- பரிசுத்தமும் நற்கிரியைகளும்
விசுவாசி ஒருவர் பரிசுத்தமாக வாழ்வதும், நற்கிரியைகள் புரிவதும் இன்றியமையாததாகும். இரடசிப்பின் நற்செய்தியானது தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டதினால் அது எந்தக் கொடிய பாவிக்கும் முற்றிலும் இலவசமான ஈவாகும். ஆனால் பரிசுத்தமான வாழ்க்கையை வாழத்தவறுகிற எவரும் மெய்க் கிறிஸ்தவராக இருக்க முடியாது. நற்கிரியைகள் நமது இரட்சிப்பைச் சம்பாதித்துத் தர இயலாது. ஆனால் அவைகளே நமது இரட்சிப்பிற்குச் சான்றுகளாகும். ஆவியினால் பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு பதிய ஆன்மீக வாழ்வு மலருகிறது. ஏனெனில் தேவனுடைய திவ்விய சாயல் மீண்டும் அவர்களில் புதுப்பிக்கப்படுகிறது. எனவே இத்தகைய மக்கள் பரிசுத்த வாழ்வு வாழாமல் இருக்கக்கூடுமா?
பரிசுத்த வாழ்விற்கும், நற்கிரியை ஆற்றவும் இரு முக்கிய காரணங்கள் உண்டு.
(அ). பரிசுத்த வாழ்க்கையே நாம் கடவுளின் பிள்ளைகள் என்கிற உண்மையை நிரூபிக்கிறது. ‘இயேசுவானவரை விசுவாசிக்கிறேன்” என்று சொல்லியும் நற்கிரியைகள் புரியாவிட்டால் அவனுடைய விசுவாசம் செத்தது.
(ஆ). நற்கிரியைகள், சிறப்பாக ஏழை மக்களுக்கும் துன்புறுத்தப்படும் விசுவாசிகளுக்கும் உதவுதல் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவானவரால் நினைவுகூரப்படும். அவையே மெய்யான கிறிஸ்தவர்களுக்குச் சான்றாகும். அவையே அவர்களை அவ்விசுவாசிகளிலிருந்தும், பெயர் கிறிஸ்தவர்களிலிருந்தும் பிரித்துக் காட்டுகின்றன.
எனினும் நாம் நீதிமான்களாக்குப்படுவதற்கு நற்கிரியைகள் காரணமாக அமையா. பூரண நீதியே கடவுளை திருப்திப்படுத்தி நம்மை நீதிமான்களாக்க அவரால் அங்கீகரிக்கப்படும். ஆனால் நமது நற்கிரியைகள் ஒருபோதும் பூரணத்துவம் வாய்ந்தவையல்ல. குறைவுள்ள அவை நமக்கு நீதியைச் சம்பாதித்துத் தர இயலாது. எனவே நாம் ஏற்றுக்கொள்ளுப்படுவதற்கு அடிப்படையான காரணம் கிறிஸ்துவினது நீதி நமக்கு இலவசமாய் அருளப்படுவதே. இவ்வுன்னத நீதியாகிய அடித்தளத்தின்மீதே நற்கிரியைகளாகிய கற்களினால் நமது ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டி எழுப்ப வேண்டும்.
‘கடவுளோடு உள்ள உறவில் கிறிஸ்துவே நமது அடித்தளம். அதாவது அவர் மூலமாய் வரும் கிருபையும், பாவமன்னிப்புமே நமது ஆதாரம். பரிசுத்தத்தையும், கீழ்ப்படிதலையும் கொண்டே இவ்வடித்தளத்தின் மீது நம் வாழ்வைக் கட்டுகிறோம். இக்காரியத்தில்தான் பலர் பெருந்தவறு செய்து சமாதானத்தையும் சந்தோஷத்தையும் இழக்கின்றனர். காரணம் தங்கள் கீழ்ப்படிதலையும் கடமையையும் அடித்தளமாக மாற்ற அரும்பாடுபடுகின்றனர். மனித சுயநீதி மற்றும் புண்ணியங்களை அடித்தளமாக அமைக்க முடியாது. கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் மன்னிப்பும் கடவுளது இரக்கமும் கிருபையுமே மீட்பின் அடித்தளம். கிருபையின் அடித்தளத்தின்மீதே விசுவாசி விசுவாசத்தின் கனிகளால் தன் வாழ்க்கையைக்கட்டி எழுப்புகிறான்” என்று ஜான் ஓவன் 130 ஆம் சங்கீதத்தின் விளக்கவுரையில் தெளிவுறக் குறிப்பிடுகிறார்.
எனவே பரிசுத்தமும் நற்கிரியைகளும் நமது கிறிஸ்தவ வாழ்வில் இன்றியமையா பண்புகளாகும். தன்னைக் கிறிஸ்த வன் எனக் கூறிக்கொண்டு நடைமுறையில் தெய்வீக பரிசுத்ததன்மையை வெளிப்படுத்தாதவன் சிலை வணக்கம் செய்பவனாவான்.
பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் தெய்வீகத் தன்மை ஒளிரும் நற்கிரியைகளைப் புரியாமலிருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாசையே. பொருளாசை எனும் இப்பாவத்தைப் பெரும்பான்மையான மக்கள் தவறாகப் புரிந்திருக்கின்றனர். பலர் பொருளாசை ஒரு பாவம் என எண்ணுவதில்லை. அவர்கள் வேசித்தனம், விபசாரம் போன்றவையே பாவங்கள் எனக் கருதுகின்றனர். அவர் ஒரு நல்ல கிறிஸ்தவர். ஆனால் பொருளாசை மட்டும் நிறைந்தவர் என்று ஒருவரைக் குறித்து மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது அவள் ஒரு நல்ல பெண். ஆனால் விபசாரவிடுதி நடத்துகிறாள் என்று கூறுவதற்குச் சமமானததே! இரு கூற்றுகளுமே அபத்தமானவை. பொருளாசை ஒரு சிறிய குற்றமல்ல. அது விக்கிரக ஆராதனையே ஆகும் (1.கொரி 6:9-10, எபேசி.5:5, கொலோ.3:5). பொருளாசைக்கு நாம் பலவிதமான சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். அதுபோன்று மற்றெந்தப் பாவத்திற்கும் கூறுவதில்லை. மற்ற பாவங்களைவிட பொருளாசையைக் குறித்து நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்வத்தைத் திரட்டுவது மட்டுமே நமது வாழ்வின் இலட்சியமாகும் என்று எண்ணுவதுதான் பொருளாசை எனும் பாவமாகும். ‘பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று நமதாண்டவரும் எச்சரிக்கிறார் (லூக்.12:14).
அதே வண்ணம் அன்பில்லாமையும் ஒரு பாவமே. இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைத்திருப்பதாக அறிக்கை செய்தும் கடவுளிடமும் மனிதரிடமும் அன்பு பாராட்டாத வாழ்க்கை வாழ்பவன் மெய்க் கிறிஸ்தவன் அல்ல. எனவே கிறிஸ்தவன் நற்கிரியை புரிந்து பரிசுத்த வாழ்க்கை வாழ்வது எத்துணை இன்றியமையாதது!
‘உதவி செய்தருளே! ஒருவருக்கொருவர் யாம்
உதவி செய்திடவே.
ஒருவரொருவர்க்காய் – சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்!
தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய
சகோதரன் படும் கஷ்டம் கவலையில்
சன் மனத்தோடு பங்கு பெற்றிட!”











