அதிகாரம் 7
பெயர்ப்பட்டியல்
வசனம் 7:1-2
அலங்கம் கட்டிமுடிந்தது, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
அலங்கங்கள் கட்டி முடித்து கதவுகள் போடப்பட்டு விட்டன. எல்லாம் அமைக்கப்பட்டு முடிவற்றது. 52 நாட்களில் எருசலேமின் அலங்கங்கள் சீரமைத்து முடித்துக் கட்டப்பட்டு யூதர்களுக்குத் தங்கள் பகைஞரிடமிருந்து நல்ல பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த மதில்கள் அந்த யூதர்கள் தேவனைத் தனித்து அவரது ஆலயத்தில் தொழவும் வகை செய்தது. தேவனைத் தொழுவதற்கு உதவி செய்ய மூன்று வகை குழு பணியாளர்களை நெகேமியா நியமித்தான் (1) வாசல் காவலாளர் (2) பாடகர் (3) லேவியர். வாசல் காவலாளர் நகருக்கு வாசலைக் கடந்து வருகிறவர்கள் அனைவரையும் நன்கு கவனிக்கவேண்டும். தீங்கு செய்ய எண்ணம் கொண்டு வருகிறவர்களை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.
அடுத்து பாடகர்கள் தேவனைத் துதித்துப் பாட இனிய இசைக் குரல்களைக் கொண்ட ஆசாபின் பிள்ளைகள் வழிவந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இனிய பாடலின் குரலோசை எழும்போது தேவனுக்கு எவ்வளவு மகிமை. நீ இன்று தேவனைத் துதித்துப் பாடினாயா?
கடைசிக் குழு லேவியர்கள். தொழுகைப் பணியை முன்னின்று நடத்துபவர்கள். நாம் தேவனுடைய சந்நிதியில் சென்று பாடவும், துதிக்கவும் தொழவும் தகுதியுடையவர்களாய் இருக்கிறோமா?
அடுத்து நெகேமியா ஒருவேளை அரண்மனைப் பணிக்குத் திரும்பிச் செல்ல நினைக்கிறான் போலும். தன் சகோதரனாகிய ஆனானியை எருசலேமைக் காக்கும் பொறுப்பில் நிறுத்துகிறான். முதலாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் அனைத்துச் செயல்களும் நடைபெறத்தக்கதாக நெகேமியாவைத் தூண்டி உற்சாகப்படுத்தியவன் இந்த ஆனானியே. ஆனானிக்கு உதவியாக நெகேமியா அரண்மனைத் தலைவனாகிய அனனனியாவையும் எருசலேமின் காவல் விசாரணகை;கு ஏற்படுத்தினான். இந்த அனனியா, வேதத்தில் அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும், தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன் என்று விவரிக்கப்படுகிறான். இவ்விதமான ஒரு நற்பெயருடன் வேதத்தில் நினைவுகூரப்படுதல் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. யோபுவும் தேவனால் உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவன்… என்று கூறப்படுகிறான் (யோபு 1:8). அவ்வாறே வேதம் நீதியும் தேவபக்தியும் உள்ளவன் என்று சிமியோனைப் பற்றிக் கூறுகிறது (லூக்.2:5).
வசனம் 7:3
அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம். நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
அந்நாட்களில் ஒரு நகரத்தின் வாசற்கதவுகளைச் சூரிய உதயத்தின்போது திறப்பதும், சூரிய அஸ்தமனத்தின்போது மூடிவிடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தனது விரோதிகள் இன்னமும் தீங்கு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர் என்று நினைத்து நெகேமியா வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்பட வேண்டாம் என்றும், சூரியன் மாலையில் விழுமுன்பே மூடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டான். ஆகையால் நகரத்தின் மதில்களுக்கு வெளியில் யார் வந்து உலாவுகிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும் அன்றோ? அதுமட்டுமின்றி காவலாளர்களையும் நியமித்து அவர்கள் தங்கள் தங்கள் காவலிடங்களிலும், தங்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாகவும் காவல் நின்று காக்கவேண்டும் என்றும் ஏற்படுத்தினான். அந்த ஏற்பாடு மிகவும் நேர்த்தியானது தங்கள் தங்கள் வீட்டை அடுத்து காவல் செய்ய வேண்டும் என்ற நிலை யாவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடியதேயன்றோ (4:13)? நாமும்கூட நமது அன்றாட வாழ்வில் நமது வீட்டுப்புறங்களையடுத்த அனைத்தையும் பாவம் நெருங்காதபடி கருத்தாய்க் காத்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோமா? பாதுகாவலர் இல்லாமற் போனால் சுவர்கள் எத்துணையிருப்பினும் பயன் ஒன்றும் இல்லையன்றோ?
வசனம் 7:4-13
பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார். முந்திவந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது. அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூடவந்து, எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது: பாரேஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். செபத்தியாவின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர். யேசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர். ஏலாமின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று ஐம்பத்துநாலுபேர். சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.
நெகேமியா விசுவாசத்தின் வல்லமையால் எருசலேமின் அலங்கங்களையெல்லாம் கட்டி முடித்தான். பட்டணம் விஸ்தாரமும் பெரியதுமாயிருந்தது. இடிபாடுளின் குவியல்கள் அங்காங்கே நிறைந்திருந்தன. நகரத்தின் ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள். மறுபடியும் தேவனுடைய நடத்துதால், தனது வேலைகளுக்கும் மிகவும் அவசியம் என்று நெகேமியா உணர்ந்து செயல்ப்பட்டான். கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக நெகேமியா எவ்வளவு அக்கறை காட்டுகிறான் என்பதை நாம் நன்கு காணமுடிகிறதல்லவா? இங்கே யூதர்கள் அனைவரையும், பிரபுக்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்ய நடவடிக்கை எடுக்கிறான். அவர்கள் குடும்பம் குடும்பமாகவும், நகர வாரியாகவும், தொழில் வாரியாகவும் பிரிவு செய்து, பகுத்து வம்ச அட்டவணைப்படுத்த விரும்புகிறான். அடுத்துச் செய்யப்பட வேண்டிய காரியங்களுக்காகவும் மக்களின் வம்சவரலாற்று கணக்கிற்காகவும் அது மிகவும் தேவைப்பட்டது. இந்நிலையில், எஸ்றாவின் காலத்தில் அவனோடு எருசலேமுக்கு வந்தவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டவணைப் புத்தகம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.
அதன் உதவியால் அவர்களின் பெயர்ப்பட்டியலை நெகேமியா இங்கு குறிப்பெடுக்க முற்படுகிறான். அவர்கள் நேபுகாத்நேச்சார் இராஜாவினால் சிறைப்படுத்திக்கொண்டு போகப்பட்டவர்கள். அவர்கள் திரும்பி, இப்போது எருசலேமிற்கும், யூதாவிற்கும் , அல்லது தங்கள் சொந்த நகரங்களுக்கும் வந்திருந்தனர். அந்தப் பெயர்ப் பட்டியலை, இப்போது அவனுடனிருந்தவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டுப் புதிய பெயர்ப்பட்டியலை அவன் தயாரிக்கலானான். ஆகையால், இந்தப் பட்டியலைக் கூறும் இந்த அதிகாரமும், இதேபோன்ற பெயர்களைக் கொண்ட பட்டியலைக் கூறும் எஸ்றா 2ம் அதிகாரமும் ஒன்றாகவே உள்ளன. எஸ்றாவும் நெகேமியாவும் ஆகிய இருவருமே, தங்களுடன் வந்தவர்களின் பெயர்களை ஒழுங்காக பட்டியல்படுத்தியுள்ளனர். தேவனாகிய கர்த்தர் அவர்களுடைய நற்பணிகளை ஆசீர்வதிக்கும்படி அவர்களின் பெயர்கள் வேதத்தில் நிலைபெற அருள் புரிந்துள்ளார்.











