினம். நாம் பாவத்தை விட்டொழிக்கவேண்டும். அது எவ்வாறாகும். அநேகருக்க இது வாழ்வோ, மரணமோ எனும் வினாவைப் போன்றுள்ளது. பழைய சுபாவம் மிக வலுவுள்ளதாயிருப்பதால் அதைக் கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டுவர அவர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதுவோ கட்டுக்கடங்காததால், அவர்கள் நல்லவர்களாக வேண்டுமென்று கவலையுற்றாலும், முன்னைவிட மோசமாகிவிடுகின்றனர். இருதயம் கடினமாயும், சித்தம் பிடிவாதமாயும், உணர்ச்சிகள் கொந்தளிப்பாயும், நினைவுகள் நிலையற்றனவாயும், கற்பனை அடக்கி ஆளக்கூடாததாயும், இச்சைகள் வரம்பின்றியும் உள்ளதால், தன்னுள் ஏதோ வன விலங்குகளின் குகை ஒன்று இருப்பதுபோலவும், அவனால் ஆளப்படுவதைவிட விரைவில் அவனைக் கொன்று உண்ணவேண்டுமென்று அவை துடிப்பதுபோலவும் மனிதன் உணருகிறான். லிவியாதானைக் குறித்து ஆண்டவர் யோபை நோக்கி: ‘ஒரு குருவியோடு விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண் மக்களண்டையிலே கட்டி வைப்பாயோ?” என்று கூறியதுபோல், நாமும் தோல்வியுற்று நம் சுபாவத்தைக் குறித்துக் கூறலாம். வீழ்ச்சிபெற்ற தன் தன்மையில் உறையும் கொந்தளிப்பு மிக்க சக்திகளைத்தான் சுய பெலத்தால் அடக்கிவிட முடியுமென்று ஒரு மனிதன் எண்ணுவதைவிட, தன் உள்ளங்கையில் வடதிசைக் காற்றை அடக்கிவிட முடியுமென அவன் எதிர்பார்க்கலாம். கிரேக்க புராணத்தில் வரும் பெரும் பலசாலியான ஹெர்க்யூலஸ் சாதித்ததாய்க் கூறப்படும் சாதனைகளைக் காட்டிலும் இது பெரிது. இங்கே தேவன் தேவைப்படுகிறார்.
‘என் பாவத்தை இயேசு மன்னிப்பாரென்பதை என்னால் நம்பமுடிகிறது. ஆனால் சிரமமானது யாதெனில், நாம் மறுபடியும் பாவம் புரிந்துவிடுவதுதான். என்னுள் வாழும் சுபாவம் தீமையின் போக்கிலேயே நான் போகுமாறு என்னைத் தூண்டிவிடுகிறது. ஆகாயத்தை நோக்கி விட்டெறியும் கல் எவ்வளவு நிச்சயமாக விரைவில் கீழே வந்து விழுகிறதோ, அதேவிதமாகத்தான் எழும்புதலான பிரசங்கத்தால் பரலோகத்துக்கு உந்தப்படும் நான், மறுபடியும் உணர்வில்லாத என் நிலையை அடைந்துவிடுகிறேன். அந்தோ! பாவத்தின் கொடிய கவர்ச்சிக் கண்களால் நான் ஈர்க்கப்பட்டு, என் சொந்த மடமையினின்று நான் மீளக்கூடாதவண்ணம் அதிலேயே சிக்குண்டு கிடக்கிறேன்” என்று ஒருவர் கூறுகிறார்.
பிரிய நண்பரே! அழிவிக்குள்ளான நமது நிலையின் இந்தப்பகுதிக்காக இரட்சிப்பு ஏதும் செய்யக்கூடாதென்றால், அது வருத்தத்திற்குரிய முற்றுப்பெறாத விஷயமாகும். மன்னிக்கப்படல், பரிசுத்தமாக்கப்படல், இரண்டையுமே நாம் விரும்புகிறோம். புனிதனாக்கப்படாமல் நீதிமானாக்கப்படுதல் இரட்சிப்பைப்பெற்றதாகாது. அது குஷ்டரோகியைச் சுத்தமானவனென்று அறிவிப்பினும், அவன் தன் தொழுநோய்க்கு இரையாகும்படி செய்யும். இது எதிரியை மன்னித்தாலும், எதிரி தன் மன்னனுக்கு என்றும் விரோதியாகவே இருக்க அனுமதிக்கும். அது விளைவுகளை அகற்றி காரணத்தைக் கவனியாதிருப்பதால், நம்பிக்கையற்ற முடிவில்லா பணி நம்முன் நிற்கும். அது அருவியைச் சிறிது காலம் நிறுத்தி வைத்து அழுக்குள்ள பொய்கையை அப்படியே விட்டுவிடுவதால், விரைவிலோ அல்லது காலம் தாழ்ந்தோ, அதிகரித்த சக்தியால் அதில் உடைப்பு எடுக்கும். ஆண்டவரான இயேசு மூன்று முறைகளில் பாவத்தைப் போக்கி வந்தாரென்பதை நினைவில் வைக்கவும். பாவத்தின் தண்டனையையும் பாவத்தின் சக்தியையும், பாவத்தின் பிரசன்னத்தையும் அகற்ற அவர் வந்தார். பாவத்தின் சக்தி உடனே நொறுங்கத்தக்கதாய், நீங்கள் உடனே இரண்டாம் பகுதியை அடைந்துவிடலாம். பாவத்தின் பிரசன்னத்தைப் போக்குவதான அடுத்த கட்டத்திலும் நீங்கள் இறங்கிவிடுவீர்கள். ‘அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்” (1யோhவன் 3:5).
நமது ஆண்டவரைக்குறித்து தேவதூதன் ‘ அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில், அவுர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்று மொழிந்தான். நம்மிலுள்ள சாத்தானின் கிரியைகளை அழிக்க நம் ஆண்டவரான இயேசு வந்தார். நமது ஆண்டவரின் பிறப்பின்போது அறிவிக்கப்பட்டது அவரின் மரணத்திலும் வெளியாயிற்று. எப்படியெனில் போர்வீரன் அவரது விலாவைத் தாக்கியபோது, குற்ற உணர்வும் அசுத்தமும் அகல இரட்டைப் பரிகாரமாக அது அமைந்தது.
என்றாலும், பாவத்தின் சக்தியைக் குறித்தும் உங்கள் இயல்பின் போக்கைக் குறித்தும் நீங்கள் மனம் கலங்குவீர்களாயின், உங்களுக்காக அருளப்பட்ட ஒரு வாக்கு இதோ இருக்கிறது. அதில் நம்பிக்கை வைக்கவேண்டும். கிரிபையின் சகல காரியங்களிலும் அது அடங்கியுள்ளது. வாய்மையின் தேவன் எசேக்கியேல் 36:26ல் கூறியிருப்பதாவது.
‘உங்கள் நலமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன் (எசேக்.36:26).
‘கொடுத்து” , ‘கட்டளையிட்டு”, ‘எடுத்துப்போட்டு”, ‘கொடுப்பேன்” என்று காணப்படுகிறது. தம் சித்தத்தைப் பூரணமாக நிறைவேற்ற வல்ல இராஜாதி ராஜனின் இராஜரீகத்தன்மை இதுவே. அவரது வார்த்தை எதுவுமே தரையில் விழாது.
உங்கள் சொந்த இருதயத்தை நீங்களே மாற்றுவதும், உங்கள் சொந்த சுபாவத்தை நீங்களே சுத்திகரிப்பதும் உங்களால் ஆகாதென்பதை ஆண்டவர் நன்கறிந்துள்ளார். தம்மால் இரண்டையும் செய்யக்கூடுமென்பதையம் அவர் அறிவார். எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றிக்கொள்ள அவரால் வழிசெய்யமுடியும். இதைக்கேட்டு அதிசயமுறுங்கள். உங்களை அவர் இரண்டாம் முறையாகப் படைக்கக்கூடும். நீங்கள் மறுபிறவி எடுக்கச் செய்வார். இது கிருபையின் அற்புதமெனினும், பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்துமுடிப்பார். யாராகிலும் ஒருவன் ஒரு நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நின்று கொண்டு தன் ஒரே சொல்லால் அருவியை மேல்நோக்கி ஓடச்செய்து, எந்த உயர்ந்த சிகரத்தின் மேலே தாவி மேல்நோக்கி ஓடும்படி அந்த அருவியை பணிந்துவிட்டால், அது மிக அதிசயமான காரியமாயிருக்கும். தேவனுடைய வல்லமை ஒன்றே அத்தகைய அதிசயத்தைச் செய்யக்கூடும். உங்களுடைய சுபாவத்தின் போக்கு முற்றுமாக மாறுவதும்கூட மேற்கூறிய அற்புதத்திற்கு ஒத்ததாயிருக்கும். தேவனால் சகலமும் செய்யமுடியும். உங்களுடைய போக்கையும் அவரால் திருப்ப இயலும். தேவனைவிட்டுக் கீழ்நோக்கிச் செல்லாமல் நீங்கள் முழுவதுமான தேவனை நோக்கி மேல் நோக்கிச் செல்லுமாறு உங்களை இயக்குவது அவருக்குச் சாத்தியப்படும். உடன்படிக்கைக்கு உட்பட்ட அனைவருக்கும் இதைச் செய்வதாக ஆண்டவர் வாக்கருளியுள்ளார். சகல விசுவாசிகளும் உடன்படிக்கைக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வேதத்திலிருந்து அறிந்திருக்கிறோம். பின்னும் ஒருமுறை அவ்வசனத்தை வாசிப்போம்.
‘உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துக்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன் (எசேக்.36:26).
எத்தகைய வாக்கு இது! இது தேவ மகிமைக்காக கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மால் ஆம், ஆமென் எனப்படுமாறு உள்ளது. நாம் அதனைப் பற்றிக்கொண்டு, அதை மெய்யானதென்று ஏற்று, அதை நமக்கே உரியதாக்கிக்கொள்வோமாக. பின்னர் அது நம்மில் நிறைவேறியதும், பல நாட்களும், ஆண்டுகளும் கழிந்த பின்னரும், மேலான தேவகிருபை நம்மில் ஏற்படுத்திய அதிசய மாறுதலைப்பற்றிப் பாடக்கூடிய வகையில் அதை நாம் பெற்றவர்களாயிருப்போம்.
ஆண்டவர் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டுவிடும்போது, அச்செயல் நிறைவேறியாயிற்று என்பது சிந்தனைக்குரியது. அவ்வாறு இருதயத்தையும் நமக்கு அவர் வழங்கும் புதிதான ஆவியையும் அறிவுக்கெட்டிய எந்தச் சக்தியாலும் அகற்ற இயலாது. ‘தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. அதாவது அவரைப்பொறுத்தவரையில் அவை மாறாதவையே. அவர் ஒரு முறை அளித்ததை மீண்டும் எடுத்துக்கொள்வதில்லை. உங்களை அவர் புதுப்பிக்கும்படி அவரை அனுமதியுங்கள். நீங்களும் புதுப்பிறவியாக மாறுவீர்கள். மனிதனுடைய திருத்தங்களும், சுத்திகரிப்புகளும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில், தான் கக்கினதற்கு நாய் திரும்புவது இயற்கை. ஆனால் தேவன் நம்மில் ஒரு நவமான இருதயத்தை வைக்கும்கால், அந்தப் புதிய உள்ளம் என்றென்றும் அவ்வாறே இருக்குமேயல்லாது ஒருபோதும் கல்போல் கடினமாகாது. சதையாக அதை மாற்றியவர் அது அவ்விதமே இருக்கச் செய்வார். தேவன் தமது கிருபையின் இராஜ்யத்தில் தோற்றுவிக்கும் இப்படைப்பினிமித்தம் நாம் களிகூர்ந்து என்றும் மகிழ்ந்திருக்கலாம்.
இன்னும் எளிதாக இக்காரியத்தை விளக்குவதாயின் பூனை, பன்றி பற்றிய விளக்கத்தைத்தான் இங்கே குறிப்பி வேண்டும். நீங்கள் அதைக்கேள்விப்பட்டதுண்டா? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நம் இரட்சகர் மொழிந்த வார்த்தைகளை நான் என் போக்கிலே விளக்குகிறேன். இதோ பாருங்கள் ஒரு பூனை, அது எவ்வளது சுத்தமான பிராணி. தன் நாக்கையும் பாதங்களையும் கொண்டு எவ்வளவு சாமர்த்தியமாக அது தன்னை சுத்திகரித்துக்கொள்கிறது! பார்ப்தற்கு அது அழகான காட்சிதான். ஒரு பன்றி அவ்விதமாகச் செய்வதை நீங்கள் கண்டதுண்டா? இல்லை. பார்த்திருக்கமாட்டீர்கள். அதன் தன்மைக்கு அது பொருந்தாது. அழுக்கில் அலைவதைத்தான் தனக்கு உகந்ததாக அது தெரிந்துகொள்ளும். தன்னையே சுத்தம் செய்து கொள்ள ஒரு பன்றிக்குச் சொல்லிக்கொடுங்கள். அதில் நீங்கள் வெற்றி காண்பதரிது. பன்றி சுத்தமாயிருக்குமெனில், சுகாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு விடலாம். பூனை செய்வதுபோல தங்ளைக் கழுவி சுத்தம் செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்! பயனற்ற வேலையாகத்தானிருக்கும். பன்றியைக் கட்டாயப்படுத்தி நீங்கள் குளிப்பாட்டினாலும், விரைவில் அது அழுக்குக்குச்சென்று பழையபடி ஆபாசமாக மாறும். பன்றிதானே தன்னைச் சுத்தம் பண்ணிக்கொள்ளும்படி செய்யவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி அதைப் பூனையாக மாற்றுவதுதான். மாற்றம் ஏற்படக்கூடுமானால் முன்னர் முடியாததாயும், கடினமாயும் இருந்தது இப்போது சுலபமாகிவிடும். இனி உங்கள் வரவேற்பு அறையிலும், கம்பளத்திலும் இது சுற்றிவந்து விளையாடலாம். தேவனற்ற மனிதனின் காரியமும் இப்படித்தான்இருக்கிறது. புத்துயிர் பெற்ற ஒருவன் மிக உற்சாகமாய்ப் புரியும் காரியங்களை அவனும் செய்யும்படி அவனை நீங்கள் கட்டாயப்படுத்தமுடியாது. நீங்கள் அவனுக்குப் போதித்து அவனுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பினும், அவனுக்கு மனமிராதபடியால், பரிசுத்தம் எனும் கலையை அவனால் கற்கமுடியாது. அவனது சுபாவம் அவனை வேறு வழியக நடத்திச் செல்லுகிறது. ஆண்டவர் அவனைப் புதிய மனிதனாக மாற்றுகையில், எல்லாமே மாறுபட்ட நிலையை எய்துவிடும். இத்தகைய மாற்றம் மிகப்பெரிதாயிருப்பதால்தான் ஒருமுறை மனந்திருப்பிய ஒருவர், ‘ஒன்று உலகம் முற்றுமே மாற்றியிருக்கவேண்டும், அல்லது நான் மாறியிருக்கவேண்டும்” என்று விளம்பினார். புதிய சுபாவம் நேர்மையானதைப்பற்றிச் செல்லும். அத்தகைய சுபாவத்தைப் பெறுதல் எவ்வளது பெரிய ஆசீர்வாதம்! பரிசுத்த ஆவியானவர் ஒருவரே அதை அளிக்க வல்லவர்.
ஒரு மனிதனுக்கு, ஆண்டவர் ஒரு புதிய இருதயத்தையும் அவனுக்குகந்த ஆவியையும் வழங்குவது எவ்வளவு அற்புதமான காரியமென்று உங்களுக்கு எப்போதாவது தோன்றினதுண்டா? ஒரு நண்டு பிறிதொரு நண்டுடன் பேரிட்டு, அதனால் தன் நகங்களில் ஒன்றை இழந்து, பின்னர் ஒரு புதிய நகம் அதற்குத் தோன்றிவிடுவதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அது ஒரு குறிப்பிடத்தக்க காரியமே. எனிலும் ஒரு மனிதனுக்கு ஒரு புதிய இருதயம் அளிக்கப்படுவதென்றால், அது அதைவிட வியப்பிற்குரியது. இது இயக்கையின் சக்திகளுக்கு அப்பாற்பட்ட விந்தையே. ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் கிளைகளிலே ஒன்றை நீங்கள் வெட்டிவிடுவதாயின், அந்த இடத்தில் இன்னொன்றுவளர்ந்து விடக்கூடும். ஆனால், அதன் தன்மையை உங்களால் மாற்றி விட முடியுமா? அதன் புளிப்பான சாற்றை இனிமையாக்கி விடுவீர்களா? முட்செடி அத்திக்கனிகளை அளிக்க வல்லதாய் மாற்றுவீர்களா? இதைவிடச் சிறந்த அதையாகிலும் அத்துடன் நீங்கள் ஒட்டு மரமாக இருக்க இணைக்கலாம். ஆனால் மரத்தின் முக்கிய அம்சமான ரசத்தை முற்றிலும மாற்றுவதென்றால் அது ஓர் அற்புதமாய்த்தானிருக்கும். இயேசுவில் விசுவாசம் வைக்கும் எல்லாருக்குள்ளும், அதி மேலானதும் புத்திக்கு எட்டாததுமான இத்தகைய தேவ வல்லமை கிரியை செய்கிறது.
அவரது தெய்வீகக் கிரியைக்கு நீங்கள் உங்களையே அவருக்கு ஒப்புக்கொடுத்தால், ஆண்டவர் உங்கள் சுபாவத்தை மாற்றுவார். பழைய தன்மையை அவர் கீழ்ப்படுத்தி, உங்களுக்குள் புது ஜீவனை ஊதுவார். ஆண்டவரான இயேசு கிறிஸ்துவில் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்களெனில், அவர் உங்களிலிருக்கும் கல்லான இருதயத்தை அகற்றி, சதையான இருதயத்தை ஈவார். கடினமாயிருந்ததெல்லாம் மென்மையாகும். துன்மார்க்கம் நிறைந்திருந்தது, நற்பண்புகள் கூடியதாயிருக்கும். கீழ்நோக்கிப்போகும் தன்மை கொண்டிருந்ததெல்லாம் தீவிர வேகத்துடன் மேல்நோக்கி உயரும். சிங்கத்தின் சீற்றம் மாறி ஆட்டுக்குட்டியின் சாந்தம் இடம் பெறும். புனிதமான புறாவின் முன்னால் அசுத்தமான காகம் நிற்காமல் பறந்துபோம். வஞ்சகமெனும் கொடிய சர்ப்பம் சத்தியத்தின் குதிங்காலால் நசுக்குண்டுபோம்.
சன்மார்க்கத்துக்கடுத்ததும், ஆவிக்குரியதுமான எத்தனையோ அதிசய குண மாற்றங்களை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நெறி பிறழ்ந்து வாழ்ந்த பெண்கள் பனியைப்போன்று புனிதமாய் மாற்றம் பெற்றதையும், தெய்வ நிந்தனை செய்துவந்த ஆண்கள், ஆழ்ந்த பக்தியுள்ளோராய் மாறி, மற்றவர்களுக்க மகிழ்வூட்டி வருவதையும் நான் குறிப்பிட்டுக்கூற முடியும். கள்ளர்கள் உண்மையுள்ளவர்ளாயும், குடியர்கள் நிதானபுத்தியுடையவர்களாயும், பொய்யர் சத்தியர்களாயும், மத சம்மந்தமானவற்றை அலட்சியப்படுத்தியவர்கள் மிகுந்த ஆர்வமுடையவர்களாயும் மாற்றம் பெற்றுள்ளனர். எங்கெல்லாம் ஒரு மனிதனுக்கு தேவ கிருபை தோன்றிற்றோ அங்கெல்லாம் அவபக்தியையும், உலக இச்சைகளையும் கைவிட்டு, தற்போதைய நேர்மையோடு தேவபக்தி மிக்கவனாய் மனிதன் வாழ, அவனுக்கு அக்கிருபை பயிற்சி அளித்துள்ளது. பிரிய வாசகரே, கிருபை உங்களுக்கும் அதையே ஆற்றும்.
‘என்னால் இம்மாற்றத்தைச் செய்யவொண்ணாது” என்று கூறுகிறார் ஒருவர். உங்களால் கூடுமென்று யார் சொன்னார்கள்? எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனம் மனிதன் என்ன செய்வான் என்பதைக் குறித்தல்ல, தேவன் என்ன செய்வார் என்பதைக் குறித்தே பேசுகிறது. அது தேவனுடைய வாக்காயிருப்பதால், தம் சொந்த அலுவல்களை நிறைவேற்றுவது அவர் பொறுப்பு. உங்களுக்கு அவர் அருளியிருக்கும் வாக்கை நிறைவேற்றுவாரென்று நீங்கள் நம்பிக்கையோடிருப்பின், அது அவ்வாறே ஆகும்.
அது எவ்வாறு ஆகும் ? அதைப்பற்றி உங்களுக்கு என்ன? ஆண்டவரை நீங்கள் விசுவாசிக்கும்முன் அவர் தம் வழிகளையெல்லாம் உங்களுக்கு விளக்கமாக அறிவிக்கவேண்டுமா? இக்காரியத்தில் தேவன் கிரியை புரிந்து வருவது பெரும் மர்மமாயுள்ளது. பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்கிறார். வாக்குப்பண்ணினவர் வாக்கைச் செய்துமுடிக்கும் பெறுப்பேற்றிருத்தலின், சந்தர்ப்பத்துக்கேற்றுவாறு திறமையுடன் செய்துமுடிப்பார். இந்த அதிசய மாறுதலை ஏற்படுத்துவதாய் வாக்கருளும் தேவன், இயேசுவை அங்கீகரிப்போர் அனைவருக்கும், நிச்சயமாய் அம்மாறுதலை உண்டாக்குவதுடன், அவர்களெல்லாரும் தேவனுடைய புத்திரர்களாகும்படி வல்லமையும் நல்குவார். இதை நீங்கள் நம்புவதாயின் எவ்வுளவு நலமாயிருக்கும். கிருபை பொருந்திய ஆண்டவரின் அருளுக்குப் பிரதியாக, இது பெரும் அற்புதமாயிருக்கக்கூடுமெனினும், இதை அவரால் செய்யமுடியுமென்றும் செய்வாரென்றும் நீங்கள் விசுவாசித்தல் எவ்வளவு சிறந்தது! தேவன் பொய் கூறமாட்டாதவரென்பதை நீங்கள் உணரவேண்டும்! ஒரு புதிய இருதயத்தையும், நல்ல ஆவியையும் வேண்டி அவரை நீ;ங்கள் விசுவாசிப்பின், உங்களுக்கு அவர் அவற்றை அருளுவது நிச்சயமென்று கருதினால் போதுமே! அவரது வாக்கில் நீங்கள் விசுவாசம் வைக்கவும், அவர் குமாரனில் விசுவாசம் கொள்ளவும், பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கவும், என்றென்றும் சதா காலங்களிலும், துதியும், கனமும், மகிமையும் உடையவராயுள்ள அவரையே விசுவாசத்துடன் பற்றவும் ஆண்டவர் உங்களுக்கு அருள் புரிவாராக! ஆமென்.











