- கிருபையும் பாவமன்னிப்பு
ஆன்மாவில் உயிர்ப்பிக்கப்பட்ட பாவியானவன் ஆசிப்பது பாவ மன்னிப்பேயாம்.’பாவ மன்னிப்பு” என ஒன்று உள்ளதா? சாத்தியமா? திருமறையின் வாயிலாகவே ‘பாவமன்னிப்பு” என்பது உண்டு என அறிகிறோம். ஆதிமுதற்கெண்டே தேவன் இரக்கமுள்ளவர் என்று திருமறை கூறுகிறது. ‘….கர்த்தர் இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுமுள்ள தேவன்…. அவர் அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்” (யத் 34:6-7). திருமறையில் மனிதனுக்குக் கடவுள் அருளும் பாவ மன்னிப்பு பலவாறுக விவரிக்கப்படுகிறது. அதுபோல் மனிதனுடைய பாவ இயல்பும் பலவிதமாக விபரிக்கப்படுகிறது. பாவிகள் ‘கறைபட்டவர்கள்” எனவும், ‘அருவருப்பானவர்” எனவும் அழைக்கப்பட்டுகின்றனர். தேவன் அருளும் பாவ மன்னிப்பின் மூலமாக ‘மனிதன் சுத்திகரிக்கப்படுகிறான். எனவும், அவனுடைய பாவங்கள் ‘மூடப்படுகின்றன” எனவும் கூறப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பின் மூலமாக பாவிகளுடைய பாவக்கடன் தீர்க்கப்படுகிறது எனவும், வீழ்ந்துபோனவர்கள் கைதூக்கிவிடப்படுகின்றனர் எனவும் நாம் காண்கிறோம். இரத்தச் சிவப்பான பாவங்களும் உறைபனியைவிட வெண்மையாக்கப்படுகின்றன. அன்றோ? கடவுள் அருளும் பாவ மன்னிப்பு நமக்கு எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது.
தேவன் அருளும் பாவ மன்னிப்பானது இலவசமானது. முழமையானது. நித்தியமானது. இம்மூன்று தன்மைகளும் தேவனுடைய கிருபை எவ்வளவு பூரணமானது என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவற்றை ஈண்டு சற்று ஆராய்வோம்.
முதலாவதாக, தேவனுடைய மன்னிப்பு முற்றிலும் இலவசமானது. பாவியானவனுக்கு மன்னிப்பு அருளப்படுமுன்பு அதன் பொருட்டு அவன் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் எதுவுமே கிடையாது. திருமறைகூறும் எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. தர்சு பட்டண சவுல் மன்னிப்புப் பெறுமுன் எந்த நிபந்தனைகளையும் நிறைவேற்றவில்லை. அவன் தேவனுக்கு விரோதியாகவே இருந்தான். ஆயினும் மன்னிப்பு அருளப்பட்டது. ஏன்? நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும் பொருட்டு பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன் (1.தீமோ.1:16) என அவன் கூறியுள்ளதற்கிணங்க அவனுக்கு இரக்கம் இலவசமாக அருளப்பட்டது. சற்றும் தகுதியற்ற சவுலுக்கு இலவசமாக மன்னிப்பு அருளப்பட்டது, நம்மிடமான வேனுடைய கிருபையை எடுத்துக்காட்டுமன்றோ?
மேலும் ஆயக்காரனாகிய சகேயுவும், சமாரியப்பெண்ணும், பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரனும் பாவ மன்னிப்பைப் பெற என்ன நிபந்தனைகளை நிறைவேற்றினார்கள். எதுவுமே இல்லை! அவர்களுள் எவருமே பாவ மன்னிப்பைப் பெறத் தகுதியுள்ளவர் அல்லர். ஆயினும் மன்னிப்பை;ப பெற எந்த நிபந்தனைகளையாவது நிறைவேற்றினரா? அல்லவே. இதுபோன்று பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஆனால் ஒன்றினைமட்டும் ஈண்டு குறிப்பிட விரும்புகிறேன். இயேசுவின் வலது பக்கத்தில் தொங்கிய கள்ளன் மரணம் அடையுமுன் பாவ மன்னிப்பைப் பெற்றான். அதற்கென அவன் ஏதேனும் நிபந்தனையை நிறைவேற்றினானா? இல்லையே! அவன் பெயர் பெற்ற பயங்கரப் பாவியாக இருந்தான். ‘ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்ற தனது விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் அருளுவார் என அவன் எதிர்பார்த்திருக்க முடியுமா? தேவனுடைய கிருபையினால் மட்டுமே அவன் மன்னிப்பைப் பெற்றான் அன்றோ? இரு கள்ளர்களுள் ஒருவன் மட்டும் மன்னிப்பைப் பெற்றமை தேர்ந்தெடுக்கும் கிருபைக்குச் சான்றாக அமைகிறதன்றோ?
ஆ! கிருபையின் வழிகள்தான் எத்தனை அதிசயமானவை. இயேசுவானவர் ஒருநாள் கண்ணியம் பொருந்திய பக்தியுள்ள வாலிபன் ஒருவனைச் சந்தித்தார் என திருமறையில் நாம் காண்கிறேம். அவன் நித்திய ஜீவனை அடையும் பொருட்டுச் சில நிபந்தனைகளை நிறைவேற்றுpவிட்டதாக எண்ணினான். ஆனால் அந்தோ! அவன் பாவ மன்னிப்புப் பெறாமலே ‘மனமடிந்து துக்கத்தோடு சென்றுவிட்டார். ஆனால் சற்றும் தகுதியற்றவனும் இழிவானவனுமான கள்ளனுக்கு இரக்கம் காட்டப்படுகிறது அல்லவா?”
நண்பனே! இந்தப் பாவ மன்னிப்பானது பாவிகளுக்கு இலவசமாக அருளப்பட்டாலும், இயேசுவானவர் அதனைச் சம்பாதிக்கச செலுத்திய விலைக் கிரயம் எவ்வளவு பெரிதென்று எண்ணிப்பார்த்தாயா? மிகச் சிறிய பாவத்திற்கும் கூட மன்னிப்பு சம்பாதிக்கப்பட்டது எவ்வாறு? இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனுவாய் அவதரித்து பிதாவினுடைய கட்டளைகளுக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிந்து இறுதியில் சிலுவை மரணத்திக்குத் தம்மை ஓப்புக்கொடுத்து இத்தனை நிபந்தனைகளையும் இம்மி பிசகாமல் நிறைவேற்றினதனால் அன்றோ நீ பாவ மன்னிப்பைப் பெற முடிந்தது? ஆ! பாவிக்கு மன்னிப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் பொருட்டு நமது இரட்சகர் எத்தனை பெரிய கிரயம் கொடுக்கவேண்டியதிருந்தது! அந்த மாபெரும் கிரயத்தை அவர் கொடுக்கும் அவ்வேளையில், அவர் மரிக்கும் தறுவாயில் கள்ளனுக்கு இலவசமான மன்னிப்பை அருளினதாலே நீதிமான்களுக்கு அல்ல பாவிகளுக்கே மன்னிப்பு இலவசமாக அருளப்படுகிறது என எடுத்துக்காட்டினார். பாவ மன்னிப்பு கிருபையினாலே அருளப்படுகிறது. யாதொரு நிபந்தனையுமின்றி அருளப்படும் மாபெரும் இரக்கமே கிருபையாகும். மன்னிப்பு இலவசமானது என்பதை நிரூபிக்க இச்சான்றுகள் போதுமானது என நம்புகிறேன். உங்களுக்கு நான் நினைவுறுத்தவிரும்புகிற வசனம், ‘நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம்” (ரோமர் 5:10). இச்சத்துருக்குள் செய்த எந்நன்மையாலும் மன்னிப்பு வருவதில்லை அன்றோ!
இரண்டாவதாக, பாவ மன்னிப்பானது முழுமையானது. ஒரு சிறிய பாவம் பாவியின் மீதி நியாயப்பிரமாத்தின் முழு சாபத்தையும் கொண்டுவரப்போதுமானது. எத்தனை கொடியதாயிருப்பினும், எவ்வளவு மோசமாயும், இழிந்ததாயுமிருப்பினும் அத்தனை பாவங்களையும் மன்னிக்கிற மன்னிப்பே முழுமையானது. அப்படியில்லை என்றால் அம்மன்னிப்பு பூரணமாகாது. ஒரே ஒரு பாவம் மன்னிக்கப்படாவிடினும் அவன் அழிவிற்குரியவனே! அந்தோ பரிதாபம்!
இயேசு கிறிஸ்துவின் திருரத்தமானது விலை மதிப்பற்றது (1.பேதுரு 1:9). கிறிஸ்துவினது மரணமானது ‘எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கவல்லது” (1யோவான்1:9). அதாவது ஒவ்வொரு பாவத்தினின்றும் அது எத்தனை கொடியதாயினும், மற்றும் எல்லா பாவங்களையும் அவை எவ்வளவு திரளாயிருப்பினும் அந்த இரத்தமானது சுத்திகரிக்கவல்லது. ‘நமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இறங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடங்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:18-19) என்று மீகாவோடு சேர்ந்து ஆர்ப்பரிப்போம்!
நண்பனே! பாவத்தில் உழன்று தவிக்கிறாயோ? மனமுறிந்து ‘என்ன செய்வேன்” என நடுங்கிக் கலங்குகிறாயோ?
கிருபையின் ஐசுவரியத்தை எண்ணிப்பார்! நீ புரிந்த ஏதோ ஓரு பாவத்தைக் குறித்தோ அல்லது எத்தனை திரள் என் பாவம் என எண்ணியோ மனமுறிவுக்கு இடம்கொடாதே. கடவுள் அதனை ஒரு பாவியின் தகுதியுடைமையினால் கொடுப்பதோ அல்லது தகுதியின்மையினாலே கொடுக்காமல் இருப்பதோ இல்லை. கடவுளின் கிருபை முற்றிலும் இலவசமானது. பூரணமானது! இப்பெருண்மையில் நீ சார்ந்து மனசாந்தி அடைவாயாக.
மூன்றாவதாக, இயேசு இரட்சகர் அருளும் பாவ மன்னிப்பானது நித்தியமானது. இதுவே பாவ மன்னிப்பானது பின் வலிக்கப்படாததும், மாற்றப்படக்கூடாததுமானது. பின் வலிக்ககப்படாததும், மாற்றுப்படக்கூடாததுமாகும். ‘ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையால் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்” என கர்த்தர் சொல்லுகிறார் (எபி.8:12). இது நிபந்தனையுடன் கூடிய வாக்குத்தத்தமல்ல. இவ்வாக்கு தன்னிகரற்ற இறைமை வாய்ந்தது! இது நிலைமாறாதது. இப்பாவ மன்னிப்பு ஒருவன் களங்கமற்ற பூரண வாழ்க்கை வாழ்வான் என்பதனை எதிர்பார்த்து அவனுக்கு அருளப்படுவது அன்று. அங்ஙனம் எதிர்பார்க்கப்படின் அப்பாவ மன்னிப்பானது நிலையற்றதாகிவிடுமன்றோ? இம்மன்னிப்பு பாவத்தைப் பரிகரித்த நமது ஆண்டவருடைய மரணத்தின் நித்திய தன்மையையும், கடவுளின் வாக்கு மாறாத உண்மையையும் பிரதிபலிக்கும் நித்திய ஈவாகும். ‘மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார் (சங்.103:12).
‘தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” (ரோம.8:33). இவ்வசனங்கள் நித்திய மன்னிப்பிற்கும் ஆணித்தரமான சான்றுகள். கடவுள் தம் பிள்ளைகள் பாவம் செய்யும்போது தண்டிப்பது அவர்கள் தங்கள் மன்னிப்பை இழந்துவிடுகின்றனர் என நாம் கருதலாகாது. அதற்கு மாறாக கடவுள் அவர்களைப் புறக்கணியாமல் அவர்கள் மீது அன்பும் கருசனையும் கொண்டிருக்கிறார் என்பதற்குச் சான்றே தண்டனை. விசுவாசிகள் மீண்டும் மீண்டும் பாவ மன்னிப்புக்கென மன்றாடும்போது அவர்கள் ஏற்கெனவே பாவ மன்னிப்பைப் பெறவில்லை என்பதைக் குறிக்கவில்லை. ஆனால் அது அவர்கள் மன்னிப்பின் நிச்சயத்தையும் உணர்வையும் பெறுவதற்கே ஆகும். அவர்கள் பாவஞ்செய்து மனந்திரும்பி பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புக்காகக் கெஞ்சும் பொழுதெல்லாம் புதிய புதிய மன்னிப்பின் செயல்களை ஆற்றுகிறார் என நாம் கருதவேண்டியஅவசியமில்லை. ஆனால் அவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் இருப்பதால் பாவ மன்னிப்பு ஏற்கெனவே தங்களுக்குரியது என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ளுதல் அவசியமாகும்.
ஆ! தேவ கிருபையிலிருந்து ஊற்றெடுத்துப் பிரவாகிக்கும் பாவ மன்னிப்பானது எத்தனை மகிமை பொருந்தியது! அது எத்தனை பூரணமானது! மிகவும் தகுதியற்ற பாவியும் பாவ மன்னிப்பைக் கேட்பதற்கு யாதொரு தடையுமில்லை. அந்தோ! மன்னிப்பே பெறமுடியாதவாறு என் பாவங்கள் மிகவும் அதிகமாயும் பெரிதாயும் இருக்கின்றன” என எவரும் கூறகாரணமில்லை.
‘ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலை நிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே” (ரோ.6:1). ஆனால் பாவ மன்னிப்புப் பெற்ற ஒருவன் ஆழ்ந்த நன்றிப்பெருக்குடன் ‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி. என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு….” (சங். 103:1-4) என ஸ்தோத்திர கீதத்துடன் ஆண்டவரைத் துதிப்பான்.
நண்பனே! இத்தகைய பாவ மன்னிப்பே உனக்கு ஏற்றதன்றோ? இவ்வொப்பற்ற மன்னிப்பைப் பெறத்துடிக்கிறாயா? அவ்வாறாயின் சிலுவையில் மரித்த இயேசுவை நோக்கிப்பார்! பாவிகளுக்காக தம்மை சிலுவை மரத்தில் பலியாக்கிச் சம்பாதிக்கப்பட்ட நித்திய, இலவச மன்னிப்பையே நீ நாடுகிறாய் அல்லவோ? இன்றே அதனைக் கேட்டு பெற்றுக்கொள் (1.யோவான் 1:9). மன்னிப்பின் மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றியை கடவுளுக்குச் செலுத்து.
நண்பனே! நீ ஏற்கெனவே பாவ மன்னிப்பைப் பெற்றிருக்கிறாயா? அவ்வாறாயின் அது உன் இருதயத்தை கர்த்தர் பேரிலான தூய அன்பால் நிரப்பி உனக்குத் தீங்கு விளைவிக்கும் எவர்பேரிலும் மனதுருக்கமும் பொள்ளச்செய்யும். பாவ மன்னிப்புப் பெற்றதாக பாவனை செய்துகொண்டு மற்றவர்களை மன்னிக்காத எவனும் ‘பொய்யனாவான்” (1.யோவான் 4:20, மத்.6:14-15)
‘எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
எளியன் மேல் இரங்கையனே.
ஆயங்கொள்வோன்போல், பாவ ஸ்திரீபோல்,
அருகிலிருந்த கள்ளன்போல்,
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை, பரனே”











