- கிருபையும் பேரின்ப வாழ்வும்
தேவ கிருபையானது மனிதர் காட்டும் பரிவு, இரக்கம் ஆகியவைகளைவிட மிகவும் அதிசயமானது. ஏனெனில் அது சற்றும் தகுதியற்ற பாவிகளுக்கு அற்புதமான ஈவுகளை அருளுகிறது. தேவ கிருபை அளிக்கும் முடிவான அருள்கொடையாகிய நித்திய பேரின்ப வாழ்வு தேவ கிருபையைப் போன்றே மாட்சிமையுடையது. கடவுளின் முடிவான நோக்கம் யாதெனில் பாவிகள் தம்முடன் நித்தியமான பேரின்ப வாழ்வை அடையவேண்டுமென்பதே. பரலோகவாழ்வு கடவுளது இறுதியான கிருபையின் ஈவே ஆகும்.
பரலோக இன்பத்தைத் திருமறை அழகுறச் சித்திரிக்கிறது. அது சுடர் வீசும் பொற் கிரீடங்களும், சிங்காசனங்களும் அடங்கிய ஓர் ஒப்பற்ற இராஜ்யத்தை நம் கண்முன்வைக்கிறது. கடவுளது மக்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நித்திய சுதந்திரத்தைக் குறித்து அது எடுத்துரைக்கிறது. நியாயத்தீர்ப்பில் கடவுளின் வலது பக்கத்தில் இருப்போருக்கு அருளப்படும் நித்தியமான பேரின்பத்தைக் குறித்து விபரிக்கிறது. விசுவாகிகள் பரலோக வாழ்வின் பேரின்பத்தின் முன் ருசியை இப்பூவுலகிலேயே அநுபவித்து மகிழ்கின்றனர். விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதி என விளக்கப்படுகிறது. (எபி.11:1). விசுவாசி இப்பொழுது நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறான். வர இருக்கும் மறுமை வாழ்வின் மகிழ்வைச் சில சமயங்களில் மிக தெளிவாக உணரலாம். ஆயினும் எல்லா நேரங்களிலும் மறுமையின் மகிழ்ச்சி ஒரளவில் மனதில் உறைகொண்டிருக்கம்.
விசுவாசிகளது மறுவாழ்வின் பேரின்பத்தை இரு நிலைகளாகப் பிரிக்கலாம். முதலாவது நிலை மரணத்துக்குப் பின்னரும், உயிர்த்தெழுதலுக்கு முன்னரும் ஏற்படுவதாகும். இரண்டாவது நிலை உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும் நிகழ்ந்த பின்னர் ஏற்படுவதாகும். இவ்விரு நிலைகளையும் குறித்து ஈண்டு சற்று ஆராய்வோம்:
விசுவாசி ஒருவரது ஆன்மா அவர் மரணமுற்றவுடனேயே மகிமைக்குள் பிரவேசிக்கிறது. எனவே விசுவாசியின் மரணமானது அவருக்கு ‘ஆசீர்வாதமாகவே அமைகிறது”, ‘எல்லாம் உங்களுடையதே…..ஜீவனானாலும் மரணமானாலும்…” என பவுல் கூறுகிறார் (1.கொரி.3:21-22). மகிமையின் வாசல் மரணமே. ‘இவ்வுடலை விட்டுக்குடிபெயர்ந்து ஆண்டவரின் வீட்டில் குடிபுக வேண்டுமென்பதே நமது பேராவல் என பவுல் அப்போஸ்தலனும் கூறுகிறாரல்லவா? (2.கொரி 5:8). தம்மோடு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் தறுவாயிலிருந்த கள்ளனிடம் நமது இரட்சகர் ‘இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீஸியிலிருப்பாய்” எனக் கூறியதால் அவன் மரணமடைந்தவுடனேயே பரதீஸின் இன்பத்தை அநுபவிப்பான் என அழுத வாக்கு அருளினாரன்றோ?
சகலவித துன்பங்களிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் விடுபட்டவர்களாக நித்தியத்திற்குள் பிரவேசித்த பரிசுத்தவான்கள் கிறிஸ்துவுடன் பேரின்பத்தை அநுபவித்துக்கொண்டிருக்கின்றனர். கிறிஸ்துவினுடைய மகிமையும் பூரணமும் வர்ணிக்க இயலா அழகுடன் சுடர்விட்டுப் பிரகாசிப்பதை அவர்கள் கண்டு களிகூறுகின்றனர். முன்னர் அவைகளை அவர்கள் மங்கலாகவே பார்த்தனர். அவர்களை அந்த உன்னத நிலைக்குக் கொண்டுவந்த தேவ கிருபையே நன்றிப்பெருக்குடன் போற்றி வணங்குகின்றனர். மகிமை நிறைந்த ஆண்டவர் அவர்களுடனே மகிழ்ச்சிப் பெருக்குடன் உறவாடிக்கொண்டிருக்கிறார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் தமது சீஷர்களோடு அன்புடன் உறவாடினார் அல்லவா? அவர் இப்பொழுது வரத்திற்கு ஏறியுள்ளார். எனவே இப்பொழுது மகிமையில் தமது சொந்த மக்களுடன் அவருடைய நட்புறவு அதி உன்னத நிலையில் இருக்கிறது. அவர்கள் அவருடைய திவ்விய மகிமையில் பங்கு கொண்டு இன்பவெள்ளத்தில் திளைத்துப் பிரமிக்கின்றனர்.
விசுவாசிகள் பாவம் நிறைந்த இவ்வுலகத்தைவிட்டு மறுவுலகை அடையும்பொழுது இரட்சகருடைய மீட்பின் மகிமையை அதிகமாக உணர்ந்து போற்றுகின்றனர். ‘ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” என பவுல் அப்போஸ்தலன் தமது இப்பூவுலக ஞானத்தைக் கொண்டு பரவசத்துடன் வியந்துரைக்கிறாரே. அவ்வாறாயின் பரலோகத்தில் விசுவாசிகளின் ஆன்மாக்கள் எத்தனை அதிகமாக அதிசயப்படும். அவர்கள் தேவனுடைய மகத்துவத்தையும், வல்லமையையும், அன்பையும் நேரடியாக கண்டுகளிக்கின்றனர். முன்னர் அவர்கள் உணர்ந்திராத வகையில் கிறிஸ்துவானவர் தங்களுக்குச் சம்பாதித்துக்கொடுத்த இரட்சிப்பின் முழு அர்த்தத்தையும் இப்பொழுது கண்டுணருகின்றனர். தகுதியற்ற பாவிகளாகவிருந்த தங்களுக்கு கடவுள் அருளிய கிருபையின் மாபெரும் அதிசயத்தை அவர்கள் பரலோகத்தில் காண்கின்றனர். அவர்கள் அடையும் பரவசத்தையும் பரமானந்தத்தையும் விவரிக்கவும் கூடுமோ? அவிசுவாசிகள் மீது கடவுள் கொள்ளும் உக்கிரகோபத்தினால் வெளிப்படுத்தப்படுகிற தெய்வீக நீதியை அவர்கள் காணும்போதும் அவர்மீது அவர்கள் கொள்ளும் ஆர்வம் சற்றேனும் குறைவதில்லை. ஏனெனில் விசுவாசிகளுடைய பரிசுத்த சித்தமானது கடவுளின் சித்தத்தோடு முழுவதுமாக ஒன்றியிருப்பதால் அவர் செய்யும் யாவற்றையும் அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
சீனாய் மலையில் மோசே கடவுளோடு நேருக்கு நேர் உறவாடின பின்னர் அவனுடைய முகம் பிரகாசமடைந்தது என நாம் திருமறையில் காண்கிறோம். அவ்வாறாயின் மகிமையில் கடவுளுடன் இடைவிடாது உறவு கொள்ளும் பரிசுத்தவான்கள் எத்தனை பிரகாசத்தை அடைவார்கள். கடவுளை நேர் நேர் காணும் அவர்கள் உள்ளங்களில் அவர் பேரிலான அன்பு எவ்வளவாய் அதிகரிக்கும்! கடவுளைப் பூரணமாய் ஆதரிக்க இவ்வுலக வாழ்வின் தன்னலம், பெருமை, மற்றும் குறைபாடுகளிலிருந்து விடுபட்டு பரலோகத்தை அடைந்த பரிசுத்தவான்கள் யாதொரு தடையுமின்றி போற்றித் துதித்துக்கொண்டே இருக்க முடிகிறது.
புதிய சரீரத்தால் உடுத்தப்படாத விசுவாசிகளின் ஆவிகள் பரலோகத்தில் அநுபவிக்கும் இவ்வின்பம் அவர்கள் உயிர்த்தெழுந்தபின் அநுபவிக்கப்போகும் பேரின்புத்தை விட குறைவானதே. உயிர்த்தெழுதலின் விசுவாசிகளுடைய சரீரங்கள் கல்லறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும்வரைக்கும்ப hவத்தினது விளைவானது பூரணமாக மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் சரீரங்கள் எழுப்பப்பட்டு பாவக்கறை எதுவுமின்றுp புதுப்பிக்கப்பட்டு விசுவாகிகளுடைய பாவமற்ற ஆன்மாக்களோடு இணைக்கப்படும்போதே பாவத்தின் விளைவுகள் மீது ஏற்படும் வெற்றி பூரணப்படுகிறது.
பாவத்தினால் மரணமடைந்த அதே சடலங்கள் மீண்டும் எழுப்பப்படுவதானால், பாவத்தின் மீதான கிறிஸ்துவினது வெற்றி நிலைநாட்டப்படுகிறது என்பது கிறிஸ்துவ விசுவாசத்தின் ஓர் அடிப்படை நம்பிக்கையாகும். ஆனால் அவை அதே உடல்களாயிருந்தாலும் அவற்றின் தன்மை வேறுபட்டிருக்கும். அவ்வுடல்கள் இப்போது அழிவற்ற தன்மையுடன், மகிமையுடனும், வல்லமையுடனும் இயங்கும். அவை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சரீரத்தைப் போன்று ஆவிக்குரிய தன்மை வாய்ந்தனவாய் ஒளிரும். அவற்றின் பிரகாச தன்மையை யார் கற்பனை செய்ய முடியும் (1.கொரி.15:42-44, 1.யோ.3:2).
உயிர்த்தெழுந்த விசுவாசி சர்வலோகத்தின் நியாயாதிபதியால் குற்றமற்றவன் என வெளியரங்கமாகத் தீர்ப்பளிக்கப்படுவது அவனது ஆனந்தத்தை அதிகரிக்கிறது. இந்த நியாயாதிபதி அவனுடைய நண்பருடன் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவே. கிறிஸ்துவின் நீதியானது அவனைப் பாதுகாத்துக் கொள்ளுகிறது. கிறிஸ்துவினது திரு இரத்தம் அவனுடைய பாவப் பரிகாரமாகச் செலுத்தப்பட்டது அல்லவா? எனவே யார் அவனைக் குற்றவாளியெனத்தீர்க்க முடியும் (ரோமர் 8:33-34)? அவர்கள் பெற்றிருக்கும் அந்தப் பேரானந்தமானது நித்திய காலமாய் நிலைத்திருக்கும். அவர்கள் பெற்றிருக்கும் சுதந்திரம் எந்தச் சத்துருவாலும் பறிக்கப்படக்கூடாதது. அவர்களுடைய ஜீவ கிரீடங்களின் ஒளி மங்காதது. அவர்கள் சுதந்தரித்துக்கொண்ட இராஜ்யம் நித்தியமானது. அவர்களைத் தமது கிருபையால் முடிசூட்டிய கடவுள் சதாகாலமும் நிலைத்திருப்பதுபோல அவர்களுடைய பேரின்பமும் என்றும் நிலைத்திருக்கும்.
தேவ கிருபையானது எத்தனை அற்புதமானது! இரட்சிப்பென்னும் வழியை உருவாக்கி அருளியது தேவ கிருபையே. பாவிகள் இரட்சிப்புக்கென ‘தெரிந்துகொண்டது” தேவகிருபையே. தெரிந்துகொள்ளப்பட்ட கடவுளின் பிள்ளைகள் பாவமன்னிப்பைப் பெற்று, நீதிமான்களாக்கப்பட்டு, புத்திரசுவிகாரம் அடைந்து, பரிசுத்தமாக்கப்பட்டதும் தேவகிருபையினாலேயே, விசுவாசிகளது ஆன்மீக வாழ்க்கையைப் பேணி வளர்த்து சகல ஆசீர்வாதங்களாலும் நிரப்புவதும் தேவ கிருபையே. இறுதியாக பரலோகத்தை விசுவாசிகளுக்கு நித்திய வீடாகத் திறந்து கொடுப்பதும் தேவகிருபையே. ஆம், ஆரம்பம் முதல் இறுதிவரை தேவகிருபையே மையமாக இருந்து செயல்பட்டு வருகிறது. ஆ! பரலோகத்தை அடைந்த விசுவாசிகள் அனைவரும், ‘… கிருபை உண்டாவதாக, கிருபை உண்டாவதாக…” என்று ஆர்ப்பரிப்பார்கள் (சக.4:7). பரலோகத்தின் தேவ தூதர்களும் அவர்களோடு சேர்ந்து ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பார்களன்றோ? பரலோகத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும் வேறு ஏதாவது உண்டா? இப்பேரின்பத்திற்கும் மேலானது வேறுளதோ என எண்ணிப்பார்க்கவும் நாம் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் நாமும் இப்பேரின்பத்திற்குச் சுதந்தரவாளிகள் என அறிவதே அதி முக்கியம்.
அன்பனே! நீர் படித்த இவ்வுண்மைகளைப்பற்றி உம் கருத்துக்கள் என்ன? ஒருவேளை நீர் மரிக்கும்போது பரலோக பேரின்பத்தைப் பெறுவேன் என நம்பிக்கை கொண்டிருக்கலாம். அது வெறும் விருப்பம்தானே? அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கையா? அநேகர் நித்திய வேதனையையடையவிருக்கும்பொழுது நீர் ஏன் பேரின்பத்தை அடையும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்? தேவனுடைய கிருபை இவ்வுலகில் கண்டறிந்தவர்கள் மட்டுமே பரலோகத்தில் அவருடைய மகிமையைக் காணமுடியும். பரிசுத்தமான வாழ்க்கையை இப்பொழுது நீர் விரும்பி நாடாவிட்டால் பின்னர் பரலோகத்தையடையும் நம்பிக்கையை மெய்யாக நீர் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் பரிசுத்த வாழ்க்கை வாழாமல் பரலோகத்திற்குச் சென்றாலும் அது உமக்கு ஓர் ஒளிமயமான இன்பலோகமாகக் காட்சியளிக்காது. நீர் அழிவுக்குப் பாத்திரமாய் இருக்கிறீர். இந்த நிலையில் நீர் மரிப்பீரானால் உன் அழிவு நித்தியமாயிருக்கும். என்னே அவலம்! தேவ கிருபை உம்மை விடுவிக்கட்டும்.
அன்பனே! நீர் கடவுளின் பிள்ளையானால் உம் ஆன்மீக வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைக் காணமுயற்சிப்பாயாக! கிருபையின் அனைத்து எத்தனங்களையும் பயன்படுத்தி கடவுளோடு எப்பொழுதும் ஐக்கியங்கொண்டிருப்பீராக. மறைமுகமான முற்றும் குடிகொள்ளும் பாவத்திற்கு உம்மை விலக்கிக் காத்துக்கொள்வீராக. கிருபைக்கும் கிறிஸ்துவினது நீதிக்கும் புறம்பாக நீர் குற்றமுள்ள அபாத்திர பாவி என்பதை மறந்துவிடாதேயும். இதோ! தெய்வ மணாளன் மீண்டும் வருகிறார். எப்பொழுதும் அவரைச் சந்திக்க ஆயத்தமுள்ளவனாகக் காணப்படும்படி உம் வழிகளைக் காத்துக்கொள்ளும்!
தேவகிருபையின் மூலமாக இரட்சிப்பு இலவசமாக அருளப்படுவதைக் குறித்து இந்நூலின் மூலமாக நாம் காண்டறிந்த யாவும் மிகக் குறைவானதே. இதனை விவரிக்கமுடியாது. ஆம்! கிருபையின் மாட்சிமையை நித்திய காலத்திற்கும் பூரணமாய் விபரிக்க முடியாது. ஏனெனில் கிறிஸ்து பெருமானின் அருள் செல்வம் ஆராய்ந்து முடியாது. கடவுளின் கிருபை எல்லையற்றது.
‘நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என்னுள்ளம் பொங்கி வழிந்திடுதே
அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லா நன்மைகட்காய் அல்லேலூயா பாடிடுவேன்.”








