- விசுவாசம் என்பதென்ன?
‘கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த விசுவாசம் என்பதென்ன? விசுவாசத்தைக் குறித்துப் பல விளக்கங்கள் உண்டு. ஆயினும், எந்த விளக்கமுமே நான் அதைச் சரிவரப் புரிந்துகொள்ள உதவுவதாயில்லை. இதைப்பற்றிய அதிகாரத்தை வாசித்து நீக்ரோ ஒருவர்: ‘நான் இதை விளக்குவேன்” என்று கூற முற்பட்டவர் ‘நான் இதைக் குழப்புவேன்” என்று தவறுதலாய் மொழிந்தார். அவர் உரைத்த வண்ணமே அவர் பேசுகையில் அப்பொருளைக் குழப்பியிருக்கலாம். யாரும் புரிந்துகொள்ளமாட்டாத அளவுக்கு விசுவாசத்தைக் குறித்து நாம் வியாக்கியானம் செய்துகொண்டே போகலாம். நான் அக்குற்றத்துக்கு இலக்காக மாட்டேனெனக் கருதுகிறேன். எல்லாவற்றையும்விட எளிமையானது விசுவாசமே. ஒருவேளை அதன் எளிமையின் விளைவாகத்தான் அதை விளக்குதல் வெகு கடினமாயுள்ளதோ என்னவோ?
விசுவாசம் என்பது என்ன? அறிவு, நம்பிக்கை, சார்ந்திருத்தல் என்று மூன்று காரியங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. ‘அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” ஒர் உண்மையை நான் நம்ப வேண்டுமாயின் அதைப்பற்றி நான் முதலில் தெரிந்துகொள்ளுவது அவிசயம். ‘விசுவாசம் கேள்வியினாலே வரும்” நான் நம்பப்போகிறதென்ன என்பதை நானறியும்படி, முதலில் நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். ‘உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்”. விசுவாசம் வைக்க ஓரளவு அறிவுதேவைப்படும். எனவே, அறிந்து கொள்ளுதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள். கேளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும். பண்டைய தீர்க்கதரிசியின் வார்த்தையான இது, இன்றும் சுவிசேஷத்தின் வார்த்தையாக உள்ளது. கிறிஸ்துவைக் குறித்தும் அவருடைய மீட்பைக்குறித்தும் பரிசுத்த ஆவியானவர் என்ன போதிக்கிறாரென்று வேத வாக்கியங்களை ஆராய்நது அறியுங்கள். தேவனை அறிய விழையுங்கள். எனென்றால்: தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். ‘பரிசுத்த ஆவியானவர் ஆண்டவரை அறிகிற ஆவியையும் அவருக்குப் பயப்படுதலையும் உங்களுக்கு அருளுவாராக! நற்செய்தியான சுவிசேஷத்தையும் அறிந்துகொள்ளுங்கள். அது என்னவென்பதையும், இலவச மன்னிப்பு, இருதய மாற்றம், தேவனுடைய குடும்பத்தில் சுவிகாரமாக ஏற்கப்படுதல், இத்தகைய எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து அது தெரிவிப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். முக்கியமாக, தேவகுமாரனும் மனுக்குலத்தின் மீட்பருமான இயேசு கிறிஸ்து தம் மானிட சாயலால் நம்மோடு ஐக்கியப்பட்டிருப்பினும், தேவனோடு இணைந்துள்ளாரென்பதையும், அதனால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மஸ்தியஸ்தராக விளங்கி, இரண்டையும் தொடக்கக்கூடியவராயிருப்பதினிமித்தம் பாவியையும், பூவுலகமனைத்தின் நியாயாதிபதியையும் சேர்க்கும் சங்கிலியாக விளங்குகிறாரென்பதையும் அறியுங்கள். கிறிஸ்து இயேசுவைக் குறித்து மேன்மேலும் அறிய முயற்சியுங்கள். கிறிஸ்து தம்மைப் பலியாக ஈந்த கோட்பாட்டை அறிந்துகொள்ள முற்படுங்கள். ஏனெனில், ‘தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி….” என்பதில்தான் மீட்பின் விசுவாசம் தன்னையே பிரதானாமாகப் பதியவைத்துள்ளது. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காகச் சாபமானார் என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள். நமக்குப் பிரதியாக நின்று, கிறிஸ்து ஆற்றிய சேவைக்கோட்பாட்டை நிறையப் பருகுங்கள். ஏனெனில் ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினாh” எனும் இனிமையான ஆறுதல் குற்றவாளிகளான மாந்தருக்கு அக்கோட்பாட்டில் அடங்கியுள்ளது. அறிவிலிருந்து விசுவாசம் ஆரம்பிக்கிறது.
இவை யாவும் உண்மையே என்று நம்ப ஆரம்பிக்கிறது சிந்தை. தேவன் இருக்கிறாரென்றும், உண்மையான உள்ளத்துடன் அவரை நாடுவோரின் வேண்டுதல்களைக் கேட்கிறரென்றும், சுவிசேஷம் தேவனிடமிருந்து வந்ததென்றும், இந்த இறுதி காலத்தில் தேவன் வெளிப்படுத்தியிருக்கும் பெரும் சத்தியம், விசுவாசத்தால் நீதிமானாக்கப்படல் என்பது தானென்றும் முன்னைவிட மிகத் தெளிவாக நம்புகிறது ஆத்துமா. பிறகு இருதயமானது மெய்யாகவே இயேசு நமது ஆண்டவரும் மீட்பருமானவரென்றும், அவரே தீர்க்கரும் ஆசாரியரும், தம் மக்களுக்கு ராஜாவுமானவரென்றும் ஏற்றுக்கொள்ளுகிறது. இவை யாவும் நிச்சயமான சத்தியமென்று கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகிறது. ‘தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” இச்சத்தியத்தை நீங்கள் விரைவில் அறியவேண்டுமென்றும் கோருகிறேன். அவரது பலி பூர்த்தியானதுடன், இயேசுவை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறதில்லை என்பதின்படி, மனிதனுடைய சார்பில் தேவனால் அது பூரணமாக ஏற்றுக்கொள்ப்பட்டாயிற்று என்பதையும் நீங்களும் உணரவேண்டும். மற்ற உண்மைகளை நீங்கள் எவ்விதம் ஏற்கிறீர்களோ, உங்கள் தந்தை அல்லது நண்பர் வெளியிடும் அறிக்கையே நீங்கள் எவ்விதம் நம்புகிறீர்களோ, அதே வண்ணம் தேவனுடைய அறிக்கையையும் விசுவாசியுங்கள். நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால் அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது.
இதுவரை விசுவாசத்தை நோக்கி நீங்கள் முன்னேறிவிட்டீர்கள். அதைப் பூரணமாக்க, சார்ந்திருத்தல் என்னும் ஒரே ஒரு பொருளைத்தான் இன்னும் சேர்க்கவேண்டியிருக்கிறது. இரக்கம் மிகுந்த தேவனிடம் உங்களையே தத்தம்செய்துவிடுங்கள். கருணைகூடிய சுவிசேஷச் செய்தியில் உங்கள் நம்பிக்கை அடங்கியிருக்கட்டும். மரித்தவரும், பின் உயிர்த்தெழுந்து ஜீவிப்பவருமான இரட்சகரிடம் உங்கள் ஆத்துமா அண்டியிருக்கட்டும். பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட இரத்தத்தில் உங்கள் பாவங்களைக் கழுவி விடுங்கள். அவருடைய பூரணமான நீதியை நீங்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது சகலமும் சரியாகிவிடும். சார்ந்திருத்தல் என்பது விசுவாசத்தின் ஜீவ இரத்தமாயிருத்தலின், அதையன்றி, மீட்பின் விசுவாசம் வேறொன்றில்லை. இங்கிலாந்தின் புராதன ‘ப்யூரிடன்” மார்க்கத்தார் ஒரு பொருளின்மீது சாய்ந்திருப்பது என்ற அர்த்தம் தொனிக்கும் சொல்லைக்கொண்டு விசுவாசத்தை விளக்கினார்கள். உங்கள் முழுச் சுமையையும் கிறிஸ்துவின்மேல் வைத்துச் சார்ந்திருங்கள். சாஷ்டாங்கமாய் விழுந்து பிளவுண்ட மலையின்மீது சாய்ந்துவிடுங்கள். இயேசுவின் பேரில் சாய்ந்து அவரில் இளைப்பாறி, உங்களையே அவரிடம் தத்தம்செய்து விடுங்கள். இவ்வளவையும் நீங்கள் செய்துவிட்டீர்களெனில், மீட்பின் விசுவாசத்தை நீங்கள் பிரயோகித்தாயிற்று எனலாம். அறிவிலிருந்து விசுவாசம் ஆரம்பிப்பதால் விசுவாசம் ஏதோ குருட்டுப்போக்கில் உண்டாவதில்லை. நிச்சயதென நம்பும் உண்மைகளை விசுவாசம் ஏற்றுக்கொள்வதால் சந்தேகத்துக்கு இடமான காரியமாக அதை மதிப்பிட முடியாது. செயல் முறையில் கடைப்பிடிக்கமாட்டாத கனவுப்பொருளல்ல அது. ஏனெனில், விசுவாசம் வெளிப்படுத்தலின் உண்மையை நம்புவதோடு, அந்நம்பிக்கையின் முடிவையும் காணவிரும்புகிறது.
இன்னொரு முயற்சியில் விளக்கம் தரட்டுமா? கிறிஸ்துதாம் கூறியவண்ணமே இருக்கிறார். தாம் எதைச் செய்வதாய் வாக்கருளினாரோ அதை அவர் புரிவார் என்று நம்புதலும், பிற்பாடு இவற்றை அவரிடமிருந்து எதிர் பார்த்தலும் விசுவாசமாகும். இயேசு கிறிஸ்து மனிதச் சாயலில் உள்ள தேவன். பாவ நிவாரண பலியானார். நமது பாவங்களைத் தம் சொந்த சரீரத்தில் ஏற்று சிலுவையில் சுமந்தார் என்றெல்லாம் வேதவாக்கியங்கள் அறிவிக்கிறன. அவர் அக்கிரமங்களுக்கு முடிவு கட்டினாரென்றும், பாவத்தை களைந்தாரென்றும், இதனால் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நீதியைக் கொணர்ந்தாரென்றும், வேதம் தெரிவிக்கிறது. அவர் ‘மரித்தோரிலிருந்து எழுந்தார்” என்றும் ‘தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்போதும் உயிரோடிருக்கிறவர்” என்றும் அவர் உன்னதத்துக்கும் ஏறிச்சென்று தம் ஜனத்துக்காகப் பரலோகத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரென்றும், அவர் மறுபடியும் விரைவில் வந்து, ‘பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நியாயத்தோடும் நியாயந்தீர்ப்பார்” என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ‘இவர் என்னுடைய நேச குமாரன். அவருக்குச் செவி கொடுங்கள்” என்பது தேவனாகிய பிதாவின் அறிக்கையாய் இருப்பதால், மேற்கூறியவை உண்மையேயென்று நாம் திடமாக நம்பவேண்டும். தேவனாகிய பரிசுத்த ஆவியானவரும் இதற்குச் சாட்சி பகர்ந்துள்ளார். எவ்வாறெனில், எழுப்புதலான வார்த்தையிலும் பலதரப்பட்ட அற்புதங்களிலும் மாந்தரின் உள்ளங்களில் அவர் கிரிiயை புரிவதிலும் ஆவியானவர் கிறிஸ்துவை அறிக்கைபண்ணியிருக்கிறார். இந்த அறிக்கை மெய்தானென்று நாம் நம்பவேண்டும். தாம் வாக்கருளியதை கிறிஸ்து செய்வாரென்றும் விசுவாசம் நம்புகிறது. தம்மிடம் வரும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லையென்று கூறியிருத்தலால், நாம் அவரைச் சேர்ந்தால் அவர் நம்மைத் தள்ளாரென்பது உறுதியென விசுவாசம் நம்புகிறது. ‘நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று இயேசு கூறியதை விசுவாசம் மெய்யென அங்கீகரிக்கிறது. இந்த ஜீவத்தண்ணீரை நாம் கிறிஸ்துவிடமிருந்து பெறுவோமாகில், அது நம்மில் நிலைத்திருந்து பரிசுத்த ஜீவியத்தின் நீரூற்றுக்களாய் நம்மில் ஊறிக்கொண்டிருக்கும். அவரில் விசுவாசம் வைப்போருக்கு மன்னிப்பு, நீதிமானாக்கப்படல், பாதுகாப்பு, அவர் கரங்களினின்று நித்திய மகிமை இவை அனைத்தும் அருளப்படுமென்று அவர் வாக்குப் பண்ணினவை எவையோ அவற்றை நமக்கு ஈவாரென்று நாம் விசுவாசிக்க வேண்டும்.
அவசியமான காரியம் அடுத்ததாக வருகிறது. கூறப்பட்டவண்ணமே இயேசு இருக்கிறார். தாம் செய்வேனென்பதை இயேசு செய்து முடிப்பார். எனவே நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்டவாறு கூறி ‘அவரைச் சார்ந்திருப்பது முக்கியம். எனக்கு வாக்கருளின பிரகாரம் அவர் எனக்கு செய்வேன் என்பதைச் செய்வார். இரட்சிக்கும்படி நியமிக்கப்பட்டிருப்பவரிடம் அவர் என்னை இரட்சிக்குமாறு நான் என்னையே அவர் கரங்களில் அர்ப்பணிக்கிறேன். தாம் மொழிந்தவாறே அவர் எனக்குச்செய்வாரென்று வாக்குத்தத்தத்தில் நான் சார்ந்திருக்கிறேன்” மீட்பின் விசுவாசமான இதைக் கொண்டிருப்பவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். அவனது ஆபத்துகள் சிரமங்கள் யாதாயிருப்பினும், அவனுடைய அவமானங்களும் அவனைச் சோர்வுறச்செய்யும் காரியங்களும் எத்தகையனவாயினும் அவன் குறைகளும் பாவங்களும் எவ்வாறிருந்தாலும் இவ்விதமாய் இயேசுவில் நம்பிக்கை வைப்பவன் ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்குப்படாமல், ஒருபோதும் குற்றவாளியின் நிலையில் இரான்.
இவ்விளக்கம் எவ்வகையிலேனும் உதவியிருக்கிறதா? தேவ ஆவியானவர் என் வாசகரை விரைவில் சமாதானத்துக்குள் நடத்த இதைப் பயன்படுத்துவாரென நம்புகிறேன். ‘பயப்படாதே, விசுவாசமுள்வனாயிரு”. சார்ந்திரு, பின் ஓய்ந்திரு. யாது செய்யவேண்டுமென்பதைப் புரிந்துகொண்டு, பின் ஏதும் செய்யாமல் திருப்தியுடன் என் வாசகர் ஓய்ந்திருப்பாரோவென நான் அஞ்சுகிறேன். சிறந்த இலட்சிய விசுவாசத்தை கற்பனையில் கண்டு வாளாவிருப்பதைவிட, மெய்யான அற்ப விசுவாசத்தைக் கொண்டு செயலில் ஈடுபட்டிருத்தல் மேலானது. உடனே ஆண்டவரான இயேசுவை விசுவாசித்தலே பெரிய காரியம். விசேஷ ஸ்தானங்களும் விளக்கங்களும் தேவையற்றவை. பசித்தவன் ஒருவன் புசித்கையில், உணவை ஒன்று சேர்த்து அருந்துவதையோ, தன்வாயின் அமைப்பையோ, சீரண ஒழுங்கையோ புரிந்துகொள்ளாமலிருந்தும் அருந்துகிறான். அவன் உட்கொள்வதாலேயே வாழ்ந்திருக்கிறான். அவனைக் காட்டிலும் கெட்டிக்காரனான வேறொருவன் உணவைப்பற்றி விஞ்ஞான ரீதியில் நன்கு தேர்ந்திருக்கிறான். எனினும் அத்தகைய அறிவோடு சுட அவன் உண்ணாமலிருப்பின் அவன் இறப்பான். இந்த நேரத்திலும், விசுவாசத்தின் கோட்பாட்டை அறிந்திருந்தும்கூட அதை நம்பாததினிமித்தம் பலர் நரகத்தில் இருக்கக்கூடும். அதே சமயத்தில் தன் விசுவாசத்தை ஞானமாய் விளக்க இயலாமலிருந்த ஆண்டவரின் எந்த விசுவாசியும் புறம்பே தள்ளப்பட்டதில்லை. அன்பான வாசகரே! நீங்கள் என்றென்றும் ஜீவித்திருக்க உங்கள் ஆத்துமாவில் ஆண்டவரான இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்! ‘அவரில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” (யோவான் 3:36).










