மன்னிப்பு தேவன் அருளும் இலவச ஈவு. இது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் உரியதல்ல. முழுமனதுடன் தேவனை நம்புகிற யாவரும் இலவசமாய் மன்னிப்பைப் பெற்று மகிழலாம். நம்பாதவர்களின் நிலை?? கீழ்க்கண்ட உண்மைச் சம்பவம் இதை நமக்கு விளக்கும்.
அநேக வீடுகளையும், பல ஏக்கர் நிலத்தையுமுடைய ஒரு செல்வந்தன் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, பாவ மன்னிப்பையும் மீட்பையும் பெற்று மன அமைதியோடு வாழ்ந்து வந்தான். இயேசு பெருமானின் சிலுவைப் பாடுகளின் வழியாக, தான் எதைப் பெற்று அனுபவிக்கிறானோ அதைத் தன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த ஏழை எளிய மக்களும் பெறவேண்டுமென விரும்பிய செல்வந்தன் ஒரு அருமையான திட்டம் வகுத்தான்.
செல்வந்தனின் பண்ணையில் குடியிருக்கும் அநேகர் வீட்டு வாடகையைக் கொடுத்து பல மாதங்களாகி இருந்தது. வேறு பலர் வெளியில் கடன் வாங்கி வட்டி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். சிலர் பலவிதமான பணநெருக்கடிக்கு ஆளாகித் தங்கள் உடமைகளை அடகு வைத்திருந்தனர். இந் நிலையில் இவர்கள் குடியிருந்த பகுதிகளில் ஒரு விநோதமான விளம்பர சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதில் நம்புகிறவர்களுக்கு மட்டும் என்ற தலைப்பின் கீழ் ஒரு நாளைக் குறிப்பிட்டு, அன்று காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தங்கள் கடன் பத்திரங்களுடன் தன் அலுவலகத்திற்கு வருகின்ற அனைவரின் கடனும் தீர்த்து வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சுவரொட்டி ஜனங்களின் மனதில் பெரும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. சிலர் இது ஏதோ ஒரு விளையாட்டு என்றனர். மற்றவர்கள் செல்வந்தருக்கு பைத்தியமோ என சந்தேகப்பட்டனர்.
அறிவிக்கப்பட்ட அந்நாள் வந்தது. பலர் செல்வந்தனின் அலுவலகம் நோக்கிச் சென்றனர். 10 மணிக்கு குறிப்பிடக்கூடிய அளவில் கூட்டம் கூடிவிட்டது. செல்வந்தரும் தன் உதவியாளருடன் காரில் வந்தார். ஜனங்களின் வியப்பு அதிகமானது. உள்ளே யாரேனும் வருவார்களா என அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியே இருந்தவர்கள் பலவிதமான விவாதம் செய்தபடி இருந்தனர். நம்பினோரும் உள்ளே போகவில்லை. இருமனமுள்ளவர்களாய் குழப்பத்திற்குள்ளாகித் தவித்தனர். கொஞ்சம் பேர் நாம் முதலாவது உள்ளே போனால் முட்டாள் ஆக்கப்படுவோம் என எண்ணிப் பயந்தனர். அலுவலக சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி 12 ஆக இன்னும் 15 நிமிடங்களிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தன.
இறுதியாக வயதான தம்பதிகள் கையில் ஒரு கத்தை கடன் பந்திரங்களுடன் வந்தனர். கூடியிருந்தவர்களை நோக்கி நீங்கள் ஏன் உள்ளே போகாமல் வெளியே இருக்கிறீர்கள்? என்றார்கள். எல்லாம் செல்வந்தனின் கேலிக் கூத்து. உங்களுக்கு விருப்பமென்றால் உள்ளே போங்கள். நாங்கள் முட்டாள்களாக விரும்பவில்லை. மேலும் நீங்கள் போய்ப் பாருங்கள். உங்கள் கடன் தீர்க்கப்பட்டால் உடனே எங்களுக்குச் சொல்லுங்கள். பிறகு நாங்கள் போகிறோம் என்றார்கள். மணி 12 ஆக இன்னும் சில நிமிடங்களே இருந்தன.
மூடியிருந்த அலுவலக கதைவைத் திறந்துகொண்டு இருவரும் உள்ளே சென்றனர். அன்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவர்களின் கடனுக்கான காசோலையை செல்வந்தர் கொடுத்தார். வயதான அத்தம்பதிகளின் மகிழ்ச்சிக்கு அளவேது? வயதான காலத்தில் கடன் சுமையின்றி மரிப்பது எத்தனை பாக்கியமென்றெண்ணி கண்ணீரோடு செல்வந்தருக்கு நன்றி கூறினர். வெளியே இருப்போருக்கு உண்மையைச் சொல்லப் புறப்பட்டபோது, உதவியாளர் இருவரையும் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்கள், தங்கள் வருகைக்காக வெளியே காத்திருக்கும் கூட்டத்தினரைப் பற்றிச் சொன்னதும், நீங்கள் விளம்பரத்தை வாசிக்கவில்லையா?? நம்புகிறவர்களுக்கு மட்டும். நீங்கள் எப்படி நம்பினீர்களோ அப்படியே அவர்களும் வரலாமே என்றார். மணி 12 அடித்தது. செல்வந்தர் தன் உதவியாளருடன் வெளியே வந்தார். வயதான தம்பதிகளுடன் காசோலையுடன் வெளியே வந்ததைப் பார்த்த ஜனங்கள், காரில் எறப்போன செல்வந்தரிடம் தங்கள் கடன் பத்திரங்களுடன் ஓடி அவரை இடை மறித்துத் தங்கள் கடன் சுமைகளைத் தீர்க்கும்படி அவரை வேண்டிக் கொண்டனர். அவரோ என்னை நம்பினவர்களுக்கு நான் சொன்னதைச் செய்யத் தவறவில்லை. என் வார்த்தையை நம்பாதது உங்கள் தவறன்றோ? நம்பினோர் நன்மையடைவர் எனக் கூறிவிட்டுக் காரில் ஏறிச் சென்று விட்டார்.
நண்பனே! தேவனுடைய அன்பான வார்த்தையை அலட்சியப்படுத்தாதே. நம்பினால் நன்மையடைவாய். செல்வந்தரின் வார்த்தையை நம்பினோர் நன்மையடைந்து மகிழ்ச்சியோடு சென்றனர். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் என அழைக்கிறார். அவர் எல்லாரிலும் அதிகமாக நம்மை நேசிக்கிறார். நம் பிரச்சனைகள், தோல்விகள் மற்றும் தேவைகளை நன்கு அறிந்திருக்கிறார். மேலும் பாவக்கடனைத் தீர்க்க அவர் சிலுவையில் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்து, பாடுபட்டு மரித்தார். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். நண்பனே! இன்றும் இயேசுகிறிஸ்து ஜீவிக்கிறார் ! அவர் உன் உள்ளத்தில் வாசம் பண்ண விரும்புகிறார். அவரை நம்பி உன் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டால் நீ நன்மையடைவது நிச்சயம்.
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் அவன்மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்தற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் (ஏசா.55:6-7).
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்.1:37).
நாடி வரும் நல்ல ஈவு
பணமுமின்றி விலையுமின்றி என்ற தம் வசனத்தின் நிபந்தனைக்கேற்ப தேவன் நித்திய ஜீவனாகிய ஈவை அனைவருக்கும் முன்பாக வைக்கிறார். இந்த நிபந்தனைக்குட்பட்டு இதைச் சொந்தமாக்கிக் கொண்டு அனுபவிப்பவர்கள் சிலர். கொடைவள்ளல் ஒருவர் அடிக்கடி தன் நண்பர்களின் தேவையை அறிந்து பெருமளவில் எரிபொருளை (கரி) அவர்கள் வீட்டிற்கு அனுப்புவதற்கு ஒழுங்குசெய்வார். குளிர்காலம் கடும் பனியோடும் வழக்கத்திற்கும் அதிகமாக இருந்தது. தேவையானதை அனுப்பி வைத்த இந்தக் கொடைவள்ளல், தன் வெகுமதியால் எளிய மக்கள் குளிரில் அனலடைந்து ஆறுதல் அடைந்திருப்பார்கள் என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
எரிபொருளை சுமந்து வந்த வண்டியானது ஏழ்மையின் சின்னமாகக் காட்சிதரும் ஒரு வீட்டு வாசலில் நின்றது. அக் கதவைத் தட்டினதும் வயதான ஒருவர் வெளியே வந்தார். ஐயா! உமக்கு தேவையான எரிபொருளைக் கொண்டு வந்துள்ளேன் என்றதும் யாரிடமிருந்து? என்றார். உங்கள் நண்பர் இதைத் தங்களிடம் சேர்க்கும்படி ஏற்பாடு செய்துள்ளார் என்றதும், இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது, என்றெண்ணி, எரிபொருள் எனக்கு சேரவேண்டியதல்ல ! மேலும் நான் அப்படிப்பட்ட அதிஷ்டசாலியுமல்ல! எதையும் எதிர்பாராது எரிபொருளை எனக்கு அனுப்பி வைக்கும் நண்பரும் எனக்கு இல்லை. எனவே எரிபொருளை இங்கு இறக்கவேண்டாம் ! எனக் கூறிக் கதவை அடைத்தார். வண்டி மீண்டும் உருள ஆரம்பித்துவிட்டது. அதில் வயதானவருக்கு உரிய வெகுமதி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
மறுநாள் எரிபொருளோடு வண்டி நகரத்தின் வேறு பகுதிக்கு வெகுமதியை சுமந்து சென்றது. வண்டிக்காரன் ஒரு வீட்டின் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் ஐயா உமக்கு சேரவேண்டிய எரிபொருளை எங்கு இறக்கவேண்டும்? என்றதும் இவரும் சந்தேகப்பட்டு இது எனக்கல்ல இதில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்கிறது என்றார். உங்கள் வீட்டு எண் 24 தானே. இது உமக்குச் சேரவேண்டியதுதான் என்றான் வந்தவன். வீட்டு எண் சரியானது, ஆனாலும் எரிபொருள் எனக்குச் சேரவேண்டியதல்ல, இது நிச்சயமாக யாருக்கோ உரியது என்று சொல்லிவிட்டு தாளிட முயன்றபோது வண்டியுடன் வந்தவன் கைபிசைந்தபடி இந்த எரிபொருள் என்னைப் பரியாசம் செய்வதுபோல இருக்கிறது. அப்பப்பா!!!! காலத்திற்கேற்ற வெகுமதியைக் கொடுக்கச் சென்ற நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல! நான் என்ன ஆட்களைக் கொல்லும் விஷத்தையா கொண்டு வந்திருக்கிறேன்? அனுதின தேவைக்கு உபயோகமான எரிபொருள் அல்லவா! ஆனாலும் ஏனோ இந்த வெகுமதியைப் புறக்கணிக்கிறார்கள் என்று முனகிக்கொண்டே, மறுபடியும் ஐயா! நீங்கள் பின்புறக்கதவைத் திறக்கவில்லையானால், நான் இந்த வீட்டு முன் எரிபொருளை இறக்கப்போகிறேன் என்று கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னபின் பின்புறக் கதவைத் திறக்கலானார். அவர் மீண்டும் நீ வந்து உன் தவறான செய்கையை உணர்ந்து எரிபொருளை திரும்பவும் எடுத்துச் செல்ல போகிறாய் என ஐயப்படுகிறேன், எனவே சிறிதளவு இறக்கினால் போதும் மெய்யாகவே இவை எனக்காக அனுப்பப்பட்டிருந்தால் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்று அரைமனதுடன் ஏற்றுக்கொண்டார்.
மற்றொரு வீட்டின் கதவையும் வண்டியுடன் வந்தவன் தட்டினான். வெளியே வந்த பெண்மணியிடம் அம்மா உமக்காக எரிபொருளைக் கொண்டுவந்திருக்கிறேன் என்றதும், எனக்கா? இது சரியானதாக இருக்கமுடியாது. நிச்சயமாக அடுத்தவருக்கு சேரவேண்டியதுதான் என்றாள். அதற்கு வண்டியுடன் வந்தவன் அம்மா! இந்த வீட்டின் எண் 36 தானே? என்று கேட்க அவளும் ஆம் என்றாள். அப்படியானால் இவை உமக்குச் சேரவேண்டியதுதான் என்றான். அப்படியானால் இது எனக்காக அனுப்பிவைக்கப்பட்டதுதான். தேவன் இதை யார்மூலமாகவோ எனக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் எரிபொருள் மூட்டையும் காலியாகிவிட்ட இந்த நேரத்தில் எரிபொருளின் கடைசிப் பகுதியை சமையலுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனவே அதை உள்ளேகொண்டுவாருங்கள் என்றாள். மேலும் அந்தப் பெண்மணி தன் கண்களை மூடியபடி ஆண்டவருக்கு நன்றி செலுத்தினாள்.
அம்மா! தாங்கள் ஒருவர் தான் விவேகத்துடன் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்று கூறிய படி வீட்டிற்குள், எரிபொருளை இறக்கிக் கொண்டிருந்தான். எரிபொருளை நல்மனதுடன் ஏற்றுக்கொண்ட அந்த அம்மாள் விவேகமுள்ளவள் என்றால் மற்றவர்கள் நிச்சயமாக மதியற்றவர்கள் அல்லவா?
ஆம்! இந்த உலகில் நாடி வரும் நல்ல ஈவை எனக்கல்ல என்று புறக்கணிக்கும் மூடர்கள் அநேகம் பேர் உள்ளனர். தேவன் தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக கொடுத்தார். விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளினார்.
எரிபொருளுக்கான தொகையை கொடைவள்ளல் கொடுத்ததுபோல, நம்முடைய மீட்பும் பெரும் கிரயம் கொடுத்துச் சம்பாதிக்கப்பட்டது. அது தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் சிலுவையில் சிந்திய இரத்தமே அந்த மாபெரும் கிரயம் எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே (1.தீமோ.2:6).
அன்பான வாசகரே! எரிபொருளை வேண்டாமென்று புறக்கணித்தவர்களைப் போல இன்று இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் கொடுக்கும் இரட்சிப்பை ஏற்காதவர்கள் பலர், வானத்தையும் பூமியையும் படைத்த அன்புள்ள தேவன் கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை நீர் பெற்று சந்தோஷமாக வாழவேண்டுமென தேவன் விரும்புகிறார். இக்கருத்தான கதையின் மூலம் இரண்டு காரியங்கள் உமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று பெற்றுக் கொள்வது, அல்லது புறக்கணிப்பது. ஞானமாகத் தீர்மானம் செய்வீராக.
பிரியமானவரே! நீ தேவனுடைய ஈவை…. அறிந்திருந்தாயானால் (யோ.4:10). இயேசு கிறிஸ்துவை உம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.9:15). என்று மன நிறைவுடன் நன்றி செலுத்துவாயாக.
என் பிரியமான சகோதரரே, நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது (யாக்.1:16-17).
துயரத்தில் துணை
குளுகுளு கோடை இருப்பிடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. எந்த ஆசிரியராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாணவர்கள் மிகவும் குறும்புக்காரார்கள். எனவே ஆண்டுக்கொரு ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிடுவர்.
நிர்வாகத்தினருக்கே பெரும் பிரச்சனையாகிவிட்ட நேரத்தில், சமீபத்தில் பயிற்சி முடித்த சொற்ப அனுபவமுள்ள வாலிப ஆசிரியர் ஒருவர் மனு செய்திருந்தார். வயதான நிர்வாகி ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்து, வாலிபனே நீ எதற்கு மனு செய்திருக்கிறாய் தெரியுமா? எல்லா ஆசிரியர்களும் ராஜினாமா செய்ததை நீ அறிவாயே என்றார். ஆனாலும் அந்த வாலிப ஆசிரியர், நம்பிக்கையோடு நான் சமாளிக்கிறேன் என்றார்.
புதிய ஆசிரியர் பொறுப்பேற்றதும், அந்தப் பள்ளியிலே உயரமானவனும், குறும்புசெய்வோரின் தலைவனுமாகிய சோமு, யாரும் எனக்கு உதவி செய்யவேண்டியதில்லை. நானே இவரை கவனித்துக் கொள்வேன் என்றான்.
ஆசிரியர் அன்பாக மாணவர்களிடம் நடந்துகொண்டார். அன்று மதிய உணவுக்குப் பின் மாணவர்களே! நீங்கள் எப்படி என்னுடன் ஒத்துழைப்பீர்கள் என்று அறியேன். எப்படியும் சில தீர்மானங்களுடன் ஆரம்பிப்பதே நலமானது. எனவே, சட்ட திட்டங்களை நீங்களே சொல்லுங்கள். நான் கரும்பலகையில் எழுதுகிறேன் என்றார்.
திருட்டுத்தனம் தகாது என்றர் ஒருவன். நேரத்தோடு வரவேண்டும் என்றான் மற்றவன். கடைசியில் பத்து தீர்மானங்கள் கரும்பலகையில் காணப்பட்டன. பின்பு ஆசிரியர், சட்ட திட்டங்களுடன் ஒரு தண்டனையும் இணைக்காவிட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே, இதை மீறுகிறவனுக்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்றார். மேல் சட்டையின்றி பிரம்பால் பத்து அடிகள் முதுகில் அடிக்கவேண்டும் என ஒருவன் ஆலோசனை சொன்னான்.
ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, நீங்கள் அனைவரும் இந்தத் தீர்மானங்களுக்கு கட்டுப்படத்தயார்தானே? என்றார். கட்டுப்பட்டு நடப்போம், தீர்மானங்களைக் காப்போம் என அனைவரும் உரத்த சத்தமாய்ச் சொன்னார்கள். இனி பள்ளி நிச்சயமாக கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றார் ஆசிரியர்.
இரண்டொரு நாள் கடந்தபின் சோமுவின் மதிய உணவு திடீரென காணவில்லை. தேட ஆரம்பித்தார்கள். முடிவில் பாலு திருடினவன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பத்து வயதுடைய இவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தான். அடுத்த நாள் ஆசிரியர், நாம் திருடனைக் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி நம் சட்டப்படி இவன் அடிக்கப்படவேண்டும்! பாலு, நீ இங்கு வா என்றார்.
நடுக்கத்தோடு, பரிதாபத்திற்குரிய பாலு ஒரு பெரிய போர்வையை போர்த்தினவனாக மெல்ல ஆசிரியரை நெருங்கி, ஐயா நீங்கள் சட்டப்படி என்னை அடியுங்கள். ஆனால் என் போர்வையை மட்டும் எடுக்க சொல்லவேண்டாம் என மிகவும் கெஞ்சினான். பாலு, போர்வையை எடு! சட்ட திட்டங்கள் உருவாவதற்கு உதவினவனல்லவா நீ ? என ஆசிரியர் சொன்னதும், மெல்ல தன் போர்வையை எடுத்தான். ஆசிரியர் அப்படியே அசந்துபோனார். சட்டைகூட இல்லாமல் எலும்புக்கூடாகக் காட்சியளித்தான் பாலு.
ஆசிரியர் தன் தலையை வேறுபக்கம் திரும்பினவராக, எப்படி இந்தச் சிறுவனை அடிப்பேன்? சட்டதிட்டங்களை காத்தே தீரவேண்டுமே என யோசித்துக்கொண்டிருக்கையில் மயான அமைதி நிலவியது. அப்போது பாலு, ஏன் நீ சட்டை போடாமல் போர்வையுடன் வந்திருக்கிறாய்? என அன்புடன் வினாவினார். ஐயா! நாங்கள் மிகவும் ஏழைகள். என் தந்தையும் கடந்த ஆண்டு மரித்துவிட்டார். இன்று என்னிடமுள்ள ஒரே சட்டையை அம்மா துவைக்கிறார்கள். எனவே குளிருக்காக போர்வையுடன் வரவேண்டியதாகிவிட்டது என்றான். சொன்னவைகளைக் கேட்டதும், கரத்தில் பிரம்புடன் நின்றிருந்த ஆசிரியரின் மனம் துக்கத்தால் நிறைந்தது.
அத்தருணத்தில்தானே சோமு ஓடோடி ஆசிரியரிடம் வந்து, ஐயா, உங்களுக்குத் தடையில்லையென்றால், நான் பாலுவுக்காக அடிகளைத் தாங்கிக்கொள்ளத் தயார் என்றான். உடனே ஆசிரியர் அப்படியென்றால் நல்லது. ஒரு சட்டமுண்டு, அதாவது ஒருவனுடைய தண்டனையை அடுத்தவன் பதிலாளாக நின்று ஏற்றுக்கொள்வதுதான். மாணவர்களே ! நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள்தானே என்றார்.
உடனே சோமு சட்டையைக் கழற்றிவிட்டு ஆசிரியரிடம் வந்தான். பலமான ஐந்து அடிகள் முதுகைப் பதம் பார்த்தபின் பிரம்பு ஓடிந்துவிட்டது. ஆசிரியர் தன் கரத்தில் முகத்தைப் புதைத்தவராக, மீதியுள்ள பயங்கரமான தண்டனையை எப்படி நிறைவேற்றுவேன்? எனச் சிந்திக்கலானார்.
இத் தருணத்தில் எல்லா மாணவர்களின் கண்களும் குளமாயின. அப்போது ஆசிரியர் கண்ட காட்சி யாதெனில், பாலு சோமுவின் கழுத்தை இறுகக் கட்டிப்பிடித்தவனாக, சோமு, தயவுசெய்து என்னை மன்னித்துவிடு. கடுமையான பசி உன் உணவைத் திருடும்படி செய்துவிட்டது. நீ எனக்காக அடிக்கப்பட்டாயே, நான் என்றும் உன்னை நேசிக்கிறேன் ! நேசிக்கிறேன் என விம்மி விம்மி அழுதான்.
சோமுவின் தியாகச் செயல் நம் உள்ளத்தைத் தொடுவது நிச்சயம். அன்பரே! அதுபோல, கல்வாரி சிலுவையில், தேவனுடைய கரத்தால், நம் பாவத்திற்காக இயேசு இரட்சகர் பாடுபட்டாரே. இந்த அன்பான காட்சியை எண்ணி உம் உள்ளம் என்றாவது உருகினதுண்டா? நாம் பாவம் செய்தவர்கள். அதற்காகத் தண்டனையையும், துயரத்தையும், பின்பு நித்திய மரணத்தையும் அடையவேண்டியவர்கள். அன்பின் சொரூபியாம் இயேசுகிறிஸ்து, நம் துயரத்தில் துணை நின்றார். தண்டனையை அவர்தாமே ஏற்றுக்கொண்டார். உம் பாவத்திற்காக இனி நீர் தண்டனையை அடைய வேண்டியதென்ன? நமக்காகத் துணை நின்ற இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால், துயர் துடைக்கப்படும்.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசா.53:5-6).
இரக்கத்தின் சிகரம்
உள்ளத்தை உருக்கும் பல சம்பவங்கள் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்தன. இவர் ஏழை எளிய மக்கள் நலனின் மிகவும் அக்கறை உள்ளவராகவும், மனவுருக்கத்திற்கு பேர் பெற்றவராகவும் விளங்கினார். திடீரென நாட்டில், உள்நாட்டு கலகம் ஏற்பட்டது. கலகத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான சிப்பாய்கள் இல்லாததால் அரைகுறையாக பயிற்சி பெற்ற சிப்பாய்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். தங்கள் பணிகளைச் சரிவரச் செய்யாத சிப்பாய்களைச் சுட்டுக் கொல்லும்படி இராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். யாரேனும் ஜனாதிபதியிடம் சென்று மனு செய்தால், விசேஷ உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை பெறுவர். இதைக் கண்ட ஜனங்கள், ஜனாதிபதி மிகவும் இரக்கமுள்ளவராக இருந்து, குற்றவாளிகளை விடுவிக்கிறார், இனி நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே சுடப்பட வேண்டுமென்றும், விடுதலைபெற உத்தரவிடக் கூடாதென்றும் பெருமளவில் பொங்கியெழுந்தனர்.
சில வாரம் கடந்தது. அப்போது தன் காவல் பணியில் ஒரு இளம் சிப்பாய் தூங்கிவிட்டான். உடனே நீதிமன்றம் அவனைச் சுடம்படி தீர்ப்பளித்து விட்டது. இந்நிலையில் அந்த வாலிபச் சிப்பாய் தன் தாயாருக்கு எழுதினது யாதெனில், அம்மா நான் நம்நாட்டின் நலனின் அக்கறையற்றவன் என்று தாங்கள் எண்ண வேண்டாம், உன் உடன் சிப்பாய் ஒரு நாள் வியாதிப்பட்டிருந்தான். அவனுடைய காவலுக்கு பதிலாக நான் நின்றேன். மறுநாள் இரவும் அவன் வியாதியின் கடுமையால் வரமுடியாமல் போனதால், மீண்டும் அவனுக்காகக் காவல் காத்தேன். அன்று, நான் நினையாத வண்ணம் அசதியால் உறங்கிவிட்டேன். இதுதான் உண்மை, மற்றபடி நம் தாய் நாட்டிற்கு துரோகம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக எனக்கில்லை இதைப்படிக்கும்போது தாயாரின் நிலை பரிதாபத்திற்குரியதன்றோ!
இக்கடிதம் மெய்யாகவே நம் உள்ளத்தைத் தொடுவது நிச்சயம். வாலிபனின் பெற்றோர், மக்கள் பொங்கியெழுந்து தண்டனையை நிறுத்தக் கூடாது என எதிர்த்ததை எண்ணி துக்கத்தில் மூழ்கினர். இக்குடும்பத்தில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் ஜனாதிபதிக்கு ஒரு சிறுவன் இருப்பதும், அவன் தகப்பனாரால் நேசிக்கப்படுவதையும் அறிவாள். என் அண்ணணும் தன் பெற்றோரால் நேசிக்கப்படுவதை ஜனாதிபதி அறிவாரேயானால் நிச்சயமாக சுடப்படுவதற்று அனுமதிக்கவேமாட்டார், என்று அவள் தன் சகோதரனுக்காக பரிந்து பேச ரெயிலில் புறப்பட்டாள்.
அவன் ஜனாதிபதியின் மாளிகையை அடைந்த உடன் எல்லாக் காவலையும் கடந்து அவரைக் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. உடனே அவன் தன் வருகையைப்பற்றி சொன்னாள். கேட்டவர்களின் கண்கள் குளமாயிற்று. மனமிரங்கிய காவலர்களும் அதிகாரிகளும் அவளை உள்ளே அனுமதித்தனர். இப்போது ஜனாதிபதியின் நேர்முகசெயலரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து அனுமதிபெறவேண்டுமே! எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துவிட்டு, ஜனாதிபதியின் தனி அறைக்குள் நுழைந்துவிட்டாள். அங்கு அமைச்சர்களும், மற்ற உயர் அதிகாரிகளும் பல முக்கிய அலுவல்களில் மும்முரமாயிருந்தார்கள்.
ஜனாதிபதி சிறுமியைக் கவனித்தார். அவளைத் தன்னிடம் அழைத்து, நான் உனக்கு என்ன செய்யவேண்டும் மகளே? என்றவரிடம் அவள் தன் வருகையைப்பற்றிகண்ணீரோடு கூறினாள். ஜனாதிபதி தன்னை அடக்கிக் கொண்டவராக வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். அவரும் ஒரு சிறுவனின் தந்தையல்லவா! அவரால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உடனே சிப்பாயின் தண்டனையை முப்பது நாள் கட்டாய விடுமுறையாக மாற்றிட அவசர உத்தரவைப் பிறப்பித்தார். ஜனாதிபதி உண்மையிலேயே இரக்கமுள்ளவர்தான்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மன இரக்கத்திற்கு யாரையும் நாம் ஒப்பிட முடியாது. ஏனெனில் அது அளவிட முடியாத தேவ இரக்கம். அத்துடன் அவரே இரக்கத்தின் சிகரம். நாம் செய்த பாவத்திற்கான தண்டனையை நாம் அடைய வேண்டியவர்களாய் இருக்கிறோhம். ஆபிரகாம் லிங்கள் தண்டனையிலிருந்து வாலிபனை விடுவித்தாரே தவிர, வாலிபனுக்கு பதிலாக தன்னை தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கவில்லையல்லவா! மேலும் வாலிபன் அடைந்த விடுதலை இவ்வுலக வாழ்விற்குரியது. ஆனால் இரக்கமுள்ள தேவன் தண்டனையை நம்மேல் சுமத்தாமல் இயேசு இரட்சகர் தாமே சிலுவையில் சுமந்து தீர்த்தார். இயேசு இரட்சகரின் அன்பு எவ்வளவு பெரியது! மெய்யாகவே இவர் இரக்கத்தின் சிகரம். இன்று விடுதலையின் வழியானது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு அவருடன் ஒப்புரவாக ஆயத்தமாக இருக்கிறோமா? ஜனாதிபதியைச் சந்திக்க பல காவலைக் கடக்க வேண்டும். ஆனால் இரக்கத்தின் சிகரமான இயேசுகிறிஸ்துவினிடம் வர வாசல் திறந்தே இருக்கிறது, உட்பிரவேசிப்போமாக.
தம்மிடம் வரும் அனைவருக்கும் இயேசுபெருமான் இவ்வாறு கூறுகிறார். நீ சமாதானத்தோடே போ…… என்கிறார், இன்று சமாதானத்திற்காக ஏங்குவோர் எத்தனையோ பேர். அன்பான வாசகரே உம் நிலையென்னவோ? இரக்கத்தின் சிகரமான இயேசுகிறிஸ்துவிடம் வந்து தேவ சமாதானம் பெற்று மகிழ்வீராக.
என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6:37). குமாரன் (இயேசுகிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான்.8:36).
தட்டுகிறார் திறவுங்கள்
ஏழ்மையான பெண்மணியைப் பற்றி கதை ஒன்றுண்டு. கடுமையான பண நெருக்கடியால் தவிக்கும் இந்த அம்மாளைக் குறித்து, இரக்கமுள்ள பெரும் செல்வந்தர் ஒருவர் கேள்விப்பட்டு, கணிசமான தொகையுடன் அந்த அம்மாளின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். பல முறை தட்டியும் திறக்கப்படாமல் போனதால், வீட்டில் அந்த அம்மாள் இல்லை, என்று தீர்மானித்துத் திரும்பிவிட்டார். சிலமணி நேரத்திற்குப்பின்பு அந்தப் பெண்மணியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் இன்று காலை வீட்டிற்குப் பணத்துடன் வந்து கதவைத் தட்டினதையும் பதில் கிடைக்காமல் போகவே திரும்பினதையும் கூறினார். ஓ! ஐயா இன்று காலை கதவு தட்டினது நீங்களா! தயவுசெய்து என்னை மன்னிக்கவும், வாடகை கேட்க வீட்டின் உரிமையாளர் வந்ததாக நினைத்து நான் கதவைத் திறக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தாள்.
எப்படி இந்த அம்மாள் தனக்கு ஆதரவளிக்கப் பணத்துடன் வந்தவருக்குச் செய்தாளோ அது போல எண்ணற்ற மக்கள் ஆண்டவருக்குச் செய்து வருகிறார்கள். அவர்களின் எண்ணம் யாதெனில் ஆண்டவர் எதையோ எதிர்பார்த்துத் தங்களின் இருதயக் கதவைத் தட்டுவதாக நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. அவர் நம் குறையை நீக்கவும், தேவையானதைக் கொடுக்கவும் ஆசிக்கிறார். அவர் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. நம்முடைய இக்கட்டான நிலையிலிருந்து பூரண விடுதலை கொடுப்பதோடு நமக்கு நித்திய சுதந்தரத்தையும் அளிக்கக் காத்திருக்கிறார்.
அப்படியே மனுஷகுமாரனும் ஊழியக்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். (மத்தேயு 20:28).
இதோ, வாசற்படியிலே நின்றுதட்டுகிறேன் (வெளி.3:20) நண்பரே! உட்பிரவேசிக்க காத்திருக்கும் இரக்கமுள்ள இறைவனாகிய இயேசு பெருமான் உம் இருதயக்கதவைத் தட்டுகிறார் திறவுங்கள்.
அழியாத் தழும்புகள்
தியாகுவிற்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எந்த வியாதியுமின்றி திடீரென அன்பு மனைவி இறந்துவிட்டாள். தியாகுவின் துயரத்திற்கு அளவேது? நம் குலதெய்வம் ஏன் நம்மை இப்படித் துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பாவம் தியாகு!
தியாகுவின் மனைவி மரணமடைந்து 10 வருடங்களுக்குள்ளாக, மற்றொரு திடுக்கிடும் சம்பவம் நடந்துவிட்டது. குடிசைப் பகுதியில் வாழ்ந்த ஒரு விதவையின் குடிசை தீடீரென தீப்பிடித்து எரிந்தது. எப்படியோ அந்த வயதான விதவை காப்பாற்றப்பட்டாள். அவளுடைய பேரன் பாபுவைக் காப்பாற்றமுற்பட்டபோது, நெருங்க முடியாத அளவுக்கு தீ பிடித்துவிட்டது. பேரன் பாபு எரியும் குடிசைக்குள் சிக்கிக் கொண்டதைக் கண்ட அவனுடைய பாட்டி அங்கேயே துடிதுடித்து, அதிர்ச்சியால் இறந்துவிட்டாள். இந்நேரத்தில் தியாகு, பயங்கரமாக எரியும் குடிசைக்குள் துணிவுடன் நுழைந்து, பாபுவை இறுக அணைத்துக் கொண்டு வெளியே ஓடிவரும்போது, உத்திரம் ஒன்று தியாகுவின் கையில் விழுந்தது. எப்படியோ பாபு காப்பாற்றப்பட்டான். ஆனால் தியாகுவின் கரத்தில் பயங்கரமான தீக்காயங்கள் ஏற்பட்டன. காயங்கள் நாளடைவில் ஆறிவிட்டன. ஆனால் தளம்புகள்? அவை அழியாத தழும்பகளாகி விட்டன.
பாபுவின் பாட்டி இறந்துவிட்டதால், சிறுவன் அனாதையாகி விட்டான். நடந்த சம்பவத்தை அறிந்த செல்வந்தர் பாஸ்கர் என்பவர் பாபுவை வளர்க்க முன் வந்தார். ஏனெனில் அவருடைய மகன் சுந்தர் சமீபத்தில் கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனான். தியாகுவும் சிறுவனை வளர்க்கவிரும்பினான். இது பிரச்சனைக்குரியதாக இருந்ததால் உடனடியாக ஊர் முக்கியஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். மறுநாள் கூட்டம் நடந்தது. தலைவர் செல்வந்தரான பாஸ்கருக்கு ஆதரவாகப் பேசினார். இந்த விடயத்தில் இருவரின் விருப்பத்தையும் கூடியிருப்போரின் முன்னிலையில் அறிய விரும்பினார்.
முதலாவதாக பாஸ்கர், இவனை நான் வளர்க்கிறேன். மரித்த என் மகனின் இடத்தை இவன் நிரப்புவதுடன் எங்களையும் மகிழ்விப்பான். மேலும் ஒரு பெண்மணியின் துணையின்றி இவனை வளர்ப்பது கடினமல்லா? என் மனைவி இவனை சொந்த மகனைப்போல வளர்ப்பாள் என்றார். இரண்டவதாக எழுந்த தியாகு, கூட்டத்தினரின் முன்னிலையில் தனது கரத்தின் கட்டை அவிழ்த்து அனைவரும் பார்க்கும்படி காண்பித்தான். விகாரமான தழும்புகளைக் கண்டதும் யாவரும் அமைதியாயினர். தலைவரும் ஒன்றும் பேசவில்லை. பாஸ்கரும் மவுனமாகிவிட்டார். இங்கு தியாகு தனக்காக பேசவில்லை. ஆனால் பாபுவை காப்பாற்றுகையில் எற்பட்ட காயங்களின் தழும்புகளே பேசின. தியாகுவின் தியாகத்தையும், தழும்புகளுள்ள அவனுடைய கரங்களையும் கண்ட கூட்டத்தினர் சிறுவனை தியாகுவிடம் ஒப்படைத்தனர்.
தியாகு தந்தையாகவும், தாயாகவும் இருந்து பாபுவை அன்போடு பராமரித்தான். தனக்காக தன் வளர்ப்புத்தந்தை செய்த தியாகத்தை நினைக்கும்போதெல்லாம் பாபு கண்ணீர்விட்டு அழுவதோடு, தளும்புகளுள்ள கரத்தை முத்தமிடுவான். கோடை விடுமுறையில் ஓர்நாள் அருகாமையிலுள்ள ஒரு பட்டணத்தில் நடைபெறும் கண்காட்சிக்கு பாபு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த படங்களில் இயேசுகிறிஸ்து தன் சீடர்களில் சந்தேகப்பட்டவனாகிய தோமாவிற்கு தழும்புகளுள்ள தன் கரங்களை காட்டும் காட்சியானது மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதின் கீழ் பின்வரும் வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார் (யோ.20:27). இந்தப் படம் பாபுவை வெகுவாகக் கவர்ந்தது. உடனே அவன், தன் வளர்ப்புத் தந்தையிடம் அதைப்பற்றிவிளக்கம் சொல்லும்படி கேட்டான். தியாகுவிற்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் சிறுவன் வற்புறுத்தினபடியால் துளைக்கப்பட்ட இயேசு பெருமானின் கரங்களைப் பற்றிச் சொன்னான்.
இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், அவர் சிலுவையில் தன் கரங்கள் ஆணிகளால் அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்ததை கேட்ட பாபு கண்ணீர்விட்டான். சிறுவனின் கண்ணீர் தியாகுவின் சிந்தனையை திசை திருப்பியது. தன் கரத்திலுள்ள தழும்புகளையும், அவை எப்படி உண்டானதென்றும் நினைக்கலானான். உடனே இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் அப்பாடுகள் அனைவருக்காகவும் என்பதையும் நினைக்கும்போது தியாகுவின் உள்ளம் உறைந்தது. இத்தனை நாள் தன் தியாகம் பெரியது என எண்ணிக்கொண்டிருந்த தியாகு, இன்று இயேசு பெருமானின் பாடுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியதும், சிறுவன் பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
இயேசுகிறிஸ்துவின் பாடுகள் தனக்காகத்தான் என்பதை தெளிவாக உணர்ந்தபின், தியாகு தன் உள்ளத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பிற்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, முழங்காலில் நின்று தன் கண்ணால் இயேசுபெருமானின் அழியாத் தழும்புகளை முத்தமிட்டான்.
நண்பரே! இயேசு இரட்சகர் சிலுவையில் பாடுபட்டதும், காயமடைந்ததும் யாருக்காக? வாசகரே உமக்காகத்தான். அவர் எல்லாரிலும் அதிகமாய் உம்மை நேசிக்கிறார். மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்த ஆண்டவர் இயேசுவின் கரத்தில் தழும்புகள் உண்டு. அவை அழியாத் தழும்புகள். அன்பரே! வானமும் பூமியும் அவருடையது. அவர் எந்தப் பிரதிபலனையும் உம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நீர் உம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவருக்கு உம்மையே காணிக்கையாக ஒப்படையுங்கள்.
அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1.பேது.2:24).
சத்துருவா ? சகாயரா?
ஐயா நான் இதைத் திருடவில்லை. விலைகொடுத்து வாங்கினேன். என மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்தான். நீதிபதி அவனைப் பேசாமல் இருக்குமாறு கட்டளையிட்டார். வழக்கு என்னவென்றால் காணமற்போன கைக்கடியாரம் ஜேம்ஸின் வசம் இருந்ததால் கைதாகி இருந்தான். கைக்கடியாரம் காணமற்போனதும், அது ஜேம்ஸிடம் கண்டுபிடிக்கப்பட்டதும் உண்மையே. மேலும் நீதிபதியும், மற்றும் போலீஸ் தரப்பும் இவனை குற்றவாளியெனத் தீர்மானிக்க ஒரே எண்ணமுடையவர்களாய் இருந்தனர்.
நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க ஆயத்தமானபோது, நான் சாட்சி சொல்வதற்கான பீடத்தில் ஏறினேன். உனக்கு என்ன வேண்டும்? என்றார் நீதிபதி. நான் இந்த வழக்கில் சாட்சிசொல்லவேண்டும் என்றேன். நீதிபதி அனுமதியளித்ததை ஜேம்ஸ் கேட்டதும், ஜயா இவருடைய சாட்சிக்கு செவிகொடுக்க வேண்டாம். இவருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது, அநேக பொய்களைச் சொல்லி வழக்கை எனக்கு விரோதமாய்த் திருப்பத் திட்டமிடுகிறார் என்றான். நான் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டும், ஜேம்ஸ் செவி சாய்க்கவில்லை. காரணம் நான் பொலிஸ் உடையிலிருந்ததால், அவனுக்கு எதிராளி என எண்ணி இருக்கலாம். இறுதியில் நீதிபதி அவனை அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்டு என்னை மீண்டும் தொடருமாறு சொன்னார். சில வாரங்களுக்கு முன் இரண்டு கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் அந்த இருவருடன் ரயிலில் புறப்பட்டேன். பிரயாணநேரத்தில் கைதிகள் தங்கள் அனுபவங்களை அடுத்தவர்களுடன் சொல்லுவது வழக்கம். அவர்கள் பேசுவதைக் கேட்டபடி எதிர்வரிசையில் அமர்ந்திருந்தேன். இருவரில் ஒருவன் ஒருநாள் ஜேம்ஸிடம் கைக்கடியாரம் ஒன்றை 150 ரூபாய்க்கு விற்றுவிட்டேன், அதன் மதிப்பு ரூபாய் 50 கூடப் பெறாது என்றான் என்றதும் நீதிமன்றத்தில் இருந்தவர்களின் முகமெல்லாம் மாறுபட்டது. ஜேம்ஸ் என்னைப் பார்த்த பார்வை அவன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகூறுவதுபோல இருந்தது. அவன் தனக்கு எதிராக சூழ்நிலையால் உருவான எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதும் அல்லாமல் அவன் நிரபராதியாகவும் நிரூபிக்கப்பட்டானே! நான் அவனுக்கு ஆதரவாக அல்லது சகாயமாகச் சொன்ன சாட்சியானது, அவனுக்கு எதிராக இருந்த எல்லா சாட்சியங்களையும் உடைத்தெறிந்துவிட்டது. அதைக் கூர்ந்து கவனிக்கும்பொழுது ஓர் உண்மை புலப்படுகிறது. முதலில் ஜேம்ஸ் என்னை எதிரியாக நினைத்து மிரண்டான். காரணம் நான் அவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லி, அவனைக் காப்பாற்றுவேன் என்பதை அவன் அறிந்திருக்கமுடியாது.
இவ்விதமாகவே அநேகர் ஆண்டவரைப் பற்றித் தவறான கருத்துடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குச் செவிசாய்ப்பதில்லை. ஏனெனில் ஆண்டவரைத் தங்கள் எதிராளியாக (சத்துருவாக) எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணம் தவறானது. ஏனெனில் தேவன் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோ.3:17).
பாவியான ஒருவன் மீது தேவன் நீதியான முறையில் கருணை மிகுந்தவராக இருக்கிறார். எனவே குற்றவாளி ஒருவன் விடுதலை அடையலாம். இந்த விடுதலையானது எந்த நீதிமன்றம் வழங்கும் மன்னிப்புகளுக்கும் விடுதலைக்கும் மேலானது. ஆனால் தேவன் நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை என்கிறார். அவர் நீதிபரர் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களை நீதிமான்களாகத் தீர்க்கிறவராகவும் இருக்கிறார். தேவனுடைய பார்வையில் குற்றவாளியாக இருக்கிற நீர் நீதிமானாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கமாட்டீரா?
தேவன் மனித இனத்தை நேசிக்கிறார். பெரும் கேள்வி யாதெனில் நீதிபரராகிய தேவன் குற்றவாளியாகிய மனிதனை இலவசமாக விடுதலையாக்குவது எப்படி? ஏனென்றால், தேவனே மனித இனத்தைக் குற்றமுள்ளதாகத் தீர்த்திருக்கிறாரே! விடை என்னவெனில் தேவனே நமக்குப் பரிகாரியாக நின்றதுதான்.
தேவனுடைய அன்பு, தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பாவிகளுக்காக சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்ததில் விளங்குகிறது. மேலும் பாவமற்ற அவரே நம் சார்பில் பதிலாக நிற்கத் தகுதி உடையவர். அவர் நம் பாவங்களை தமது சரீரத்தில் சுமந்து அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக தம் ஜீவனை சிலுவையில் கொடுத்தார். பின்பு மூன்றாம் நாளில் சாவை மேற்கொண்டு உயிருடன் எழுந்தார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவருக்கும் இலவசமான மன்னிப்பும், விடுதலையும் நிச்சயமாக உண்டு.
… வெள்ளம்போல் சத்துரு வரும்போது….
…… நாம் தைரியங்கொண்டு, கர்த்தர் எனக்குச் சகாயர்…. என்று சொல்லலாமே (ஏசா.59:19, எபி.13:6).
இது விலைமதிப்பிட முடியாதது
நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒருநாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டு கொண்டதும் பெருமகிழ்ச்சியடைந்தான். ஏனெனில் இருவரும் அடிக்கடி சந்தித்து மதசம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்தபோதிலும், தன் கிறிஸ்த நண்பரிடம் அன்போடு பழகுவான்.
இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். சாபு ! உன்னைப் பார்க்கும்போது மிகவும் சோர்ந்திருப்பதுடன் வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது. இதுவே நீ கடைசிமுறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன் என்றதும், ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப்போவதில்லை. மேலும், நான் முதுமை அடைந்ததால் முத்துக் குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது. பலநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.
சாபுவின் கிறிஸ்தவ நண்பர் பலமுறை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழியாதெனில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின்மூலமாக மட்டும் தான் கிடைக்கக்கூடியதும், மேலும் இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும், இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனை கொடுத்ததை விளக்கினார்.
இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது. ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன் என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.
நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் மீட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் என்றவன், குடிசையின் மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக்கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்றுவிட்டது. எவ்வளவு அழகான முத்து! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்படவேண்டியது என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒருநாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான் இந்த விலைமதிப்பற்ற முத்து எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்தான் சாபு. நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான் என்றவன், நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலைமதிப்பு என் அன்பு மகனின் உயீர் என்று கூறி கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய் வேண்டாம், இதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன். ஆனால், வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்விரும்பவில்லை என்றார்.
நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில் இது விலைமதிப்பிடமுடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா! இதன் விலை என் மகனின்உயிர் என்றான் சாபு.
சாபு, சற்று முன் நீ சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா? எதையாவது கொடுத்துச்சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா! உன்னுடைய இரட்சிப்புக்காக தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார், நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம் என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும் என்றார்.
வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்க்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். ….. நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் (ரோ.5:6).
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசி.2:8).
நோவாவின் நாட்களில் நடந்தது போல…
தற்கால உலக நிலையானது நோவாவின் நாட்களில் நடந்ததுபோல உள்ளது என்பதை நாம் அறியலாம். மனிதர் தங்களுடைய வழிகளைக் கெடுத்திருந்ததால் பூமியானது கொடுமையினால் நிறைந்தது. எனவே தேவன் அதன் மீது நியாயத்தீர்ப்பை நியமித்தார். என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை என்றும் நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என தேவன் எச்சரித்தும் ஜனங்கள் செவிகொடாமல் போனார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நோவாவின் நாட்களில் நடந்ததைக் குறிப்பிடுகையில் ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள் (மத்.24:38-39). நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (லூக்.21:34). நாம் இந்த எச்சரிப்புக்கு செவிசாய்ப்பது எத்தனை அவசியம்!
நோவாவின் காலம் வளர்ச்சி பெறததல்ல, எல்லா வசதியும் உள்ளதுதான். ஆனால் தற்கால ஞானிகளின் கருத்து யாதெனில், நோவாவின் வரலாறு வெறும் கட்டுக் கதை. எப்படி நோவா கப்பலைக் கட்டினான் என்று நம்புகிறீர்களோ அப்படியே நீங்களும் எதையெதையோ சொல்லி நேரத்தை வீணாக்குகிறீர்கள். வாருங்கள் வந்து எங்களுடன் உலக இன்பத்தை அனுபவியுங்கள். குறுகிய மனப்பான்மையுடையவர்களாய் இராதேயுங்கள். உங்களைத் தவிர மற்றவர்கள் தவறியவர்கள் என்று நினையாதிருங்கள் என்று ஞானிகளும் உலக மக்களில் ஏராளமானவர்களும் சொல்வதுண்டு. பூமியிலே மனிதனுடைய அக்கிரமம் மிகுதியாகப் பெருகியிருப்பதை தேவன் கண்டார். இன்றைய உலகின் நிலை? நோவாவின் நாட்களை விட பன்மடங்கு அட்டுழியங்கள், துணிச்சலான அக்கிரமங்களால் மோசமாகி இருப்பதை தேவன் காண்கிறார். நோவாவும், அவருடன் பேழையில் (கப்பல்) அடைக்கலம் புகுந்தவர்களும் தவிர, மற்ற அனைவரையும் வெள்ளம் வாரிக்கொண்டது. நோவாவுடன் பேழைக்குள் பிரவேசிக்காதவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதல்லவா ?
அக்கால மனிதர்கள் எதிர்பாராதது நடந்துவிட்டது. இது மாறாத உண்மையாகவும், தற்கால மனிதர்களுக்கு பெரும் எச்சரிப்பாகவும் உள்ளது. நாம் வாழும் இந்த உலகத்திற்கு ஒரு முடிவு நிச்சயமாக உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடம் அடைக்கலம் புகுகின்றவர்கள் மட்டும் தப்பித்துக்கொள்வார்கள்.
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று என்று எச்சரிக்கும் வேதத்தில் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று நம்மை ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுமாறும் தூண்டப்பட்டிருக்கிறது. நாம் கேள்விப்படுவதும் வரப்போவதுமான யுத்தங்கள் மிகவும் கோரமானதும், உலகம் உண்டானது முதல் சம்பவியாததுமான பயங்கர அழிவைத்தருவதாக இருக்கும்.
நோவாவின் காலத்தை தற்காலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் ஜனங்கள் கலக்கமடைவது நிச்சயம். இதோ மற்றோர் முன்னறிவிப்பு பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் (லூக்.21:25). தற்காலத்தில் பெருமளவில் வசதிபடைத்த நாடுகள் நவீன போர் ஆயுதங்களைப் பெருக்கி வருகின்றன. ஆண்டவர் மனிதனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். மனிதனோ அதை தேவனுக்கு விரோதமாகப் பயன்படுத்துகிறான். தன் இனத்தையே அழிக்கக்கூடிய கொடிய ஆயுதங்களை மென்மேலும் கண்டுபிடித்துக் குவித்துக் கொண்டிருக்கிறான்.
கடந்த பல நூற்றாண்டுகளாக மனிதன் கல்வித்துறையிலும், சட்டத்துறையிலும், மற்ற பல முக்கியமான துறைகளிலும் முன்னேறி வருகிறான் என்பது உண்மை. ஆனால் பாவம் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் குடிகொண்டுள்ளது. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது (எரேமி.17:9).
நம்மை எச்சரிக்கிற தேவன் அன்பின் சொரூபி, அவர் நாம் பாவத்தினிமித்தம் துன்பங்களுக்கும் தேவ கோபத்திற்கும் ஆளாவதைக் கொஞ்சமும் விரும்புகிறதில்லை. எனவே அவர் தம் ஒரே செல்வக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை சிலுவையின் பாடுகளுக்குட்படுத்தினார். நீங்கள் வாசித்த காரியங்களுக்காக கலக்கமடையவேண்டிய அவசியமில்லை. இதோ ஒரு ஞானமான கேள்வி, நான் என்ன செய்யவேண்டும் அன்பரே! தப்பித்துக்கொள்ள தேவன் கொடுக்கும் பதிலை வாசித்து உம்மையே அவருக்கு ஒப்புக்கொடுப்பீராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்.16:31).
இரத்தக் குறியிட்ட கதவு
அண்டை நாட்டின்மேல் போர் தொடுத்து, தனது வீரர்கள் தலைநகரை நெருங்கியபோது பெருமிதம் அடைந்த தளபதி, அந்நகர மக்கள் அனைவரையும் அழித்துவிடுவேன் என வீர சபதம் செய்தான். பாவம் தலைநகரமக்கள். இவ்விபரமறியாத அவர்கள் இரத்தவெறி பிடித்த வீரர்களின் ஆயுதங்களுக்கு இரையாயினர். நகர வீதியெல்லாம் இரத்தம் பெருகி ஓடிற்று.
இவ்விதமாக வீரர்கள் ஓர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளிருந்தவர்கள் அனைவரையும் வாளினால் வெட்டிக் கொன்றனர். அவர்கள் வெளியே செல்லும்போது வீரர்களில் ஒருவன் தனது வாளின் முனையை அந்த இரத்தவெள்ளத்தில் தோய்த்து, அதனால் அந்த வீட்டின் கதவில் ஒரு குறியிட்டான். அந்த வீரன் அப்படிச் செய்த நோக்கமென்னவென்றால், தொடர்ந்து வரும் படைவீரர்கள் அந்த வீட்டாருக்கு நடந்தது என்ன என்பதை அறியும் பொருட்டாகும்.
ஆச்சரியம் என்னவெனில், வீரன் கதவில் குறியிடுவதை ஒரு நகரவாசி கவனித்து விட்டான். உடனே அவன் ஓடோடிச் சென்று, நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தன்னுடைய வீட்டார் மற்றும் நண்பர்களை உள்ளே அடைத்து, முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஆட்டைக் கொன்று, அதன் இரத்தத்தினால் அந்த வீட்டின் கதவில் குறியிட்டான். தானும் உட்பிரவேசித்து கதவை மூடிய சற்று நேரத்திற்கெல்லாம் வீரர்கள் அந்த வீதியில் நுழைந்தனர். அவர்களின் சந்தடியைக் கேட்டதும் வீட்டினுள் இருந்தவர்களின் மூச்சு ஒருவிநாடி நின்றுவிட்டது. ஆனாலும் கதவில் இரத்தக் குறியிட்டிருப்பதை வீரர்கள் கண்டதும் அவர்கள் உள்ளே நுழையவில்லை. ஏனெனில் இந்த வீட்டார் அனைவரும் வாளுக்கு இரையாகி விட்டதாக நினைத்து அவர்கள் அடுத்த வீட்டில் நுழைந்தனர். கண்ணீர்விட ஆளில்லாத நிலை. நகர மக்கள் யாவரும், வீரர்களின் வாளுக்கு இரையாகும் இந்நேரத்தில், கதவில் இரத்தக் குறியிட்ட இந்த வீட்டினுள் இருந்தவர்கள் மட்டும் உயிர்தப்பினர்.
இச் சம்பவம் தேவன் நமது ஆத்தும இரட்சிப்புக்காக கூறிய வார்த்தைகளை நினைப்பூட்டுகிறதன்றோ!
…. அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன் (யாத்.12:13).
ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே (1.கொரி.5:7).
சிலுவையில் சிந்தப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ், யார் யார் நம்பிக்கையோடு புகலிடம் பெறுகின்றார்களோ அவர்களை தேவன் தமது நியாயத்தீர்ப்பாகிய கோபாக்கினையிலிருந்து விடுவித்துப் பாதுகாப்பளிக்கிறார். நண்பரே! இன்று நீர் தேவன் உமக்காக ஆயத்தம்பண்ணியுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றீரா?
வழி காட்டியின் உறக்கம்
புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியிலுள்ள சுற்றுலாப் பிரிவில் ஒரு வாலிபன் வழிகாட்டியாக இருந்தான். ஒருநாள் சுற்றுலாப் பயணிகள் யாவரும் வராததால், கரையிலுள்ள அதற்கான இடத்தில் படகை கட்டிவிட்டு, அதில் அமர்ந்து ஒய்வெடுத்தான். சிறிது நேரத்தில் ஓய்வு உறக்கமாக மாறியது. ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் கட்டப்பட்டிருந்த கட்டு படிப்படியாக அவிழ்ந்து படகு தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உறங்கும் வழிகாட்டி இதை அறியாமல் தான் கட்டியதை எண்ணினவனாக உறங்கியவாறு இருந்தான். பெரும் ஆபத்து எதிர் நோக்கி இருந்தது. அப்போது அங்குவந்த சிலர் இதைக் கவனித்து வழிகாட்டியை எழுப்பக் கூச்சலிட்டனர். பயன் ஏது? ஆபத்தின் உச்சக்கட்டத்தில் அவன் உறங்கியவாறு இருந்தான். சுழலில் சிக்கிக் கொள்வதற்கு முன் அவனை எழுப்பக் கரையில் இருந்தவர்கள் உரத்த சத்தம் போட்டபடி இருந்தனர். திடீர் மாற்றம் யாதெனில் நீரோட்டத்தின் நடுப்பகுதியிலுள்ள ஒரு பாறையில் தட்டுப்பட்டு படகு நின்றது. இதைக் கண்ட பயணிகள், தங்கள் குரலை இருமடங்காக்கி, வழிகாட்டியை எழுப்ப பாறையின்மேல் ஏறு பாறையின்மேல் ஏறு! என்று மென்மேலும் சத்தமிட்டனர். ஆனால் அவன் எழுந்திருக்கவே இல்லை. அவன் தப்புவதற்கு இருந்த ஒரே சந்தர்ப்பத்தையும் இழந்துவிட்டான். இப்போது மீண்டும் படகை நீரோட்டத்தின் வேகம் அடித்து இழுத்துச் சென்றது. என்ன பரிதாபம்! வழிகாட்டி இப்போது கண் விழித்து, தான் மரண வாசலுக்கு மிக அருகிலிருப்பதை உணருகிறான்.
படகு நீர் வீழ்ச்சியை நெருங்கிவிட்டது. யாராலும் உதவமுடியாத பரிதாபமான நிலையன்றோ! படகு வழிகாட்டியுடன் மரணவாசலுக்குள் நீர்வீழ்ச்சியின் வாயிலாக நுழைந்துவிட்டது. இந்தச் சம்பவம் எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. உண்மையாகவே நம்மைத் திடுக்கிடச் செய்கிறது.
இந்த நிகழ்சி நமக்கு விளக்குது யாதெனில், இன்றைய மக்களில் பெரும்பாலோர் கவனமற்றவர்களாய் வர இருக்கும் விபத்தை உணராமல் வழிகாட்டியைப்போல மரணவாசலை நெருங்கியபடி இருக்கிறார்கள். அநேகர் அழிவுக்கு காரணமாகிய பாவத்தைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறையின்றி துன்மார்க்கத்தில் மதிமயங்கி, இவ்வுலகம் தரும் சிற்றின்பமாகிய தொட்டிலில் உறக்கமாய் இருக்கிறார்கள். அதாவது வாழ்க்கையின் தவறான வழிகளில் ஈடுபட்டு, சுகபோகங்களில் மூழ்கி, ஆண்டவரை நினையாது மயக்கத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யார்? வழிகாட்டியைப்போல உறங்குபவர்கள். உங்கள் முடிவு வழிகாட்டியைப்போல ஆகாமலிருக்க இயேசு கிறிஸ்துவின் வசனத்திற்குக் கீழ்ப்படியுங்கள்.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் (பிசாசு) அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2.கொரி.4:4). தூங்குகிற நீ விழித்து…… எழுந்திரு (எபேசி.5:14).
சந்திக்குமுன் சிந்திப்பீர்
அழைப்பின்றி எல்லா இடங்களையும் சந்திக்கும் ஒருவர் இப்பொழுது உங்களுடன் பேசப் போகிறார். இவரை நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக சந்தித்தே தீரவேண்டும்.
இவர் அவ்வளவு அறியப்படாதவராயிருந்தும், இவ்வுலகத்தில் இவரைப் பற்றி அறிவிக்கும் பிரசங்கபீடங்கள் ஏராளம். எனவே இவர் இவ்வுலகத்தின் எப்பகுதியில் வேண்டுமானாலும் சென்று எம்மொழிபேசும் மக்களையும், இவர் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி சந்திக்கிறார். எந்த மதத்தினராலும் இவரைத் தங்கள் மதச் சடங்குகளினால் ஏமாற்ற முடியவில்லை.
இவரைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் மக்கள் பயப்பட்டு மனம் குழப்பி கண்ணீர்விடுவர். இவரைப்பற்றிப் பலர் பலவிதமான விவாதங்கள் நடத்தினர். சிலர் இவரைக் கண்டு நடுங்கினர், பலர் இவரை வெறுத்தனர். அப்படியிருந்தும் ஏனையோர் தங்கள் கவலை கஷ்டங்களிலிருந்து நிரந்தர நிவாரணம் பெற இவரிடம் தஞ்சம் புக விரும்புவதுண்டு.
இவர் நாகரீகம் தெரிந்தவருமல்ல, மரியாதைக்கு உரியவருமல்ல, இருந்த போதும் இவர் பிரார்த்தனைக் கூட்டங்களில் நுழைந்து தடைசெய்வார் தன்னை அழையாமலிருந்தாலும் அச்சந்தர்ப்பமான நேரங்களில் திடீரென எங்கும் பிரவேசித்து மக்களைக் கடும் துக்கத்தில் ஆழ்த்துவார்.
இவ்வாறு ஒவ்வொருவராய், ஒவ்வோர் பகுதியாய், எவ்வித நேரமுமின்றி, சந்தர்ப்பமுமின்றி, ஓய்வின்றி நம் வாழ்க்கையில் நிச்சயமாகச் சந்திக்கப்போகும் இவர் யார்?
நான் தான் மரணம். என்னைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை. திடீரென கொண்டு செல்லும் நான், உன்னை அன்பு பெற்றொரிடமிருந்து, ஆசை மனைவியிடமிருந்து, செல்வக் குழந்தைகளிடமிருந்து, உற்ற நண்பரிடமிருந்தும் சொல்லமுடியாத மாபெரும் இடைவெளியில் நான் பிரித்து விடுகிறேன்.
அன்பரே! நீங்கள் இந்த குரூர தூதனுக்கு பயப்படவேண்டாம். இதிலிருந்து விடுபட்டு நீர் திட நம்பிக்கையுடன் வாழ இதோ தேவன் வகுத்த ஒரே வழி, அதுவே வேத புத்தகத்தில் காட்டப்படும் ஏக ஒளி, உமது இருதயம் இப்போதே இயேசு கிறிஸ்துவை மெய்த்தேவனாக ஏற்றுக் கொள்ளட்டும்.
உமது பாவங்களை ஜீவ புத்தகத்தின் அறிவுரையின் மூலம் நீக்கி ஜீவ ஒளியை அடைவீராக. ஒருவேளை நீர் இதைப் பரியாசம் செய்யலாம். இகழ்ந்து பேசலாம். தேவனாகிய இயேசு பெருமானின் ஜீவவார்த்தைகளை நீர் புறக்கணிக்கலாம், உம்மை அவர் அன்பிற்கு அப்பாற்பட்டவராக்கிக் கொள்ளலாம். மேலும் உம் கையிலிருக்கும் இப் பிரதியை நீர் கிழித்துப் போடலாம்.
மரணத்தை ஏற்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும், பிற்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பது அவசியம். நமது ஆயுட்காலம் வெகுவிரைவாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. உலக இன்பங்களுக்கு நிச்சயமாக ஒரு முடிவு உண்டு. இப்படியிருந்தும் நாம் ஒவ்வொருவரும் மரணத்தை தழுவ அனுதினமும் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருப்பதால் அதைப் பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டியது எத்தனை அவசியம். அன்றியும் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபி.9:27).
மரணத்தைச் சந்திக்கும் முன் அதைப் பற்றி நாம் சிந்திப்பது எத்தனை நலமானது. மரணத்திற்குக் காரணங்கள் உண்டா? இவ்வாறான அவமானத்திற்குரிய மரணத்தை சிருஷ்டிப்பின் சிகரமாகிய மனிதன் சந்தித்தே தீரவேண்டுமா? இக்கேள்விக்கு இதோ வசனம் விடையளிக்கிறது. ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது (ரோ.5:12). மனிதன் பாவத்திற்கு அடிமையாகி இருப்பது ஒரு மதக் கோட்பாடல்ல, இது மாறாத உண்மையாகும். மேலும் உலக வரலாறும், நம் சொந்த அனுதின அனுபவமும் இதை உறுதிப்படுத்துகிறது. வேதத்தின்படி பாவம் என்பது ஒரு அருவருப்பான வார்த்தை மட்டுமல்ல, அது உலகத்தையே ஆட்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் உண்மை. எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது (ரோ.5:12). அன்பரே! இதுவரை நீங்கள் படித்தவற்றில் நீரும் உட்பட்டிருக்கிறீர். நாம் பாவிகளானபடியால் மரணம் நம்மை நிச்சயமாக ஆட்கொள்ளப்போகிறது.
அதாவது மரணத்தீர்ப்பு நம் தலைமேல் இருக்கிறது. நாம் மாட மாளிகையில், அல்லது சிறிய குடிசையில் மரணமடைந்தாலும் நித்தியமான வாழ்வு நமக்குண்டு. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தால் வரும் இரட்சிப்பை அலட்சியப்படுத்தி மரணமடைந்தால், நம் ஆன்மா பயங்கரமான நரகத்தில் தள்ளப்படும். இயேசு இரட்சகரை விசுவாசியாத அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி. 21:8).
மரணத்தைச் சந்திக்கும் முன் சிந்திப்பீர்: தீர்மானம் செய்ய இதோ இரண்டு வாசகம்.
… இரக்கம் பெறாமல் சாகிற…… (எபி.10:28).
அல்லது
விசுவாசத்தோடே மரித்த…… (எபி.11:13).
அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் (உபா.32:29).
பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23).
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோ.5:8).










