- கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும்
முதற் பகுதி
பரிசுத்தமே உருவான கடவுளால் பாவியொருவன் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்குவதே ‘நீதிமானாக்கப்படுதல்” என்கிற கோட்பாடு. இது ஒரு மிக முக்கிய சத்தியமாம். இதைக் குறித்த தவறான கருத்துக்கள் ஆவிக்குரிய வாழ்வில் கேடுகளை விளைவிக்கலாம். எனவே இதனைக் கவனமாகவும் ஆழமாகவும் ஆராயவேண்டும்.
பாவ மன்னிப்பையும், நீதிமான்களாக்கப்படுவதையும் நான் பிரித்து எழுதினாலும், அவைகள் பிரிக்கக்கூடாதபடி ஒன்றுக்கொன்று இணைந்திருக்கிற ஓப்பற்ற தேவ ஆசீர்வாதங்களாகும். ஏனெனில் மன்னிக்கப்பட்டவன் எவனும் நீதிமானாக்கப்பட்டவன். மற்றும் நீதிமானாக்கப்பட்டவன் எவனும் மன்னிக்கப்பட்டவனே. இருப்பினும் இவ்விரு உண்மைகளிலும் வித்தியாசங்கள் உண்டு. மன்னிக்கப்பட்ட பாவி இன்னும் மீறினவனாகவே கருதப்படுகிறான். ஆனால் நீதிமானாக்கப்பட்டவன் பரிசுத்தவானாக எண்ணப்படுகிறான். ஏனெனில் மன்னிப்பு தண்டனை நீக்கப்பட்டதையும், நீதிமானாக்குப்படுதல் கடவுளது நீதியின் பலனுக்குத் தகுதியுள்ளவனாக மாறினதையும் குறிக்கின்றது.
‘நீதிமானாக்கப்படுதல்” என்பது சட்ட வார்த்தையாகும். அது ஒருவனை அவனது இயல்பு தன்மையின்படி நேர்மையும் நீதியுமள்ளவன் என கூறுவதல்ல. ஆனால் அவன் குற்றமற்றவன் என தீர்ப்பளிப்பதுவே. அதாவது ‘தண்டிக்கப்படுதல் என்பதற்கு எதிரான சொல்லே ‘நீதிமானாக்கப்படுதல்” ஒருவன் மீது தண்டனை தீர்ப்புக் கூறுவதனாலே அவன் குற்றவாளியாக்கப்படுவதில்லை. அந்தத் தீர்ப்பினால் அவன் தண்டனைக்குப் பாத்திரமாகிறான் என்றே அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே நீதிமானாக்கப்படுதல் ஒருவன் பரிசுத்தமானவன் என்று தீர்க்கிறதில்லை. ஆனால் அவன் ‘ஈடு செய்யப்படுவதற்கு” தகுதி பெறுகிறான் என்றே அதன் பொருளாகும்.
மனிதர் ‘நீதிமான்களாக்கப்பட இரு வழிகள் உண்டு. நியாயப்பிரமாணத்தை மீறாதவனாக ஒருவன் இருப்பானாகில் அவன் அந்த நியாயப்பிரமாணத்தின்மூலம் நீதிமானாக்கப்படுவான். ஆனால் ‘நீதிமான் ஒருவனாகிலுமில்லை”, ‘எல்லாரும் பாவஞ்செய்தோம்” என சத்திய வேதம் கூறுகிறது (ரோமர் 3:10,23). ‘நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:12). ஆகவே நியாயப்பிரமாணத்தின்மூலம் ஒருவனாகிலும் நீதிமானாக்கப்படுதல் இயலாது என்பது உறுதி. ஆனால் ‘நியாயப்பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்ட்டிருக்கிறது” என திருமறை எடுத்துரைக்கிறது (ரோமர் 3:21). இதுவே தேவனுடைய கிருபையின் மூலமாக ஏற்படுகிற ‘நீதிமானாக்கப்படுதல்” அதனையே கிறிஸ்துவின் நற்செய்தி வெளிப்படுத்துகிறது.
‘தேவனே….. நீதிமான்களாக்குகிறவர்” என நாம் திருமறையில் காண்கிறோம் (ரோமர் 8:33). ஆனால் நாம் இந்தத் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்து அவரைக்கோபப்படுத்தியுள்ளோம். எனவே நாம் தகுதியுள்ளவர்களாயிருப்பதனால் அல்ல, கடவுள் கிருபை நிறைந்தவராய் இருப்பதாலேயே நீதிமானாக்கப்படுகிறோம்.
திரித்துவத்தில் உள்ள மூவருக்குமே நம்மை நீதிமான்களாக்குவதில் பங்குண்டு. நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு பிதாவாகிய கடவுளே திட்டம் வகுத்தார். நியாயப்பிரமாணத்தை நமக்குப் பதிலாக பூரணமாய் நிறைவேற்ற தமது திருக்குமாரனையே பாவிகளுக்காக தந்தருளினார். தேவத் திருமைந்தன் தமது பிதாவினுடைய சித்தத்திற்குப் பூரணமாகக் கீழ்ப்படிந்து, பாவிகள் தேவப் பிரமாணத்தை மீறினதினால் ஏற்பட்ட சாபத்தைத் தம்மீது ஏற்றுக்கொண்டார் (2 கொரி 5:21). இந்தத் திவ்விய நற்செய்தியின் இலவசமான ஈவை பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு வெளிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு விசுவாசம் அளிக்கிறார். ஆகவே நம்மை ‘ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பவன் யார்?” என அப்போஸ்தலனாகிய பவுல் வெற்றி முழக்கம் செய்வதுபோல நாமும் கூறலாமே (ரோமர் 8:34). ஆம், இந்தத் திரித்துவ கடவுள் நம்மை நீதிமான்களாக்கினால் அதற்கு எதிர்த்து மறுப்பவன் யார்?
பாவிகளுக்கும், தெய்வ பக்தியற்றவர்களுக்குமே இந்த அற்புதமான சிலாக்கியம் அருளப்படுகிறது என வேதம் கூறுகிறது. ஏனெனில் ‘ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாம் வைக்கியவனாயிருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:3). தேவன் கிருபை நிறைந்தவராக இருப்பதாலேயே நீதிமானாக்கப்படுதல் நிகழ்கிறது” இதனையே பவுல் ‘இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்குகிறார்” எனக்கூறுகிறார்” (ரோமர் 3:24). மனிதனில் இருப்பதாக கருதப்படும் நன்மையை முற்றிலும் மறுத்து (ரோமர் 7:18). முழுவதும் இலவசமாக நீதிமானாக்கப்படுதலையே இவ்வசனம் கூறுவதன் மூலமாக இந்த ஆசீர்வாதமானது நம்மிலுள்ள எந்தக் காரணத்தினாலாவது அல்லது தகுதியினாலானது அருளப்படுவதல்ல என்றறியலாம். பாவி குற்றமற்றவன் என தீர்ப்பளிக்கப்படுவதற்கு அவன் கடவுளின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ நிறைவேற்ற வேண்டிய யாதொரு நிபந்தனையோ புண்ணியமோ இல்லவே இல்லை. அதனைப் பெற ஒருவருக்கும் உரிமையும் கிடையாது. தேவனுடைய கிருபை மட்டுமே போதுமானதாகும்.
பரிசுத்தமும் நீதியுமுள்ள கடவுள் பாவியின் அவபக்தியைப் பொருட்படுத்தாமல் அவனை நீதிமானாக்குவது எங்ஙனம்? நேர்மையற்ற ஒருவனை எவ்வாறு நீதிதான் எனத் தீர்க்கலாம்? இது நீதி நியாயத்திற்கு விரோதமானதல்லவோ? மேலும் கடவுளின் பார்வையிலே ஒருவன் நீதிமானாகக் கருதப்படவேண்டுமானால் அவனது நீதி பூரணமானதாக இருக்கவேண்டுமே. ஏனெனில் கடவுளின் நீதி சட்டம் பரிபூரணத்தையே கேட்கிறது. ஆனால் பாவி இப்பூரணத்தை எப்படி அடையமுடியும்? ‘எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” (ரோமர் 3:20). ஏnனில் நியாயப்பிரமாணது ஒருவனைப் பாவி எனத் தீர்ப்பளிக்குமே தவிர அவனை நீதிமானாக்காது. ‘நியாயப்புpரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்” (கலா 3:10). ‘ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” (யாக் 2:10). ஆகவே நியாயப்பிரமாணத்தின் வாயிலாக பாவியொருவன் பூரணத்துவம் வாய்ந்த நீதியைப் பெறுவது என்பது இயலாத ஒன்று.
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுவதன் மூலமாக ஒருவன் நீதியைப் பெறக்கூடுமானால் இயேசுவானவர் இவ்வுலகில் அவதரித்திருக்கவேண்டிய அவசியமில்லையே. மனிதர் தங்கள் மேன்மையான சுய நீதியின் வாழ்க்கையினால் நீதிமான்களாக்கப்படக்கூடுமானால் ‘கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே” (கலா 2:21). ‘ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோமே” என்Nறு பவுல் கூறுகிறார் (ரோமர் 3:28).
ஆயினும் நமது விசுவாசம்கூட நாம் நீதிமான்களாக்கப்படுவதற்குக் காரணமல்ல! ஏனெனில் விசுவாசத்தின் காரணமாக அல்ல: ஆனால் விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்களாக்கப்படுகிறோம். ஏனெனில் ஒருவனும் பூரண விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. விசுவாசம் நீதிமான்களாக்கப்படக் காரணமானால் விசுவாசிகளுள் சிலர் குறைந்த விசுவாசத்தினாலம், சிலர் சற்று அதிகமான விசுவாசத்தினாலும் நீதிமான்களாக்கப்படுகின்றனர் எனக் கூற நேரிடும். அது அறிவீனம் அன்றோ? மேலும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுதல், என்ற சொற்தொடர் விசுவாசத்தினால் நீதியைச் சம்பாதிக்கலாம் என்கிற தவறான கருத்திற்கு வழி வகுக்கும். ஆனால் இப்படி இல்லை. ‘தேவ நீதி…. விசுவாசத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” (ரோமர் 1:17). விசுவாசம் கிரியை அல்லவே. விசுவாசம் கிருபையின்றி தன்னில்தானே நம்மை நீதியுள்ளவர்களாக்க இயலாது. இன்று பலர் கிறிஸ்துவின் மரணம் நியாயப்பிரமாணத்திற்கு முடிவு கட்டியது: ஆகவே நாம் கிறிஸ்துவின் எளிய பிரமாணத்தைக் கடைப்பிடித்தால் ‘நீதிமானாக்கப்படுவதைச்” சம்பாதிக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு! நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம். பரிபூரணத்தைக் கேட்கும் கடவுள் அறைகுறையான கீழ்ப்படிதலால் ஒருவனை நீதிமானாகத் தீர்க்க முடியாது அன்றோ! ஆகவே கிரியையினால் அல்ல கிருபையினாலேயே நீதிமான்களாக்கப்படுகிறோம்.
பரிசுத்த ஆவியானவராலே நம்மில் உருவாக்கப்பட்ட பரிசுத்தத்தினாலோ அல்லது அவர் துணை கொண்டு நாம் செய்யும் நற்கிரியைகளிhனலோ கடவுள் நம்மை நீதியுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுவதில்லை. இந்தப் பரிசுத்தமானது நமது சொந்த முயற்சியினால் உண்டானது என எண்ணினோமானால் அதனை நாம் ‘சுய நீதி” என அழைக்கலாம். ஆனால் பவுல் அப்போஸ்தலன், தான் ‘சுய நீதியையுடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாய்” இருக்கவே விரும்பினார் (பிலி 3:9).
நமது சுய நீதியே நாம் நீதிமான்களாக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கிறதென்று கூறுவோமாயின் நமது சொந்த முயற்சியினால் கடவுளின் அங்கீகரிப்பைச் சம்பாதிக்க முற்படுகிறவர்களாக இருப்போம். அவ்வாறாயின் நாம் நம்மைக் கிரியையின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படுத்துகிறோம். கிரியையின் உடன்படிக்கையானது கிருபையின் உடன்படிக்கைக்கு நேர்மாறானது. ஆனால் கிரியையின் உடன்படிக்கையானது கடவுள் ஆதாமோடு செய்துகொண்ட ஏற்பாடாகும். அதன் மூலமாக கடவுள் மனிதன் தமக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிவதே வாழ்விற்கான நிபந்தனையாக்கினார் (ஆதி 2:16-17). ஆனால் கிருபையின் உடன்படிக்கையோ, கடவுள் யாதொரு நிபந்தனையுமின்றி பாவிகளை ஆசீர்வதிக்க வாக்கு அருளின ஏற்பாடாகும். இந்தக் கிருபையின் உடன்படிக்கையானது ‘வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கை” என்றே அழைக்கப்படுகிறது (எபே 2:12). ஏக சக்கராதிபதியாகிய கடவுள் மனிதனிடம் பூரணத்துவம் நமது நடத்தையிலோ, விசுவாசத்திலோ, நற்கிரியையிலோ காணப்பட இயலாத நிலையில் நாம் நீதிமானாக்கப்படுதல் எங்ஙனம்? நமக்குப் பதிலாக ஒருவர் சகலத்தையும் நிறைவேற்றி நமது பேரிலே நீதியைச் சாட்டுவரானால் அது சாத்தியமாகும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினது ‘கீழ்படிதலினாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்” (ரோமர் 5:19). மேலும் ‘நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்….” (ரோமர் 5:9). இயேசு கிறிஸ்துவினது மீட்பின் கிரியையானது நமது கணக்கில் எழுதப்பட்டிருப்பதால் நாம் தேவனுடைய கிருபையினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுகிறோம்.
இரண்டாம் பகுதி
விசுவாசி ஒருவன் தனது சுய நீதியினால் அல்ல, வேறொருவர் அருளும் நீதியானாலேயே நீதிமானாக்கப்படுகிறான் எனச் சத்திய வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது. நமது இரட்சகராகிய கிறிஸ்து இயேசு பிதாவுக்குக் கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணத்தை முற்றிலும் நிறைவேற்றினார். அவருடைய பரிகார மரணத்தினாலே நமது பாவங்கள் ஈடுசெய்யப்பட்டன. ஆகவே நமக்குபப் பதிலாக இயேசு கிறிஸ்துவினது வாழ்க்கையின் நீதியும் ஈடுசெய்யும் மரணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்படமுடியும். பிதா தம் பிரமாணங்கள் நிறைவேற்றப்பட்டு காக்கப்பட்டதால் பூரண திருப்தி அடைகிறார். கிறிஸ்துவே அவைகளை நிறைவேற்றினார். இந்த முறைமையின்படியே கடவுள் ஆபிரகாமை நீதிமானாக்கினார். கடவுள் ஆபிரகாமை ஊர் என்னும் பட்டணத்திலிருந்து புறப்பட்டு செல்லுமாறு கட்டளையிட்டபோது அவன் முற்றிலுமாகக் கீழ்ப்படிந்தபோதிலும் (ஆதி 12:1): தன் ஒரே குமாரனாகிய ஈசாக்கைப் பலியிடும்படியான கட்டளைக்கு அடிபணிந்தபோதிலும் (ஆதி 22:2): ‘தேவனுடைய சிநேகிதன் என்ற பெயரை அவன் சம்பாதித்தபோதிலும்” (யாக் 2:23): அவனுடைய கீழ்ப்படிதலினால் அவனது விசுவாசம் மெய்யானது என நிரூபிக்கப்பட்டபோதிலும்: மேலும் அவனது நற்கிரியைகள் ஒரளவில் அவனை நீதிமான் என நிரூபித்தாலும் கடவுள் ஆபிரகாமை ஏற்றுக்கொள்ளுவதற்கு இவை ஒன்றுமே காரணமாக அமையவில்லை. ஏனெனில் ‘ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்ககப்பட்டானாகில் மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு (ரோமர் 4:2). ஒருவேளை மற்ற மனிதர்களுக்குமுன் அப்படிச் செய்ய அவனுக்கு ஏதுவுண்டு. ஆனால் கடவுளுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. வேத வாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது (ரோமர் 4:3). பவுல் மேற்கொண்டு வலியுறுத்துவது ‘ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5). இவ்வசனத்தின்படி கீழ்ப்படிதலினால் நற்கிரியைகளைச் செய்த பின்னரும்கூட ஆபிரகாம் அவபக்தனாகவே கருதப்படுகிறான். எனவே தேவ நீதியானது அவன் கணக்கில் எழுதப்பட்டது. ‘அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது”+ (ரோமர் 4:23). நமது இரட்சகரது மீட்பின் கிரியையானது நம்முடைய கணக்கிலும் எண்ணப்படும். எனவே அக்காலத்தில் ஆபிரகாமை எவ்விதம் நீதிமானாக்கினாரோ அவ்விதமே இக்காலத்திலும் விசுவாசிகளுக்குத் தம் நீதியைச் சாட்டி அவர்களை நீதிமான்களாக்குகிறார்.
பவுல் தாவீதையும் உதாரணமாக எடுத்துக் கூறுகிறார். தேவனுடைய கட்டளை முற்றிலுமாகக் கைக்கொண்டதால் ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என தாவீது உரைக்கிறானா? அல்லவே அல்ல! ‘கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான் (ரோமர் 4:6-8) என பவுல் தெளிவுற விளக்குகிறார்.
இவ்வாறு நம்மில் சாட்டப்பட்ட நீதி, நியாயப்புpரமாணத்தினால் பெறப்படாத நீதி, நற்கிரியைகளினால் சம்பாதிக்குப்படாத நீதி என்றே பவுல் இந்நீதியைக் குறித்து நமது நிருபங்களில் குறிப்பிட்டுள்ளார். இச்சத்தியத்தையே ஆதி கிறிஸ்தவ சபை விசுவாசித்தது. நாம் தேவனுடைய கிருபையினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுகிறோம்.
ஆபிரகாமைப்பற்றியும், தாவீதைக்குறித்தும் பவுல் கூறுவதைக் கண்ட நாம், அவர் தமது சொந்த அநுபவங்களைக் குறித்து பிலி 3:4-9 வசனங்களில் விவரித்திருப்பதைச் சற்று ஆராய்வோம். பூரண நீதியுள்ளவர்களைத் தவிர வேறு ஒருவரும் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பதை முழு திட்டமாக கூறுகிறார். நீதி இருவகைப்படும். ஒன்று ‘நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதி” எனவும், மற்றொன்று, ‘ கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதி” எனவும் அவர் குறிப்பிடுகிறார். பவுல் அப்போஸ்தலன் பெற்றுக்கொண்டது கடவுளால் அருளப்பட்ட நீதியாகும். தான் தேவ கிருபையினால் நீதிமானாக்கப்பட்டேன் என்றே பவுல் அறிக்கை செய்கிறார்.
‘நீதிமானாக்கப்படுதல்” முற்றிலும் கிருபையின் மூலமாக அருளப்படுகிறதையும் அது அபாத்திர பாவிகள்மீது காட்டப்படுவதையும், மேலும் அது ஒருபோதும் அவர்களால் சம்பாதிக்கப்பட இயலாதது என்பதையும் நிரூபிக்கும் பல பகுதிகளை வேதாகமத்திலிருந்து எடுத்துக்காட்டலாம். ஆனால் ஈண்டு சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலாவதாக, அபாத்திர பாவிகளே நீதிமாக்களாக்கப்படுகின்றனர். ஆகையால் தங்களுடைய நற்செயல்களின் காரணமாக அவர்கள் மன்னிப்பைப் பெறமுடியாது. மேலும் அந்நீதியை நீதிமான்களாக்கப்பட வேறு எந்த விசுவாசிகளுடைய நற்செயல்கள் மூலமாகவும் அவர்கள் பெற இயலாதது. மானிடர்களாகிய நாம் ஒருவர் மற்றவருக்கு நீதியை அவ்வாறு கொடுக்க முடியாது. எனவே இயேசு கிறிஸ்துவினது முழுமையும், முடிவற்றதுமான நீதியானது நம் கணக்கில் எழுதப்பட்டால் மட்டுமே நாம் நீதிமான்களாக்கப்பட முடியும். இதுவே ‘பதிலாகக் கூடுதல்” என்றழைக்கப்படுகிறது.
இரண்டாவதாக, ரோமர் 5:12-21 வசனங்களில் ஆதாமுடைய பாவத்தினால் நாம் அழிவுக்குட்பட்டதைக் குறித்து பவுல் எடுத்துரைக்கிறார். வர இருக்கும் மேசியாவுக்கு ஆதாம் ஒரு முன்னடையாளமாகவே இருந்தான் என 14ம் வசனம் கூறுகிறது. ஆதாமுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை யாதெனில் ஆதாமுடைய குற்றமானது மனுக்குலம் அனைத்தின்பேரிலும் சாட்டப்பட்டதுபோலவே, கிறிஸ்து இயேசுவின் கீழ்ப்படிதலானது அவரது ஆவிக்குரிய சந்ததியின்மீது சாட்டப்படுகிறது. ஒருவருடைய மீறுதலினால் அநேகர் பாவத்திற்குள்ளானார்கள். கிறிஸ்துவினுடைய கீழ்ப்படிதலினால் அநேகர் நீதிமான்களானார்கன். இவ்விரண்டிலும் ஒருவருடைய கிரியையானது பிறர்பேரில் சாட்டப்படுவதே முறையாக அமைகிறது.
மூன்றாவதாக, நான் விளக்க விரும்பும் சத்தியமானது பின்வரும் வசனத்தில் தெளிவாக்கப்படுகிறது. ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக (தேவன); பாவமாக்கினார்” (2.கொரி 5:21). கிறிஸ்து இயேசுவானவர் பாவமாக்கப்பட்டது அவர் பாவஞ்செய்ததினால் அல்ல என்பது தெளிவாகிறது. தம்முடைய பாவத்திற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. நம்முடைய பாவத்தை அவர் சுமப்பதற்கு ஒரே வழி நம்முடைய பாவம் அவர்மேல் சாட்டப்படுவதாகும். பாவம் அறியாத அவர்மேல் பாவம் சுமத்தப்படுவதாலேயே அவர் பாவமாக்கப்பட முடியும் என்பது போல், குற்றுவாளியான ஒருவர்பேரில் நீதி சுமத்தப்பட்டால் மட்டுமே அவர் நீதியுள்ளவராக்கப்பட முடியும். கிறிஸ்துவை எந்தக் குற்றுமான செயலும் பாவமாக்காதது போல், நமது எந்தப் பரிசுத்த செயலும் நம்மை நீதியுள்ளவராக்கமுடியாது. நாம் நமது புண்ணியத்தினால் நீதிமான்களாக்கப்படுவதில்லை. தேவனே தமது கிருபையினால் நீதியை நம்மீது சாட்டுகிறார்.
நான்காவதாக, நன்மை வரும்படிக்கு தீமை செய்யலாம் என்று பவுல் போதித்து தேவனுடைய கட்டளைகளை மீறினதாகவே அவர்பேரில் குற்றம் சாட்டப்பட்டது (ரோமர் 3:8). எனவே நற்கிரியைகள் செய்வதன் மூலமாக நீதியைப் பெறமுடியும் என பவுல் பிரசங்கிக்கவில்லை என்றறியாலாம். நீதியைச் சம்பாதிக்க நற்கிரியைச் செய்யவேண்டுமென பவுல் ஒருபோதும் பிரசங்கிக்கவில்லை. இல்லை என்றால் அவர் மீதான இக்குற்றச்சாட்டு பொய்யாகும். மாறாக நீதியைச் சம்பாதிக்க நற்கிரியை ஆற்றவேண்டும் எனப்போதித்த கள்ள போதகர்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கவேணடாம் எனக்கூறவில்லை. இக் கள்ளப் போதகர்களுக்கு மறுமொழியாகவே பவுல் விசுவாசி நீதிமானாக்கப்படுவதற்கு நற்கிரியை காரணமல்ல. ஆனால் நீதிமானாக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் நற்கிரியை ஆற்றுவான் எனக் கூறுகிறார்.
ஐந்தாவதாக, ஈவாக அருளப்பட்ட நீதியினாலேதான் நீதிமான்களாக்குப்படுகிறோம். நாம் கடவுளிடமிருந்து நீதியைப் பெறுகிறோம் (ரோமர் 5:17). கடவுளின் ஈவுகளை நாம் ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. எனவே விசுவாசிகள் நீதிமான்களாக்கப்படுவதற்குரிய தகுதியை நற்கிரியைகள் மூலமாகச் சம்பாதிக்க முடியாது.
ஆறாவதாக, சுவிசேஷத்தின் நோக்கம் தேவனுடைய நீதியை வெளிப்படுத்துவதும் (ரோமர் 1:17). கடவுளது கிருபையின் ஐசுவரியத்தை நிகழ்த்திக் காட்டுவதுமேயாகும். ஏனெனில் விசுவாசி இரட்சிப்பிற்காக முழுவதும் இயேசுவையே சார்ந்திருக்கிறான். விசுவாசி தான் நீதிமானாக்கப்பட்டதற்குக் காரணமாக தனது புண்ணிய கிரியைகளைக் காட்டத் துணியானாக. மோசேயைப்போல மனத்தாழ்மையும், யோபுவைப்போல பொறுமையும், பவுலைப்போல ஆர்வாதத்தையும், யோவானைப் போல அன்பையும் ஒருவேளை அவன் பெற்றிருப்பினும் இவைகள் காரணங்கள் அல்ல. நீதிமானாக்கப்பட்டதின் விளைவுகளே ஆகும். நாம் நீதிமான்களாக்குப்படுவது கடவுளின் மகிமையையே வெளிப்படுத்துகிறது.
சிலர் தங்கள் சுயநீதியை நிலைநிறுத்த அயராது முயலுகிறார்கள் (ரோமர் 10:3). அந்தோ! இம்முயற்சியில் அவர்கள் சோர்ந்துபோகிறார்களே. நண்பனே! இன்னும் நீ உன் சுயநீதியையும் உன் கீழ்படிதலையும் நம்பி அவற்றின் துணைகொண்டு தேவாதி தேவனைத் திருப்பதி செய்யலாம் என எண்ணுகிறாயோ? என்னே பேதமை! இதோ, தேவனுடைய திவ்ய மகத்துவத்தை ஈண்டு நான் எடுத்துரைக்கிறேன். அவர் திருச் சமுகத்தில் தூதர் குழாம் தமது முகங்களை மூடிக்கொண்டு ‘பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என ஓயாது தொனிக்கின்றனர். அக்கினிச் சுவாலையைப்போல் ஒளி வீசும் விழிகள் படைத்தவர் அவர். தம் மகிமையை வேறொருவருக்குக் கொடாத தன்னிகரற்ற இராஜதிராஜன் அவர். அவருடைய உக்கிர கோபாக்கினைக்கு முன்பாக எதிர்த்து நிற்பவன் யார்? பூமியும் வானமுமே எவருக்கு முன்பாக அஞ்சி விலகி ஓடுமே. பரிசுத்தமும் பயங்கரமுமான அவருக்கு முன்பாக நீ எடுத்துரைக்கக்கூடிய நியாயங்களும் வாதங்களும் உளவோ (வெளி 1:12-17)? யோபு யாது கூறுவான்? நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும். நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சி கொடுக்கும். (யோபு 9:20) எனப் பக்கதனாகிய யோபு தன் நிலையை உணர்ந்து கூறவில்லையா? ‘ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்” என தாவீது அரசன் கெஞ்சி மன்றாடவில்லையா? (சங் 143:2).
‘ஐயோ! நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என ஏசாயா தீர்க்கனும் புலம்புகிறனோ (ஏசா 6:5). பரிசுத்தவான்களாகிய யோபு, தாவீது, ஏசாயா போன்றவர்கள் இவ்வாறாக தங்களுடைய தகுதியின்மையை உணர்ந்து இறைஞ்சுகையில் நீ உன்னுடைய அரைகுறையான நற்கிரியைகளை நம்பிக்கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா? அல்லது பொருத்தமானதா? இந்தப் பக்தர்களுடைய கீழ்ப்படிதலே தேவனுடைய பார்வையின்போது உன்னுடைய கீழ்படிதலானது எவ்வளவு தரக்குறைவானதாக இருக்கவேண்டும்! தேவனுடைய கிருபையினால் நமக்கு அருளப்படுவதும், விசுவாசத்தின் மூலமாகப் பெறப்படுவதுமான பரிபூரண நீதியையும், தெய்வீக கீழ்ப்படிதலையும் நாம் கொள்ளுவது ஆ எத்தனை பேரின்பம்.
‘பாவியாம் எனை மேவிப்பார், ஐயா – இயேசுநாதா , ஸ்வாமி,
பட்சமாக என் பாவந்தீர், ஐயா,
எந்தன் நீதி ஒரு கந்தை அல்லவோ – இயேசுநாதா, ஸ்வாமி,
என் செய்வேன்? மறுதஞ்சம் இல்லையே”










