நான் நேர்மையுள்ளவனா ?
நீங்கள் பிறரோடு எவ்வளவு நேர்மையோடு நடந்துகொள்ளுகிறீர்கள்? பின்வருவது போன்ற உண்மைக்கேடு ஒவ்வொன்றிலும் தேவன் உங்களை ஆராய்ந்து பார்க்க அவரைக் கேளுங்கள். உங்கள் வார்த்தையிலும் வாயிலும் அடிக்கடி நிகழும் பின்வருபவற்றிற்கு எதிராகக் குறியிடுங்கள். உங்களையே நீங்கள் வஞ்சித்துக்கொள்ளவில்லை என்ற நிச்சயம் தேவையானால், தெய்வபக்தியுள்ள நண்பரொருவரை இப்படிப்பட்ட சுபாவங்கள் ஏதேனும் உங்களில் காண்கிறரா எனக் கேட்டுப் பாருங்கள்.
- மிகைப்படுத்தல்
என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள். அவைகளில் புரட்டும் வீபரீதமும் இல்லை (நீதி.8:8).
தேவ சேவையில் எனது பிரயாசத்தின் பலன்களை அல்லது விளைவுகளை மிகைப்படுத்துதல்.
எப்போதும்… ஒருபோதும் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதினால் உண்மையோடு கூட்டுதல்.
மக்கள் மற்றும் சூழ்நிலைகளை ஒரேயடியாகப் பொதுவான கருத்துக்குள் அடைத்தல்.
கதையை வேடிக்கையாக்க சுவாரஸ்யமாக்க, அதற்கு கண், மூக்கு, காது வைத்தல்.
- முகஸ்துதி
அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள். இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள் (சங்.12:2).
வஞ்சகமாய்ப் புகழுதல்.
பிறரிடம் நல்ல பேர் வாங்க அவரைத் தூக்கிப் பேசுதல்
- பொய்
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;. உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம் (நீதி.12:22).
புறங்கூறுதல் – பிறரைக் குறித்த பொய் வதந்திகளை அன்னாரைப் புண்படுத்தும் நோக்கோடு பரப்புதல்.
எனது கவுரவத்தைக் காத்துக்கொள்வதற்காக நேரடிக் கேள்விகளுக்கு உண்மையற்ற பதில் கூறுதல்.
சுய ஆதாயத்திற்காக நேர அட்டை, வேலை மனுக்கள், வரவுசெலவு கணக்கு, வரி இவற்றில் வஞ்சனை.
- தப்பெண்ணம் தருதல்
கர்த்தருக்கு முன்பாக மட்டுமல்ல, மனிதருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம் (2.கொரி.8:21).
எனது வார்த்தைகள் உண்மையாயிருந்தாலும் தப்பப்பிராயம் கொடுத்தல்.
சுய நோக்குடன் தெரிந்தெடுக்கப்பட்ட சில உண்மைகளை மட்டுமே எடுத்துக்கூறி காரியத்தைச் சாதித்தல்.
வேலை வாய்ப்பு தரக்கூடியோருக்கு ஏமாற்றுதலான விபரங்கள் அளித்தல்.
- பிழை
நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம் (எபி.13:18).
விபரத்தைக் கூறுமுன் அது உண்மைதானா எனச் சரிபார்க்கத் தவறுதல்.
விபரத்தின் நுணுக்கங்களைக் கவலையீனமாக ஏனோதானோவென்று சொல்லுதல்.
தெளிவாய்ப் பேசத் தவறுதல் அல்லது சொல்வது எழுத்தளவில் உண்மைதானா என யோசிக்காமல் பேசுவது.
- ஏமாற்று
கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபட நாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும் (சங்.120:2).
என்னுடைய உண்மை நிலையைவிடக் கூடுதலாக என்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்தல்.
மக்கள் பிறரைக் குறித்து உண்மையற்றவைகளைப் பேச இடமளித்து எனது மவுனத்தினால் சம்மதத்தைத் தெரிவித்தல்.
எனது ஆன்மீக முதிர்ச்சியையும் அர்ப்பணிப்பையும் இல்லாத அளவு கூட்டிக் காட்ட முயற்சித்தல்.
பாவங்களை மூடி மறைத்தல்
- மாய்மாலம்
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீய நெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும் (நீதி.26:23).
உள்ளத்தில் கசப்பையும் பகையையும் வைத்துக்கொண்டு வெளியே கனிவுடன் பேசுதல்.
முகத்தில் புகழ்ந்துவிட்டு முதுகுக்குப் பின்னே தூற்றுதல்.
- மாறாட்டம்
நான் கர்த்தர், நான் மாறாதவர் (மல்.3:6).
ஆளுக்கேற்றாற்போல் பேச்சை மாற்றுதல்.
எனது கருத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் பிறர் கேட்க விரும்புவதைப் பேசுதல்.
கேட்கிற நபருக்கேற்றவாறு விபரத்தைத் திருக்குதல்.
- கபடு
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான் (சங்.32:2).
மறைவான திட்டங்களுடனும் தில்லுமுல்லு நோக்கங்களுடனும் பழகுதல்.
ஒப்பந்தத்தின் ஆவியையும் நோக்கத்தையும் மதியாமல் நழுவ வழியுண்டா எனப் பார்த்தல்.
- உடைத்த வாக்குறுதிகள்
கர்த்தாவே யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான் (சங்.15:1,4).
ஜெபிக்க வாக்களித்துவிட்டுத் தவறுதல்.
குறித்த இடத்திற்கு வர, அல்லது ஒன்று செய்ய ஒப்புக்கொண்டு தவறுதல்.
பணம் செலுத்தச் சம்மதித்துவிட்டுத் தவறுதல்.












