- கிருபையும் நமது சுவிகாரமும்
கடவுள் விசுவாசிகளை நீதிமான்களாக்குவதோடமையாது அவர்களைத் தமது சுவிகாரப் புத்திரர்களாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார். விசுவாசி ஒருவர் தேவனுடைய நண்பனாக மாறுவது அவரது மிகுந்த இரக்கமேயாயினும் அவருடைய சுதந்தரத்தில் முழுப் பங்குமுள்ள சுவிகாரப் புத்திரனுமாக இருப்பது எத்துணை அற்புதமானது!
ஆதிகாலத்தில் கிரேக்க நாட்டிலும், ரோம நாட்டிலும் வாழ்ந்த செல்வந்தருக்குச் சொந்ந பிள்ளை இல்லாவிடில் அவர் வேறு குடும்பத்தைச் சார்ந்த பிள்ளையைத் தமது சுவிகாரப் புத்திரனாக ஏற்று எல்லாரும் அறியும் வண்ணம் சட்டபூர்வமாக தமது உடமைகள் யாவற்றிற்கும் அவரைச் சுதந்தரர் ஆக்கிக்கொள்ளுவது வழக்கம். அவ்வாறு தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் அவ்விதம் சுவிகாரம் பெற எவ்வுரிமையும் கொண்டாட முடியாது. எனினும் சுவிகாரம் பெற்ற பின்னர் தமது பழைய குடும்பத்தோடுள்ள உறவை முற்றும் இழந்து தமது புரவலருக்கு உரிமையுடைய வாரிசாக மாறிவிடுவார்.
விசுவாசிக்கு அருளப்படும் கிருபையின் ஐசுவரியம் எவ்வாறு வளர்ந்தோங்குகிறது எனக் காண்போம்:
அவர் நமக்கு மன்னிப்பு அருளும்போது
நாம் அவரது நண்பர்களாகிறோம்
அவர் நமக்கு நீதியைத் தரிப்பிக்கும்போது
நாம் நீதிமான்களாகிறோம்.
அவர் நம்மைச் சுவீகரிக்கும்போது
நாம் உரிமையுடைய சுதந்தரவாளிகளாகிறோம்.
சத்திய வேதம் விசுவாசிகளை கடவுளின் பிள்ளைகளென அழைக்கிறது. ஏனெனில் அவர்களும் தேவனால் பிறப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் மணவாட்டியாக இணைக்கபட்டு தெய்வீகக் குடும்பத்தில் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர். அப்போஸ்தலனாகிய யோவான் ‘நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று கூறுவது எத்தனை பொருத்தமானது! (1யோவான் 3:1).
‘இந்த அற்புதமான நன்மைகள் விசுவாசிகளுக்கு அருளப்படுவது அவர்களுடைய தகுதியினால் அல்லவே அல்ல, மாறாக கடவுள் கிருபை காட்ட சித்தங்கொண்டபடியினாலேயே ஆகும். பவுல் அப்போஸ்தலன் கூறுவதற்கிணங்க, தேவன் பிரியமானவருக்குள் நாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் தமக்குச் சுவிகாரப் புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபேசி.1:5-6). விசுவாசிகளை தேவன் தமது குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் எடுத்துக்கொள்ளுவதின் நோக்கம் யாதெனில் அவருடைய கிருபையின் மாட்சிமை வெளிப்பட்டு போற்றுப்படுவதற்கே.
கடவுளால் பிள்ளைகளாக மகவேற்பு செய்யப்படுகிறவர்கள் முன்னர் அவருடைய பகைவரும், அவருக்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும், மரணத் தண்டனைக்குப் பாத்திரருமானவர்களே. தேவ கோபாக்கிணையின் மக்கள் அவருடைய மகிமைக்குச் சுவிகாரப் புத்திரராக்கப்பட்டது அவரது வியத்தகு கிருபையின் அற்புதச் செயலன்றோ? விசுவாசி ஒருவர் தேவனுடைய சுவிகாரப் புத்திரராக ஏற்றுக்கொள்ளப்படுவதன் பயனாக அவர் பெறும் தனிச்சிறப்புரிமைகளை ஆராய்ந்தோமானால் கடவுளின் கிருபையானது எத்தனை அதிசயமானது என்பதை நாம் அறியலாம்.
- விசுவாசிகளின் புதியத் தன்மை: விசுவாசிகள் பணியாளர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது அவருடைய புத்திரர்கள் என அழைக்கப்படும் கண்ணிய நிலையை எய்தியுள்ளார்கள். இது ஒருகாலமும் மாறாத நிலையாகும். மேலும் விசுவாசிகள் அரசர்கள் எனவும், ஆசாரியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
- கிறிஸ்துவுடன் ஒப்பற்ற அன்பு: விசுவாசிகளுக்கு இயேசு கிறிஸ்துவோடு தனிச்சிறப்புhன உறவு உண்டு. அவர்கள் கிறிஸ்துவினது சகோதரர்களாக மட்டுமல்ல, அவருடைய மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். இந்த ஒப்பற்ற இணைப்பு ஒருபோதும் அழியாதது.
- விசுவாசிகளின் மிக மேன்மையான சுதந்திரம்: இவ்வுலக வாழ்வில் அவர்கள் கடவுளின் எல்லாவித பாதுகாப்புpற்கும் ஆசீர்வாதங்களுக்கும் பாத்திரவான்கள் ஆவது மட்டுமல்ல, மகத்துவ கடவுளின் சகல சம்பூரணத்துவத்திற்கும் வாரிசுகளாகின்றனர்.
- விசுவாசிகள் தேவ ஆவியானவர் தம்முள் உறையும் மாபெரும் பேற்றினையும் பெற்றுள்ளார்கள்: இவரே சுவிகாரம் அளிக்கும் ஆவியானவர் (ரோம 8:15). அவரே அவர்களுடைய மறுமையின் மகிமைக்கு அச்சாரமாவர் (எபேசி.1:14). மேலும் ஆவிக்குரிய வாழ்வு வாழத் தெய்வீக ஆற்றல் அளிப்பவரும் அவரே.
அன்பனே! அந்தச் சத்தியங்களினால் நீ பெறும் பயன்யாது? நீர் ஒரு கிறிஸ்தவரானால் நான் இதுகாறும் எடுத்துரைத்த பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், சுவிகாரம் ஆகிய அருள்கொடைகளை அநுபவித்திருக்கிறீரா? அவ்வாறு அநுபவித்தால் மட்டுமே தேவனுடைய பிள்ளை என்று நீர் அழைக்கப்பட முடியும். இல்லாவிடில் இன்னும் நீர் சாத்தானின் பிள்ளையாகவே இருக்கிறீர். இவ்வுண்மையை ஒப்புக்கொள்வீரா? தேவனுடைய புத்திரருக்கேற்று வழிகளில் நடந்து செல்வீராக.
ஆனால் நீர் ஒரு விசுவாசியானால், நீர் கடவுளின் பிள்ளை. கடவுளின் பிள்ளையாக வாழக் கவனமாயிரும். உலகத்தின் மக்கள் அழியும் காரியங்களால் தங்கள் சிறிய மூளையைத் திருப்திப்படுத்துகின்றனர். நீர் அப்படி இருக்ககூடாது. கடவுளது இராஜ்யத்தின் சுதந்திரவாளியாக நீர் இருக்கிறீர் என்பதை மறந்துபோக வேண்டாம். கடவுளது திருச்சபையின் நலனையும் வளர்ச்சியையும் குறித்து கரிசனைகொண்டு பாடுபடும். ‘சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” (பிலி 4:8).
‘கிருபையே- உன்னை
இந்நாள் வரையும் காத்தது – என் கிருபையே
என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னைப் பிரித்து
என் அருமை மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே.”










