(6) சோம்பல்
அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் சோம்பல் சொகுசாகத் தொட்டிலாட்டிக் கொல்லும் ஒரு கொடிய பாவமென்று சத்திய வேதாகமம் வெகு திட்டவட்டமாக அறைகூவியுள்ளது. சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும் (நீதி.21:26). சோம்பல் தூக்கிவிழப்பண்ணும். அசதியானவன் பட்டினியாயிருப்பான் (நீதி.19:19). பொல்லாதவனும் சோம்பனுமான… பிரயோஜனமற்றவனுமான இந்த ஊழியக்காரனை புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்.25:26-30). ஆதலால் தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார் (எபேசி.5:14). நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்கிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (எபேசி.6:11).
பரிசுத்த வேதாகமம் நமது சரீர சோம்பலையும், ஆத்தும சோம்பலையும் கண்டித்துணர்த்தியுள்ளது. ஆவிக்குரிய சோம்பல் நம்மை அழிவுக்குட்படுத்தும். ஆகையால்தான் நாம் அசதியாயிராமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆவியிலே அனல் உள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்று சத்திய வேதாகமம் பறைசாற்றியுள்ளது (ரோ.12:11). ஆவியிலே அசதியாயிருப்பது ஆண்டவருக்கு விரோதமான பாவமட்டுமல்ல, நமக்கு விரோதமான பாவமாகும். நாம் சோம்பலுற்று காலாகாலங்களில் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்பொழுது, நமது வளர்ச்சி குன்றிவிடும். நமது முன்னேற்றம் பாதிக்கப்படும். நமது வாழ்வு கெட்டுவிடும். அழிவு ஏற்பட்டுவிடும். அந்தந்தக் காலத்தில் சொல்லவேண்டியதைச் சொல்லி, சிந்திக்கவேண்டியதைச் சிந்தித்து, செயலாற்றவேண்டியதைச் செயலாற்றி வந்தால் நாம் வாழ்வில் முன்னேறுவோம். பிறரையும் வாழச்செய்வோம். நாம் தக்க காலத்தில் தக்க விதமாய் நடந்தால், இச்சீரழிவு நேரிட்டிருக்காதே என்று எத்தனையோ வேளைகளில் நமது சோம்பலைக்குறித்து வருந்திக் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். உழுது பயிர் செய்ய வேண்டிய காலத்தில் உறங்கிக்கிடந்தால், அறுவடைக்காலத்தில் அழுது நிற்கநேரிடும். நன்று செய். அதனை இன்றே செய். நாளை நமது நாளல்ல.
நாம் காலதாமதம் இன்றி உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்கள் உண்டு. அதி முக்கியமாக நமது ஆத்தும இரட்சிப்பைப் பற்றி நாம் அதிக அக்கறை உள்ளவர்களாய் இருக்கவேண்டும். மறுமையில் மனந்திரும்புதல் இல்லை. நாம இம்மையில் இருக்கும்பொழுதே மனந்திரும்பி, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாகிவிடவேண்டும். இயற்கையாக மாம்சத்தின் பிள்ளைகளாய் இருக்கும் நாம், இம்மையில் இருக்கும்பொழுதே தேவனுடைய பிள்ளைகளாகிவிடவேண்டும். இயற்கையாகப் பாவிகளாகப் பிறந்துள்ள நாம், கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்து, கிறிஸ்துவின் இரத்தப் புண்ணியத்தால் பாவ மன்னிப்புப் பெற்று, இரட்சிப்பின் நிச்சயம் உள்ளவர்களாவிடவேண்டும். இம்மையில் இருக்கும்பொழுதே தேவனுடைய இராஜ்யத்தின் பிள்ளைகளாகிவிடவேண்டும். இவ்வுலகில் இருக்கும்பொழுதே கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக நமது சொந்ததெய்வமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் மறுவுலகில் செல்லும்பொழுது இயேசு இரட்சகர் நம்மை மோட்ச இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளுவார் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்? நாம் இவ்வுலகில் இருக்கும்பொழுதே கிறிஸ்துவோடு வாழாவிட்டால், நாம் மறுஉலகில் பிரவேசித்த பிறகு கிறிஸ்துவோடு வாழ்வோம் என்று எப்படி நம்பிக்கொண்டிருக்கலாம்? எனவே, இம்மையில் இருக்கும் பொழுதே இயேசு கிறிஸ்துவை நமது சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வது மகா முக்கியமான காரியமாகும். இதைச் செய்வதற்குச் சோம்பல்பட்டு அசதியுற்று, காலதாமதம் செய்வது ஆபத்தாக முடியும். இந்த ஆபத்து இவ்வுலகத்தோடு நில்லாமல் மறு உலகத்துக்கும் தொடர்ந்து வந்து நித்திய கால ஆபத்தாக வந்து முடியும். ஆகவே இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், வரும் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்? இன்றே இரட்சண்ய நாள், சோம்பல்படாது இன்றே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வோமாக. அசதியுறாமல் உடனே இயேசு இரட்சகரை ஏற்றுக்கொள்வோமாக. அதில் கால தாமதம் செய்து அஜாக்கிரதையாய் இருந்தால், நித்திய காலமாக நித்திய நரக வேதனையை அடைய வேண்டியதிருக்கும். எனவே, சோம்பல் நம்மை எரிநரகத்திற்குள் தள்ளிவிடும்.
போரில் எற்படும் தோல்விகளுக்கும், வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கும் ஒரு காரணம் சோம்பல். சோம்பலால், தூக்க மயக்கத்தால் அனுதினமும் அநேக விபத்துக்கள் ஏற்பட்டு அநேகர் உயிர் இழக்கின்றனர். ஆவிக்குரிய போராட்டத்தில் தோல்வி ஏற்படுவதற்கும், ஆவிக்குரிய விபத்து உண்டாவதற்கும் ஒரு காரணம் சோம்பலாகும். ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு! அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார் (எபேசி.5:14).
சோம்பல் சரீர சுகத்தைக்கெடுக்கும். ஆத்தும சுகத்தை அழிக்கும். அஜாக்கிரதையால் அழிவுற்ற மக்கள் அனந்தம் பேர். அவதியால் நாசமுற்ற தேசங்கள் பலபல. அசமந்ததத்தால் வீதிகளிலும், சாலைகளிலும் ஏற்படும் சாவுகள் கணக்கற்றவை. எனவே ஆணவத்தைப்போல் அசதியும் மனிதனைக் கொல்லவல்ல கொடியதாரு பாவமாகும்.
நாம் இவ்வுலகில் இருக்கும்பொழுது ஆவிக்குரிய காரியங்களில் செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் நிர்விசாரமாய் இருந்தால், நாம் மறுமையில் நரகம் செல்வது நிச்சயம். ஆணவம், கோபம், பொறாமை, வேசித்தனம், காமவிகாரம், கொலைபாதகம், சூனியம், விக்கிரக ஆராதனை, பொய், அவிசுவாசம் போன்ற பாவத்துக்குட்பட்டவர்கள் நித்திய நரக அக்கினியிலே பங்குபெறுவதுபோல், இரட்சிப்பைக் குறித்து நிர்விசாரிகளாய் இருப்பவர்களும் நித்திய நரக ஆக்கினையிலே பங்குபெறுவது திண்ணம். ஆண்டவர் இந்த உண்மையை ஓர் உவமை வாயிலாக நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறார். தாலந்து உவமையில்: ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து, ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும், சோம்பனுமான ஊழியக்காரனே: நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால் நீர் என் பணத்தைக்காசுக்காரர் வசத்தில் போட்டு வைக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான் (மத்.25:24-30).
இந்த உவமையில் ஒரு தாலந்தை வாங்கினவன் இருளிலே தள்ளப்பட்டதற்குக் காரணம் கொலைபாதகமல்ல, விபசாரமுமல்ல, சோம்பலாகும். அவன் செய்யவேண்டியதைச் செய்யாமல், சோம்பலுள்ளவனாய்க் காலத்தை வீணாகக் கடத்தின காரணத்தால் அவன் ஆக்கினை அடைந்தான்.
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் கலியாண வீட்டிற்குள் பிரவேசிக்க முடியாது போய்விட்டதற்குக் காரணம் வேசித்தனமல்ல, பொய்யும் களவுமல்ல, சோம்பலேயாகும். அவர்கள் தீவட்டிகளோடு எண்ணெயும் கூடக்கொண்டு போவதற்குள் சோம்பல்பட்டு விட்டார்கள். அவர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாய்க் காலா காலத்தில் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டிய எண்ணெயையும் வாங்கி வைத்திருப்பார்களானால், அவர்களும் தாராளமாய்க் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்துக் களிப்படைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய அஜாக்கிரதையின் காரணமாக பிந்தி வந்து: ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்குத் திறக்கவேண்டும் என்று கேட்டபொழுது, ஆண்டவர் உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்.25:11-12).
அசதி அல்லது சோம்பல் ஆக்கத்தை அழித்துவிடும். தோல்வியைப் புகுத்திவிடும். நஷ்டத்ததை திணித்துவிடும். சோம்பல் புகுந்த இடத்தில் அழிவும் புகுந்துவிடும். படிக்க வேண்டிய காலத்தில் சோம்பலுற்றுப் படிக்காமல் நிர்விசாரமாய் இருக்கிற மாணவர் பரீட்சையில் எப்படி வெற்றி பெற இயலும்? தொழிற்சாலைகளிலோ, கல்விச்சாலைகளிலோ, எந்த அலுவலகங்களிலோ, அசதி ஆட்சி புரிந்தால் அவை வீழ்ச்சியுறுவது அதி நிச்சயம்.
சோம்பேறிகளால் குட்டிச்சுவராய்ப்போன வீடுகள் ஏராளம், நாசமாய்ப்போன நாடுகள் ஏராளம், கெட்டழிந்த குடும்பங்கள் ஏராளம், உடைந்துபோன உள்ளங்கள் ஏராளம், இடிந்துபோன இதயங்கள் ஏராளம்.
இவ்வுலகில் இருக்கும்பொழுது நாம் செய்த பாவங்களுக்கு மாத்திரமல்ல, நாம் செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளுக்காகவும், நாம் மறுமையில் நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினை அடைவோம்.
ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும் (யாக்.4:17).
துயருற்ற மனிதனக்கு நாம் சொல்லாமல் விட்ட ஆறுதலுக்காகவும், பாவத்தில் வாழ்கிறவனுக்கு நாம் இயம்பாது விட்ட எச்சரிப்புக்காகவும், அறியாத மக்களுக்காக நாம் இயேசு இரட்சகரைப்பற்றி அறிவிக்காத அஜாக்கிரதைக்காகவும், சோம்பல் காரணத்தால் வியாதியாயிருந்தவனைப் போய்ப் பார்த்து உதவி செய்யாத குற்றத்திற்காகவும், பசியும் பட்டினியுமாயிருக்கிறவர்களையும் கண்ணீரும் கம்பலையுமாயிருப்பவர்களையும் போய்ப் பார்த்து உதவி செய்யாத நிர்விசாரத்திற்காகவும், நாம் கடைசி நாளில் நியாயந்தீர்க்கப்பட்டு நித்திய நரகாக்கினை பெறுவோம். செய்ய வேண்டிய நன்மைகளை யார் யார் அக்கறையோடு செய்யாது விட்டார்களோ அவர்களைப் பார்த்து நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவர்: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதீருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி இவர்கள் நித்திய ஆக்கினையை அடையப்போவார்கள் என்றார் (மத்.25:45-46).
சோம்பல் காரணமாக எத்தனையோ பேர் ஆலயம் சென்று ஆண்டவரை ஆராதிப்பதில்லை. வாரம் முழுவதும் அலுவலகத்தில் ஓயாது வேலை செய்துவிட்டோம். இந்த ஞாயிற்றுக்கிழமையிலாவது கொஞ்சம் தூங்கிக்கொள்ளலாமே என்கிறார்கள். வாரம் முழுவதும் வயிற்றைப் போஷிப்பதற்காக அலுவலம் சென்றவர்கள், இந்த ஞாயிற்றக்கிழமை ஒரு நாளாகிலும் ஆலயம் சென்று ஆத்துமாவைப் போஷிக்காவிட்டால், அவர்களுடைய ஆத்துமா அழிந்துபோகுமே என்பதைப்பற்றி கவலையற்று அசதியாயிருக்கிறார்கள். ஆண்டவர் தாம் மாம்சத்திலிருந்த நாட்களில் அலயத்திற்கு ஒழுங்காகச் சென்றார். அதுபோல் நாமும் ஆலயம் செல்வதற்குச் சோம்பல் படாதிருப்போமாக. ஆலயம் செல்வதில் அசதியாயிருக்கிறவர்கள் தங்கள் ஆத்துமாக்களைப் பட்டினிபோட்டுக் கொல்லுகிறார்கள்.
அநேகர் சோம்பல் காரணமாக ஒழுங்காக ஜெபம் செய்கிறதில்லை. அதிகாலையில் எழுந்து ஜெபம் செய்வதில் அசதியாயிருக்கிறோம். தூக்க மயக்கம் நமது ஜெப வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டது. ஆகையால்தான் ஆண்டவர் நீங்கள் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்று அறிவுரை பகர்ந்துள்ளார். நாம் இடைவிடாமல் ஜெபித்து, கிறிஸ்துவோடு எப்பொழுதும் உறவாடி ஐக்கியப்பட்டிருக்க வேண்டியவர்கள், கொடியானது செடியில் நிலைத்திருப்பதுபோல, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவேண்டும். இந்த அந்நியோன்னிய ஐக்கியம் கொள்ளுவதற்கு, அசதியுற்றால் அழிவது திண்ணம். ஆகையால்தான் பரிசுத்த பவுல்: இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் (1.தெச.5:17) என்று பறைசாற்றியுள்ளார். ஜெப வாழ்க்கையில் நாம் தூங்கிவீழ்ந்தால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் தூங்கிவீழ்ந்து அழிவுக்குட்படும். எனவே, நாம் தூக்க மயக்கத்தை ஒழித்துவிட்டு, சோம்பலை உதறிவிட்டு, விழித்திருந்து எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும். அதிகாலை ஜெபத்தை அசட்டை பண்ணுகிறவர்கள் அதிக அல்லலுறுவார்கள். நமது ஒன்றுமில்லாமையை அறிந்து, ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து, விசுவாசக்கரம் நீட்டி, கிறிஸ்துவின் ஆவியானவரின் அருளையும், வல்லமையையும் நிரம்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் நிர்விசாரம் கொண்டால் மாண்டுபோவோம்.
இங்கிலாந்து அரசியைப் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரந்தவறாமல் சென்றுவிடுவோம். அமெரிக்க ஜனாதிபதியைப் பார்ப்பதற்கோ அல்லது இந்திய ஜனதிபதியைப் பார்ப்பதற்கோவென்றால் குறித்த நேரந்தவறாமல் முன் ஆயத்தத்தோடு கவனமாய்ச் சரியான நேரத்திற்குச் சென்றுவிடுவோம். ஆனால் ஆண்டவரைச் சந்திப்பதற்கே சோம்பல் கொண்டு, தூங்கிவிடுகிறோம். ஆண்டவரோடு ஜெபத்தில் அந்நியோன்னியமாவதற்கு அவ்வளவு அசதி! அவ்வளவு அஜாக்கிரதை! அவ்வளவு சோம்பல்!
கர்த்தரோடு பேசுவதற்கு சோம்பல் கொள்ளுகிறதுபோல், கர்த்தர் நம்மோடு பேசுவதைக் கேட்பதற்கும் அவ்வளவு சோம்பல் கொள்ளுகிறோம். கர்த்தருடைய வசனத்தை வாசிப்பதில் எவ்வளவு சோம்பல். தற்கால மக்கள் எதெதையோ வாசிப்பதற்குத் தயங்குவதில்லை. ஆனால் வேதம் வாசிப்பதற்குத்தான் அவ்வளவு அசதி ஏற்பட்டுவிடுகிறது. வேதவாசிப்பில் நமக்கு அக்கறையில்லாவிட்டால் நமது ஆத்துமா பட்டினிகிடந்து செத்துவிடும். நீங்கள் வளரும்படி புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1.பேது.2:2). அநேகர் கிறிஸ்தவ ஜீவியத்தில் வளர்ச்சியுறாதிருப்பதற்குக் காரணம், அவர்கள் கர்த்தருடைய வசனத்தை ஒழுங்காய் வாசித்து தியானித்து உட்கொள்ளாதிருப்பதுதான். அவர்கள் கர்த்தருடைய வசனத்தை வாசியாதிருப்பதற்குக் காரணம் சோம்பல்தான். கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர்களுக்கு இடறலில்லை. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் கர்த்தர் விளம்பின வேதமே நமக்கு நலம். கர்த்தருடைய வேதம் தேனிலும் மதுரமானது. தெளிதேனிலும் தித்திப்பானது. ஆகையால் கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும் என்று சங்கீதக்காரன் செப்பியுள்ளான். அந்தக் கிறிஸ்தவ விசுவாசிகளின் அகத்திலும் முகத்திலும் அருள், அன்பு, ஆனந்தம் பொங்கி வழிகின்றனவே. அந்த கிறிஸ்தவன் பரிசுத்த கிறிஸ்தவ வெற்றிவாழ்க்கை நடத்துகிறானே. என் வாழ்விலோ எப்பொழுதும் தோல்வி. என் முகத்திலோ எப்பொழுதும் இருள். இதற்குக் காரணம் யாதென்று அதிசயித்துக் கொண்டிருக்கும் நண்பரே! இரகசியம் சொல்கிறேன் கேளும். அவர்கள் சோம்பல் படாமல் தினமும் அதிகாலையிலெழுந்து, வேதம் வாசித்;து கிறிஸ்துவோடு ஐக்கியமாகி அந்த நாளுக்கு வேண்டிய சக்தியையும் ஆசீர்வாதங்களையும், பரிசுத்த வல்லமையையும் விசுவாச கரம் நீட்டி, கிறிஸ்துவிமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆகையால் அந்த விசுவாசிகளுடைய அகத்திலும் முகத்திலும் அருள் பொங்கி வழிகிறது. அவர்கள் வாழ்வு வெற்றி சிறந்து மிளிர்கிறது. ஆனால் நீயோ, அந்த நாளை துவங்குமுன் அந்நாளுக்கு வேண்டிய அசீர்வாதங்களை ஆண்டவரிடமிருந்து பெறவேண்டிய அதிகாலை நேரத்தில் எழும்பி வேதம் வாசித்து ஜெபம் செய்யாது சோம்பல் கொண்டு, தூங்கிக் கிடக்கிறாய். சோம்பல், நீ பெறவேண்டிய ஆசீர்வாதத்தைப் பெறாதபடிக்குத் தடுத்து நிறுத்திவிடுகிறது.
உன் வாழ்க்கையில் எத்தனையோ நபரோடு நீ பழகியுள்ளாய். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் உன்னோடு பழகுகிறார்கள். அவர்களில் எத்தனையோபேர் கிறிஸ்துவைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியாது நரகம் சென்றால், அதற்கொரு காரணம் உனது சோம்பல்தானல்லவா? நீ அவர்களுக்குக் கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க சோம்பல் கொண்ட காரணத்தாலல்லவோ அவர்கள் நரகம் சென்றுள்ளார்கள். கிறிஸ்துவுக்குச் சாட்சி பகருவதில் உனக்கு எவ்வளவு சோம்பல்! உனக்கு எவ்வளவு நிர்விசாரம். கிறிஸ்துவை பிறருக்குக்கூறி அறிவிப்பதில் நாம் எவ்வளவு அக்கறைகாட்டவேண்டும். இதிலுமா சோம்பல்! நமது சோம்பல் நம்மையும் இன்னும் எத்தனையோ ஆத்துமாக்களையும் எரிநரகத்துக்குள் பிடித்துத் தள்ளிவிடுகிறதே. சுவிசேஷத் திருப்பணியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிற நாம் வழித்தெழும்புவோமாக. ஆத்தும ஆதாயம் செய்வதில் ஆர்வம் கொள்வோமாக. சுவிசேஷத்தைப் பிரங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ என்ற துடிப்புக்கொண்டெழுவோமாக. அவனுடைய காவற்காரர் எல்லாரும் என்றும் அறியாத குருடர். அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள். தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர் (ஏசா.56:19). அசதியாயிராமல் ஐhக்கிரதையாக இருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் (ரோ.12:11).
மனந்திரும்புவதற்குச் சோம்பல். மன்னிப்புப் பெறுவதற்குச் சோம்பல். இரட்சிக்கப்படுவதற்குச் சோம்பல். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்குச் சோம்பல். பரிசுத்தம் அடைவதற்குச் சோம்பல். பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்வதற்குச் சோம்பல். ஜெபிப்பதற்குச் சோம்பல். வேதம் வாசிப்பதற்குச் சோம்பல். இடைவிடாமல் இயேசுவில் நிலைத்திருப்பதற்குச் சோம்பல். சுவிசேஷ ஊழியத்தில் சோம்பல். சாட்சி பகருவதில் சோம்பல். ஆத்தும ஆதாயம் செய்வதில் சோம்பல். ஓர் ஆறுதலான சொல் சொல்லுவதில் சோம்பல். ஒரு சிறு நன்மை செய்வதில் சோம்பல். ஒரு தம்ளர் தண்ணீர் கொடுப்பதற்குச் சோம்பல். ஒரு பிடி அன்னம் கொடுப்பதற்குச் சோம்பல். ஒரு கந்தைத் துணி கொடுப்பதற்குச் சோம்பல். தங்களுக்கு அருமையானவர்களை இழக்க கொடுத்தவர்களுக்கு ஆறுதல்மொழி சொல்வதற்குச் சோம்பல். ஒரு மரியாதைச் சொல் சொல்வதற்குச் சோம்பல். குளிப்பதற்குச் சோம்பல். உடலை சுத்தமாக வைப்பதற்குச் சோம்பல். ஒரு புன்னகை காட்டி ஒரு புண்பட்ட உள்ளத்தைத் தேற்றுவதற்குச் சோம்பல். அதைரியப்பட்டுக் கிடப்போரை ஓர் உற்சாகச்சொல் கூறி ஊக்கப்படுத்தவதற்குச் சோம்பல். ஏழைகளையும், அனாதைகளையும், விதவைகளையும், திக்கற்றோர்களையும் ஆதரிப்பதற்குச் சோம்பல். ஆலயம் செல்வதற்குச் சோம்பல். தசமபாகம் கொடுப்பதற்குச் சோம்பல். ஊர் ஊராய்த் தெருத் தெருவாய் நடந்து சென்று சுவிசேஷத்தைக்கூறி அறிவிப்பதற்குச் சோம்பல். நீங்கள் அசதியாயிராமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினதலும், நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம் (எபி.6:11-12).
மார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சாத்தான் ஒரு மாநாடு கூட்டி, தன்னுடைய தூதர்களையெல்லாம் அதற்கு வரவழைத்து, அவர்கள் செய்துவரும் தொண்டுகளைப்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டான். அப்பொழுது அம்மாநாட்டில் ஒரு பேய் எழுந்து நின்று: கிறிஸ்தவர்களில் சிலர் கூட்டமாக ஒரு வனாந்தரத்தைக் கடந்துகொண்டிருக்கும்பொழுது, நான் காட்டு விலங்குகளை ஏவி அவர்களைக் கொன்றொழிக்குமாறு தூண்டினேன். அவ்வாறே அக்கிறிஸ்தவர்களை அவ்வன விலங்குகள் பீறீப்பட்சித்துப் போட்டன. அவர்களுடைய எலும்புகள் இப்பொழுது வனாந்தரத்தில் உலர்ந்துகொண்டிருக்கின்றன என்று கர்ச்சித்தது. அப்பொழுது சாத்தான் மாறுத்தரமாக: அவர்களுடைய சரீரம் செத்து எலும்புகள் உலர்ந்தால் நமக்கு யாது பயன்? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான். இன்னொரு பேய் எழுந்து நின்று: கிறிஸ்தவர்கள் குழுமியிருந்த ஒரு கப்பலின்மீது பலத்த காற்று அடிக்குமாறு செய்து, அக்கப்பலை மூழ்கச்செய்தேன் என்றது. அப்பொழுது சாத்தான் அதற்கு விடையாக, அக்கிறிஸ்தவர்கள் கடலில் மூழ்கிச் செத்துப்போனதால் நமக்கு லாபம் என்ன? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான். மற்றொரு பேய் எழும்பி நின்று: ஒரு மனிதனை ஆத்தும இரட்சிப்பைப்பற்றிக் கவலையற்று நிர்விசாரமாய் இருக்குமாறு, பின்னர் மனந்திரும்பிக் கொள்ளலாமென்றும் பத்து ஆண்டுகளாகச் சோம்பலோடு நிர்விசாரமாய் இருக்குமாறு செய்துவிட்டேன். இப்பொழுது அவன் நம்முடையவன் என்றது. அப்பொழுது சாத்தான் வெற்றிமுரசு கொட்டி, அப்பேயை பாராட்டிப் பெரிதும் அகமகிழ்ந்தான். நரகமும் பேய்கணங்களும் பூரித்து ஆரவாரம் செய்தன.
சோம்பல் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நரகம் செல்கிறார்கள். நம்மை நரக அக்கினிக் கடலிலே தள்ளும் சோம்பலைக் குறித்து நாம் மிக மிக ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். வெளிப்பார்வைக்கு வெகு அற்பமாகத் தோன்றும் சோம்பல் நம்மையும் நம் சரீரத்தையும் ஆவியையும், ஆத்துமாவையும் அழித்துவிடும் கொடிய பயங்கர பாவமாகும். நாம் உடனே, இன்றே மனந்திரும்பி இயேசு இரட்சகரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொளாதபடி நம்மைத் தடுத்து நிற்பது சோம்பலே. இயேசு இரட்சகரை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாம் நரக ஆக்கினை அடைவது அதிக நிச்சயம் (யோவான் 3:18,36) என்னும் உண்மை நன்கு தெரிந்திருந்தும், அநேகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் சோம்பலே, அசதியே, நிர்விசாரமே, பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற காலதாமதமே, அசமந்தமே, அசட்டையாகும்.
இந்தச் சோம்பல் என்னும் பாவத்தை நாம் நினைத்து மனம் வருந்தி அதை கர்த்தரிடம் அறிக்கையிடுவோமாக. நீ இன்னும் இரட்சிக்கப்படாவிட்டால், இந்த நிமிடத்தில்தானே, இதனைப் படித்துக்கொண்டிருக்கும் போதுதானே இப்புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, மனந்திரும்பி பாவமனஸ்தாபக் கண்ணீரோடு இயேசு கிறிஸ்துவை உனது சொந்த இரட்சகராக, தெய்வமாக ஏற்றுக்கொள். இப்பொழுது நீ மனந்திரும்பாவிட்டால், நீ அழிவது திண்ணம். இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போனாமால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம் (எபி.2:4).









