சகோ. பக்த் சிங்
பொருளடக்கம்
1. மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை
2. கோடரியின் போதனை
3. தாவீதின் முதலாம் இழப்பு
4. தாவீதின் இரண்டாவது இழப்பு
5. தாவீதின் மூன்றாவது இழப்பு
6. இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும்
7. மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும்
8. இழப்பிற்கு சில காரணங்கள்
9. தாவீதின் நான்காவது இழப்பு
10. மீட்டுக் கொள்வதின் இரகசியம்
11. தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்
12. தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்
முன்னுரை
இந்த நூலில் அடங்கியுள்ள செய்தியானது, மிகவும் அற்பப் பிராணியாகிய ஒரு எலியின் மூலம் கர்த்தர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒரு சிறந்த ஆவிக்குரிய பாடமாகும்.
சில ஆண்டுகட்கு முன்பு, ஹைதராபாத்திலிருக்கும், “எபிரோன்” ஆராதனை வீட்டில், தொலைபேசி கட்டணம் கட்டுவதற்கென ஒரு சகோதரனிடம் 130 ரூபாய் கொடுத்திருந்தோம். குறிப்பிட்ட தினத்தன்று, அவருக்கு அதிக அலுவலிருந்ததால், அடுத்த நாள் செலுத்தி விடலாம் என எண்ணி சீட்டையும் பணத்தையும் ஒரு மேசையில் வைத்து விட்டார். மறுநாளும் அதிக வேலையிருந்ததால், அக்கடமையை மூன்றாம் நாளுக்கு ஒத்திப்போட்டார். ஆனால் மூன்றாம் நாளிலோ, அவர் மேசையைத் திறந்து பார்க்கும் பொழுது, பணமும் சீட்டும் அங்கேயில்லை. அறையெங்கும் தேடினார்; காணவில்லை. எல்லாருமாகச் சேர்ந்து மூலை முடுக்கெல்லாம் துருவித்துருவித் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதை எடுத்திருக்கக்கூடும் எனக் கருதி, வேறு பணத்தைக் கொண்டுபோய் தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தினோம். ஆயினும் பணம் காணாமற்போன இரகசியத்தைக் கர்த்தர் எங்களுக்கு வெளிப்படுத்துமாறு ஜெபித்து வந்தோம்.
அந்நாட்களில் நான் 1 சாமுவேல் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் 30ஆம் அதிகாரத்தை நான் வாசித்துத் தியானிக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் 19வது வசனத்தைக்கொண்டு என்னிடம் வெகு தெளிவாகப் பேசினார். “தாவீது ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.” இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெள்ளையடிப்பதற்காகக் கட்டடம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டியதிருந்தது. அந்த அறையிலுள்ள சாமான்களையெல்லாம் வெளியேற்றிச் சுத்திகரிக்கும்போது, அங்கிருந்த ஒரு அலமாரிக்குப் பின்னால் சுவற்றில் ஒரு துவாரமிருந்தது. அத்துவாரத்தினுள், காணாமற்போன பணமும் சீட்டும் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்.
அப்பொழுது எங்களுக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே நாங்கள் முழங்காற்படியிட்டுக் கர்த்தரை ஸ்தோத்தரித்தோம். இதற்குக் காரணமாயிருந்த எலியின் செய்கையைக் குறித்து வியப்படைந்தோம். அந்நாள் முதல் எங்களுக்கு எந்தவிதமான இழப்பு நேரிட்டாலும், மேற்கூறிய வாக்குத்தத்தத்தை உரிமை பாராட்டிக் கேட்க ஆரம்பித்தோம். அது ஆவிக்குரிய இழப்போ, சரீரப்பிரகாரமான இழப்போ, எதுவாயிருந்தாலும் இவ்வாக்குத்தத்தத்தை உரிமை பாராட்டிக் கேட்டு, ஒன்றும் குறைவுபடாமல், மீண்டும் பெற்றுக்கொண்ட சாட்சிகள் அனந்தம். யார், யார் சிறு பிள்ளைகளைப் போன்ற விசுவாசத்துடன் இதை உரிமை பாராட்டிக் கேட்கிறார்களோ, அவர்களுடைய விசுவாசத்தைத் தேவன் கனப்படுத்துவார். அவர்களும் தாங்கள் இழந்த ஆசீர்வாதங்களைத் திரும்பவும் பெற்றானந்திப்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.
இந்நூலின் தமிழாக்கத்திற்கு உதவி புரிந்த சகோ J. D. இரத்தினசிங் அவர்களுக்கும், சகோ. R.P. துரைராஜ் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பக்தசிங்.











