அதிகாரம் 6
பகைஞரின் வஞ்சனை
வசனம் 6:1-2
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது, நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள். அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச்செய்ய நினைத்தார்கள்.
சன்பல்லாத்தும், தொபியாவும் அரபியனாகிய கேஷமும் தீங்கு செய்வதை விட்டு ஒயவில்லை. தந்திரமுள்ள சாத்தானும் அப்படித்தானே. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசனவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான் (1.பேது.5:8) என்று வேதம் கூறுகிறதன்றோ? சாத்தான் எப்போதும் விழிப்பாகவே இருக்கிறான். நம்முடைய பெலவீனங்களை நன்கு அறிந்து வைத்து நம்மைச் சோதனைக்குட்படுத்தக் காத்திருக்கிறான். கிறிஸ்தவர்களாகிய நம்மைத் தாக்குவதற்கு எப்போதும் காத்து நிற்கும். அவன், நம்மை வீழ்த்தும்போது அது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு தோல்வியாகவன்றோ உள்ளது. அதுதான் அவனுடைய நோக்கமும்கூட. அவன் தந்திரமுள்ளவனாகவும் கூட இருக்கிறான். அவன் ஏவாளிடம் வந்தபோது எவ்வளவு தந்திரமாகப் பேசினான். அவளைத் தாக்கவேயில்லை. தேவன் கூறியது என்ன? என்று கேட்டு அவளுக்குப் பிடித்தமானதைபேசி அவளை வஞ்சித்துப் போட்டானன்றோ? (ஆதி.3:1-6, யோ.2:16).
அந்நாட்களில் தொலைபேசி வசதிகள் இருந்ததில்லையெனின்னும், மதில்கள் கட்டி முடிக்கப்பட்ட என்ற செய்தி வெகு துரிதமாய்ப் பரவியது. மதில்கள் கட்டி முடிக்கப்பட்ட அந்தச் செய்தியை பகைஞரிடையே வெகு தொலைவிற்குப் பரவியது. வாசல்களிலே கதவுகள் மட்டுமே போடவேண்டியிருந்தது. இப்போது சன்பல்லாத்தும், கேஷேமும் ஒரு புதிய யுக்தியை நிதானமான யுக்தியை முயற்சி செய்து பார்க்கின்றனர். நெகேமியாவைச் சந்தித்துப்பேச விரும்புவதாக ஓர் அழைப்பை அனுப்புகிறார்கள். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்களில் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று அழைப்பித்தார்கள். சந்தித்துப் பேசுவோம் என்பது நல்லதுதானே? எல்லாரும் சந்தித்து ஒன்றாக இணைவது நல்லதாய்த்தானே இருக்கும் என்றுதான் நாம் எண்ணுவோம்.
வசனம் 6:3
அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது. நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
ஆனால் நெகேமியாவிற்கு அது அவ்வாறு படவில்லை. வேதத்தில் பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூது பேசுகிறான். அவன் இதம் பேசினாலும் அவனை நம்பாதே, அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. நீதி.26:24-25 எனக் கூறப்பட்டுள்ளதை நெகேமியா நன்கு அறிவான். முதலாவது அத்தகைய ஒரு முயற்சியில், ஓனோ சமவெளியில் செல்லுவதற்கு நெகேமியாவிற்கு குறைந்தது ஒருநாள் பொழுது நேரமாவது பிடிக்கும். அது மட்டுமன்றி அது பகைஞரின் நாட்டைச் சேர்ந்த பகுதியாகும். மேலும் இம்மாதிரியாக ஒரு திட்டம் தனக்கு தீங்கு செய்ய அவர்கள் தீட்டிய திட்டமேயென்றும் அவனுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவன் அவர்களுக்குப் பதில் செய்தியாக, நான் பெரிய வேலையைச் செய்கிறேன். நான் வரக்கூடாது. நான் அந்த வேலையை விட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லியனுப்பினான். நாமும் பல வேலைகளை நமது தேவனாகிய கர்த்தருக்கு செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். நமது பகைஞரைச் சந்திக்கச் செல்வதனால் நமது நேரத்தை வீணடிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நாமும்கூட ஒரு பெரிய வேலையைத்தான் தேவனுக்காகச் செய்கிறோம்.
வசனம் 6:4
அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள். நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
ஆனால் நெகேமியாவின் பகைஞர்கள் எளிதாக சோர்வுக்குள்ளாகவில்லை. நான்கு முறை, அவ்வாறே நெகேமியா தங்களுடன் வந்து பேசவேண்டுமென்று, பல தந்திரங்களைச் செய்ய முயன்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நெகேமியா அதே பதிலையே அவர்களுக்குச் சொல்லியனுப்பினான். விரோதிகளின் தந்திரமான வஞ்சனை அழைப்புகளைச் சமாளிக்கவேண்டிய வழி இல்லை, முடியாது என்பதுதான் என்று அவனுக்கு நன்கு தெரியும்.
வசனம் 6:5-7
ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான். இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே. ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
சன்பல்லாத்து எரிச்சலடையத் தலைப்பட்டான். தமது கபடவலையில் நெகேமியா விழவில்லையே என்பது அவன் கவலை. ஆகையால் அவன் வேறு திட்டங்களில் ஈடுபடலானான். அடுத்து சன்பல்லாத்து, முத்திரை போடாத ஒரு கடிதத்தை எழுதி அதை தனது வேலைக்காரனிடம் கொடுத்து நெகேமியாவிடம் அனுப்பினான். அக்கடிதத்தில் பல பொய்கள் எழுதப்பட்டிருந்தன. அதிலே, நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு இராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்றும் உம்மைக் குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீர் என்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது. இப்போதும் இந்தச் செய்தி ராஜா அர்த்தசஷ்டாவுக்கு எட்டுமே. ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுகிறதற்காக நீர் வர வேண்டும்… என்று எழுதப்பட்டிருந்தது.
வசனம் 6:8-9
அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை. அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கைகள் சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.
சன்பல்லாத்து, உண்மையில் மிகவும் தந்திரம் நிறைந்தவன். தனது கடிதத்தில் அவன் கூறுவதுபோல் எதையும் எழுதவில்லை. அவர்கள் கூறுகிறார்கள் என்று தந்திரமாகக் கூறுகிறான். நெகேமியா ஏதோ ஒரு சிக்கலில் சிக்கியிருப்பதாக எழுதி, அவனுக்கு இருந்த ஒரே வழி அவனுடன் வந்து பேசவேண்டியதே என்று அக்கடிதத்தில் குறிப்பி;ட்டு இருந்தான். அவ்வாறு கூறப்பட்டுள்ளவைகளை மறுக்க, நெகேமியா மறுபடியும் அவைகளைக் கூறி அறிவிக்கவேண்டியிருந்தது. அதைப் புறக்கணிக்கவும் முடியாதபடி அது இருந்தது. ஆகையால் நெகேமியா, சன்பல்லாத்தின் கடிதத்திற்குப் பதில் அளித்தான். அந்தப் பதில் செய்தியில் நீர் சொல்லுகிறபடி அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை. அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினான். அந்தப் பதில் சுருக்கமானதாக இருந்தது.
சன்பல்லாத்து, யூதர்கள் தங்கள் கட்டும்பணியை நிறுத்திவிடும்படி அவர்களைப் பயமுறுத்தவே இதையெல்லாம் செய்கிறான் என்று நெகேமியாவிற்கு நன்கு தெரியும். இம்மாதிரியான அவதூறுகள் இராஜாவிற்கு அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு மரணதண்டனை கிடைக்குமன்றோ? அதனால்த்தான் நெகேமியா தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும் என்று ஜெபம்செய்கிறான். உதவிக்கு எங்கே செல்வதென்று அவனுக்கு நன்கு தெரியும். தேவனுக்கு நீ செய்யும் வேலை தடைபடும்படி ஏதாகிலும் பயமுறுத்தல் உனக்கு ஏற்படுவதுண்டோ? அதை கர்த்தரிடத்திற்கு நீ கொண்டுபோ. அவர் உன்னைத் திடப்படுத்துவார்.
வசனம் 6:10-11
மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன். அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும். உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
நெகேமியாவின் முயற்சிகள் முற்றுப்பெறவில்லை. அடுத்து யாது நடைபெறும் என்பது சொல்லக்கூடாததாயிருந்தது. அவனுடைய பகைஞர் தொடர்ந்து பல இன்னல்களைச் செய்த வண்ணமேயிருந்தனர். சிரித்தனர். பரிகாசம், சக்கந்தம் செய்து பார்த்தனர். பொய் கூறி போர்முரசு ஓங்கி பயங்காட்டினர். இதுமட்டுமா, அவனுடைய ஜனங்களே வட்டிவாங்குதல் அடைமானம் கொள்ளுதல் ஆகியவற்றினால் பலதொல்லைகளையும் உண்டாக்கினர். மேலும் அவன் சற்றும் எதிர்பாராத சில பொய்த்தீர்க்கதரிசிகள் அவனுடைய ஜனங்களுக்குள்ளே தோன்றித் தீதுரைக்க ஆரம்பித்தனர்.
நெகேமியா அவனோடு பேச விரும்பிய செமாயா என்பவனின் வீட்டுக்குப் போனான். இந்தச் செமாயா, சன்பல்லாத்து, தொபியா என்பவர்களின் கையாளகச் செயல்ப்படுவான் என்று நெகேமியா ஒருநாளும் நினைக்கவேயில்லை. செமாயாவும், சன்பல்லாத்தும் கடைசியாகச் செய்த முயற்சி போன்றதொரு சூழ்ச்சியையே செய்ய முயற்சி செய்தான். நெகேமியாவின் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதைப் போலவும் அதைக் கண்டு அவன் மிகவும் கலக்கமடைவதுபோலவும் ஒரு பாசாங்கு செய்தான். அவன், நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளேபோய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும். உம்மைக் கொன்றுபோட வருவார்கள். இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்று நெகேமியாவிடம் கூறினான்.
இவை மிகவும் அச்சுறுத்தும் வார்த்தைகளே. நெகேமியாவின் விரோதிகள், அன்று இரவே வந்து அவனைக் கொன்றுபோட வருவார்கள் என்று அவன் அறிந்திருந்ததாகக் கூறினான். எத்தனை கலக்கமான வார்த்தைகள். செமாயா தேவனுடைய ஆலயத்துக்குள்ளே நெகேமியா தன்னுடன் வந்து ஒளிந்துகொள்ளவேண்டும் என்று அவனை அழைக்கிறான். பத்திரமான இடம்தான். ஒளிந்துகொள்ளவேண்டியதுதான்.
நெகேமியா அந்த அளவிற்கு கோழையல்ல. அதுபோன்றதொரு கோழைத்தனமான எண்ணம் அவனுக்கு ஒருநாளும் ஏற்பட்டதில்லை. அதற்கு அவன் என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்தில் போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்று ஆணித்தரமாக கூறினான். அவனுடைய பதில் சுடச்சுட இருந்தது. அவன் மரணத்திற்கு அஞ்சவில்லை. தேவனுடைய ஆலயத்திற்குள் செல்வதென்பது, அவன் ஆசாரியனல்லாததினால் அவனுக்குத் தகாததாயிருந்தது.
வசனம் 6:12-13
தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்று அறிந்துகொண்டேன். நான் பயந்து அப்படிச் செய்து பாவங் கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைகூலி கொடுத்தார்கள்.
அடுத்து நெகேமியா ஒன்றை அறிந்துகொண்டான். அதாவது செமாயா தேவனால் அனுப்பப்படவில்லையென்றும், தொபியா சன்பல்லாத்தும் அவனுக்கு கூலிகொடுத்ததினால் அவன் தனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்று அவன் அறிந்துகொண்டான்.
பாவத்திற்கு மட்டுமே அஞ்சவேண்டும். வேறொன்றிற்கும் அல்ல, என்பதனை நெகேமியா நன்கு அறிந்திருந்தான். அந்தத் தீர்க்கதரிசிகள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அவன் சிந்திக்கலானான். ஒருவேளை நெகேமியா பயந்து அஞ்சி, தேவாலயத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டிருத்தல், அது அவனுக்கும் அவனிடமிருந்தவர்களுக்கும் மிகவும் இக்கட்டை உண்டாக்கியிருக்கும். அவன் ஆசாரியன் அல்லாததினால் ஆலயத்திற்குள் பிரவேசித்தல் என்பது வேதபிரமாணத்திற்கு விரோதமான செயல் ஆகும். அவனைப்போல பயந்த மற்ற யாவரும்கூட அவ்வாறே ஒளிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா? அப்போது சன்பல்லாத்தும் தொபியாவும் நெகேமியாவைப் பிடித்து எல்லாருக்கும் முன்னிலையிலும் குற்றம் சுமத்தி நிறுத்தியிருப்பார்களன்றோ? பெரிய குழப்பம் ஏற்பட்டு கட்டும் பணி நிறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அதுபோல் ஒன்றும் நடக்கவில்லை.
நெகேமியாவிற்குண்டான தைரியம் வியத்தகு ஒன்றன்றோ? இயேசு கிறிஸ்து ஏரோதுக்குப் பயந்து ஓடிவிட மறுத்துவிடவில்லையா (லூக்.13:31-33)? பவுல் அப்போஸ்தலனும், நீ எருசலேமுக்குப் போனால் கட்டப்படுவாய் என்று கூறப்பட்டபோதும் அஞ்சாமல் எருசலேமில் ஊழியம் செய்தான் அன்றோ (அப்.21:10-14)?
வசனம் 6:14
என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப் பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
மேல் குறிப்பிடப்பட்டுள்ள சதி செயலில் செமாயா என்ற ஒரு தீர்க்கதரிசி மட்டுமன்றி வேறு சில தீர்க்கதரிசிகளும் நொவதியாள் என்ற ஒரு பெண் தீர்க்கதரிசினியும் சம்மந்தப்பட்டிருப்பதை நாம் அறியமுடிகிறது. நெகேமியாவைக் கறைப்படுத்தும் சூழ்ச்சியை இவர்கள் அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர் என்று வேதம் கூறுகிறது. என்னே இவர்களின் இழிச்செயல்! தலைவர்களான சிலர், உடனிருந்தவர்களிலிருந்து புறப்பட்டு, பகைஞரின் பணத்திற்கு ;ஆசைப்பட்டு, தேவனுடைய வேலையைக் கெடுக்க முற்படுவது எத்துணை கேவலம்! இதுபோலத்தான் யூதாஸ்காரியோத்தும் ஆண்டவருடனேயிருந்துகொண்டே அவரைக் காட்டிக்கொடுக்கத் துணிந்தானன்றோ (மத்.26:14-16). ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவியினாலே நடத்தப்பட்டு, இத்துணை வஞ்சகர்களை அடையாளம் காண மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெகேமியா தேவனை நோக்கி, இவர்களை நினைத்துக்கொள்ளும் என்று மட்டுமே ஜெபிக்கிறான். அவர்கள் செய்த இந்தச் செய்கைகளுக்குத் தக்கதாக அவர்களை நினைத்துக்கொள்ளும் என்று சொல்லுகிறான். நாமும் நமது செயல்களுக்காகத் தேவனால் நியாயம் தீர்க்கப்படுவோம் (1.கொரி.3:11-15). நாம் தேவனால் நியாயம் தீர்க்கப்படத்தக்கதாய் எதைச் செய்தாலும், அதிலிருந்து விடுபடுவது நல்லது.
வசனம் 6:15-16
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோது, மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
இப்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் நெகேமியாவும் அவனுடைய மனுஷரும் இருப்பதைக் காண்கிறோம். அலங்கமானது…. கட்டப்பட்டு முடிந்தது. இது ஒரு சிறிய சொற்றொடர்தான். ஆனால் அவர்களுக்கு எவ்வளவு திருப்தி அளிக்கக்கூடியதொன்றான செயல். கடைசியாக அவர்களின் விடா முயற்சிகளும், பல வகையான பயங்களும், கடினமான உழைப்பும் தந்த பலன். அலங்கமானது கட்டப்பட்டு முடிந்தது. அது கட்டப்பட்டு முடிய 52 நாட்கள் ஆயின. நமது ஆண்டவராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு நடக்காக ஜீவனைவிட்டபோதும் அவ்வாறே ஒரு வார்த்தையைச் சொன்னார். எல்லாம் முடிந்தது. எல்லா துயரங்களும் துன்பங்களும் முடிவுற்றன. அவருடைய பணிகள் யாவும் முடிந்தன. பவுல் அப்போஸ்தலனும் , நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் என்று சொன்னார் (2.தீமோ.4:7).
அதன் விளைவாக, அவர்களைச் சூழ இருந்த பகைஞர் மிகவும் முனையற்றுப் போனார்கள். இந்தக் கிரியை தேவனால் கைகூடி வந்ததென்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
வசனம் 6:17-19
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள். தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.
இப்போது நெகேமியா உட்கார்ந்து ஓய்வெடுக்கலாமல்லோ? அவனது கட்டும்பணி முற்றிலும் முடிந்துவிட்டது. அர்த்தசஷ்டா இராஜாவின் அரண்மனையில் இருந்தபோது அவன் செய்துமுடிக்கவேண்டிச் செய்த திட்டங்கள் அனைத்தும் இப்போதுதான் முடிந்துவிட்டதே. ஓய்வா? அதுதான் இல்லை. இப்போதுதான் அதிகக் தொல்லைகள் தலைதூக்க ஆரம்பித்தன. தேவனுடைய மனிதன் எல்லாம் முடிந்தது என்று உட்கார்ந்து ஓய்தல் என்பது முடியாது. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது. நான் கவனத்தைத் தளர்த்தி ஓய முடியும் என்று சொல்லத்தக்க நாள் இவ்வுலகில் நமக்கில்லை.
தொபியா இப்போது எழும்பி நெகேமியாவுக்குப் பலத்த தொல்லைகள் கொடுக்க எத்தனித்துக்கொண்டிருந்தான். அவனும் அவனுடன் சேர்ந்த சன்பல்லாத்தும் மற்ற நண்பர்களும் கொடுத்துக்கொண்டிருந்த தொல்லைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. அங்கிருந்த பிரதான யூதர்களுடன் தொபியா கொண்ட திருமண உறவுகளினால் மிகவும் நெருக்கமானவனாயிருந்தான். ஆசாரியனான எலியாசீப் என்பவனும் அவனுக்கு நெருக்கமானவனாயிருந்தான் (13:4). அவர்களுடைய செல்வாக்கை தொபியா பயன்படுத்தி, நெகேமியாவுக்குத் தொல்லை கொடுக்க முற்பட்டான். அதிகாரம் அனைத்தையும் செய்யவல்லதன்றோ! அதனால் நெகேமியா மிகவும் அல்லல்பட்டான். இங்கே அதிகாரமும் ஆணவமும் கொண்ட அநேக யூதப்பிரபுக்கள் நன்றிகெட்டவர்களாக, சத்துருவான தொபியாவை ஆதரித்தனர். இந்தப் பெரிய மனிதர்களான தொபியாவின் உறவினர்கள் நெகேமியாவினிடத்தில் வந்து, தொபியா செய்து வந்ததாக பல நன்மைகளை நெகேமியாவினிடத்தில் விவரித்துப் பேசி வந்தார்கள். பல நன்மைகளைப் பற்றி கூறும்படி செய்ததினால் ஒருவேளை தொபியா மனம் மாறிவிட்டானோ என நினைக்கத்தோன்றும். அப்படியல்ல, அடுத்த வாக்கியம் தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்கள் அனுப்புவான் என்றுள்ளதல்லவா? நன்மைகளைப் பற்றிக் கூறியனுப்பினவன் யார்? எரேமியா கூறுகிறான். எத்தியோப்பின் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும் (எரேமி.13:23). அதுபோல் தொபியாவின் தீய எண்ணங்களை யார் மாற்றக்கூடும்?











